இன்னும் ஒரு தொழிற்சங்கப் பதிவைக் கூட பெற முடியாத சுதந்திரம் தான் நமக்கு கிடைத்துள்ளது. 38 நாட்கள் போராட்டம் முடிந்ததென அரசாங்கம் தன்னிச்சையாக அறிவிக்கிறது. அந்நிய நாட்டு நிறுவனத்திற்கு தொழிலாளர்களை அடிமை பத்திரம் எழுதிக் கொடுக்க எதற்கு அரசாங்கம்..? ஒரு தொழிற்சங்கத்தை பதிவு செய்து அங்கீகாரம் தர முடியாத கையறு நிலையில் அரசாங்கத்தையே ஒரு அந்நிய நிறுவனம் கட்டுப்படுத்தும் என்றால், நாம் பெற்றது சுதந்திரம் தானா?
சுதந்திர இந்தியாவிற்குள் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டைக்குள் அமைந்துள்ள தென்கொரிய நாட்டைச் சேர்ந்த சாம்சங் மின்னணுச் சாதன உற்பத்தி நிறுவனத்தின் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதகாலமாக சட்டரீதியான உரிமைகளுக்காகச் சட்டத்திற்கு உட்பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
# மூன்றாண்டுகளாகத் தரப்படாமலிருக்கும் சம்பள உயர்வினைத் தர வேண்டும்;
# சம்பளத்தினை வருடத்திற்கு 500 ரூபாய் அதிகரிக்க வேண்டும்;
# குழந்தைப்பேறுகால தந்தைக்கான விடுமுறை நாளை மூன்றிலிருந்து ஏழு நாளாக அதிகரிக்க வேண்டும்;
# சமமான தகுதியில், சமமான வேலையைச் செய்பவர்களுக்குச் சமமான சம்பளம் வழங்கப்பட வேண்டும்;
# இயற்கை உபாதைகளை போக்க சுகாதாரமான கழிவறைகள் வேண்டும்.
# தங்களது சங்கத்தினை அங்கீகரிக்க வேண்டும் ஆகிய சட்டரீதியான உரிமைகளை வலியுறுத்தி அத்தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை போராட்டங்களுக்கு பிறகு இவற்றை பரிசீலிக்கவும், ஏற்கவும் தயாராக இருப்பதாகக் கூறுகின்ற சாம்சங் முதலாளி, சங்கத்தினை அங்கீகரிப்பதை மட்டும் பரிசீலிக்கக் கூட முடியாது என்கிறார்.
”எனது உடல் கல்லறைக்குக் கூடச் செல்லாம். ஆனால், சாம்சங்கிற்குள் தொழிற் சங்கத்தை மட்டும் நுழையவிட மாட்டேன்” என்றிருக்கிறார் சாம்சங்கின் முதலாளி லீ பியூங் சுல்.
இந்தியத் தொழிலாளர் உரிமைச் சட்டங்கள் மட்டுமல்லாது, சர்வதேசத் தொழிலாளர் உரிமைச் சட்டங்களெல்லாம் இருப்பது தெரிந்துங்கூட சாம்சங் முதலாளி இப்படிக் கூறியிருக்கிறார். அவரால் எப்படிக் கூற முடிகிறது? முதலாளியின் பேச்சை தி.மு.க அரசாங்கமானது வேடிக்கை பார்ப்பதுடன் சாம்சங் முதலாளிக்கு ஆதரவாகவும் தொழிலாளர்களை எச்சரிக்கவும் செய்கிறது. போராடக்கூடாதெனப் போலீசைக் கொண்டு தொழிலாளர்களை அடித்து விரட்டுகிறது. இது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கத்தில் தொழிலாளர்களது போராட்டத்திற்கு எதிராகப் பெரும்பான்மையான தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், மற்றும் சமூக ஊடகங்கள் இருக்கின்றன. அத்துடன் போராட்டத்தினை ஆதரிக்காத சாம்சங் தொழிலாளர்களும் பொதுமக்களும் இருப்பதாகப் பேட்டிகள், செய்திகளை வெளியிட்டும் வருகின்றன.
