மகாராஷ்டிராவை கைப்பற்றுவது மட்டுமல்ல, துரோகிகளான ஏக்நாத் ஷிண்டேவுக்கும், அஜித் பவாருக்கும் பாடம் புகட்ட வேண்டிய தேர்தல்! குஜராத்துக்காக மகாராஷ்டிராவை காயடிக்கும் மோடி-அமித்ஷா கும்பலை வீழ்த்தும் மராட்டியர்களின் தன்மானப் பிரச்சினைக்கு விடை காணும் தேர்தல்; யாருக்கு வெற்றி ஒரு அலசல்;
நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் மிருக பலம் குறைந்து, 56 இஞ்ச் மார்பு சுருங்கியதற்கு முக்கிய காரணம், மகாராஷ்டிராவில் பாஜக அடைந்த தோல்வி தான். மகாராஷ்டிராவில் பாஜக பெற்ற இடங்கள் 9 தான், இதன் கூட்டாளிகளான ஷிண்டே சேனா 7 இடங்களிலும், அஜீத் பவாரின் தேசீயவாத காங்கிரஸ் 1 இடத்திலும் ஆக மொத்தம் இந்த கூட்டணி (என் டி ஏ) பெற்ற இடங்கள் 17 தான்.
இந்தியா கூட்டணியோ 30 இடங்களில் வென்று சாதனை படைத்தது. காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களையும் , உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா 21 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களிலும், சரத் பவார் (தேசீயவாத காங்.) 10 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த வெற்றி மோடி அரசின் பல நெருக்கடிகளை சமாளித்து பெற்ற வெற்றி என்பதும், தேர்தல் ஆணையத்தின் ‘தகிடு த்த்தங்களால்’ கிட்டத்தட்ட 12 இடங்களை பறி கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலை மாற்றி அமைத்து, மீண்டும் ஆட்சியை பிடித்து ‘களங்கத்தை’ மறக்கடித்துவிட, பாஜக பெரிதும் பாடுபடுகிறது. ஹரியானா தேர்தலிலிருந்து மகாராஷ்டிர தேர்தலை பிரித்து நடத்துவது, இடைப்பட்ட காலத்தில் ‘இலவச’ திட்டங்களை அள்ளி வீசுவது, மராத்தா இட ஒதுக்கீட்டை அறிவித்து ஆதாயம் பெறுவது, எதிர்கட்சிகளிடையே ஒற்றுமையை குறைத்தல், வாக்குகளை சிதறவிட ‘கனமான’ வேட்பாளர்களை நிறுத்துதல் என பல வழிகளில் ஆளும் கூட்டணி அமைப்பான ‘மகா யுத்தி ‘ அணி முனைகிறது.
மகா விகாஸ் அகாடி மற்றும் மகா யுத்தி கூட்டணிகளுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் ஏறத்தாழ 1% தான். ஆனால், இடங்களை பொறுத்து மகா விகாஸ் அகாடி கூட்டணி 152 சட்டசபை தொகுதிகளில் முன்னணியில் உள்ளதாக கொள்ளலாம். மகா யுத்தி கூட்டணி 127 தொகுதிகளில் முன்னணியில் இருப்பதாக நாடாளுமன்ற முடிவுகளின்படி எடுத்துக் கொள்ளலாம்.
இந்த நிலைமை இப்பொழுது மாறியுள்ளதா? என்ற கேள்விக்கு யாராலும் தெளிவான பதிலைக் கூற முடியவில்லை.
தேர்தல் ஆணையத்தின் ஓர வஞ்சகமும், அதிகாரிகளின் தில்லுமுல்லும் எதிர்கட்சிகள் மயிரிழையில் தோற்பதற்கு காரணமாகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்றாலும்,
இத்தகைய சந்தர்ப்பத்தை (வாக்கு சிதறல் மற்றும் வெற்றி தோல்விக்கிடையேயான குறுகிய இடைவெளி ஆகியவை அளிக்கும் சந்தர்ப்பத்தை) ஆளும் பாஜக விற்கு அளித்தது, எதிர்கட்சிகளின் ஒற்றுமை இன்மையே ஆகும்.
தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றால் ஏற்படும் அதிருப்திகளை சமாளிக்க மகா விகாஸ் அகாடி கட்சிகள் மாற்று திட்டங்கள் வைத்துள்ளனவா? என்பதை பொறுத்தே தொகுதிகளில் வாக்கு பதிவை காக்க முடியும் .
மகாராஷ்டிராவின் தன்மானம் என்ற புள்ளியில், பாஜக , சிவசேனாவை உடைத்த பாவமா? அல்லது சரத்பவாரின் தேசீயவாத காங்கிரசை உடைத்த பாவமா? எந்த ‘பாவம் ’ மராட்டிய மக்களின் தன்மான உணர்வைக் அதிகம் கிளறியது என்ற கேள்வி மாநில அரசியலில் சுற்றிச் சுற்றி வருகிறது! இதனால், பாஜக சாதாரண மராட்டிய மக்களின் மதிப்பிலிருந்து வீழ்ந்துள்ளது.
