எதிர்பார்ப்புகளுக்கு விடை தருமா விஜய் கட்சி மாநாடு!

-சாவித்திரி கண்ணன்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகின்றன. இந்த ஏற்பாடுகளிலும், தன்னுடைய கடிதங்களிலும் விஜய் வெளிப்படுத்தியுள்ள அரசியல் சமிக்சைகள் என்ன? எதை நோக்கி விஜய் நகர்ந்து கொண்டுள்ளார்..? ஏன் பல விசயங்களில் இவ்வளவு ரகசியம் பேணுகிறார்?

பல ஆண்டுகளாக தன் மனதில் கனன்று கொண்டிருக்கும் அரசியல் செயல் திட்டத்தை வரும் அக்டோபர்-27 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறார் நடிகர் விஜய். பல லட்சம் பேர் திரள இருக்கும் இந்த அரசியல் மாநாடு பற்றிய எதிர்பார்ப்புகள் எல்லா தரப்பிலும் நிலவுவதை பார்க்க முடிகிறது.

நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஏற்கனவே சில கட்டுரைகளை நான் அறம் இணைய இதழில் விரிவாக எழுதியுள்ளேன். அதில் ஒரு மக்கள் தலைவனாக உருவாவதற்கான அறிகுறிகளை இது வரை விஜய்யிடம் பார்க்க முடியவில்லை என்பதை சுட்டிக் காட்டி இருந்தேன்.

தமிழக மக்களை பாதிக்கும் பல விவகாரங்களில் அவர் தொடர்ந்து மெளனம் சாதித்து வந்ததை நாம் அறிவோம். சில விவகாரங்களில் அவர் கருத்து சொன்னால் அது அவரது சினிமா வெளியீடுகளுக்கு பிரச்சினையை தோற்றுவிக்கும். அதிகார மையங்களின் பகையை பெற்றுத் தரும். இவை அவரை நம்பி பல கோடிகள் முதலீடு செய்யும் சினிமா தயாரிப்பாளர்களையும்,  விநியோகஸ்தர்களையும், தியேட்டர் உரிமையாளர்களையும் பெரிதும் பாதிக்கும் என்ற வகையில் அவர் அமைதி காத்தார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அதனால் தான் அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு விலகுவேன் என அவர் சொன்னார். ஆக, அரசியல் மாநாட்டில் அவர் பல பிரச்சினைகளை பேசியே ஆக வேண்டும். அந்தப் பேச்சானது பலருடைய ஆதரவை பெறுவதைப் போலவே சிலரது பகையையும் பெற்றுத் தரவே செய்யும். இது தவிர்க்க முடியாதது.

எதையும், தெளிவாகவும், உறுதிபடவும் பேசாமல் மேம்போக்காக பேசி கடந்து செல்வாரேயானால், அவர் மீதான மக்களின் நம்பிக்கை சரிந்து போய் விடும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரிகள் தவெக அறிக்கைகளில் தவறாமல் இடம் பிடித்து வருகிறது என்பதை பாசிடிவ்வாகவே பார்க்க வேண்டியுள்ளது.

பெரியார் மீது விஜய் கொண்டுள்ள ஈடுபாடு தெரிய வந்ததில் இருந்து பாஜகவினரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். ஏற்கனவே அம்பேத்கர் குறித்து அவர் பேசி இருப்பதோடு, தற்போது  மாபெரும் சிந்தனையாளர் அம்பேத்கரை கட் அவுட்டை வைத்திருப்பதையும் மற்றுமொரு முற்போக்கு அம்சமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களோ, தேசிய இயக்கங்களோ அம்பேத்கரை  பிரதானமாக முன்னிறுத்தியதில்லை. அப்படி செய்தால்  தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர நடுச் சாதிகளிலும், மேல் சாதியினரிடம் நாம் ஆதரவை இழக்க நேரும் என அச்சம் கொண்டு, ஊறுகாய் போல அவரை தொட்டுக் கொள்வதோடு, நிறுத்திவிடுவர். இதனால் விஜய் அம்பேத்கரை பிரதானப்படுத்தி இருப்பதை வீரம் என்பதா? விவேகம் என்பதா? தெரியவில்லை. பாராட்டுக்கள்!

