வலிமையான எதிரிகளோடு மோதி வெல்வாரா விஜய்?

-சாவித்திரி கண்ணன்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும் இரு பெரும் அதிகார மையங்களை தன் எதிரிகள் என பகிரங்கமாக விஜய் அறிவித்துள்ளார். ஆக எதிர் நீச்சல் போடத் துணிந்து விட்டார். இன்றைய த.வெ.க மாநாடு தரும் செய்திகள் என்ன..? ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் என்ன…? எனப் பார்ப்போம்;

இத்தனை வருடங்களாக விடுபடாத புதிராக தொடர்ந்த நடிகர் விஜய்யின் அரசியல் தற்போது உள்ளங்கை நெல்லிக் கனி போல தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது! ஒரு நடிகனாக இருக்கும் வரை சினிமா வியாபார வெற்றி கருதி அவர் மனதில் புதைத்து வைத்திருந்த உணர்வுகளை சிறப்பாகவே வெளிப்படுத்திவிட்டார்.

விஜய்க்கு இருக்கும் இந்த தெளிவுக்கு அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட விதை தான் அடிப்படையாக இருக்க முடியும். இடதுசாரி, திராவிட இயக்க சித்தாந்த சாயலில் அவர் படமெடுத்தவர். அந்த வகையிலும், ஒரு பெரும் திரைக் கலைஞன் என்ற வகையிலும் அரசியலைப் பற்றிய அடிப்படை புரிதல்களை விஜய் பெற்றுள்ளவர் தான் என்பது அவருடைய இன்றைய கன்னிப் பேச்சில் இருந்து நமக்கு தெரிய வருகிறது.

விஜய்யின் 50 நிமிட பேச்சில் தேவையற்ற வார்த்தைகள் எதுவும் இல்லை. மிகைப்படுத்தப்பட்ட  பிம்பங்களையோ, வாக்குறுதிகளையோ அவர் தரவில்லை. அலங்காரச் சொல் பிரயோகங்கள் எதுமில்லை. பெரியாரையும், காமராஜரையும், அம்பேத்கரையும், வேலு நாச்சியாரையும், அஞ்சலை அம்மாளையும் தங்கள் முன்னோடியாக ஏன் கருதுகிறோம் என்பதற்கு அவர் தந்த விளக்கங்களையே அவரது கொள்கை அறிவிப்பாக நாம் கருதலாம். தன்னுடைய கொள்கைகள் யாரது எதிர்ப்புகளையும், வெறுப்புகளையும் பெற்றுத் தரும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்.

அனைவரும் சமம், அனைவருக்குமான வாய்ப்பு, மதச்சாரபற்ற  கொள்கை என்பது அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் பண்பாடு என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார்.

அடுத்ததாக அவருடைய நெருங்கிய அரசியல் சகாக்களாக இன்று வெளிப்பட்டவர்கள் மிகப் பெரிய தொழில் அதிபர்களோ, புகழ் பெற்றவர்களோ, அறிவுத் தளத்தில் அறியப்பட்ட பிரபலங்களோ அல்ல, மிக சாதாரண நடுத்தர பிரிவினர், அசல் தமிழர்கள்! தலைவரைப் பற்றி மிகைப்பட புகழ்ந்து பேசுதல், மிகப் பெரிய பிம்பங்களை அவர்களைக் கொண்டு தன்னைக் குறித்து கட்டமைத்தல் ஆகியவற்றை விஜய் செய்யவில்லை. அந்த வகையிலும் இந்த மாநாடு கவனத்தை ஈர்த்துள்ளது.

அனைத்து பேச்சாளர்களும் கொள்கை சார்ந்தே பேசினர். அதுவும் மிக அளவானவர்களே பேசினர். அவர்களே, இவர்களே என்று பேசிச் செல்லும் புகழ்ச்சி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நேரடியாக மக்களிடம் சொல்ல வேண்டிய செய்திகளுக்கு வந்தது சிறப்பு தான்!

பொன்னாடை அணிவிக்கும் பன்னாடை கலாச்சாரத்திற்கும் , தோள் தாங்க முடியாத பெரிய மலர் மாலைகளை அணிவிக்கும் கலாச்சாரத்திற்கும் முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவ்வளவு மாவட்ட செயலாளர்களும் பொன்னாடைகளையும், மலர் மாலைகளையும் வாங்கி வந்து வரிசையில் நின்று போட்டு போட்டோவுக்கு போஸும் தந்திருப்பார்கள். அதற்கே ஒரு மணி நேரம் ஓடியிருக்கும்.