இந்தியாவின் நிதி ஆதாரத்தின் தலைநகர் (Financial Capital of India) மும்பைக்கு வர வேண்டிய முக்கிய திட்டங்களை- தொழில்களை குஜராத்திற்கு ‘கடத்திய’ மோடி-ஷா கும்பலின் ஆதிக்கத்தை மராட்டியர்கள் வெறுக்கின்றனர் .
இவ்விரு உணர்வுகள் ஏற்படுத்தும் பாதிப்பை சமாளிக்க மோடி- ஷா கும்பல் , பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளது.
# மகளிருக்கு மாதம் ரூ 1500 வழங்கும் முக்கிய மந்திரி லட்கி பகின் யோஜனா,
# இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் அன்னபூரணா யோஜனா
# விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல்.
போன்ற திட்டங்களை அவசர அவசரமாக அமல் செய்து வருகிறது. இதற்காக தேர்தலையே தள்ளி வைத்தது.
இது தவிர வகுப்புவாத முனைப்பில் இந்துக்களை திரட்டுவது, சமூக அமைதியை கெடுத்தாவது வாக்குகளை அள்ளுவது என்ற கொள்கையை மோடி-ஷா கும்பல் கையிலெடுத்துள்ளது. இதற்கு உறுதுணையாக ஆர் எஸ் எஸ் சுயம் சேவக்குகளும், சங்கப்பரிவாரங்களும் பல்வேறு நிழச்சிகளை நடத்தி மக்களை திரட்டுகின்றனர்.
ஆனால், இந்த அடையாளங்களெல்லாம் சத்ரபதி சிவாஜி சிலை சொற்ப ஆயுளில் நொறுங்கி விழுந்தது போல் நொறுங்குகின்றன. ஊழலும், ஊதாரித்தனமும் நிறைந்த மகாயுத்தி அரசின்‘வளர்ச்சி’ திட்டங்கள் மக்களை கவரவில்லை.
தேர்தல் தில்லு முல்லுகளும், வோட் கட்டர்களை முக்கிய போட்டிகளில் இறக்குவதும், அதிகார அழுத்தமும் தான் மகா யுத்தி அரசின் இன்றைய ஆயுதங்கள். இதை மேற்பார்வையிடுவதே அமீத் ஷாவின் வியூகம் ஆகும்.
ஷிண்டே -பட்னாவிஸ் -அஜீத் பவார் அரசு மீதான விவசாயிகளின் கோபம் கார்ப்பரேட்களுக்கு ஆதரவான மூன்று வேளாண் சட்டங்கள், விளை பொருள்களுக்கு நியாயமான விலையின்மை, அதிகரிக்கும் உர விலைகள், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் என வளர்கிறது! ஆண்டுக்கு சுமார் 3,000 மகாராஷ்டிரா விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதற்கு தீர்வு இலவச மின்சாரமல்ல!
மகாராஷ்டிராவின் மக்கள் தொகையில் 45% நகரவாசிகள். ஆயினும் 50% மக்கள் விவசாயத்துடன் இணைந்துள்ளனர். ஆனால், மொத்த உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு வெறும் 12% மே இருப்பது விவசாயம் சார்ந்த வேலைகளில் தேக்க நிலையை உணர்த்துகிறது.
நகர்ப்புற மக்களிடையே வேலையின்மை நிலை மிகவும் மோசமாக மாற்றியுள்ளது. சமீபத்தில் “தி இந்து” வெளியிட்டிருந்த சர்வேயில் வேலையில்லா திண்டாட்டமும், பண வீக்கமும் தான் மக்களின் பிரதான பிரச்சினையாக உள்ளன என்று தெரிய வருகிறது.
இந்த பதட்டமான சூழல் தான் மராட்டிய இட ஒதுக்கீடு கோரிக்கையை கிளப்பி உள்ளது, மராட்டியருக்கு இட ஒதுக்கீடு கோரும் போராளி மனோஜ் ஜாரெங்கே பட்டீலின் உண்ணவிரத போராட்டங்கள் மாநிலத்தை திணறடித்தன.
மகாயுத்தி அரசு, மராட்டிய இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதன் மூலம் மராத்தியர்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளலாம் என எண்ணியது. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரோ அவற்றை சார்ந்த அரசியல் கட்சிகளோ மராட்டியர்களுக்கான ஓபிசி இட ஒதுக்கீட்டை எதிர்த்து குரல் எழுப்புகின்றனர்.
