இந்தியாவில் பல படுகொலைகளை நிகழ்த்தி பழக்கப்பட்ட கொலை கரங்கள் தற்போது சர்வதேச அளவில் நீள்கிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் மஃபியா கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயைப் பயன்படுத்தி, இந்திய அதிகாரிகள் கொலை செயல்களில் ஈடுபடுவதாக சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டு;
தங்கள் 2023 ஜூன், 23 ஆம் தேதி கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா நகர் குருத்வாராவின் முற்றத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் .
இந்த படுகொலை குறித்து கனடா பிரதமர் ட்ரூடோ – புது தில்லியில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நேரத்தில் – ஓர் அறிக்கை வெளியிட்டார், அதில் கனடாவின் காவல்துறை நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசின் அலுவலர்கள் (Agents) சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற நம்பகமான தகவல்களை தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகிறோம், இவ்விசாரணையில் இந்திய அரசும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த தகவல் அப்போதே சர்வதேச அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது, இந்தியா உலக நாடுகளின் சந்தேகப் பார்வையில் சிக்கியது.
மோடி அரசு இதை ஏற்றுக்கொள்ளவில்லை, ”நமது மீது பூசப்பட்ட களங்கத்தை களைய விசாரணையில் கலந்து கொண்டு உண்மை குற்றவாளியை அறிய முழு ஒத்துழைப்பு கொடுபோம்” என கூறவில்லை. மாறாக,
”இக்குற்றச்சாட்டு அபாண்டமானது, உள் நோக்கம் கொண்டது, எந்த வித ஆதாரமும் இல்லாமல் ஓட்டு அரசியலுக்காக கனடா பிரதமர் தரம் தாழ்ந்து குற்றம் கூறுகிறார் , சீக்கியர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இவ்வாறு அவர் சிறு பிள்ளைத்தனமாக நாடகமாடுகிறார்” என (இந்திய) மோடி அரசு அறிக்கை வெளியிட்டது.
ஆனால், வலதுசாரி ஊடகங்களும் சங்கிகளும், பாஜ கவின் ஐ.டி. விங்கும் சீக்கியர்களை கொன்றதை கொண்டாடினர், “ நீங்கள் எங்கு ஒளிந்திருந்தாலும் மோடியின் கைகள் அங்கு நீளும், உங்களது உயிரை பறிக்கும்” என்று ட்வீட் போட்டு பெருமைப்பட்டனர்.
இதெல்லாம் பழைய கதை என நீங்கள் கருதினால், இந்த கதையின் புதிய அத்தியாயமாக சில தரவுகள் வெளிவந்து நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன!
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் ‘இந்திய அரசு பிஷ்னோய் மஃபியா கும்பலை (Bishnoy Lawrence Gang) ஏவி கொலை செய்தது ‘ என்று கனடா காவல் துறை தலைவர் இப்போது குற்றம் சுமத்தியுள்ளார் .
உலக பிரசித்தமான ‘ வாஷிங்டன் போஸ்ட்’ ( Washington Post) நாளிதழோ இந்த படுகொலையில் இந்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா வின் பங்கும் உள்ளதாக ஆதாரபூர்வமான தகவல்களை உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது.
அமீத் ஷா மீது இதுபோன்று சட்டத்திற்கு புறம்பான படுகொலை யில் சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் வருவது புதிதல்ல. இந்திய காவல் துறையான சி. பி. ஐ. யால் பத்தாண்டுகளுக்கு முன்னர் சட்ட புறம்பான படுகோலை குற்றம் சுமத்தப்பட்டது, கைதும் செய்யப்பட்டார்.
சொராபுதீன் மற்றும் அவரது மனைவி திருமதி. கௌசார் பீவி மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டரில் குஜராத் காவல்துறை சுட்டுக்கொன்ற வழக்கில் , அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமீத் ஷாவிற்கு “பங்கு உள்ளது” என அமீத் ஷாவை சி.பி.ஐ. கைது செய்தது. இவர் உள்துறை அமைச்சராக குஜராத்தில் இருந்த போது பாஜ க தலைவர் ஹரேன் பாண்டியா கொலை மற்றும் 20 போலி என்கவுண்டர்கள் நடந்தன. இஷ்ரத் ஜகான் , பிரனேஷ் பிள்ளை, ஜீஷான் ஜோகர் போன்றோரும் மோடியை கொல்ல வந்த தீவிரவாதிகள் என சுட்டு கொன்றது நினைவிருக்கலாம்.
