சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு நிலம் சுமார் ஐந்து ஏக்கரை அமைச்சர் ராஜ கண்ணப்பன்,அவரது மகன்கள் அபகரித்துள்ளனர் என அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதுவுமே வாய் திறக்கவில்லை..! புகார் விபரம்;
ரூபாய் 411 கோடி மதிப்புள்ள இந்த நிலம் அபகரித்துள்ளதை யாரும் கேள்வி கேட்டு விடாதபடிக்கு தன்னுடைய அதிகாரத்தை இன்று வரை துஷ்பிரயோகம் செய்து அந்த அரசு நிலத்தை தன்னுடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன் என அறப்போர் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் அக்டோபர்-22 புகாராக லஞ்ச ஒழிப்பு துறை, முதல்வர் துணை முதல்வர், தலைமைச் செயலர் வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ளதோடு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பிரஸ் மீட்டும் நடத்தியது. இந்த அரசு நிலம் உடனடியாக மீட்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து பொது ஊழியர்கள் மீதும் FIR பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த அரசு நிலம் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவிற்கும் நங்கநல்லூர் மெட்ரோவிற்கு இடையே BSNL அலுவலகத்திற்கு அடுத்தபடி உள்ள பரங்கிமலை கிராமம் சர்வே எண் 1353 எண் 12, GST சாலையில் உள்ளதாகும். இந்த நிலம் அரசு நிலம் தான் என்பதற்கான வருவாய்த்துறை பதிவேடு நகலை புகாருடன் இணைத்தே புகார் தரப்பட்டுள்ளது. சர்வே எண் 1353 என்பது 4 ஏக்கர் 31,378 சதுர அடி கொண்டது மற்றும் சர்வே எண் 1352 என்பது 12964 சதுர அடி கொண்டது. இவை இரண்டும் புறம்போக்கு நிலங்கள் என்று வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ள ஆதாரங்களை புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக 2015 இல் ஆலந்தூர் தாசில்தார் சென்னை தெற்கு இணை அலுவலகம் இரண்டு சார் பதிவாளர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் சர்வே எண் 1353, 1352 மற்றும் பல சர்வே எண்கள் அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்கள் என்றும் இந்த நிலங்கள் தற்பொழுது அரசு நிலங்கள் என்றும் இந்த சர்வே எண்களில் எந்தவிதமான பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்றும் இதற்கு முன்பாக யாராவது செய்திருந்தால் அதை ரத்து செய்து தாசில்தாருக்கு அறிக்கை அனுப்பும் படி கேட்டுள்ளார். பரங்கிமலை கிராமத்தில் உள்ள பெரும்பாலான அரசு நிலங்கள் பிரிட்டிஷ் ஆட்சி செய்த பொழுது சிலருக்கு குத்தகை கொடுத்து பிறகு சுதந்திரம் அடைந்ததும் இந்த நிலங்கள் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.
டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர்களாக இருப்பவர்கள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பிரபு , திவாகர் மற்றும் திலீப் குமார். மேலும் இவர்கள் மூவரும் தான் இந்த நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களாகவும் உள்ளனர்.
சர்வே எண் 1353 மற்றும் சர்வே எண் 1352 நிலங்களை அபகரிப்பதற்காக இந்த நிறுவனம் 1991 முதல் 2018 வரை பல பத்திரபதிவுகளை செய்துள்ளது. 4.52 ஏக்கர் அளவிற்கு பத்திரபதிவு செய்ததற்கான ஆதாரங்களை புகார் உடன் இணைத்து இருக்கிறோம். 1990களில் காதியா பெயரில் இருந்த இந்த டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பெயருக்கு மாறுகிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மூன்று மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள்.
முக்கியமாக 2015-ல் ஆலந்தூர் தாசில்தார் இந்த சர்வே எண்ணில் எந்த பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று தெரிவித்த பின்பும் மற்றும் இதற்கு முன்பாக பதிவு செய்தவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அந்த பத்திரப்பதிவுகள் எதுவும் இன்றுவரை ரத்து செய்யவில்லை.
