90 சதவிகித உடல் இயக்கமற்ற ஒரு கல்வியாளரை கண்டு அதிகார மையங்கள் ஏன் இவ்வளவு அச்சப்பட்டன..! சாய்பாபா விவகாரத்தில் காங்கிரஸும், பாஜகவும் கைகோர்த்த மர்மம் என்ன? நீதிமன்றங்கள் நிலை தடுமாறியதென்ன..? எளிய பழங்குடி மக்களை பாதுகாக்க போராடிய ஒரு மனிதாபிமானி சந்தித்த சவால்களை விவரிக்கிறார் அமரந்த்தா;
” சிறையில் இறந்தார்” என்று செய்தி வரக்கூடாது என்று தான் பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்தார்கள் போலும் ! ஆம். மார்ச்சில் சிறையிலிருந்து வெளிவந்த பேராசிரியர் சாய்பாபாவின் உயிர் அக்டோபரில் பிரிந்து விட்டது… இது தான் நமது ஜனநாயகம்… “உடல் 90% இயங்கவில்லை ஆயினும், அவரது மூளை இயங்குவதால் இந்நாட்டிற்கு அவர் மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்று கூறி தனிமைச் சிறையில் அடைத்த இந்திய உச்ச நீதிமன்றத்தின் பாரம்பரியப் பெருமை, அடடா…! அதுவும் ‘அவர் மீது எவ்வித குற்றமும், அதற்கான ஆதாரமும் இல்லை’ என்று பம்பாய் உயர் நீதிமன்றம் சான்றளித்த பிறகு !
2014 மே ஒன்பதாம் தேதி பல்கலைக்கழகத் தேர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில், வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தில்லி பல்கலைக்கழக ராம் லால் ஆனந்த் கல்லூரியின் இணைப் பேராசிரியர் கோகரகொண்டா நாக சாய்பாபாவை மகாராஷ்டிரா போலீஸ் கடத்திக் கொண்டு போனது ! ஆங்கிலப் பேராசிரியரான சாய்பாபாவை மகாராஷ்டிரா போலீஸ் எதற்காக கைது செய்ய வேண்டும் ? தில்லி பல்கலைக்கழகம் என்ன செய்து கொண்டிருந்தது ?
“அவர் இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுக்கிறார்” என்ற கற்பனையான குற்றச்சாட்டுடன், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் ( IPC and UAPA) கைது செய்யப்பட்டு, நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இத்தனைக்கும் அவர்மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவாகவில்லை. கொடூரமான தனிமைச் சிறையின் இரும்பு ஐன்னல் கதவு வழியே காய்ந்த
குளிரில் அவர் பத்தாண்டுக் காலம் சித்திரவதைக்கு ஆளானார். பொறுப்பான ஆசிரியர், சமூகச் செயற்பாட்டாளர் என்று அறியப்பட்டவர் எப்படி இவ்வளவு பயங்கரமான குற்றவாளியானார்? போலியோ நோயால் செயலிழந்த கால்கள், பாதி செயலிழந்த கைகள், நரம்பு பாதிப்பினால் ஏற்படும் முதுகு வலி, தசைநார்களில் வலியுடன் கூடிய வீக்கம் இவற்றோடு சக்கர நாற்காலியைக் கூட தானாக நகர்த்த வலுவில்லாத ஒருவர் மீது இப்படி சற்றும் பொருந்தாத குற்றஞ்சாட்ட யாருமே வெட்கப்படவில்லை !