மோடி அரசு 2014ல் ஆட்சியில் அமர்ந்த பின்னரே , நீதிபதி லோயாவின் மர்மான மரணத்திற்கு பின் வந்த விசாரணை நீதிபதியால் குற்றத்திலிருந்து அமீத் ஷா “விடுவிக்கப்பட்டார்”.
ஆனால், இந்த விடுவிக்கப்படுதலை எதிர்த்து சி. பி. ஐ. மேல் முறையீடு செய்யவில்லை!
இப்பொழுது கனடா காவல்துறை இத்தகைய குற்றச்சாட்டை இவர்மீது சுமத்தியுள்ளது. ஆனால், இதை ஆமோதிக்கும் விதமாக பிரபல அமெரிக்க நாளிதழ் வாஷிங்டன் போஸ்டும் இதன் தீவிரத்தை உணர்ந்தே செய்தி வெளியிட்டுள்ளது.
இத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் குர்பந்த வந்த் சிங் பன்னும் என்ற சீக்கிய பிரமுகரை கொலை செய்ய முயன்றதாக அமெரிக்க காவல் துறையால் குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய உளவாளி CC1 ஐ இந்திய அரசு கைது செய்து விட்டதை மோடி அரசு ஒத்துக் கொண்டுள்ளது.
கனடா அரசின் மீது சீறிப்பாயும் மோடி அரசு கனடா நாட்டின் அண்டை நாடான அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கவில்லை- வெளி நாடுகளில் வசித்து வரும் இந்தியர்களை இந்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக தாக்கி கொல்கிறது என்ற அமெரிக்காவின் விசாரணையில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்க இந்திய குழு நேற்று அமெரிக்கா பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, இந்திய அதிகாரிகள் கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு கைது செய்துவிட்டதாக தெரிவிக்கும் (CC1) நபர் விக்ரம் யாதவ் ஆவார். அவர் முன்னாள் மத்திய ரிசர்வ் படை(CRPF) யிலிருந்து “ரா- RAW” உளவுப் பிரிவிற்கு மாற்றப்பட்டவர் என இந்திய அரசு கூறியதாக அமெரிக்க தகவலறிக்கை கூறுகிறது. ஆனால் உண்மையில் அவர் யார்? எங்கு கைது செய்யப்பட்டார்?, இப்பொழுது எங்கிருக்கிறார்? என்ற விவரம் பொது வெளியில் இல்லை!
இந்திய அரசு ஊழியரான விக்ரம் யாதவ், திரு . நிகில் குப்தா என்ற இந்தியர் மூலம் பணத்திற்காக கொலை செய்யும் நபர்களை ஈடுபடுத்தி குர்பந்த் வத் சிங் பன்னுவை கொலை செய்ய முன்றதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது, நிகில் குப்தா பன்னுவை கொலை செய்ய ஒரு நபரிடம் ‘ காண்ட்ராக்ட்’ பேசியதை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. நிகில் குப்தா ஏற்பாடு செய்த அந்த கொலையாளி உண்மையில் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான FBIன் அண்டர்கவர் ஏஜெண்ட் என்பது சுவாரஸ்யமான தகவலாகும்! இதற்காக நிகில் குப்தாவை செக் நாட்டில் வைத்து அமெரிக்கா கைது செய்து அமெரிக்க சிறையில் வழக்கு விசாரணைக்காக அடைத்து வைத்துள்ளது.
இது போல கூலிக்கு கொலை செய்யும் வேலையில் பிஷ்னோய் கும்பல் சம்பந்தப்பட்டிருப்பதை பல நாட்டு உளவு நிறுவனங்களும் கண்டு பிடித்துள்ளன. இந்த கும்பல்தான் இரண்டு நாள் முன்பு மகாராஷ்டிர (தேசீய வாத) காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை படு கொலை செய்தனர் என மும்பை போலீஸ் சந்தேகிக்கிறது.
பிஷ்னோய் மஃபியா கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் இப்பொழுது குஜராத் சபர்மதி சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இவன் மீது பஞ்சாப், இராஜஸ்தான் மகாராஷ்டிரம் போன்ற பல்வேறு மாநிலங்களில் கொலை செய்ததாக வழக்குகள் பல இருந்தாலும், ‘அவனை குஜராத் சிறையிலிருந்து மாற்றவோ, வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லவோ கூடாது’ என்று அமீத் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் உத்திரவிட்டுள்ளது, சிறையிலிருந்தவாறே பல்வேறு கொலைகளை நிகழ்த்தும் இவன் குஜராத் சிறையில் “பாதுகாப்புடன்” உள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவன் குஜராத் சிறையில் இருந்தாலும், தொலைகாட்சிகளுக்கு லைவ் பேட்டி கொடுக்கிறான். ஹரியானாவை சார்ந்த கௌரட்சக குண்டனான மனு மனேசர் என்ற கொலையாளியுடன் தொலைபேசியில் உரையாடுகிறான் என்பது எப்படி சாத்தியமாகிறது? இவனுக்கு உதவுவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நித்த நித்தம் புதுப்பது தரவுகள் வெளிவரும் தொடர்கதையாக “இது” இருப்பதால் கடந்த ஒரு வாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மட்டும் இங்கே பார்ப்போம்.
