மென்மையான மனிதர்,ஆனால் உறுதியான உள்ளம்! ஐஏஎஸ் என்ற பெரிய பதவியை வகித்தவர் என்ற பந்தா சிறிதுமில்லாத நட்பான அணுகுமுறை, ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதி, சமரசமற்ற நேர்மை…ஆகியவற்றை ஒருங்கே கொண்டவர் சசிகாந்த் செந்தில். தான் வகித்த ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாடெங்கும் சுற்றி பாஜகவிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் தலையகமான சத்தியமூர்த்திபவனில், அறம் இணைய இதழுக்காக நமது நிருபர் செழியன்.ஜா.விற்கு அவர் தந்த நேர்காணல்.
ஐ.ஏ.எஸ் என்ற பெரிய பதவியில் மக்களுக்கு எவ்வளவோ செய்ய வாய்ப்பிருக்கிறது. அந்த பதவியில் இருந்தே பல நன்மைகளை மக்களுக்கு செய்து இருக்கலாமே?
அரசு என்ன பாலிசியை கொண்டு வருகிறதோ அதை நடைமுறைப்படுத்தும் நபர்களாகத் தான் மாவட்ட ஆட்சியர்கள் இருப்பார்கள். நாங்கள் எந்த பாலிசியும் கொண்டு வரமுடியாது. அரசின் பாலிசி தவறாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படி இருந்த நாட்களில் காஷ்மீர் மாநிலத்தை மொத்தமாகச் சிறையில் வைத்து இருந்தது மிகமோசமான செயலாக, ஜனநாயகம் நசுக்கப்படுவதாக உணர்ந்தேன். பிறகு NRC வந்தது.இது,மிகப்பெரிய அச்சுறுத்தலை சிறுபான்மையருக்குத் தந்துள்ளது. இதற்கு எதிராக என்னால் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதற்கு இந்த பதவியிலிருந்தால் முடியாது என்று ராஜினாமா செய்தேன்.
அரசின் செயலை எதிர்த்து ராஜினாமா செய்து உள்ளதால் உங்களுக்கு அச்சுறுதல் வந்ததா?
ராஜினாமா செய்த பிறகு என்னைத் ’தேசத்துரோகி’ என்று அழைத்தனர். அதுவும் ஒரு மந்திரியே இப்படிச் சொன்னார். அச்சுறுத்தல் இருக்கவே செய்தது. கவுரிலங்கேஷ்கர் எப்படி இறந்தார் என்று அனைவருக்கும் தெரியும். அவரை கொலை செய்தவர்கள் இன்னும் அங்கு இருக்கிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் அச்சப்படத் தொடங்கினால் ஒருநாள்கூட நம்மால் இயங்க முடியாது.
ராஜினாமா செய்ய முடிவு செய்த பிறகு செயல்படுவதற்கு என்ன திட்டங்கள் வைத்து இருந்தீர்கள்?
ஒரேநாளில் பதவியை ராஜினாமா செய்து வந்து விட்டேன். அடுத்து என்ன செய்வது என்ற எந்த திட்டமும் அப்பொழுது இல்லை. இப்படியே நாடு சென்றால் நம்வீட்டுக் குழந்தைகள் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழமுடியாது என்ற நினைப்பு மட்டும் இருந்தது. இந்திய நாட்டின் முக்கிய அம்சமான அன்பு, பாசம், பன்முகத்தன்மைக்கே இப்பொழுது ஆபத்து வந்து உள்ளது. அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கடந்த ஒரு ஆண்டாகப் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசினேன். அவர்களை நெருங்கிச் சென்று உரையாடினேன்.. மிகச்சிறந்த மனிதர்களை இந்த ஒரு வருடத்தில் பார்க்க முடிந்தது.. இதை இன்னும் அதிகம் கொண்டு செல்ல வேண்டும் என்று காங்கிரசில் இணைந்தேன்.
தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டு இருக்கும் காங்கிரசை ஏன் இணைவதற்கு தேர்வு செய்தீர்கள்?
