“நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டமானது ஒரு உயிர்ப்பற்ற காகிதமாக மாறி வருகிறது” –என உச்ச நீதிமன்றமே கவலைப்பட்டுள்ளது. ‘ஆர்.டி.ஐ என்றாலே தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஏன் இவ்வளவு அலர்ஜியாக இருக்கிறது’ என இந்த விரிவான ஆய்வு தோலுரித்துக் காட்டுகிறது;
நாட்டு மக்கள் அர்த்தமுள்ள வகையில் மக்களாட்சியில் பங்கேற்கவும், அரசாங்கங்கத்தின் தவறுகளை சுட்டிக் காட்டி பொறுப்புடன் வழி நடத்தவுமான அதிகாரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களுக்கு அளித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு பத்தொன்பது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இச் சட்டத்தை அமல்படுத்துவதில் தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள் ஒரு பெரும் தடையாக இருக்கின்றது.
தகவல் பெறும் உரிமை என்பது அரசியலமைப்பின் 19 (1) (பேச்சிற்கும் கருத்துச் சுதந்திரத்திற்குமான உரிமைகள்), 21 (வாழ்விற்கும் சுதந்திரத்திற்குமான உரிமைகள்) ஆகிய பிரிவுகளிலிருந்து வெளிப்படும் ஒரு அடிப்படை உரிமையாகும்.
ஆனால், அரசு அதிகாரிகளும், தகவல் ஆணையத்திற்கு நியமிக்கப்படும் ஆணையர்களும், அரசியல்வாதிகளும் (எந்த கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல), அரசியலமைப்பையும் வாக்களிக்கும் மக்களையும் மதிக்காமல் சிறிது சிறிதாக மாநில தகவல் ஆணையங்களையும், மத்திய தகவல் ஆணையத்தையும் செயலிழக்கச் செய்து வருகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள், சட்டத்தை கடுமையாக நீர்த்துப் போகச் செய்துள்ளன.
2019- வது ஆண்டில் பாஜக அரசு கொண்டு வந்த திருத்தங்கள், நாட்டில் உள்ள அனைத்து தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், ஊதியம், சேவை விதிமுறைகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளித்ததன் மூலம் தகவல் ஆணையங்களின் சுயாட்சியை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2023 இல், டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP சட்டம்) நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் RTI சட்டத்தின் 8(1 (j) பிரிவைத் திருத்துவதற்கான தெளிவான விதியும் அடங்கும். மேலும், நாடாளுமன்றத்திற்கோ அல்லது மாநில சட்டமன்றத்திற்கோ மறுக்க முடியாத தகவல்கள் எந்தவொரு நபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்ற பிரிவு 8 (1) க்கான நிபந்தனையையும் டிபிடிபி சட்டம் நீக்கியது.
தகவல் ஆணையங்கள் குறித்து தில்லியைச் சேர்ந்த Satrak Nagrik Sangathan என்ற அமைப்பு 2023-24 ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய சாராம்சத்தை மட்டும் இங்கு பகிர்கிறோம். இந்த ஆய்வில் தகவல் தரும் ஆணையத்தின் செயல்பாடுகள் ஆர்.டி.ஐ மூலமாகவே பல கட்டங்களாக கேட்கப்பட்டு துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் தாக்கப்பட்டது, கொல்லப்பட்டது குறித்த தகவல்கள் சொல்லப்படவில்லை.
# நான்கு மாநில ஆணையங்களில் பல மாதங்களுக்கு ஆணையர்களே இல்லை! பல மாநிலங்களில் பலஆணையர்களின் பதவி காலியாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் மாநில தகவல் ஆணையம் (SIC) பலமாதங்களாக ஐந்து ஆணையர்களுடன் (தலைமை + 4 ஆணையர்கள்) செயல்பட்டு வருகிறது.ஆனால், ஆறு பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளன!
# 2024 ஜூன் 30 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 29 தகவல் ஆணையங்களில் நிலுவையில் இருந்த முறையீடுகள் / புகார்களின் எண்ணிக்கை 4,05,509 ஆகும்.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலானமேல்முறையீடுகளும் புகார்களும் 1,08,641 மனுக்களுடன் மகாராஷ்டிரா மாநில தகவல் ஆணையத்திடம்(SIC) நிலுவையில் உள்ளது.
கர்நாடகாவில் 50,000க்கும் அதிகமான விண்ணப்பங்களும்,
தமிழகத்தில் 41,241 விண்ணப்பங்களும்
சத்தீஸ்கரில் 25,317 விண்ணப்பங்களும்
மத்தியதகவல் ஆணையத்திடம் (CIC) கிட்டத்தட்ட 23,000 மேல்முறையீடுகளும் புகார்களும் நிலுவையில் உள்ளன.
# நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையையும், அந்தக் காலகட்டத்தில் மாதந்தோறும்தீ ர்க்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கையையும் பயன்படுத்தி, ஜூலை 1, 2024 அன்று தகவல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மேல்முறையீடு/புகாரைத் தீர்ப்பதற்கு எடுக்கும் நேரம்கணக்கிடப்பட்டது. ஒரு தகவல் கேட்கப்பட்டால் அதை தருவதற்கு நம்ப முடியாத அளவுக்கு மிக நீண்ட காலகட்டத்தை எடுத்துக் கொள்கின்றன, தகவல் ஆணையங்கள்! ஒரு சராசரி கணக்கின்படி சத்தீஸ்கர் சிறப்பு விசாரணை ஆணையம் ஒரு வழக்கைத் தீர்க்க 5 ஆண்டுகள் 2 மாதங்கள் எடுத்துக் கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 2024 ஜூலை 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தற்போதைய மாதாந்திரசெயல்திறன் அளவின்படி, 2029 ஆம் ஆண்டில் தான் தீர்க்கப்படும்!