பலவித நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த பேரா. சாய்பாபாவுக்கு சிறையில் மருந்துகள் மிகத் தாமதமாக தரப்பட்டன. பலமுறை மருந்துகள் தரப்படவே இல்லை. அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உண்டு. குடும்பத்தாரைச் சந்திக்க பலமுறை மறுப்பும், அனுமதிக்கப்பட்ட போது குறைவான நேரமுமே அவருக்குத் தரப்பட்டது. அப்போது சுற்றிலும் சிறைக் காவலர்கள் முன்னிலையில் தனது தாய்மொழியில் (தெலுங்கு) பேசாமல் இந்தியில் பேசுமாறு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
உடல்நிலை மோசமடைந்த போதெல்லாம் அவருக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்படவில்லை. சிகிச்சை என்ற பெயரில் நாக்பூர் அரசு பொது மருத்துவமனைக்குச் செல்வதும், திரும்புவதும் கூட தனக்குக் கடும் உடல் வேதனையையே தந்தது என்று அவர் தனது கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
எத்தனையோ உடல்-மன வேதனைகளுக்கு இடையிலும் அவர் கடிதங்களாகவும், கவிதைகளாகவும் எழுதியவை இலக்கியத் தரம் வாய்ந்தவை, நமது சுதந்திரமும்(?) ஜனநாயகமும்(!) கானல் நீரானதை வெளிச்சமிட்டுக் காட்டுபவை. சிந்திக்கத் தூண்டுபவை. தனது நிலை குறித்த அவரது இத்தகைய பதிவுகள் நாக்பூர் சிறை, இந்திய சிறைச் சட்டங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் கேவலமான நிலையை விவரிக்கும் அதே நேரத்தில், அவரது மேதமையையும் வெளிப்படுத்துகின்றன. சிறையில் அவர் அத்தனைக் கொடுமையாக நடத்தப்பட்ட போதிலும், அவரது மனதை உடைக்க முடியவில்லை. இருக்கும் நிலையில் விரைவில் இறந்து விடுவேன் என்று கூட அவர் தனது மனைவிக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அவர் எந்த சமரசத்திற்கும் முயலவில்லை.
பேராசிரியர் சாய்பாபா தலித்துகள், பழங்குடியினர், பிற ஒடுக்கப்பட்ட சாதியினர், சிறுபான்மை மதத்தினர் ஆகியோர் மீது இந்திய அரசின் தொடர்ச்சியான சுரண்டலை, ஒடுக்குமுறையை விமர்சித்தமைக்காக “மாவோயிஸ்ட்” என்று முத்திரை குத்தப்பட்டார். உலகமயம், தனியார் மயம், தாராளமயம் ஆகியவற்றை எதிர்த்து பழங்குடியினரின் நிலங்கள், மலைகள், கனிம வளங்கள் ஆகியவற்றையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காக அவர் குரல் கொடுத்தார்.
அதனால் பழங்குடி மக்கள் தன் விரலால் தன் கண்ணையே குத்திக் கொள்வதற்கு ஒப்பான
“சல்வா ஜூடும்”,
” ஆபரேஷன் கிரீன் ஹண்ட்”,
“ஆபரேஷன் சமாதான் பிரஹார்”, (அண்மைக்கால “ஆபரேஷன் காகர்”)
ஆகியவற்றை அவர் விமர்சித்தார். 2007 ஆம் ஆண்டு மருத்துவர் விநாயக் சென், 2014 இல் முனைவர் சாய்பாபா, பின்பு 2018 இல் பீமா கோரேகான் வழக்கில் கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட ஆறு மதிப்பிற்குரிய சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் தலைவர் உமர் காலீத், 5 பத்திரிக்கையாளர்கள் என இப்பட்டியல் இன்று வரை நீள்கிறது.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “மாவோயிஸ்ட் ஒழிப்பு” என்ற பெயரில் ஆதிவாசிகள் இறப்பதைப் பற்றி கவலைப்படவில்லை என்று திக்விஜய் சிங் கூறியிருக்கிறார். ப. சிதம்பரம் தான் ‘மாவோயிஸ்ட்’, ‘பயங்கரவாதி’, ‘தேசத்துரோகி’ என்ற அடைமொழிகளுடன் சமூக செயல்பாட்டாளர்களை கைது செய்து கொடுமைப்படுத்தச் சட்டம் இயற்றினார்.
அடுத்தடுத்து “ஆபரேஷன்கள்” கட்டவிழ்க்கப்பட்டதைப் பார்த்து சாய்பாபா நம்பிக்கை இழந்தார். கார்பரேட் முதலாளிகளுக்கு தலைமுறைகளாக பழங்குடியினர் வாழ்ந்து வந்த நிலங்களை தாரை வார்க்கவே ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற மேதாவி ப. சிதம்பரம், கூடுதல் விதிகளோடு ஊபா சட்டத்தினை மேலும் கொடுமையானதாக மாற்றியமைத்து எண்ணற்ற பழங்குடியினரைக் கொன்று குவித்தார். பேரா. சாய்பாபா இந்த கேடுகெட்ட சட்டத்தின்கீழ் தான் கைது செய்யப்பட்டார். இன்று ப. சிதம்பரம் ஊமை வேடம் தரித்திருக்க, கார்த்தி சிதம்பரம் பேரா. சாய்பாபா மரணத்திற்கு பாஜக அரசை விமர்சிப்பது என்பது ஆடு நனைகிறதென ஓநாய் அழுவதற்கு ஒப்பானது !