காங்கிரசில் இணைந்தது ஏன் என்ற கேள்வி பரவலாகக் கேட்கப் படுகிறது. இன்றைய பிரச்சனைகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லாமல் முழுநாட்டுக்கும் சேர்ந்தே என்பதால் நடக்கும் தவறான விஷயங்களை நாடுமுழுவதும் சென்று மக்களுக்குச் சொல்லவேண்டும். அது தேசிய கட்சியில் இணைந்தால் மட்டுமே முடியும் என்று காங்கிரசில் இணைந்தேன். காங்கிரஸ் பலதரப்பட்ட மக்களையும் பாகுபாடின்றி அரவணைத்துச் செல்லும் கட்சி. அதன் கொள்கைகள் எனக்கு மிகவும் ஏற்புடையதாக இருந்தன! தேர்தலில் நிற்கும் எண்ணம் எல்லாம் கிடையாது. ஒரு தொகுதியில் நின்று என்னைக் குறுக்கிக் கொள்ள விரும்பவில்லை. தமிழ்நாடு முழுவதும் சென்று கருத்துக்களை மக்களிடம் சொல்வேன்.
காங்கிரஸ் மதச்சார்பற்றகட்சி, இன்று ஜனநாயகம் நசுக்கப்படுவதை மிகத் தெளிவாக ராகுல்காந்தி புரிந்து கொண்டு உள்ளார். 2019 ஆம், தேர்தல் தோல்விக்கு பிறகு ராகுல்காந்தி எழுதிய கடிதத்தில், ’’நான் மட்டும் போராடினால் பத்தாது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதே கருத்தை இங்கு நானும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன். நாடு நசுக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க அனைவரும் பங்கு எடுக்க வேண்டும். எந்த கட்சி என்றாலும் பரவாயில்லை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். அப்பொழுது மட்டுமே நாடு ஜனநாயகப் பாதையில் நடைபோடும்.
2021 தமிழிக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று நினைக்கிறீர்கள் ?
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும். கர்நாடகாவில் பணிபுரிந்த பொழுது பத்து தேர்தலை நடத்தியதால் அதில் நன்கு அனுபவம் உண்டு. தேர்தல்களில் கடைசி நேரத்தில் கூட மாறுதல் நிகழ வாய்ப்புகள் உள்ளன. எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவது என்ற சிந்தனையில் ஒட்டு மிசின் வரை வருபவர்கள் உண்டு. நிறைய ஏற்ற இறக்கங்கள் ஓட்டு போட்டு முடியும் வரை ஏற்படும். ஆனால், இன்றைய நிலையில் திமுக வெற்றி பெறும்.
தமிழகத்தில் காங்கிரஸ் மிக ஆழமாக அனைத்து மாவட்டத்திலும் பரவி உள்ளது. அதன் கொள்கையும் தெளிவானதாக இருக்கிறது. எந்த நோக்கத்தில் இந்திய அரசியல் சாசனம் இயற்றினார்களோ அதில் இருந்து மாறாமல் இயங்கும் கட்சி காங்கிரஸ். ஆனால், இதில் மாறுபட்டு உருவாகியதே ஆர்.எஸ்.எஸ் ஆகும். ஆர்.எஸ்.எஸின் பாசிசத்திற்கும், ஹிட்லரின் பாசிசத்திற்கும் பெரிய வேறுபாடில்லை.நமது நாட்டின் அரசிலமைப்பு முறைகளை அவர்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள். வழக்கொழிந்த ஆபத்தான பழைய செயல்பாடுகளை மீண்டும் புகுத்த வேண்டும் என்று இன்று செயல்படுகிறார்கள். அதற்கு பாஜக-மோடி இணைந்து கொண்டார்கள். இன்று மூவர் அணியாக அவை செயல்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் மோடிக்கு கொடுக்கும் அழுத்தம் போல் ஏன் வாஜ்பாய் அரசுக்கு கொடுக்கவில்லை?
ஆர்.எஸ்.எஸ்.-பாஜக-மோடி இவை தான் நாட்டை வழி நடத்தும் அணியாக இருக்கிறது. ஆனால் இதே ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டை வாஜ்பாய் அரசாங்கம் பெரியதாக செயல் படுத்தவில்லை. இந்த அளவு அவர் ஆர்.எஸ்.எஸ். பேச்சை கேட்கவில்லை. அதை பொருட்படுத்தாத ஒரு ஆளுமையாக அவர் இருந்தார். 2002 கலவரத்தில் மோடி அரசாங்கத்தை கலைக்கவே சொன்னார் வாஜ்பாய். அதனால், இன்று நடப்பது ஆட்சி என்று சொல்லமாட்டேன் ஒரு ஆபத்தான சிஸ்டம் என்றே சொல்வேன்.
பீகாரில் வெற்றி பெற்றது போல் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறீர்களா ?