இந்த கடிதத்திற்கு பிறகும் கூட 2018-ல் இந்த நிலத்தை ஏழு லட்சத்திற்கு அடகில் இருந்து மீட்டது போல் டெக்கான் ஃபன் ஐலண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவின் பொழுது அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்கள்.
கடந்த ஆண்டு 1352 சர்வே எண்ணில் உள்ள 12984 சதுர அடி நிலம் மீட்கப்பட்டதாக அதன் வாசலில் வட்டாட்சியர் பல்லாவரம் பலகை வைத்துள்ளார். ஆனால் அதற்கு அருகிலேயே உள்ள கிட்டத்தட்ட 4.75 ஏக்கர் அளவிற்கு அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சர்வே எண் 1353 அரசு நிலங்களை இன்று வரை மீட்கவில்லை.
அரசு வழிகாட்டி மதிப்பு படி பார்த்தால் இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 1 சதுரடிக்கு ரூ 11000 ஆகும். எனவே 205618 சதுரடி நிலத்தின் மதிப்பு ரூ 226 கோடி ஆகும். இந்த இடத்தில் சந்தை மதிப்பு குறைந்த பட்சம் 1 சதுரடிக்கு ரூ 20000 ஆகும். இதன் படி இன்றைய மதிப்பு ரூ 411 கோடி ஆகும்.
அமைச்சர் திரு ராஜ கண்ணப்பனின் அழுத்தத்தினால் வருவாய்த்துறை இந்த நிலத்தை மீட்காமல் உள்ளது என்று அறிகிறோம். அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் தன் மகன்கள் பெயரில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்து சேர்ப்பதற்காக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சொத்துக்களை சேர்த்து உள்ளார் என்று தெரிகிறது.
இந்த நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும். அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்வது சட்டவிரோதமாக இருந்தாலும் அதை தொடர்ந்து இந்த நிறுவனம் செய்து வந்துள்ளது. எனவே அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவரது மகன்கள் மற்றும் இதை மீட்டெடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்த அதிகாரிகள் போன்றோர் மீது உடனடியாக FIR பதிவு செய்து விசாரிக்கும் படி அறப்போர் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் சரவணன் மூலமாக பதில் எச்சரிக்கை தொனியில் தரப்பட்டுள்ளது;
“1991ல் டெக்கான் ஃபன் ஐலேன்டு & ஹோட்டல் லிமிடெட் தன் நிறுவனத்தின் பெயரில் கிரையம் பெற்ற சொத்துக்களை 1992 ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் (O.S. No.3714 of 1992) மூலம் இது அரசு நிலம் அல்ல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடம் என்று உறுதி செய்தது. அந்த தீர்ப்பினை எதிர்த்து 23 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று, 2017ம் ஆண்டில் நிறுவனத்திற்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பிய நபர்கள் மீது எங்கள் நிறுவனத்தின் சார்பாக மானநஷ்ட வழக்கு தொடர்வது மட்டுமின்றி தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
வழக்கம் போல முதல்வர் ஸ்டாலின் பேசா மடந்தையாக இந்த குற்றச்சாட்டை கடந்து செல்வார். முன்னாள் அதிமுக ஆட்சியாளர்கள் அனைவரின் ஊழல்களையும் தூசித் தட்டி எடுத்து வைத்துக் கொண்டு, ’’நாங்கள் செய்யும் ஊழல்களை பேசக் கூடாது’’ என டீலிங் போடப்பட்டதோ என்னவோ.., அதிமுக தலைவர்கள் யாரும் இது தொடர்பாக வாயே திறக்கவில்லை. பாஜகவும் ஏனோ பம்மிக் கிடக்கிறது. தோழமை கட்சிகளான கம்யூனிஸ்ட்களுக்கும், காங்கிரசாருக்கும் அறப்போர் இயக்கத்தின் அளவுக்கு கூட சமூக அக்கறை இல்லையா? என்பது மக்களிடையே விவாத பொருளாகி உள்ளது.