2014 மே 9 ஆம் தேதி எவ்வித முன்னறிவிப்புமின்றி கடத்திச் செல்லப்பட்டு நாக்பூர் மத்திய சிறையில் பேரா. சாய்பாபா அடைக்கப்பட்டார். அவரோடு வேறு ஐந்து நபர்களும் சிறைப்படுத்தப் பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் பிரிவாகக் கருதப்படும் ‘புரட்சிகர ஜனநாயக முன்னணி’ யுடன் தொடர்புடையவர் என்ற காரணத்தினால் “பயங்கரவாதி, மாவோயிஸ்ட் சதிகாரர்” என்று குற்றம் சாட்டப்பட்டு 2017 ஆம் ஆண்டு ஊபா, இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சாய்பாபாவுக்கு தனிமைச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
போலியோவால் செயலிழந்த இரு கால்கள், கைது செய்யப்பட்ட போது மகாராஷ்டிரா போலீஸ் அவரை இரக்கமின்றி நடத்தியதால் இடது கையில் ஏற்பட்ட ஊனம் ஆகியவற்றோடு, ஒரே ஒரு கை மட்டுமே செயல்படும் நிலையில் எட்டரை ஆண்டுக் காலம் அவர் சக்கர நாற்காலிகூட இல்லாமல் சிறையில் அவதிப்பட்டார். தவழ்ந்து சென்று காலைக் கடன் கழித்து, குளித்து உடை மாற்றுவது உள்பட ஒவ்வொன்றும் பெரும் தண்டனையாகி, சிறை அறையில் அவர் கடுமையாக வதைபட்டார். பலவித உடல் உபாதைகளுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவேயில்லை. குடும்பத்தார் அனுப்பி வைத்த மருந்துகளைப் பெறக்கூட அவர் பத்து நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று.
14 அக்டோபர் 2022 அன்று பாம்பே உயர்நீதிமன்றம் “மத்திய அரசு அனுமதியின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை காரணம் காட்டி, பேரா. சாய்பாபாவை விடுதலை செய்தது. ஒரே வாரத்தில் 2022 அக்டோபர் 22 அன்று, அரசு தரப்பில் அவரது விடுதலையை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. நீதிமன்ற நேரம் முடிவடைந்துவிட்டதால், அடுத்து தலைமை நீதிபதியாகப் போகும் சந்திரசூட்டிடம் விசாரணை செய்யும் படி கேட்டார். பாம்பே உயர்நீதிமன்ற ஆணையை
(சாய்பாபாவின் விடுதலையை) ரத்து செய்ய மறுத்த நீதிபதி சந்திரசூட், தலைமை நீதிபதி லலித் முன்பு மேத்தா மனு அளிக்க ஒப்புதல் அளித்தார். தலைமை நீதிபதி அமர்த்திய நீதிபதிகள் ஷா (இவர் கிரிமினல் வழக்குகளில் நீதி வழங்கும் தகுதியற்றவர்), திரிவேதி இருவர் அடங்கிய சிறப்பு பெஞ்ச், சனிக்கிழமையில் அவசரமாக கூட்டப்பட்டது. இவ்வாறு அவசரமாக நீதிமன்றம் சனிக்கிழமையில் அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே கூடும்.
அன்று சாய்பாபா தரப்பு வக்கீல், சாய்பாபா 90%. உடல் ஊனமுற்றவராதலால், எல்லாத் தொலைபேசிகளையும் துண்டித்துவிட்டு, அவரை வீட்டுச் சிறையில் வைக்கும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால், “உடலல்ல – மூளை தான் முக்கியம். பயங்கரவாத குற்றச் செயல்களைச் செய்யத் தேவையான அவருடைய மூளை இயங்குகிறதே, அது தான் ஆபத்தானது” என்று கூறி நீதிபதிகள் தண்டனையைத் தொடரச் செய்தனர். எனவே, சாய்பாபாவின் அநியாயமான துயரில், இறப்பில், இன்றைய தலைமை நீதிபதி சந்திரசூட் என்பவருக்கும் பங்கு உள்ளது.
(ஐந்தாண்டுகளுக்கு முன்னர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு, இதே போன்றதொரு சனிக்கிழமை கூடிய அவசர நீதிமன்றத்தில் முடிவானது நினைவிருக்கலாம்)
“ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை” யின் (NPRD) தலைவரான முரளீதரன், பேரா. சாய்பாபாவின் விடுதலைக்காகவும் ஊனமுற்ற சிறைவாசிகளுக்கான உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பவராக இயங்கியதால், பேராசிரியர் சாய்பாபா சிறையில் இருந்து அவருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். “ஊனமுற்றோர் உரிமைகளுக்கான புதிய சட்ட நகலை எனக்கு அனுப்பி வையுங்கள். இந்தியாவிலுள்ள ஊனமுற்றோர் உரிமைப் போராளியாக ஆவதற்கு நான் பயிற்சி பெறவேண்டும்” என்று அதில் கேட்டிருந்தார்.