இந்த சமூகப் பிணக்கு இந்த சட்ட சபை தேர்தலில் எவ்வாறு எதிரொலிக்கும் என்பது புதிராக உள்ளது.
மற்றொரு புதிராக இருப்பது, இரண்டு கூட்டணிகளான மகாயுத்தி மற்றும் மகா விகாஸ் அகாடி ஆகியவற்றை கடந்து இருக்கும் சிறிய கட்சிகளின் வாக்கு சதவிகிதம் தான்.
2019 சட்டசபை தேர்தலில் பாஜக வும், சிவ சேனாவும் ஓரணியாகவும் (NDA) , காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஓரணியாகவும் போட்டியிட்டனர். பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலுமாக மொத்தம் 161 இடங்களில் வென்றது.இந்த கூட்டணி பெற்ற வாக்கு விகிதமோ 42% ஆகும்.
காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங். கட்சி ஆகிய இரண்டும் சேர்ந்து 35% வாக்குகளை பெற்றனர், வென்ற தொகுதிகள் மொத்தமாக 98 ஆகும்.
இவ்விரு கூட்டணிகளுக்கும் வாக்கு அளிக்காமல் தனித்து இயங்கிய கட்சிகள் சயேட்சைகள் பெற்ற வாக்கு சதவிகிதம் 25 ஆகும். இது ஒரு கணிசமான விழுக்காடாகும்.
2024 நாடாளுமன்ற தேர்தல் மோடிக்கு எதிராக திரும்பினாலும் , இந்தியா கூட்டணியை தாண்டி மோடி எதிர்ப்பு ஓட்டுகள் 14 சதவிகிதம் தனித்தே இருந்தன.
ஆக இப்பொழுது நடைபெறப்போகும் சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தலைப் போன்றிராது . எனவே, தன்மான உணர்வுகள், அனுதாப உணர்வுகளால் ஈர்க்கப்படாத வாக்காளர்கள், இரண்டு கூட்டணிகளிலும் இணையாமல், தனித்து வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. அத்தகைய வாக்குகளின் சதவிகிதம் 15 முதல் 20 சதவிகிதமாக இருக்கலாம்.
அந்த வகையில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித பகுஜன் அகாடி (VBA) கட்சி, பாரத் ஆதிவாசி கட்சி, கோங்வானா கணதந்திர கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
பிரகாஷ் அம்பேத்கரை எதிர்க்கும் தலித் அமைப்புகளும், குடியரசு கட்சி, பகுஜன் கட்சியை சேர்ந்தவர்களும் இணைந்து ‘குடியரசு முன்னேற்ற முன்னணி’ (Progressive Republican Alliance) என்று தனியாக களம் காண்கின்றன. இவர்கள் தனியே நிற்பதால் வாக்குகள் சிதறும் அபாயமுள்ளது.
இடதுசாரி கட்சிகளான சிபிஐ , சிபிஎம், மற்றும் விவசாயி தொழிலாளர் கட்சிகளுடன் மகா விகாஸ் கூட்டணி தலைமை இன்று வரையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மூன்று பெரிய கட்சிகளின் பேரமே இன்னும் முடிந்த பாடில்லை! இவையெல்லாம் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை தடுக்கும் விடயங்கள்.
இது தவிர, ஓவைசியின் அகில இந்திய மஸ்ஜில் கட்சி, ராஜ் தாக்கரேயின் நவ நிர்மாண கட்சியும் தனித்து போட்டியிடுகின்றன. இவர்கள் கண்டிப்பாக பத்து முதல் பதினைந்து இடங்களில் பிரதான கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக மாறுவர். ஐந்து முதல் பத்து இடங்களில் வெற்றியும் பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
Also read
இன்று இருக்கும் நிலையில் மகா விகாஸ் அங்காடி முன்னணியில் இருக்கிறது, சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு “வாழ்வா? சாவா?” போராட்டமாகும். இதில் அவர்கள் வெற்றி அடையாவிடில், அவர்களது எதிர் காலம் கேள்விக்குறியாகும். அவர்கள் தீர்க்க வேண்டிய கணக்கும் நிலுவையில் இருப்பதால்அவர்கள் ஒற்றுமையுடன், விழிப்புடன் பணியாற்றுவார்கள் என நம்பலாம்.
காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்றிருந்தாலும், ஹரியானா தோல்வி ஒருவித கலக்கத்தை கொடுத்திருக்கிறது. வெட்டி பந்தாக்களை ஒதுக்கிவிட்டு, களத்தில் இறங்கி பணியாற்றுவார்களேயானால் வெற்றியை எட்டிப்பிடிக்கலாம்!
ஆனால், இந்த தேர்தல் இரண்டு அணிகளுக்கும் இலகுவான போட்டி அல்ல!
-ச.அருணாசலம்
Leave a Reply