இரு நாட்டு மீனவர்கள் ஒப்பந்தம் போட்டு மீன்பிடிக்கலாம்!

இலங்கை கடற்படையின் அதிகாரபூர்வ அறிக்கையின்படி, நடப்பாண்டில் மட்டும் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களின் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  கைதுகளும், தொடர் போராட்டங்களும் நடந்த வண்ணம் உள்ளன. மீனவர் கைதுகளை தவிர்க்க எந்த மாதிரியான ஒப்பந்தம் தீர்வு தரும் ?

செப்டம்பர் 27 ம் நாள் கச்சத்தீவு அருகே இரண்டு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாத்திட உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரி அக்டோபர்-18 அன்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த அனைத்துச் சங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் உரைகள்;

தொல் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாகவே தமிழர் மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் அதிகமாகத் தொடர்கிறது. இலங்கை கடற்படையினரால் மட்டுமின்றி இந்திய கடற்படையினராலும் மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். இந்துமாக் கடலில் யாருக்கு அதிகாரம் என்று,  இந்தியா, இலங்கை, சீனா நாடுகளுக்கு இடையிலான புவிசார்அரசியல் (geo politics) காரணமாக மீனவர் பிரச்சினை தீரவில்லை.  அதனால் தான் விடுதலைப் புலிகள் இல்லை என்ற போதும் மீனவர் மீதான தாக்குதல் தொடர்கிறது. கைது செய்த இந்திய மீனவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று இந்திய அரசு கூறலாம். காங்கிரஸ் அரசாங்கமாக இருந்தாலும், பாஜக அரசாங்கமாக இருந்தாலும் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை. போராட்டங்களின் மூலமாகத் தான் மக்களை அரசியல்படுத்த இயலும். மீன்பிடித் தொழில் உரிமை கோரி நடக்கும்  அனைத்துச் சங்க போராட்டம் வெல்லட்டும்.

கே.பி.கோசல்ராமன்,
ஐஎன்டியுசி தொழிற்சங்கம்

கடற்கரை ஓரத்தில் 12 கடல் மைல் தூரத்தில் காற்றாலைளை அமைக்க அரசு திட்டமிடுகிறது. மின்கசிவு ஏற்பட்டால் கடல்நீரில் 11,000 கி.வா. மின்சக்தி உருவாகி, மீன்வளம் அழிந்து போகும். தூத்துக்குடியில் இருந்து கன்னியாக்குமரி வரை 180 கி.மீ நீளத்திற்கு பவழப்பாறை உள்ளது. தாதுப்படிவங்கள் உள்ளன.  இவைகளை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சாகர்மாலா, நீலப் பொருளாதாரக் கொள்கைகள் மீனவர்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கும்.

மன்னை செல்லச்சாமி, மனித நேய மக்கள் கட்சி

1985 க்குப் பிறகு இதுவரை 600 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடல் ஆமை போன்ற அரிய வகை மீன்களை பாதுகாக்கச் சட்டம் உள்ளது. மனிதர்களைப் பாதுகாக்கச் சட்டம் இல்லையா !

இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 

தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும், தொழிலுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்பொழுது இலங்கையில் விடுதலைப் புலிகள் இல்லை ஆனாலும் மீனவர்கள் தாக்கப்படுகின்றார்கள். கடற்படையினர் மட்டுமின்றி, இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்குகிறார்கள்;  அவர்களது உடமைகளை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்;  வலைகளை அறுத்து சேதப்படுத்துகிறார்கள். இப்போது மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களது படகுகளை நாட்டுடமை ஆக்குகிறார்கள்; இப்படி செய்வது தவறு என்று இந்திய அரசு இலங்கையிடம் வற்புறுத்துவதில்லை. மீனவர்களை மொட்டை அடித்து இழிவுபடுத்தி அனுப்புகிறார்கள். படகுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் போடுகிறார்கள். இந்தியாவில் இருக்கும் படகின் உரிமையாளர் மீதும் வழக்கு போடுகிறார்கள். முன்பெல்லாம் இவ்வாறு  இருந்ததில்லை. மீன்பிடித் தொழிலையே கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெளியுறவு துறை அமைச்சர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. மீனவர் படும் இன்னல் குறித்து மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதுகிறார். பாகிஸ்தான் நாட்டிடம் இருந்து குஜராத் மீனவர்களை பாதுகாக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை இருக்கிறது. ஆனால், தமிழக மீனவர்களை மாற்றாந் தாய் மனப்பான்மையோடு இந்திய அரசு பார்க்கிறது.

கே. பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி

தமிழக மீனவர்களை கைதானால், 5 லட்ச ரூபாய் கொடுத்தால் தான் இலங்கை சிறையில் இருந்து மீட்க முடியும் என்ற நிலை இருக்கிறது . இந்த தொகையை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதில்லை. இலங்கை ராணுவத்தின் அட்டூழியத்தை கண்டித்து ராமநாதபுர மாவட்ட பகுதிகளில் அவ்வப்போது பல நாட்கள் கிராமம், கிராமமாக மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இப்படியே போனால், மக்களுக்கு மீன் கிடைக்காது.  ‘வாரத்தில் இரண்டு நாட்கள் தமிழக மீனவர்களும், ஐந்து நாட்கள் இலங்கை மீனவர்களும் எங்கு வேண்டுமானாலும் சென்று மீன் பிடிக்கலாம்’ என முடிவெடுத்தால் இந்த சிக்கல் தீர்ந்து விடும். இதற்கு தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் சேர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படி ஏற்படும் உடன்பாட்டை இரண்டு நாட்டு அரசுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கைக்கு கிழக்கே நிறைய கடற்பரப்பு உள்ளது. அங்கு இலங்கை மீனவர்களை மீன்பிடிக்க இலங்கை அரசு  அனுமதிக்கலாம். மீன் பிடிக்கச் சென்றால் அன்றே திரும்பி விட வேண்டும் என்ற உத்தரவு இருப்பதால், இலங்கை மீனவர்கள் அந்த நெடிய கடற்பரப்பை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். இப்போது இலங்கையில் இடதுசாரி சிந்தனை உள்ள தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளார். எனவே, தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவோம். பாகிஸ்தானை காரணம் காட்டி  இந்திய ராணுவத்திற்கு அரசு 24 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கிறது.  இதனால் மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவழிக்கும் தொகை குறைகிறது. இலங்கை அரசு முகம் கோணாமல் இருக்க வேண்டும் என்று இந்திய அரசு நினைக்கிறது. அதனால் தான் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்து வன்மையாக குரல் கொடுப்பதில்லை. நவம்பரில் நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தொடரில்  இது குறித்து தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள்.

ஏஐடியுசி மீனவர் சங்கத்தின் பி. சின்னத்தம்பி தலைமையில் இந்த அனைத்துச் சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரண்டு நாடுகளின் பேச்சு வார்த்தைக்குப் பிறகு 18.10.24  அன்று 17 மீனவர்கள் விடுவிக்கப்படனர். இரவு  சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை மீனவர்களுக்கு வரவேற்பு அளித்தது. அவர்களை இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், பி. சின்னத்தம்பி அழைத்துச் சென்றனர். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது கிட்டும்?

தொகுப்பு; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time