எண்ணற்ற உடல் பிரச்னைகளுடன் சிறையில் அவதிப்பட்ட சாய்பாபா, சிறுவயதில் கால்கள் செயலிழந்த தன்னைச் சுமந்து சென்று கல்வி புகட்டிய தாயாரை மரணப் படுக்கையில் சென்று காண பிணை கேட்டார். தொலைபேசிக் காணொலி (Video Call) வாயிலாகப் பேசக் கூட அனுமதிக்க முடியாதென மறுத்துவிட்டது நீதிமன்றம். சாய்பாபா மனமுடைந்து போனார்.
மருத்துவ வசதிக்காக பிணை மறுக்கப்பட்டதனால் சிறையில் ஸ்டேன்சாமி (2021) உயிரிழந்ததும், தன்னுடன் கைதான 35 வயதேயான பாண்டு நரோத்தே (2022) தீராத சுரத்திற்குத் தக்க சிகிச்சையின்றி உயிரிழந்ததும் அவரை வெகுவாகப் பாதித்தன.
“குற்றம் நிரூபிக்கப்படாத கைதியை ‘என்கவுண்டர்’ என்ற பெயரில் சுட்டுக் கொல்லும் போது, அந்த நபர் சற்று நேரம் பயத்தில் அவதிப்படுகிறார். ஆனால், குற்றமற்ற பேரா. சாய்பாபா பத்தாண்டு கொடுஞ் சிறைவாசம் அனுபவித்தார். இது நீதிமன்ற என்கவுண்டர்” என்கிறார் மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை.
2024 மார்ச் 5 ஆம் தேதி, பாம்பே உயர் நீதிமன்ற நாக்பூர் டிவிஷன் பெஞ்ச், பேரா. சாய்பாபா குற்றவாளி என்பதற்கு ஆதாரமில்லை என்று கூறி விடுதலை அளித்தது. மார்ச் 9 அன்று அவர் விடுவிக்கப்பட்டார். இம்முறையும் அவரது விடுதலையை நிறுத்த அவசர மனுவைப் போட்டது மஹாராஷ்டிரா அரசு. ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்து விட்டது. வலுவற்ற குற்றச்சாட்டும், குற்றச் செயல் புரிந்ததற்கான ஆதாரம் எதுவுமே இல்லாததும் அவர் மீதான வழக்கு தவறென்று நிரூபிக்கிறது என தீர்ப்பளித்த நீதிபதிகள் கூறிவிட்டனர்.
விடுதலை பெற்ற பின் ‘இந்தியா அகாடமிக் ஃப்ரீடம் நெட்வொர்க்’ என்ற நிறுவனத்தில் உரையாற்றிய சாய்பாபா, “நமது சிறைகளின் நிலை சரியான நேரத்தில் நீதி வழங்கப்படாததை பறைசாற்றுகின்றது. அடிப்படை உரிமைகளே இல்லாதபோது, ஜனநாயக உரிமைகள் எங்கே இருக்கும்?” என்று கேட்டார். சட்ட நிறுவனங்களின் சீர்திருத்தம், அதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்பது குறித்து ஆராயவேண்டும் என்றும் கூறியுள்ளார். எனது திட்டங்கள் எது நிறைவேறுமோ இல்லையோ, நான் கற்பிக்கும் வேலையைத் தொடர்வேன்” என்று உறுதியாக இருந்தார்.
அந்த உரையில் அவர் பத்தாண்டு கால சிறைக் கொடுமைகளை விட அதிகமாக வருந்தியது வேறு காரணத்திற்காக. அவரது வீட்டில் இருந்து காவல்துறை அதிகாரிகள் பல மின்னணுப் பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டனர். அதில் தனது இருபதாண்டு ஆய்வு முடிவுகள், எழுதிய நூல்கள், எழுதி முடித்த – பதிப்பிக்க அனுப்பப்பட வேண்டிய நூல்கள், பல ஆவணக் காப்பகங்களில் இருந்து சேகரித்த அரிய ஆய்வு முடிவுகள், புத்தகங்கள் தனது விமர்சனத்திற்காக தரப்பட்ட மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள், என மதிப்பிடமுடியாத பொக்கிஷங்கள் பறி போய்விட்டன. அவற்றை மீட்க எடுத்த முயற்சியில் பயனற்ற சிதைந்த நிலையில் இரு சாதனங்கள் தன்னிடம் தரப்பட்டன எனக் கூறி வருந்தியிருக்கிறார்.