ஏழைகளின் தலைவனாக – அப்பழுக்கற்ற நேர்மையான நிர்வாகத்தை தந்த  – பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி இருப்பதும் கவனிக்கத்தக்கது.

திராவிட இயக்கத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர் கட் அவுட்களை வைக்காதது சரியான அணுகுமுறையே. பெரியார் ஒருவரே போதுமானது என்ற தெளிவு அசாத்தியமானதாகும்.

இதே போல வீரமங்கை வேலு நாச்சியாரையும், சுதந்திரப் போராட்டத் தியாகி அஞ்சலை அம்பாளையும் முன்னிறுத்தி இருப்பதும் வரவேற்புக்குரியதே.

இவை மட்டுமின்றி தமிழன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் ஆகியோருக்கான கட் அவுட்கள் விஜய் தமிழ் அடையாளத்தை அழுத்தமாக வெளிப்படுத்துகிறார் என்பதற்கான அடையாளமாகும். இந்த வகையில் அம்பேத்காரிஸ்ட்கள், பெரியாரிஸ்ட்கள், தமிழ் தேசிய ஆர்வலர்கள், சுதந்திரப் போராட்டத்தை அடையாளப்படுத்தும்  தேசியவாதிகள் ஆகியோர் கவனங்களை விஜய் ஈர்க்கிறார் என புரிந்து கொள்ளலாம். இந்த வகையில் அவர் மதம், சாதி சார்ந்த அரசியலில் இருந்து விலகி நிற்பதை உணர்த்துகிறார் என்றே தோன்றுகிறது.

இந்தக் கட்டுரை எழுதும் நிமிடம் வரை எனக்கு விஜயிடம் எந்த பெரிய நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அறவே இல்லை. இந்த மாநாட்டில் யாரெல்லாம் கலந்து கொண்டு பேச உள்ளனர்? எந்தெந்த பிரபலங்கள் அவரது கட்சியில்  இணைய உள்ளனர் என்பதெல்லாம் இன்று வரை ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. ஆகவே, மாநாட்டில் வெளிப்படும் பேச்சுக்களை வைத்து தான் இனி நாம் அபிப்ராயங்கள் சொல்ல முடியும்.

பொதுவாக ஒரு அரசியல் கட்சி மாநாட்டில் யார்? யரெல்லாம் பேசுவார்கள் என்பதை முன்பே பெரிதாக வெளிப்படுத்தி மக்களிடமும், தொண்டர்களிடம் எதிர்பார்ப்புகளை உருவாக்குவதே இயல்பாகும். நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் மாநாட்டில் விஜய் எட்டு மணிக்கு தான் பேசுவார் என்றால், இடைப்பட்ட நேரத்தில் என்னென்ன நிகழ்வுகள்? யார், யார் பேசுகிறார்கள்? எனத் தெரியவில்லை. இதில் ரகசியம் பேண என்ன அவசியம் என்ன என்பதும் புரியவில்லை.

அதே சமயம் இந்த மாநாட்டை நடத்துவதற்கு ஆட்சியாளர்கள் தந்த நெருக்கடிகளையும், காவல்துறையினர் செய்த அலைக்கழிப்புகளையும் அவர் பெரிதுபடுத்தாமல் பொறுமையோடு அவற்றை எதிர்கொண்டு, காவல்துறை நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு மிகக் கவனமுடன் மாநாட்டு ஏற்பாடுகளை விஸ்தாரமாக செய்து வருவது ஆச்சரியமளிக்கிறது.