இதனால், இப்போராட்டம் வெற்றியடையுமா? தோல்வியடையுமா? எனும் கேள்வி எழும்பியுள்ளது. உழைத்துச் சோறு திங்காத கூட்டமோ, இதை ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதுபோலக் கருதி முகநூல், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம்களில் கமெண்ட் அடித்து வருகிறது.
ஆனால், இப்போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமா? அல்லது தோல்வியடையச் செய்ய வேண்டுமா? எனும் கேள்வியைத் தான் நாம் இப்போது எழுப்ப வேண்டியுள்ளது. அதை எவ்வாறு முடிவு செய்வது என்பதற்காக, தொழிற்சங்கமோ, தொழிலாளர் நலச்சட்டங்களோ இல்லாத 116 ஆண்டுகளுக்கு முன்பாகச் செல்கிறோம்.
சுதந்திரமடையாத பிரிட்டிஷ் இந்திய நாட்டின் மூன்று மாகாணங்களில் ஒன்றான மெட்ராஸ் மாகாணத்தின் தூத்துக்குடியில் அமைந்திருந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கோரல் மில் எனும் பஞ்சாலையின் தொழிலாளர்கள் பிப்ரவரி -27, 1908 ஆம் தேதி முதல் தங்களது முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். சட்டரீதியான உரிமைகளில்லாதது அக்காலம்.
இத்தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன? ஊதியம் உயர்த்தப்பட வேண்டும்; வாரம் ஒருநாள் விடுமுறை விடப்பட வேண்டும். கூலியில்லாமல் விடுப்பு எடுக்கும் முறை வேண்டும்;
இவைகளெல்லாம மிக எளிமையான கோரிக்கைகள் தான், ஆனால் அக்காலத்தில் இவைகள் மிகப்பெருங் கோரிக்கைகளாக இருந்தன.
அதுவரையிலும் போராட்டம் என்றால், என்னவென்றே தெரிந்திராத கோரல் மில் தொழிலாளர்களுக்குப் போராட வேண்டும் எனும் எண்ணம் எப்படி வந்தது? அதற்குக் காரணம் இருவர்.
ஒருவர், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கு எதிராக, சுதேசிக் கப்பல் கம்பெனியை (இதே அக்டோபர் 16, 1906)த் தொடங்கி சுதேசிக் கப்பல்களைக் கொண்டு வந்து தூத்துக்குடிக் கடலிலே நிறுத்தி இலங்கைக்கும் தூத்துக்குடிக்குமான கப்பல் போக்குவரத்தை நடத்திக் காட்டி, காலனியாதிக்க எதிர்ப்பின் பீரங்கியாகத் திகழ்ந்த வக்கீல் வ.உ.சிதம்பரனார்.
இன்னொருவர் ரஷ்யப் புரட்சி மக்களுக்கு நன்மையை விளைவித்தது. புரட்சிகள் எப்போதும் மக்களுக்கு நன்மையைத் தான் கொண்டு வரும் என முழங்கிய வத்தலக்குண்டு வீரர் சுப்பிரமணிய சிவா.
தூத்துக்குடியில் சுதேசிப் பிரச்சாரம் அனல் பரத்திக் கொண்டிருந்த நேரம். “நான் ஆலை நிர்வாகத்திடம் எச்சரிக்கை செய்து பார்க்கிறேன், அதுவரை சற்றுப் பொறுங்கள்” எனப் வ.உ.சி தொழிலாளர்களிடம் ஆறுதல் சொல்லியிருந்தபோதிலும் ஆலை நிர்வாகத்தின் கொடுமைகளைப் பொறுக்க முடியாமலிருந்த தொழிலாளர்கள் வ.உ.சி மற்றும் சிவாவின் சுதேசிப் பேச்சுக்களால் உத்வேகம் பெற்றதால் வேலை நிறுத்தத்தை அவர்களாகவே அறிவித்துவிட்டனர்.