அக்டோபர் 10, 2024
வியன்டைன் நகரில் நடந்த ஏசியான் உச்சி மாநாட்டின் இடையில் கனடா பிரதமர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். அப்பொழுது அவர் மோடியிடம், “ நாங்கள் ஆற்ற வேண்டிய பணி முக்கியமானது, விவரங்கள்களுக்குள் அதிகம் செல்லாமல் திரும்ப திரும்ப நான் கூறுவது ஒன்றைத்தான். கனடாவில் வாழ்பவர்களின் பாதுகாப்பும் , சட்டத்தின் வழி ஆட்சி புரிவதும் கனடா அரசின் – அது எந்த கட்சி அரசாக இருப்பினும் – கடமையாகும் . அதை நான் உறுதியாக பின்பற்றுவேன்” என கூறியதாக தெரிவித்தார். ஆனால், இந்திய அரசோ எத்தகைய அர்த்தமுள்ள கலந்துரையாடலும் நடைபெறவில்லை என கூறியது.
அக்டோபர் 12
கனடா பிரதமர் ட்ரூடோவின் அறிவுறுத்தல்படி கனடா காவல்துறை அதிகாரிகள், கனடா தேசீய பாதுகாப்பு செயலர் ஆகியோர் இந்திய அரசின் பாதுகாப்பு செயலர் அஜீத் தோவலை சிங்கப்பூரில் சந்திக்கின்றனர். அப்பொழுது கனடாவில் சீக்கியர்களுக்கெதிரான வன்முறையிலும், நிஜ்ஜார் படுகொலையிலும் இந்திய அரசு ஊழியர்களின் பங்கு குறித்த ஆதாரங்களை சமர்பித்துள்ளனர்.
அமீத் ஷாவின் ‘வாய்மொழி உத்தரவின்’ பேரிலேயே ,சீக்கியருக்கெதிரான வன்முறை மற்றும் நிஜ்ஜார் படுகொலை போன்ற சம்பவங்கள் நடந்ததற்கான ஆதாரங்களையும் கனடா அதிகாரிகள் அஜீத் தோவல் முன் அளித்ததாக தெரிகிறது.
அஜீத் தோவலோ “ நீங்கள் எந்தவிதமான ஆதாரங்களை சமர்ப்பித்தாலும், இந்தியா இதை ஒத்துக் கொள்ளாது, மறுப்பு மட்டுமே வெளியிடுவோம்” என கூறியதாக தெரிகிறது.
அக்டோபர் 13
இந்திய தூதரக அதிகாரிகள் ஆறு பேர் இந்தக் கொலையில் ‘ சம்பந்தப்பட்டவர்கள் – persons of interest- ஆதலால், அவர்களை விசாரிக்கும் பொருட்டு அவர்களுக்கு இந்திய அரசு அளித்துள்ள அரசு பாதுகாப்பை (diplomatic immunity) விலக்கி கொள்ள வேண்டும், இது RCMP (கனடாவின் காவல்துறை ) விசாரணை நடத்த ஏதுவாக இருக்கும் என கனடிய அரசு கோரிக்கை வைத்தது.
அக்டோபர் 14
இந்திய அரசு இந்த கோரிக்கையை நிராகரித்து, கனடா பிரதமர் ட்ரூடோ இந்தியா மீது ‘அபாண்டமாக ‘ குற்றம் சுமத்துகிறார் என அறிக்கையை வெளியிட்டது.
கனடா அரசு, இந்திய தூதரக உயர் அதிகாரிகள் ஆறு பேரை ‘persona non grata’ (ஏற்றுக்கொள்ள முடியாத நபர்கள்) என அறிவித்து அவர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
இந்திய அரசோ அந்த ஆறு அதிகாரிகளை அவர்களின் ‘பாதுகாப்பு கருதி’ திரும்ப அழைத்துக் கொள்வதாக அறிவித்தது.