இறக்கு முன் சில நாட்கள் பேராசிரியர் சாய்பாபா தனது மனைவி, மகளுடன் இருந்தார் என்பது ஒன்றே இதில் ஆறுதலான செய்தி. அவர் சிறையிலிருந்த போது எழுதிய கடிதங்கள், கவிதைகள் அடங்கிய “Why do you fear my way so much?” (“என் வழியைக் கண்டு ஏன் இவ்வளவு பயப்படுகிறாய்?) நூல் வெளி வந்துள்ளது.
மற்றபடி உடலளவில் இவ்வளவு இயலாத மனிதரை பத்தாண்டுகள் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்திய இந்திய காங்கிரஸ், பிஜேபி அரசுகள் அவரை ஏன் கொடூரமாக தண்டித்தன? ‘அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சித்தால் என்ன வேண்டுமானாலும் செய்வோம்’ என்று சொல்லத் தான் ! ‘பழங்குடியினருக்கும், தலித் மக்களுக்கும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதரவு தெரிவித்தால் இதுதான் கதி’ என்று அவை மற்றவர்களுக்கும் செய்தி விடுக்கின்றன !
Also read
நிரபராதியை, கௌரவமான பேராசிரியரை, 90% உடல் ஊனமுற்றவரை பத்தாண்டுக் காலம் சிறைக்கனுப்பி சித்திரவதை செய்து, வேலையைப் பறித்து அவரது குடும்பத்தினரையும் தண்டித்த இந்திய அரசு, குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட அவருக்குச் சேரவேண்டிய மொத்த பணி ஊதியத்தையும், பணியிலிருந்தவர் மரணமடைந்ததால் குடும்ப ஓய்வூதியத்தையும் அவரது மனைவிக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
முனைவர் ஜீ.என். சாய்பாபாவின் மரணம் நம் மனசாட்சியை உலுக்கிக் கேட்கிறது:
இந்தியாவில் மனித உரிமைகள் என்று ஏதேனும் உண்டா ?
கட்டுரையாளர்; அமரந்த்தா
‘காலமும் கலையும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
கட்டுரையாளர் அமரந்த்தா மிக கவனமாக இந்த பிரச்சனையை கையாண்டுள்ளார். நீதிபதிகளையோ, அவர்கள் வழங்கிய தீர்ப்பினையோ விமர்சிக்க கூடாது என்று பரவலாக ஒரு மரபு உண்டு. கருத்து என்று கூட சொல்லலாம்.
அவர்களையோ, அவர்களின் தீர்ப்பையோ விமர்சித்தால் அவமதிப்பு வழக்கு பாயும் என்ற அச்சத்திலேயே பொதுவாக செய்தித்தாள்களில் எந்த ஒரு கருத்தும் இவர்களின் தீர்ப்பைப் பற்றி விமர்சிப்பதில்லை. அளித்த தீர்ப்பை அச்சிடுவதோடு சரி. ஆனால் கட்டுரையாளர் அமரநாத்தா எதற்கும் அஞ்சாமல் சாய்பாபா மீது போடப்பட்ட வழக்கு, அவரை சிறையில் அடைத்தது, அவர் 90 % மாற்றுத்திறனாளி என்று அறிந்தும் கருணை காட்டாதது ஆகியவற்றை சுட்டிக்காட்டி உள்ளார்.
அவர் தண்டிக்கப்பட்டதற்கு ஒரே காரணம் பழங்குடிமக்களுக்கு ஆதரவாக செயல்பட்டது. நீதிக்குப் பின் ஆளும் பாஜகவும் ஆட்சி செய்த காங்கிரஸும் பின்னணியில் இருந்திருக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. எவரும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்வதற்கே சாய்பாபா மீது கொடுக்கப்பட்ட வழக்கு எ ன்று தெரிய வருகிறது. அதே நேரத்தில் வேதனையும் தருகிறது. யாரிடம் சொல்லி அழுவது!!
நெகிழ்வாக உள்ளது. அமரந்தா தொடர்ந்து எழுத வேண்டும்.
one sided……there are plenty of cases of remand prisiners pending to file FIR by authorities….
after reading this story ,dear reader, be a wise man being not trapped by criminal law….