தலைமை நீதிபதியும், தடபுடல் மரியாதைகளும்!

-சாவித்திரி கண்ணன்

சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் என்ன செய்தாலும், அவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவானாலும் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. அவர்கள் வைத்தது தான் சட்டம்! சிதம்பரம் கோவிலில் தனி ராஜாங்கமே நடத்துகிறார்கள்! இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்பவர்கள்  இதை வாசித்தால் தெளிவு பெறலாம்;

‘இது ஜனநாயக நாடு தான்! இங்கு அனைவரும் சமமானவர்கள் தான்’ என்பதெல்லாம் வெறும் அலங்காரச் சொற்கள் தான் போல என நினைக்கும்படி நேற்றைய தினம் ( அக்டோபர்-19, 2024) ஒரே நீதிமன்றத்தின்  இரு நீதிபதிகள் குறித்த ஊடகச் செய்திகள் கவனம் பெற்றன.

சிதம்பரம் தீட்சிதர்கள் பக்தர்களை பாடாய் படுத்தும் பாடு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியின் வாயிலாகவே வெளிப்பட்டது;

மனக் கஷ்டங்களை போக்க கோவிலுக்கு வரும் பக்தர்களை தீட்சிதர்கள் அவமானப்படுத்துவது வேதனையானது. எனக்கே அப்படிப்பட்ட ஒரு அனுபவம் ஏற்பட்டது. சிதம்பரம் தீட்சிதர்கள் நடராஜர் கோவில் தங்களுக்கே சொந்தமானது என நினைக்கிறார்கள். தங்களை கடவுளுக்கும் மேலானவர்களாகவும் கருதுகிறார்கள். காசு கொடுத்தால் தான் பூ கிடைக்கும். இல்லாவிட்டால் விபூதி கூட கிடைக்காது. கோவிலுக்கு வருபவர்களை சண்டைக்கு தான் வருகிறார்கள் என்பது போல தீட்சிதர்கள் நடத்துகிறார்கள். தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்ல அறிகுறி அல்ல..’’என பெரும்பாலான மக்களின் அனுவத்தை பிரதிபலிப்பது போல பேசியுள்ளார் நீதிபதி தண்டபாணி.

# சிற்றம்பல மேடையில் சிவனடியார்கள் தேவாரம், திருவாசகத்தை மனம் உருகப் பாட பல்வேறு தடைகள்!

# ’சிற்றம்பல மேடையில் சிவனடியார்கள் சிவ வழிபாடு செய்யலாம்’ என அரசாங்கமே ஆணையிட்டாலும், அதை ஒரு சிறிதும் மதியாமல் தாங்கள் வைத்ததே சட்டம் என தடுத்து தனி ராஜாங்கமாக செயல்படும் தீட்சிதர்கள்!

# பக்தர்களை தாக்கிய பல சம்பவங்களில் எப்.ஐ.ஆர் போட்டும், இது வரை எந்த தீட்சிதரையும் கைது செய்ய முடியாத நிலை!

இப்படிப்பட்ட சர்ச்சைக்கு பேர் போன சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இதே நாளில்  சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் குடும்ப சகிதமாக சென்றுள்ளார். அங்கு அவருக்கு பொது தீட்சிதர்கள் படாடோப வரவேற்பு தந்து தடபுடலாக உபசரித்துள்ளனர்.

பூரண கும்ப மரியாதை!

மலர்மாலைகள்!

பொன்னாடைகள்!

சிறப்பு அர்ச்சனை, ஆராதனைகள்!

விதவிதமான பிரசாதங்கள்!

இவை போதாது என்று அழகான சட்டகமிடப்பட்ட நடராஜரின் படம்!

இவற்றை எல்லாம் உத்திரவாதப்படுத்த, தங்கள் எஜமானரை குளிர்விக்க கடலூர் மற்றும் விருதாசல நீதிபதிகள் வேறு அங்கு வந்து உடன் பின் தொடர்ந்துள்ளனர். டி.எஸ்.பி தலைமையில் பெரும் போலீஸ் பட்டாளமே தலைமை நீதிபதி குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து போகும் வரை பாதுகாப்பு என்ற பெயரில் பக்தர்களுக்கு கெடிபிடிகள்   காட்டியுள்ளனர்!

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சாதாரண பக்தர்களை பாடாய்ப் படுத்துகிறார்கள். ’’எனக்கே இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டுள்ளது’’ என்று சொன்ன உயர் நீதிமன்ற நீதிபதி தன்னை நீதிபதியாக வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘இறைவனே  மிகப் பெரியவன்’ என்ற எண்ணத்தில் அங்கு சென்று இருப்பார் போலும். அப்படி போயிருப்பின் அது தான் சரியான அணுகுமுறை! ‘கோவிலுக்குள் நான் நீதிபதியாக்கும் எனக்கு முதல் மரியாதை தர வேண்டும்’ என்ற தன்னகங்காரத்தை தொலைத்து, எளிய பக்தனாக சென்றதால்’ அவருக்கு உண்மை நிலவரம் தெரிந்துள்ளது.

ஆனால், தற்போதைய தலைமை நீதிபதியோ அவ்வாறு செல்லவில்லை! கோவிலில் நீதிபதி குடும்பத்திற்கு தரப்பட்ட மரியாதைகளுக்கும், வெகுமதிகளும் அடிக்கடி நீதிமன்ற வழக்குகளில் சிக்கும் தீட்சிதர்கள் விஷயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? படுத்தாதா? என்பதை மக்கள் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன். இந்த நீதிபதியை என்றில்லை. இப்படித் தான் பல நீதிபதிகளையும், அதிகார மையத்தின் உச்சத்தில் இருப்போரையும் இருந்த இடத்தில் இருந்தவாறே, கோவிலுக்கு வரும் போது மனம் குளிர உபசரித்து, காலங்காலமாக தங்கள் ராஜ்ஜியத்தை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள் தீட்சிதர்கள்!

பொதுவாக நேர்மையான நீதிபதிகள் பொது விழாக்களில் கலந்து கொள்வது, பரிசுப் பொருட்களை பெறுவது என்பதை அறவே தவிர்ப்பார்கள்! ஆனால், கோவில்களில் இது போன்று அர்சகர்கள் ‘இறைபக்தி’ என்ற போர்வையில் இப்படி செய்வதை எந்த தயக்கமுன்றி ஏற்கிறார்கள்! ‘இறைவனின் முன் அனைவரும் சமம்’ என்பதை அவர்களே உணர மறுக்கிறார்கள் போலும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time