தொழிலாளர்களின் துயர நிலையை உணர்ந்த வ.உ.சி களத்தில் இறங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தனது சொந்தப் பணத்தைக் கொண்டும் சுதேசப் போராட்ட நிதியினைத் திரட்டியும் உணவளிக்க ஏற்பாடு செய்தார். தொழிலாளர்களுக்கு உதவுமாறு மக்களிடம் கோரினார். வேலையற்றிருந்த தொழிலாளர்களுக்கு வேறு இடங்களில் வேலைகளுக்கு ஏற்பாடு செய்தார்.
அப்போது, ரஷ்ய ஜார் மன்னனின் பிரிட்டிஷ் இந்தியத் தூதராக இருந்த செர்க்கின் என்பவன், “இது திறம்பட நடத்தப்படும் வேலை நிறுத்தம் ஆகும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு உணவு படைக்க வேலை நிறுத்தத்தை நடத்தும் தலைவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்” எனத் தந்தியடித்திருக்கிறான்.
தொழிலாளர்கள் கோரிக்கைகளை வைக்கும்போது ஆலைகளை மூடினால் நாலு நாளில் பசிபொறுக்க முடியாமல் ஓடி வந்து காலில் விழுவார்கள் என முதலாளிகள் கனவு கண்டிருந்த காலத்தில் அவர்களின் நினைப்பில் பெரியவர் மண்ணள்ளிப் போடுவார் என எவனும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டான்.
பிப்ரவரி -27,1908 அன்று வேலை நிறுத்தம் தொடங்கியது. அப்போது கலெக்டராக இருந்த பிரேக்கன் என்பவனால் வ.உ.சி தலைமையிலான சுதேசிகளை ஒடுக்க முடியவில்லை என்பதால் ஆஷ் என்பவனை சப் கலெக்டராக நியமித்தது பிரிட்டிஷ் அரசு.
மார்ச் 2 அன்று ஆஷும் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சந்திக்கின்றனர். ‘நன்றாக நடந்து கொண்டிருந்த ஆலையை வேலை நிறுத்தத்தைத் தூண்டி நீ நாசம் செய்கிறாய்’ என்கிறான் ஆஷ்.
“இல்லை, பல கொடுமைகளைத் தொடர்ச்சியாகச் செய்து தொழிலாளர்களைத் துன்பப்பட வைத்ததினால் தான் அவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்” எனப் பதில் சொல்கிறார் வ.உ.சி.
போராட்டம் தொடங்கியபோது. வ.உ.சி சொன்னது, “அவர்களுக்கு ஆதரவளிப்பது எனது கடமையென உணர்ந்தேன்”. 06.03,1908 அன்று காலையில் ஆலையின் ஏஜண்டான மில்லாபீஸ் பிள்ளை என்றழைக்கப்பட்ட சுப்பிரமணிய பிள்ளை வ.உ.சியைச் சந்திக்கிறார்.
அரைப்பங்கு கூலியைக் கூட்டுதல், கூலியுடன் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை விடுதல், தேவைப்பட்டால் கூலியின்றி விடுப்பு எடுத்தல் ஆகிய மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவார்கள் என அவரிடம் வ.உ.சி. சொல்கிறார். அன்று மாலை எவ்வித நிபந்தனைகளுமில்லாமல் கோரிக்கைகளை ஏற்பதாக ஆலை நிர்வாகம் அறிவிக்கிறது. போராட்டம் வெற்றியடைந்து விட்டது.
அன்று மாலை தொழிலாளர்களிடம் பேசுகிறார் பெரியவர், “எனது நோக்கம் அவர்களது ஆணவத்தைக் குறைப்பதேயாகும். தொழிலாளர்கள் ஒரு வாரம் சும்மா இருந்தார்கள். இப்போது நல்ல கூலி பெறப் போகிறார்கள். 50% உயர்வு சுதேசியத்தால் கிடைத்திருக்கிறது. நாம் வெள்ளையர்களை எதிர்த்து நின்று வெற்றி பெற்றுள்ளோம். இந்நாளானது எனக்கும் உங்களுக்கும் பெருமைக்குரிய நாளாகும்.”