இந்த சராசரி மத்திப்பீடு பீகார் மாநிலத்தில் நான்கரை வருடங்களும்,
ஒடிசாவில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களும் ஆவதாகச் சொல்கிறது.
இந்த வகையில் தமிழக தகவல் ஆணையத்திற்கு 2 வருடம் 5 மாதம் ஆகின்றது.
இப்படியாக எடுத்துக் கொள்ளும் காலகட்டத்தால் தகவல் ஆணையங்கள் தரும் தரவுகளும், தீர்வுகளும் பயனற்று போகின்றன. உதராணத்திற்கு குறிப்பிட்ட ஊழல் புகார் உள்ளவர் வேறு துறைக்கு மாற்றலாகி போன பிறகு அவரை தண்டிக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
#தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறுபவர்கள் மீது 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அதிகாரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் உள்ளது. தண்டனைகள் விதிக்கப்படக்கூடிய 95% வழக்குகளில் தகவல் ஆணையங்கள் தண்டனைகளை வழங்குவதே இல்லை. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சிறப்புத் தகவல் ஆணையங்கள் இந்த ஆய்விற்காகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மனுக்களிற்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை அல்லது தகவல்களை மறுத்துள்ளன. அந்த வகையில் தமிழக தகவல் ஆணையம் ஒரு தகவல் மறுப்பு ஆணையமாக கரும்புள்ளியுடன் காட்சியளிக்கிறது.
# 2022-23 ஆம் ஆண்டிற்கான மக்களுக்கான வருடாந்திர அறிக்கையை 62% ஆணையங்கள் (29 தகவல்ஆணையங்களில் 18) வெளியிடவில்லை. ஒன்றிய தகவல் ஆணையமும் (CIC), அசாம், சத்தீஸ்கர், குஜராத், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தகவல் ஆணையங்கள் மட்டுமே 2023 ஆம்ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டு தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில்கிடைக்கச் செய்துள்ளன. தமிழக தகவல் ஆணையம் கடைசியாக 2020-ல் வெளியிட்டுள்ளதோடு சரி. அதாவது தற்போதைய திமுக ஆட்சியில் தமிழக தகவல் ஆணையம் எவ்வளவு படுமோசமாக வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே அத்தாட்சியாகும்.
ஆந்திராவில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை வெளிப்படையாக தகவல் பலகையில் போட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு கூட பலனில்லை.
ஜார்கண்ட், தெலுங்கானா, திரிபுராவின் மாநில தகவல் ஆணையங்கள் இந்த காலகட்டத்தில் செயல்படவே இல்லை. எனவே இந்த தகவல் ஆணையங்களால் எந்த மேல்முறையீடுகளும்/புகார்களும் தீர்க்கப்படவுமில்லை.
Also read
நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மக்களாட்சியின் மற்றொரு அங்கமான கிராமசபைகளையும்திட்டமிட்டு அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் (எந்த கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல), செயலிழக்கச்செய்து வருகிறார்கள். கிராமசபையில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் தீர்மானங்களுக்கும் எந்தவிதமானநடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தினாலும், தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.
உதாரணமாக, எங்கள் ஊராட்சியில் ( வடமுகம், வெள்ளோடு) எந்த கிராமசபைக் கூட்டத்திலும் விவாதிக்காமல், 2022-2023 நிதியாண்டில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.31.52 லட்சம் மதிப்பீட்டில் ஒரு டன் கொள்ளளவு கொண்ட குப்பை எரிக்கும் கலன் மற்றும் கழிவு சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்திட நிா்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டு, மேற்காணும் பணிகள் விரைவில் முடிவுற்று மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்றுதன்னிச்சையாக அறிவிக்கப்பட்டது. 27.03.2023-ல் இருந்து நாங்கள் தொடர்ந்து எழுப்பும் கேள்விகளுக்குஎந்த தகவலும் ஊராட்சியிலிருந்து இதுவரை கிடைக்கவில்லை. நகைமுரணாக, எங்கள் ஊராட்சியில் அடிப்படையான திடக்கழிவு மேலாண்மையே இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் சேர்த்தே இங்கு பதிவு செய்கிறேன்.
கட்டுரையாளர்; மாணிக்க சுந்தரம்
சென்னிமலை ஒன்றியம்
ஈரோடு
அரசுப் பள்ளிகளில் பெற்றோர் பங்களிப்பு வேண்டும் என்கிற அடிப்படையில் மாதந்தோறும் நடைபெற்று வந்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை ஆசிரியர் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவசியம் இருந்தால் மட்டுமே நடத்தலாம் என்று பள்ளி கல்வித் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகவல்அறியும் உரிமைசட்டத்தை அறிமுகம் செய்த காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, வெகுஜனகட்சி மார்க்சிஸ்ட் ஆளும் கேரளா, திராவிட மாடல் தமிழ்நாடு ஆகிய திராவிட முதல்வர்கள் அந்தசட்டத்தை பலப்படுத்த என்ன செய்தார்கள் பட்டியலிடுங்கள் பார்ப்போம்