வெற்றிக் கழகம் என்ற பெயருக்கேற்ப வெள்ளியில் வீரவாள் பரிசளிக்கப்பட்டிருக்கலாமோ, என்னவோ. ஆயினும், இது ஆடம்பரம் மட்டுமல்ல, வாள் என்பது வன்முறையை நினைவூட்டத்தக்கது என்பதால், அதை தவிர்த்திருக்கலாம். நிழ்ச்சியை அதிகமாக வளர்த்துச் செல்லாமல் ஏழு மணிக்குள் எல்லாவற்றையும் சுருக்கமாக முடித்துக் கொண்டது பல வகைகளிலும் நல்லது.

நிகழ்ச்சியை தொகுத்தளித்த பெண் தமிழை சரியாக உச்சரித்தார். உணர்ச்சி மேலோங்கப் பேசினார். சில நேரங்களில் சற்று மிகையாக பேசினார். மற்றும் ஒருவர் ‘தமிழ் நாட்டின் வருங்கால நிரந்தர முதல்வர்’ என விஜய்யை விதந்தோதினார்.இவை யாவும் வழக்கமான அரசியல் கலாச்சார மரபுகளில் இருந்து இவர்கள் இன்னும்  முற்றாக விடுபடவில்லை என்பதை சொல்லின.

இன்றைய தினம் பணம் கொடுக்காமல் வாகனங்களை ஏற்பாடு செய்து தராமல், பிரியாணி, குவார்ட்டர் கொடுக்காமல் இவ்வளவு பெரிய மக்கள் திரள் கூடியதற்கு காரணம், விஜய்யின் சினிமா புகழ் மட்டுமல்ல, ஒரு மாற்று அரசியலை விரும்பும் மக்களின் மழுங்கடிக்க முடியாத எதிர்பார்ப்புகளும் என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு மிகப் பெரிய அரசியல் மாநாட்டை  வசூல் வேட்டை நடத்தாமல் தான் சம்பாதித்த சொந்த பணத்தை கொண்டு மட்டுமே நடத்தியது. ‘சிறந்த கொள்கைகளை பேச்சளவில் மாத்திரமன்று, செயலிலும் காட்டுவேன்’ என்றது, ‘மதச்சார்பற்ற’ என்பதையும், ‘அனைவரும் சமம்’ என்பதை வலியுறுத்தியதால் ‘பாஜக தான் பிரதான எதிரி’ என்பதை புரிய வைத்தது, ‘ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்’ என்றதன் மூலம் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அடுத்த எதிரி என அடையாளம் காட்டியது, திராவிடம், தமிழ் தேசியம் என்ற இரண்டையும் ஏற்றது ஆகியவை அவரது அரசியல் பக்குவத்தை உணர்த்தின.

எல்லாவற்றுக்கும் மேலாக தனித்தே தங்கள் கட்சியால் அனைத்து தொகுதிகளிலும் நின்று வெல்ல முடியும் என்றாலும், தகுதியானவர்களை அரவணைத்து கூட்டணி வைக்கவும், அதிகார பகிர்வு கொள்ளவும் முன் வந்தது மற்றொரு சிறப்பாகும் என்றாலும், தனியாக களம் கண்டு வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை இருந்தால், அவ்விதமே செயல்படட்டும். கறைப்பட்டுள்ள இன்றைய அரசியல் கட்சிகள் எதனுடனும் கைகோர்க்க வேண்டாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

அடுத்ததாக ‘விஜய் பக்கம் காற்றடிக்கிறது’ என்றவுடன், மற்ற கட்சிகளில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகள் அணிவகுத்து வருவார்கள். அவர்களை தவிர்க்காமல் விட்டால் விஜய்யின் ‘நல்லாட்சி’ என்பது நிறைவேறாத கனவாகிவிடும். இதுவும் பத்தோடு பதினொன்று என்றாகிவிடும் ஜாக்கிரதை.

இன்றைய த.வெ.க மாநாடும், அதில் விஜய் பேச்சும் தமிழக மக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை, நம்பிக்கைகளை விதைத்துள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. அதே சமயம் தேர்தலுக்கு எஞ்சி இருக்கும் இன்னும் ஒன்றரை வருடங்களில்  விஜய் அரசியல் சார்ந்து மக்கள் பிரச்சினைகளில் என்னென்னெவெல்லாம் பேசுகிறார்..? எந்தெந்த பிரச்சினைகளுக்கு குரக் கொடுக்கிறார்..? எந்தெந்த விவகாரங்களில் களம் காண்கிறார். கட்சியின்  கிளை  அமைப்புகளை எவ்வாறு கட்டமைக்கிறார்..? என்பதைக் கொண்டே அவரது எதிர்காலம் இருக்கும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time