சுதேசிப் பிரசங்கங்களிலே வ.உ.சி பேசிய விசயங்களில் தொழிலாளர் சார்ந்த இரண்டு விசயங்கள் மிக முக்கியமானவை. இன்று போராடிக் கொண்டிருக்கின்ற சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களும் அவர்களுக்காகப் போராடுகின்ற சங்கங்களும் அதைப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
1908 பிப்ரவரி 26இல் கோரல் மில் தொழிலாளர்களிடம் பேசும்போது ஆலை முதலாளிகளை முடக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளதென்றும், ஒன்று மில்லிலுள்ள மெஷின்களை சேதப்படுத்துவது மற்றொன்று வேலை நிறுத்தம் செய்வது; இதில் இரண்டாவது வழியைத் தொழிலாளர்கள் கையாள வேண்டும் எனச் சுப்பிரமணிய சிவா பேசியபிறகு பேசிய வ.உ.சி இரண்டு வழிமுறைகளையுமே கையாள வேண்டுமென்று பேசியிருக்கிறார். இயந்திரங்களைச் சேதப்படுத்தலாம் என வ.உ.சி பேசியதின் பொருள் என்ன?. அதை மற்றுமொருரிடத்தில் வ.உ.சி பேசியதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
“அடுத்து பருத்தி வாணிகம். அதை நாம் கைப்பற்றுவது மிக எளிது. இத்தொழிலை நடத்துவதற்குத் தேவையான உழைப்பாளர்களையும், மூலதனத்தில் கால்பகுதியையும், வழங்கத் தூத்துக்குடி மக்கள் முன்வருவார்களானால், மீதமுள்ள முக்கால் பகுதி மூலதனத்தை முதலீடு செய்வதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக மதுரையிலிருந்தும், சேலத்திலிருந்தும் பலர் எனக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்கள். இந்நகரப் பெருமக்களாகிய நீங்கள் எனக்கு உதவி புரிவீர்களானால் நான் இங்கு ஒரு பெரிய பஞ்சாலையை நிறுவி, நூலையும் எல்லாவகைத் துணிகளையும் தயாரிக்கத் தொடங்கி விடுவேன். சுதேசிக் கப்பல் நிறுவனம் உறுதியான அடிப்படையில் நிறுவப்பட்டிருப்பதைப்போல், ஒரு பஞ்சாலையையும் வெற்றிகரமாக உருவாக்கி விடலாம்.”
இதிலிருந்து சுதேசக் கப்பல் கம்பெனிக்கு அடுத்து, வ.உ.சியின் அடுத்த இலக்கு ஒரு சுதேசப் பஞ்சாலையை நிறுவுதல் என்பதைப் புரிந்து கொள்ளலாம். சுதேசியத் தொழில்கள் தான் நாட்டிற்கு வேண்டும் என்பதைத் தான் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
# காட், டங்கல் ஒப்பந்தத்தில் உடன்பாடு செய்து கொண்டு கையெழுத்திட்டுள்ள ஒரு நாட்டில்,
# சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் இந்தியத் தொழிற்சாலைச் சட்டங்கள், இந்தியத் தொழிலாளர் உரிமைச் சட்டங்கள், தொழிற் தகராறு வழக்குகளில் இந்திய நீதிமன்றங்களினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகள், இந்தியன் பீனல் கோடு உள்ளிட்ட அவ்வளவும் செல்லாது என அடிமைத்தனத்தை ஏற்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ள நாட்டில்,
# பொதுத்துறைகளைத் தனியார்களிடம் விற்பதற்கென்று ஒரு அமைச்சகத்தையே உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கும் நாட்டில்…,
அதன் அரசுகள் தொழிலாளர்கள் சார்பாக நிற்பார்கள் எனக் கனவிலும் நாம் நினைக்க முடியுமா?
இன்றைய சாம்சங் தொழிலாளர் போரட்டம் வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ முடியலாம். ஆனால் நாளை?. அன்று நோக்கியா, அதன்பின் மாருதி, இன்று சாம்சங். இது ஒரு தொடர்கதை. இதை நீங்கள் எப்படி எதிர் கொள்வீர்கள்?.