பதிலடியாக இந்தியாவிலுள்ள கனடிய தூதரக அதிகாரிகள் ஆறுபேரை வெளியேறும்படியும் இந்திய அரசு உத்தரவிட்டது.
ராயல் கனடா காவல்துறை RCMP தலைவர் கனடா தலைநகர் ஒட்டாவாவில் ( Ottawa) ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட்டி, இந்திய அரசு லாரன்ஸ் பிஷ்னோய் கிரிமினல் கேங்கை பயன்படுத்தி கனடா மண்ணில் கொலைகளை அரங்கேற்றுகிறது என பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதில் கனடா அரசு கடந்த ஆண்டு ஜூலை முதலே பல ஆதாரங்களை அமெரிக்க அரசின் உதவியுடன் திரட்டி உள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவும், கனடாவும், பிரிட்டன், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து “ஐந்து கண்கள் Five Eyes என்ற
ஆங்கிலோஸ்பியர் உளவு துறை கூட்டணி வைத்துள்ளது . இதன்படி இந்நாடுகள் உலகம் முழுதும்நுண்ணறிவு உளவுத் தகவல்களை திரட்டி தங்கள் ஐந்து நாடுகளுக்குள் மட்டும் பரிமாறிக் கொள்வர் என்பது இதன் சிறப்பு ஆகும்.
இவ்வமைப்பு திரட்டி கொடுத்த தகவல்களை ஆதாரமாக வைத்தே , ‘ இந்திய அரசு தனது தூதரக அதிகாரிகள் மூலமும், பிஷ்னோய் போன்ற கிரிமினல் கும்பல்களை ஈடுபடுத்தி கனடா அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அரசியல் கொலைகளை நாட்டு எல்லைகளை கடந்து அரங்கேற்றுகிறது‘ என குற்றம் சாட்டுகிறார் கனடா பிரதமர் ட்ரூடோ.
“இந்தியா இதன் மூலம் பெரிய தவறை இழைத்து வருகிறது…… கொலை மற்றும் வன்முறைகள் மூலம் கனடியர்களை அச்சுறுத்தி வருகிறது, இதை எங்களால் ஒருபோதும் ஏற்க முடியாது” என்று கடந்த திங்கட்கிழமை (14-10-2024) அறிவித்துள்ளார்.
இதுவரை கனடா, பிரிட்டன்,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் 20க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த இந்தியர்கள் இந்திய அரசால் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக’ தி கார்டியன் ‘ பத்திரிக்கை கூறுகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த தகவல்களை மறுத்தாலும் , இந்திய உளவுத்துறை முன்னாள் அதிகாரிகள் (R&AW) இருவரின் கூற்றுப்படி இந்தியா 2020ம் ஆண்டிற்குப் பிறகு இத்தகைய கொலைகளை ‘நாட்டின் பாதுகாப்பை’ கருதி முன்னெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்ததாக ‘தி கார்டியன் ‘ பத்திரிக்கை கூறுகிறது.
மேலும், இதற்கான உத்திரவுகள் உயர்ந்த இடத்திலிருந்துதான் வர வேண்டும். ரா அதிகாரிகள் மட்டத்தில் இதை முடிவு செய்ய இயலாது என அந்த அதிகாரிகள் கூறியதாக கார்டியன் கூறுகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக, சௌதி அரேபிய பத்திரிக்கையாளரும், ஆளும் இளவரசர் எம் . எஸ். அப்துல் ரஹ்மானுக்கு வேண்டாதவருமான ஜமால் அடனான் காஷோகியை தூதரகத்தில் வைத்து கொன்று, துண்டு துண்டாக ஊறுகாய் போல் அறுக்கப்பட்டு மறைக்கப்பட்ட கொடூர நிகழ்வுக்குப் பின் , பிரதம அமைச்சக அலுவலகத்தில் (PMO) நடந்த இந்திய உளவு துறை கூட்டத்தில் , ‘இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், சௌதியால் செய்ய முடியும் என்றால், நம்மால் முடியாதா?‘ என ஒரு அதிகாரி குறிப்பிட்டதாக கூறுகிறார் அந்த முன்னாள் அதிகாரி.