85 ஏக்கரில் மாநாடு, சுமார் 200 ஏக்கருக்கும் மேலாக வாகன நிறுத்தும் இடங்கள், 10,000 தன்னார்வ தொண்டர் படை, கலந்து கொள்வோர்களுக்கு காலையும், மதியமும் டிபன் மற்றும் உணவு என விரிவான ஏற்பாடுகள் குறித்த செய்திகள் அசத்துகின்றன.

 

பொதுவாக அரசியல் தலைவர்கள் கட்சி மாநாட்டிற்கு மக்களை பெருந்திரளாக கலந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுப்பது தான் வாடிக்கை. ஆனால், ’’இயலாதவர்கள் வர வேண்டாம், கர்ப்பிணிகளும், சிறுவர்களும் வர வேண்டாம்’’ என கூட்டத்தை சற்று குறைக்க முயற்சித்தார் விஜய் என்றால், பெருந்திரள் கூட்டத்தால் அசம்பாவிதங்களும், அவப் பெயர்களும் உருவாக வேண்டாம் என்பது மட்டுமல்ல. கட்சியின் மாணவரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி..என பத்து அணிகளின் நிர்வாகிகள் எண்ணிக்கையே லட்சங்களில் இருக்கிறது என்பதையும், அவரது ரசிகர் மன்றம் பல்லாண்டுகள் இயங்கி, 12 ஆண்டுகளுக்கு முன்பு அது மக்கள் இயக்கமாக மாற்றம் கண்டு பல நிகழ்ச்சிகளை பார்த்தவர் என்ற வகையில் தனக்கான கூட்டத்தை இனி தான் புதிதாக கண்டு பரவசமடையும் நிலையில் அவர் இல்லை என்பதே உண்மையாகும்.

ஒட்டுமொத்த செலவையும் ஒரு தனி மனிதராக அவரே பொறுப்பேற்று செய்கிறார் என்பதும், காசு கொடுத்து கூட்டம் வரவழைக்கவில்லை என்பதும் பிளஸ் பாயிண்டுகள். இதே போல ஓட்டுக்கும் காசு கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடிந்தால், அது ஆரோக்கிய அரசியலுக்கு வழிகோலும். தங்கள் சொந்த செலவை செய்து கூட்டத்திற்கு வந்து போகும் தொண்டர்கள் கிடைத்துள்ளது அரிதிலும் அரிது. அதை கெடுக்காமல் பாதுகாப்பத்தில் தான் வெற்றி அடங்கி உள்ளது.

இது வரை மாநாடு தொடர்பாக மூன்று கடிதங்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். எதிலுமே பெரிதாக கொள்கை முழக்கம் எதுவுமில்லை என்பதும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் அளவிலே தான் உள்ளன என்பதையும் கவலையோடு உற்று நோக்கினாலும், இங்கு கொள்கைபேசும் அரசியல் கட்சிகள் எதுவுமே அந்த கொள்கைகளுக்கு உரியர்களாக நடந்து கொள்ளாமல், அவற்றை வெற்று அரசியல் முழக்கமாக்கி ஏமாற்றி வருவதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு,நம்மை வழி நடத்தப் போகும் கொள்கைகளையும், நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும், பெருவிழாவாகவும் கொண்டாடப்பட உள்ளது. தமிழக மக்களின் மனங்களைதீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையஉள்ளது. வலிமையான அரசியல் பாதையை அமைப்போம். என விஜய் கூறி உள்ளார். பார்ப்போம். முக்கியமாக அந்தக் கட்சியில் எந்த மாதிரியான பிரபலங்கள் சேரப் போகின்றனர்? எதுஎதை ஆதரிக்கிறார்? எதுஎவற்றை எதிர்க்கிறார்? என்பதை பொறுத்தே விஜய்யின் அரசியலை கணிக்க முடியும். அத்துடன் அரசியலில் எதிர்ப்புகளை, தோல்விகளை தாங்கி உறுதியுடன் நிற்பதில் தான் அவரது வெற்றி தீர்மானிக்கப்படும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time