சாவித்திரி கண்ணன்
ஊழல் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஊழல் மட்டுமல்ல. தி.மு.க.வின் அனைத்து தவறுகளையும் சுட்டிக் காட்டத் தவறுகின்றன. மக்கள் மத்தியில் பதிப்பித்து விட்டனர் .
KN Nehru, A va Velu ( Thiruvannamalai), KKSSR Ramachandran, Jagat Rakshagan. …..all become big Mafia in amazing government wealth into their pocket like OPS during AIADMK rule.
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய அச்சமில்லை அச்சமில்லை என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் வரும்.
குத்தினேன் முத்திரை
கொடுத்தாங்க சில்லறை
சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி!
நம்ம சனநாயகம் வாழ்ந்தா போதும் அண்ணாச்சி!
வாழ்க சனநாயகம்!!
எந்த காலத்திலும் பொருந்த கூடிய பாடல். இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை துரோகி என்று வசை பாடுகிறார்கள். அவர் இருந்த கட்சியில் இருந்தவர் தான் இப்போது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டிருக்கும் ராஜ கண்ணப்பன்.
திராவிடக் கட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக பிறந்ததே துரோகத்தில் தான். திராவிட கழகத்தின் தலைவர் பெரியார் கட்சி தொடங்க வேண்டாம் என்றார்.யார் கேட்டது?
அண்ணா தொடங்கினார்! ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்தார். வென்றார். ஆனால் அவரால் தேர்தலில் சொன்னபடி செய்ய முடியவில்லை. ரூபாய்க்கு மூன்று படி லட்சியம் ஆனால் ஒரு படி நிச்சயம் என்றார். மேடையிலும் பேசினார். கைத்தட்டல் எழுந்தது. அந்த கைத்தட்டல் மீது ஏறி நின்று ஊழல் தொடங்கியது. அவர் இருக்கும் போதே கலைஞர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. நிரூபிக்கப்படவில்லை. அண்ணாவிற்கு பின்னர் கலைஞர் முதலமைச்சரானார். ஊழல் தொடர்ந்தது. அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் தொடங்கினார். ஊழல் ஒழியவில்லை. அவரது மறைவிற்கு பின்னர் அவரது மனைவி முதல்வரானார். அந்தப் பதவியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பே ஜெயலலிதா முதல்வரானார். (தேர்தல் மூலம் தான்) ஊழல் அதிகரித்தது.
நான் எப்படி? இந்த காலகட்ட அரசியலில் சம்பாதிக்க முடியாதவர்கள் எந்த காலத்திலும் சம்பாதிக்க முடியாது என்று எளிய மக்களே பேசினார்கள். அவர்கள் இருவரும் இறந்து விட்டார்கள். அப்போது பயந்து பயந்து நெருக்கம் காட்டிய இரண்டு திராவிட கட்சிகளும் இப்போது பகிரங்கமாக நெறுக்கம் காட்டுகின்றனர். கைகோர்த்துக்கொண்டு ஊழலில் திளைக்கிறார்கள்.
ஊழலில் சிக்காத அமைச்சர்களே இல்லை. அமைச்சராக இருந்த டி.எம்.செல்வகணபதி, புலவர் இந்திரகுமாரி இவர்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் சிறைக்கே சென்றார்கள்.
இவர்கள் ஜெயிலுக்கு சென்றதால் மற்றவர்கள் எல்லாம் கறைபடியாதவர்களா? இன்று அமைச்சரவையில் இருக்கும் எட்டு பேர் அதிமுகவில் இருந்தவர்களே. ஊழலில் திளைத்துக் கொண்டிருப்பவர்களே. சமீபத்தில் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று வந்தார். இப்போது கண்ணப்பன். ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கோ இவரது ஊழலை காண்பதற்கு கண்ணும் இல்லை கேட்பதற்கு காதும்,வாயும் இல்லை. ஆனால் அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் வீட்டில் சோதனை. யாரை(யும்)மிரட்டுவதற்கு?
துரோகத்தில் பிறந்த திராவிட கட்சிகளிடம் இதை விட வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ஃ?
அட்டூழியம்