விவசாயிகள் போராட்டம் ஓயாமல் மோடி அரசுக்கு பெருந் தலைவலியாக உருவெடுத்த போது, இந்த போராட்டத்திற்கு காரணம், காலிஸ்தானிகளே என்று இந்திய அரசின் தலைமையும், பாஜகவும் எண்ணியது. எனவே சீக்கிய எதிர்ப்பு குரல்கள் எங்கிருந்தாலும் அவற்றை அழித்து ஒழித்து விட்டால், இந்தியாவின் பாதுகாப்பு மேம்படும் என அரசு எண்ணியதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
’’குறிவைத்து கொலைகளை நிகழ்த்துவது இந்திய அரசின் கொள்கை அல்ல’’ என அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்தாலும், முதலில் காஷ்மீர் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட பலரை பாகிஸ்தானிலும் துபாயிலும் மாலத்தீவிலும் இந்திய உளவு அதிகாரிகள் ஸ்லீப்பர் செல்கள் மூலம் கொன்றனர் .
பிறகு இத்தகைய கொலைகள் 2023-ல் உச்சத்தை தொட்டதாக கூறுகின்றனர். பரஞ்சித் சிங், பஞ்ச்வார், அவதார் சிங் கான்டா, சுகேல் சிங் , ஹர்தீப் சிங் திஜ்ஜார் என பாகிஸ்தான், பிரிட்டன், ஆஸ்திரேலியா கனடா என பல நாடுகளிலும் இந்திய உளவுத்துறையின் கரங்கள் பரந்து விரிந்தன என அந்த அதிகாரி குறிப்பிடுகிறார்.
இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்த பின்னர், இந்திய – கனடா உறவுகள் மோசமடைந்த நிலையில் , இத்தகைய எல்லை கடந்த கொலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உயர்மட்டத் தலைமை முடிவு எடுத்துள்ளது என்றும், அதன் விளைவாக கடந்த ஒரு வருடமாக இத்தைகைய கொலைகள் நடக்கவில்லை என்றும் அந்த முன்னாள் உளவு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கொல்லப்பட்ட அனைவரின் மீதும் இந்திய புலனாய்வு அமைப்புகள் ‘ பயங்கரவாத சட்டங்களின் ‘ கீழ் வழக்கு பதிவு செய்து இவர்களை பயங்காரவாத செயல்களின் மூளையாக செயல்பட்டனர் என்று குற்றம்சாட்டி உள்ளனர். அவர்கள் மீது இன்டர்போல் நோட்டீசும் பதிவு செய்தனர் என்றாலும், கனடா அரசோ, பிரிட்டிஷ் அரசோ குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான தகுந்த ஆதாரங்களை (credible evidence) இந்தியா கொடுக்கவில்லை என்ற காரணத்தினால், அவர்களை நாடு கடத்த (extradite) மறுத்தன.
இதை பொறுக்காத இந்திய அரசு வேறுவிதமாக முடிவு எடுத்தது போலும். இந்தியாவின் மதிப்பு இப்பொழுது உலக அரங்கில் கூடியுள்ளது, உலக நாடுகள் மத்தியில் இந்தியா ‘மதிப்புக்குரிய நாடாக ‘ வலம் வருகிறது என்று சங்கிகள் கூறுவதன் பொருள் இது தானா? என்ற கேள்வி எழுகிறது.
Also read
கனடாவுடன் ஒத்துழைக்க மறுக்கும் இந்தியா, அமெரிக்கா தொடுத்துள்ள வழக்கில் ஒத்துழைப்பு தருகிறோம் என்று கூறுவதன் மர்மம் என்ன?
இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் , மோடியின் ஆட்சியில் இந்தியா பெற்றுள்ள வலிமையை பொறுக்காத மேற்கத்திய நாடுகளின் சதி என்றால், அமெரிக்கா உடன் இந்தியா குவாட் பாதுகாப்பு கூட்டமைப்பில் (Quad Summit and Wilmington declaration) கையெழுத்திட்டு அந்நாட்டுடன் ஏன் அணி சேர்ந்து நிற்க வேண்டும்?
கொள்கைப் பிடிப்பினாலா? அல்லது குற்றங்களை மூடி மறைக்கவா? என்ற கேளவி எழுகிறது.
ஐ நா பொதுச் செயலர் கட்டரை ஏற்க மறுத்து, ஐ.நா அமைதிப் படையை தாக்கும் இஸ்ரேலை கண்டிக்க மறுக்கும் மோடி அரசிற்கு என்ன கொள்கை இருக்கிறது ? அந்த கொள்கையின் தார்மீக அடிநாதம் எது?
கனடா மற்றும் அமெரிக்கா வின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அமீத் ஷாவோ, உள்துறை அமைச்சகமோ, வெளியுறவு அமைச்சகமோ, பிரதமரோ, அல்லது அஜீத் தோவலோ பதிலேதும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர்;ச.அருணாசலம்
Leave a Reply