பாஜக நோக்கம் வரும் சட்டமன்ற தேர்த்தலில் வெற்றி பெறவேண்டும் என்பது இல்லை. திராவிடகட்சிகள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் அதற்கு முதலில் இரண்டு திராவிட கட்சிகளில் ஒன்றை கீழ் இறக்க வேண்டும். பிறகு மீதி இருக்கும் ஒரு திராவிடகட்சி- பாஜக என்ற நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும். பிறகு, அந்த திராவிட கட்சியையும் வீழ்த்தி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதே ஆகும்..அதன் முதல் பகுதியாக வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியை கீழ் இறக்கி திமுக-பாஜக என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதே தற்போதைய திட்டமாக செயல்படுகிறார்கள்.
பாஜகவை பாசிசம் என்று சொல்கிறீர்கள் எங்கே அதுபோல் பாஜக செயல்பட்டது ?
பாசிசம்என்பது மக்களை மூளைச்சலவை செய்து ஓட்டுகள் பெறுவது. .அதில் படித்த நபர்களும் அவர்கள் சொல்வது உண்மை என்று அதிகம் சேருவார்கள். அவர்கள் லஞ்சத்தை ஒழிக்கிறேன் என்று பாசாங்குதனத்தோடு கிளம்புவார்கள். மாநிலத்திற்கு தகுந்தாற் போல் வாசகத்தை மாற்றி கொள்வார்கள். நாம் மூளைசலவை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நாட்டின் அறிவுத் தளத்தை அசைக்க வேண்டும் என்று முதலில் செயல்படுவார்கள்! அதற்கு அந்தநாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களாகிய பல்கலைக்கழகம் போன்றவை தான் முதல் தேர்வாக இருக்கும்..அங்கு இருந்து தான் கேள்வி கேட்கும் நபர்கள் உருவாகிறார்கள். அதனால் அதனை தாக்குகிறார்கள். அதனால் தான் கடந்த ஒரு வருடமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து மக்களுக்கு பாசிசத்தின் செயல்பாடுகளை சொல்லி வருகிறேன். நான் மட்டும் இல்லை என்னுடன் இன்னும் ஆயிரம் நபர்கள் இந்த சித்தாந்தத்தை எதிர்ப்பார்கள்.
ஒரு எம்எல்ஏ கூட இல்லாத மாநிலத்தில் அமித்ஷாவின் வருகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது?
அனைவரும் அமித்ஷா வருகையால் பெரியமாற்றம் வந்துவிடும் என்று சொல்கிறார்கள் அப்படி எந்த வித அசைவும் இந்த வருகையில் நடக்காது. வட மாநிலத்தில்இருப்பதுபோல்இங்கு அவரால் மாற்றத்தை உண்டாக்க முடியாது. தமிழகம் ஏற்கனவே பாஜகவை ஏற்றுக் கொண்டதில்லை. மக்களும் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அவர் வருகையை பெரிதுபடுத்தி பேசப்படுகிற ஒன்றே தவிர வேறுஒன்றும் இதிலில்லை.
Also read
சில மாவட்டத்தில் தனிசெல்வாக்கு உள்ளஉடைய சில பாஜக நபர்கள் வேண்டுமென்றாலும் ஓட்டுகள் சிறிது அதிகம் வாங்கலாமே தவிர அந்த கட்சி வளர்ந்து வருகிறது. எம்.எல்.ஏ ஆவார்கள் என்ற நிலையில் இன்று தமிழகத்தில் அவர்களில்லை என்பதே உண்மை.
காமராஜர் ஆட்சிப் பணி செய்வதைவிட கட்சிப் பணிக்கு முக்கியத்துவம் தந்து பதவியை துறந்தவர். அது போல நீங்களும் தேர்தலில் நிற்கமல் கட்சியை பலப்படுத்துவது, பரப்புரை செய்வது என்று செயல்படுவதில் ஆர்வம் காட்டுவீர்களா?
தேர்தலில் நிற்க வாய்ப்பு உண்டா?,கட்சி எனக்கு பதவி தருமா? என்றெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கு இணைந்து உள்ளேன். என்னுடைய ஒரேஎண்ணம், என்ன எழுதி கொடுத்து விட்டு ராஜினாமா செய்து வந்தேனோ, அதை முழு மூச்சில் செயல்படுத்துவது ஆகும். இன்றைய நிலையில் பாஜகவின் பாஸிச ஆபத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அது தான் முதல் குறிகோள். அதற்காக தேர்தலில் இருந்து பின்வாங்கிவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. ஒரு கட்டாயம் வந்தால் நிச்சயம் அதற்கும் தயாராகவே இருப்பேன். நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழவேண்டும் என்றால், அனைவரும் கைகோர்த்து பாஸிசத்தை எதிர்ப்போம்வாருங்கள்..
Leave a Reply