சுதேசத் தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படும் ஒரு நாட்டில், பன்னாட்டுத் தொழில்களால் கொள்ளையடிக்கப்படுகின்ற ஒரு நாட்டில் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் என்ன செய்ய வேண்டும்?
Also read
மெய்யறம் எனும் தனது நூலில் தொழில் அறிதல் எனும் பகுதியில் என்ன செய்யவேண்டும் என்பதைப் பெரியவர் வ.உ.சிதம்பரனார் தெளிவாகச் சொல்கிறார்.
“படைக்கலமனைத்தும் பண்பொடு பயில்க,
படைவகுத்தமர் செயு நடையெலாமறிக”
ஆம், இது ஏதோ பஞ்சப்படி உயர்வுப் போராட்டத்திற்கான தீர்வல்ல. நாட்டின் தொழில் துறைகளைக் காப்பாற்றுவதற்கான தீர்வு. இது இந்த நாட்டிற்கு மட்டுமல்ல, எந்த நாட்டிற்கும் இதுதான். இது ஒன்றே தீர்வு, இதைத்தவிர வேறு ஏதும் தீர்வில்லை. போராட்டம் வெல்லட்டும்! வ.உ.சி வழி நடப்போம்!!
குருசாமி மயில்வாகனன்,
செயலாளர்,
வ.உ.சி ஆய்வு வட்டம் தமிழ்நாடு.

1908 மார்ச் பன்னிரண்டாம் தேதி வ.உ.சி சுப்பிரமணிய சிவா பத்மநாபயங்கார் நெல்லையில் கைது செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தான் பெற்ற உரிமைகளையும் இழந்து தூத்துக்குடியில் இருந்த ஹார்வி-;
இன்றைய மதுரா கோட்ஸ் – மில் தொழிலாளர்கள் மார்ச் 12 முதல் 19 வரை தன்னிச்சையாக வேலை நிறுத்தம் செய்தனர். இதுதான் இந்தியாவில் நடைபெற்ற முதல் அரசியல் வேலை நிறுத்தம்..
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போவதோ நாங்கள் நிதம் சாவதோஎன்று அன்றைக்கு எழுந்த கேள்வி இன்றைக்கும் தொடர்கின்றது. அன்று இந்தியா காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இன்று நவீன காலனி ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றது. 1990களில் ஏற்பட்ட உலக மயம், தாராளமயம், தனியார்மயம் என்ற கொள்கைகளும் உலக வர்த்தக அமைப்பு என்ற பெயரால் காட் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பின் ஏற்படுத்தப்பட்ட உலக அமைப்பும் நவீன தாராளமயக் கொள்கைகள் நாட்டை சீரழிக்கின்றன. இவைகளை எதிர்த்த போராட்டங்கள் தொடரும்.
மகிழ்ச்சி. நன்றி.
சிறப்பான கட்டுரை. கோரல் மில் போராட்ட நினைவுகளுடன் இன்றைய முதலாளித்துவ அமைப்பில் அரசு எப்படி நடந்து கொள்ளும் என்று விளக்கி,இறுதியாக என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலுடன் அருமையாக சொல்லப்பட்டுள்ளது.
நன்றி சார்
இன்றைய ஆட்சியாளர்களின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, முதலாளிகளின் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையாக மாற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பிரச்சனைகளில் இன்றைய ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் மனோபாவத்தோடு செயல்படுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இந்த மனோபாவத்தை ஜனநாயக சக்திகள் அனுமதிக்கக் கூடாது. தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை கொச்சைப்படுத்தி பேசுபவர்கள். சிங்காரவேலர், லாலாலஜபத்ராய், வஉசி, ஜீவானந்தம்,ஜோதிபாசு ,கேடிகே தங்கமணி, இராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம்போன்ற எண்ணற்ற தொழிற்சங்க தலைவர்களை , சுதந்திரப் போராட்ட தியாகிகளை கொச்சைப்படுத்துவதாகும். தற்குறிகளால் தொழிற்சங்க போராட்டங்களை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது.