நல்லவராய் நடிப்பதில் வல்லமை காட்டியவர்!

-ச.அருணாசலம்

தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி காலம் வரும் நவம்பர் -9 ல் முடிகிறது.  நியாயங்களை பேசிக் கொண்டே நம்ப முடியாத அதிர்ச்சி தீர்ப்புகளை தந்தவர்! முற்போக்காளராக தோற்றம் காட்டியவாறே பல பிற்போக்கு தீர்ப்புகளை வழங்கியவர்! அவரது பேச்சுக்களுக்கும், தீர்ப்புகளுக்கும் உள்ள இடைவெளி குறித்த ஒரு அலசல்;

அன்றே அவர் பணி ஒய்வு பெறுகிறார்; புதிய தலைமை நீதிபதியாக நீதியரசர் சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்க உள்ளார்.

சரியாக இரண்டு ஆண்டுகள் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதி பரிபாலனம் செய்த நீதிபதி தனஞ்செய யஷ்வந்த் சந்திரசூட் அவர்கள் விட்டுச் செல்லும் மரபுக் குறியீடு (legacy) என்ன? அது எத்தகைய மாண்புகளை நம்முன்னே நிறுத்தியுள்ளது?

50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற சந்திரசூட் அவர்களின் மீது பலருக்கும் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன!

சந்திரசூட் அவர்களை ஒரு ‘ முற்போக்கு எண்ணங்கொண்ட’ குடிமக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளில் அக்கறை கொண்டவராக அனைவரும் பார்த்தனர்!

”நீதிபதிகள் பேசுவதில்லை, அவர்களின் தீர்ப்புகளே பேசுகின்ற சட்டங்களாக அமைகின்றன” என்பர். அந்த வகையில் சந்திரசூட் வழங்கிய தீர்ப்புகளே அவரை சரியாக அடையாளப்படுத்துகிறது எனலாம்.

 

# கேரள இளம் பெண்ணான ஹாதியாவின் மீது அவரது தந்தையாலேயே புனையப்பட்ட ‘லவ் ஜிகாத்’ வழக்கில் வயது வந்த பெண்ணின் உரிமையை நிலை நாட்டியவர்,

# பிற பாலினத்தவர், ஓரினச் சேர்க்கையாளர் (LGBTQ+) உரிமைகளுக்காக குரல் கொடுத்து, பிரிவு 377 ன் கிரிமினல் தன்மையை நிராகரித்தவர், அந்தரங்கத்தை (privacy) அடிப்படை உரிமையாக அங்கீகரித்த நீதிபதிகளில் ஒருவர்.

# ‘ஆதார் ‘ வழக்கில் தனித்து மாறுபட்ட தீர்ப்பு எழுதியவர்.

# பெரும்பான்மைக்கு இணங்க மறுக்கும் நிலையை (dissent) ‘ஜனநாயகத்தின் பாதுகாப்பு வால்வு’ என சித்தரித்தவர்,

# பீமா கோரேகான் வழக்கில் மகாராஷ்டிர காவல்துறை நடுநிலையாகவோ, நேர்மையாகவோ இந்த வழக்கை விசாரிக்கவில்லை, அவர்களது நடத்தை சந்தேகத்திற்கிடமாக உள்ளது என மாறுபட்ட  தீர்ப்பை வழங்கியவர்..

என பல்வேறு ‘ பெருமைகளை’ சுமந்தவராக நீதிபதி சந்திரசூட் திகழ்ந்ததால், அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்பது மோடி அரசின் ஜனநாயக உரிமைகள் மறுப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என பலரும் எண்ணினர். ‘சமயச்சார்பற்ற மாண்புகள் (Secular Values) மீண்டும் நிலை நாட்டப்படும்’ என்றும், ‘மனித உரிமை மீறல்கள் பாதுகாக்கப்படும்’ எனவும் நம்பிய கூட்டம் அதிகம்.

இந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாகவே நீதிபதி சந்திரசூட் பல்வேறு கருத்தரங்குகளில் பத்திரிக்கை சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் இணங்காதிருத்தலின் முக்கியத்துவத்தை பேசினார்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கேள்வி கேட்கும் வழக்குகளில் நீதிபதி சந்திரசூட்  எவ்வாறு தீர்ப்புகளை வழங்கினார்? என்பது கவனத்திற்குரியது.

தலைமை நீதிபதியாவதற்கு முன் இவர் வழங்கிய தீர்ப்புகளில் முக்கியமானவை;

# சபரி மலையில் பெண்கள் நுழைவது குறித்த வழக்கு,

# அயோத்யா பாபர் மசூதி -ராமஜென்ம பூமி வழக்கு,

# அந்தரங்க உரிமை (Right to Privacy) வழக்கு,

# கருக் கலைப்பிற்கான உரிமை வழக்கு,

# வயது வந்த இரு பாலின உறவு மற்றும் ஓரின சேர்க்கை உறவுகளை குற்றச் செயலிலிருந்து விடுவித்த வழக்கு ஆகியவை முக்கியமானவைகளாகும்.

இந்திய நீதித்துறையின் உச்சபட்ச தலைவராக சந்திரசூட் அவர்கள் ஆற்றிய பணியை நோக்குவோம்.

இவர் பொறுப்பேற்றதும் தேங்கியிருக்கும் வழக்குகளை முடித்து வைக்கப்பட்டன.

2023-ம் ஆண்டு முடிவில் உச்ச நீதி மன்றம் 52,000 வழக்குகளை முடித்து வைத்தது சாதனையாகும்.

ரஞ்சன் கோகோய் நடைமுறைப்படுத்திய (sealed cover jurisprudence) உறையிலிட்ட கடித சட்டவியல் முறையை, சந்திரசூட் பதவியேற்றவுடன் முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதும் பாராட்டத்தக்கது!

நீதிமன்றங்களின் அன்றாட செயல்பாடுகளில் தொழில் நுட்பத்தை புகுத்தி வெளிப்படையாக அலுவல்கள் நடைபெறத் தொடங்கின.

தில்லி அரசுக்கெதிராக ஒன்றியத்திலுள்ள மோடி அரசு கொண்டுவந்த ‘தில்லி அவசர சட்டத்தை’ (Delhi Ordinance) நிராகரித்ததும், மாநில அரசுகளுக்கெதிரான ஆளுனர்களின் அத்து மீறல்களை ‘கண்டித்ததும்’ இவர் காலத்தில் நடந்தன.

இரு நபர்கள்; இரு வேறு அணுகுமுறைகள்!

பத்திரிக்கை சுதந்திரம், பிணை வழங்குதல் போன்றவற்றின் அவசியத்தை கூறி, அர்னாப் கோஸ்வாமிக்கு கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே சந்திரசூட் அமர்வு நீதிமன்றம் “பிணை” வழங்கியது.

ஆனால் , கோஸ்வாமிக்கு பிணை கொடுப்பதில் காட்டிய வேகம் ஏனோ 2020 முதல் சிறை படுத்தப்பட்டுள்ள உமர் காலீதுக்கு கொடுக்கவில்லை, தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு. உமர் காலீதின் பிணை கோரும் வழக்கை ஏகப்பட்ட முறை விசாரணைக்கு எடுக்காமல் தள்ளி வைத்தது.

இன்றளவிலும் உமர் காலீதுக்கு பிணை வழங்காமலிருப்பது நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதி பரிபாலனம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை உலகிற்கு உணர்த்துகிறது.

இது பேச்சுரிமை , மனித உரிமை, பத்திரிக்கை சுதந்திரம் ஆகியவற்றின் மீதான உச்சநீதிமன்றம் அக்கறையை காட்டுகிறதா?அல்லது தலைமை நீதிபதியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை காட்டுகிறதா?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ற வகையில் roaster ரின் படி நீதிபதி சந்திரசூட் அவர்கள் ‘விதிகளை’ பின்பற்றியோ அல்லது வெளிப்டைதன்மையாகவோ வழக்குகளை நீதிபதிகளுக்கும் அமர்வுகளுக்கும் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மற்றும் பிரசாந்த பூஷன் ஆகியோர் இதை கண்டித்து நீதிமன்றங்களிலேயே பல முறை முறையிட்டனர்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு, இந்த குறைகளை பட்டியலிட்டு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ‘(politically sensitive cases) வழக்குகளை ஏற்கனவே விசாரித்து வந்த அமர்வுகளிடமிருந்து மாற்றி ஒரு குறிப்பிட்ட அமர்வுக்கு மாற்றப்படும் அநீதியை ஒரு பகிரங்க கடிதம் மூலம் டிசம்பர் 2023-ல் அனுப்பினார்.

ஏடாகூடமாக்கப்பட்ட எட்டு வழக்குகள்:

Article14 என்ற பத்திரிக்கை சுட்டிக் காட்டியபடி கீழ்காணும் எட்டு வழக்குகளில் இந்த அ நீதிகள் அரங்கேறியுள்ளன!

# உமர் காலீதின் பிணை கோரும் வழக்கு,

# பத்திரிக்கையாளர், வழக்கறிஞர்கள் மீது திரிபுராவில் போடப்பட்ட உபா (UAPA) வை எதிர்த்த வழக்கு.

# எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் முறைகேட்டு வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்த மனு,

# சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர அரசு தொடுத்துள்ள இரண்டு ஊழல் வழக்குகள்

# கர்நாடகா காங். தலைவர் டி.கே. சிவக்குமார் மீதான சி பி ஐ வழக்கு

# செந்தில் பாலாஜியின் மருத்துவ பிணை கோரிய வழக்கு

# பீமா கோரேகான் வழக்கில் கைதானவர்கள் பிணை கோரிய வழக்கு

ஆகியவற்றை விதிகளுக்கு புறம்பாக, ஒருதலை பட்சமாக Master of the Roaster என்ற முறையில் நீதிபதி சந்திரசூட் ஒதுக்கியது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது ஒன்றிய அரசின் அழுத்தத்திற்கு பணிந்து நீதிமன்ற அமர்வுகள் தீர்மானிக்கப்படுகின்றன. நீதியும், நேர்மையும்  பலி கொடுக்கபடுகின்றன என்ற குற்றச்சாட்டிற்கு வலு சேர்த்தது.

ஆனால், தலைமை நீதிபதி சந்திரசூட்டோ இதில் “மௌனம்’ சாதிகிறார். இத்தகைய அணுகுமுறை எதை குறிக்கிறது?

‘உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம், மாறுதல் மற்றும் பதவி உயர்வு விஷயங்களிலும் கொலீஜியத்தின் தலைவர் என்ற முறையில் நீதிபதி சந்திரசூட் அவர்களின் செயல்பாடு, நீதித் துறையின் சுதந்திரத்தையோ, நீதிபதிகளின் சுய-மரியாதையையோ பேணுவதாக அமையவில்லை’ என்பதே வழக்கறிஞர்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது.

தில்லி உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி எஸ். முரளீதர், 2020 தில்லி கலவரத்தின் போது, தில்லி காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததையும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக கைது செய்து வழக்கு தொடுத்துள்ளதையும் நீதிமன்றத்திலேயே கண்டித்ததால், இரவோடிரவாக மார்ச் 6 , 2020ல் பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார், அப்பொழுது தலைமை நீதிபதியாக இருந்தவர் எஸ்.ஏ. பாப்டே அவர்கள். ஆனால், கொலீஜியத்தில் மூத்த நீதிபதி என்ற முறையில் சந்திரசூடும் இருந்தார்.

நீதிபதி எஸ்.முரளீதர்

இவ்வாறு மிக நெருக்கடியான நேரத்தில் நேர்மையோடு செயல்பட்ட நீதிபதி எஸ்.முரளீதர் அவர்களுக்கு அநீதியான பணி மாற்றல்கள் செய்யப்பட்டதோடு, உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சந்திரசூட் அவர்களால் தடுக்கவோ, பாதுகாக்கவோ முடியவில்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது?

நீதிபதி முரளீதரை பாதுகாக்க முடியாதது கொலீஜியத்தின் தோல்வி  என்று பாலி எஸ் நாரிமன், ஶ்ரீராம் பஞ்சு, நீதிபதி மதன் பி. லோக்குர் போன்றோர் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

நீதிபதி முரளீதர் போன்ற நேர்மையளரின் வாய்ப்புகளை மறுத்த ஒன்றிய அரசுடன் சமரசமாகப் போகும் தலைமை நீதிபதி சந்திரசூட் , பாஜக நிர்வாகியான விக்டோரியா கௌரியை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க தயக்கம் காட்டவில்லை.

அதை எதிர்த்து பல கண்டனங்கள் சென்னையில் எழுந்த பிறகும் , கௌரி குற்றமற்றவர் என்ற சான்றிதழை சந்திரசூட் வழங்கினார்.

இது குறித்த வழக்கு  வந்த பொழுது விக்டோரிய கௌரியின் வெறுப்பு பேச்சுகளை பரீசிலிக்காமலும், கொலீஜியத்தின் முடிவை மறு பரீசீலனை செய்யாமலும் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்திய நீதித்துறையின் சுதந்திரத் தன்மைக்கும், நீதிபதிகளின் நடுநிலை மற்றும் கண்ணியத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயங்களல்ல இவை!

அரைக்கிணறு தாண்டியவர்!

பல காலமாக நிலுவையில் இருந்த தேர்தல் பத்திர திட்டத்தை எதிர்த்த வழக்கில் அனைவரும் பாராட்டும் விதமாக, ‘தேர்தல் பத்திர திட்டம் செல்லாது, அந்த திட்டம் சட்டவிரோதமானது’ என தீர்ப்பளித்தது நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு.

ஆனால் ‘சட்ட விரோதம்’ என கூறப்பட்ட திட்டத்தின் மூலம் கட்சிகள் பெற்ற பணத்தை பறிமுதல் செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ நீதிமன்றம் முன்வரவில்லை. அப்படி கோரிய வழக்கையும் தள்ளுபடி செய்தார் சந்திரசூட்!

‘மகாராஷ்டிர ஷிண்டே தலைமையிலான அரசு சட்ட விரோதமாக அமைக்கப்பட்டது’ என தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, அந்த அரசு நீடிப்பதை  தடுக்கவில்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது?

பெகாசஸ் வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க ஒன்றிய மோடி அரசு மறுத்து விட்டதை மௌனமாக ஏற்றுக் கொண்டார் சந்திர சூட். இந்த நீதிமன்ற அவமதிப்பானது சந்திர சூட்டுக்கு தெரியாததா?

அதானி மீதான பங்கு சந்தை மோசடி வழக்கு நீர்த்து போனது எப்படி?  

‘இதை விசாரிக்க நியமிக்கப்பட்ட வல்லுனர்கள் அனைவரும் அதானிக்கு வேண்டியவர்கள்’ என அறிந்த பின்னரும் அவர்களை மாற்ற உச்சநீதி மன்றம் தயாராக இல்லையே!

‘அதானி நிறுவன மோசடியை ‘செபி’ விசாரிக்க வேண்டும்’ என்று கூறிய உச்சநீதிமன்றம், செபி விசாரணையை இழுத்தடித்ததையும்  செபியின் தலைமை அதானி நிறுவனத்துடன் ‘கள்ள உறவில்’ இருந்ததையும் கண்டு கொள்ளவில்லை.

இத்தகைய ‘ பாதி கிணறு’ தாண்டும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் பல வழக்குகளிலும் தொடர்ந்தது.

காஷ்மீர் விவகாரத்தில் கபட நாடகம்;

காஷ்மீர் மாநில தகுதி இழப்பு மற்றும் அரசியல் பிரிவு 370 ஐ நீக்கியதை எதிர்த்த வழக்கை, பல காலம் இழுத்தடித்த பின் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

அரசியல் பிரிவு 370ஐ நீக்க ஒன்றிய அரசு கடைப்பிடித்த நடைமுறைகள்  சட்ட விரோதம் எனக் கூறிய உச்சதீதி மன்ற அமர்வு பிரிவு 370 தற்காலிகமானது தான், அதை குடியரசு தலைவர் (ஒன்றிய அரசு) நீக்கியது செல்லும் என தீர்ப்பு அளித்தது காஷ்மீர் மக்களை மட்டுமின்றி, சட்ட வல்லுனர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிமதன் பி லோக்குர், வழக்கறிஞர் பாலி.எஸ். நாரிமன் போன்றோர் இதை கடுமையாக விமர்சித்தனர்.

‘சட்டசபையின் கருத்தை கேட்காமல் ஒன்றிய அரசு ஒரு மாநில பரப்பை துண்டாடுவது அரசியல் சாசனம் பிரிவு 3 -ன்படி செல்லாது, அரசியல் பிரிவு 370 ஐ, அரசியல் நிர்ணய சபையின் அங்கீகாரம் இல்லாமல் நீக்கியது செல்லாது’ போன்ற சட்ட நிலைகளை ஏற்றுக் கொண்ட நிலையில், கடைசியில், ‘370ஐ நீக்கியது செல்லும்’ என சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்தது விந்தையாகும்.

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கை பொறுத்தவரை 2019- ல் அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பை எழுதியது யார் என்பது ‘அன்று’

புதிராக இருந்தது. அந்த அனாமதேய தீர்ப்பை எழுதியது இன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள் தான்.

இந்த தீர்ப்பில், ”ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதி வளாகத்தில் குழந்தை ராமர் சிலையை 1949ல் நிறுவியதும், 1992ல் வன்முறையாக மசூதியை இடித்ததும் கிரிமினல் குற்றங்கள்” எனக் கூறிய இந்த தீர்ப்பு, மசூதியை இடித்து நொறுக்கியவர்களிடமே அந்த வளாகத்தை முழுவதுமாக வழங்குமாறு ‘தீர்ப்பு’ அளித்தது எவ்வளவு பெரிய வினோதம்?

இத்தகைய முரண் நிறைந்த தீர்ப்பிற்கான வியாக்கியானம் என்ன?

பாபர் மசூதி 1528-ல் கட்டப்பட்டு முகலாய மன்னர்கள் காலத்திலும், நவாப்கள் காலத்திலும் அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்தது என்பதை மறுக்க வியலாத நீதிமன்றம், மசூதி தொடர்ந்து இஸ்லாமியர்கள் வசம் இருந்ததற்கு தகுந்த ஆவணங்கள் இல்லை என கூறியது. ஆனால், ராமர் இங்கு தான் பிறந்தார் என இந்துக்கள் நம்புவதால் அவர்களுக்கே அந்த இடத்தை வழங்குவதே பிரச்சினைக்கு விடிவாக அமையும் கூறி, இஸ்லாமியர்களுக்கு வேறொரு இடத்தில் நிலம் கொடுக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.

இஸ்லாமியர் தங்களது உரிமையை நிலை நாட்ட ஆவணங்கள் வேண்டுமாம், ஆனால் இந்துக்கள் தங்கள் கோரும் உரிமைக்கு “நம்பிக்கை” மட்டும் போதுமாம்!

‘ஒரு கண்ணில் வெண்ணை மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு’ என இரட்டை நிலைகளை முன்னிறுத்தி இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

இடப் பிரச்சினையை ஆவணங்கள், சான்றுகளைக் கொண்டே தீர்க்க வேண்டும். இதுவே, இந்திய குற்றவியல் தண்டனை சட்டமும், இந்திய சான்று சட்டமும் ஆகும். அதுவே இந்திய சாசனம் கூறும் சட்ட வழியாகும்.

ஆனால், நீதிபதி சந்திரசூட் எழுதிய தீர்ப்போ,  நம்பிக்கை மட்டுமே போதுமானது அதற்கு சான்றுகள், ஆவணங்கள் தேவையில்லை.

இது இந்திய சட்ட வழிமுறையையே களங்கப்படுத்தும் தீர்ப்பல்லவா?

இந்த தீர்ப்பை தான் வழங்கியது பற்றி நீதிபதி சந்திரசூட் அவர்களே கூறியதாவது;  நான் மூன்று மாதங்களாக கடவுள் விக்கிரகத்தின் முன் அமர்ந்து அயோத்திவழக்கை முடித்து வைக்க அந்த கடவுள் உதவ வேண்டும் என வேண்டினேன் . என்னுடைய நம்பிக்கை வீண்போகவில்லை…!

இதன் அடிப்படையில் தான் வழிபாட்டு தலங்கள் சிறப்பு சட்டம் 1991 ஐ மீறி ஞான வாப்பி மசூதி , மதுரா கிருஷ்ணபூமி போன்ற பிரச்சினைகளை ‘கள ஆய்வு’ எனும் பெயரில் மசூதியின் தன்மையை (கோவிலாக) மாற்ற கீழமை நீதிமன்றம் அனுமதி கொடுத்ததை சந்திரசூட் அமர்வு தடை செய்யாமல் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

இவருடைய இறை நம்பிக்கையை, சமயச்சார்பை சமீப காலங்களில் ஏன் வெளிப்படையாக காட்டத் துவங்கி உள்ளார்?

தனது இல்லத்தின் கணேஷ் பூஜைக்கு பிரதமர் மோடியை வரவழைத்தார், நீதிபதி சந்திரசூட். அரசியல் சாசனம் கூறும் அதிகாரப் பிரிவினையை (separation of powers ) கருத்தில் கொள்ளாமல் பிரதமர் மோடியுடன் தலைமை நீதிபதி நெருக்கம் காட்டுவதேன்? என்ற கேள்வி எழுகிறது. சமீப காலமாக இந்து மத நம்பிக்கை தனக்கு அதிகம் இருப்பதை அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார், சந்திர சூட்!

இது போன்று மத நம்பிக்கை சார்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தன் பதவிக்காலம் முடியும் தருவாயில் ஏன் பேச வேண்டும்? ஏன் மத அடையாளங்களோடு தலைமை நீதிபதி தன்னை அடையாளப்படுத்த வேண்டும்?

இது உச்சநீதி மன்றத்தின் மாண்பையும், மரியாதையையும் சிதைக்காதா?

எதை எதிர்பார்த்து இவ்வாறு பேசுகிறார்? அவரது நோக்கம் தான் என்ன? யாரை திருப்திபடுத்த ‘இந்த தகவல்களை’ கூறுகிறார்?

இத்தகைய செயல்களால் ‘உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ற கலங்கரை விளக்கம்’ இன்று ஒளியற்று வெறும் மரமாக நிற்கிறது!

இந்திய உச்சநீதி மன்றத்தை கவ்விய இருள் நவம்பர் -10 க்குப் பிறகாவது விலகுமா?

ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time