விஜய் சாதிப்பாரா? சறுக்குவாரா?

-சாவித்திரி கண்ணன்

விஜய் நடத்திய அரசியல் மாநாட்டின் அதிர்வுகள் தொடர்கிறது. ‘பாஜகவால் களத்தில் இறக்கிவிடப்பட்டவர்’ என்ற பேச்சுக்கள் உண்மையா. ..? தொடக்கம் சிறப்பாக உள்ளது என்றாலும், தொடர்ந்து நடை போடுவதற்கான இரண்டாம் கட்டத் தலைவர்களும், கட்சி கட்டமைப்புகளும் எப்படி உள்ளன? ஒரு அலசல்;

எந்தவித முன் முடிவும் இல்லாமல் திறந்த மனதோடு விஜய்யின் த.வெ.க அரசியல் மாநாடு குறித்து நான் நேற்றைய தினம் எழுதிய கட்டுரை பெரும்பாலானவர்களின் வரவேற்பை பெற்றுள்ள போதிலும், சிலர் நீங்களா இப்படி எழுதுகிறீர்கள்? விஜய்யின் அரசியல் மாநாட்டை தறுமாறாக கிழித்து தொங்கவிடுவீர்கள் என்றல்லவா எதிர்பார்த்தோம்..? என்றெல்லாம் கேட்டனர்.

இது வரையிலான நடிகர் விஜய்யின் பூடகமான அரசியல் பற்றியும், கொள்கை இல்லாத நிலைபாடு குறித்தும் கடுமையாக நான் பல கட்டுரைகள் அறம் இதழில் எழுதியுள்ளேன்! ஆனால், தற்போது தன் கொள்கை நிலைபாட்டை இன்னதென தெளிவாக கூறிய பிறகு – அது சரியானதென – நான் உணரும் போது தாக்க வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் சொல்லொன்றும், செயலொன்றுமாக நடந்தால் விமர்சிப்பேன்.

மேலும், ஒரு மாற்று அரசியல் சக்திக்கான எதிர்பார்ப்பு நீண்டகாலமாகவே தமிழக மக்களிடம் மேலோங்கியுள்ள நிலையில், அந்த மாற்று சக்தியாக ஒருவர் நல்ல கொள்கைகளை முன்னிறுத்தி வரும் போது, எடுத்த எடுப்பிலேயே சந்தேகமாகவோ, குதர்க்கமாகவோ பார்ப்பது ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்காது.

இப்போதும் சொல்கிறேன். நல்ல கொள்கையை பேசியதாலேயே ஒருவரை முழுமையாக ஆதரித்துவிட  முடியாது. ஆனால், தொடக்கம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றியது. எனவே, அதை ஏன் மனதிற்குள் மறைக்க வேண்டும்.

 

விஜய்யின் த.வெ.கவை எதிர்ப்பவர்கள் வைக்கும் கடும் தாக்குதல்களை பார்ப்போம்;

# திமுகவை எதிர்ப்பதற்காக களம் இறக்கப்பட்டு இருக்கிறார். அதனால், திராவிடக் கருத்தியலையே பேசியவாறு எதிர்த்து அதை காலி பண்ணப் பார்க்கிறார்.

# விஜய் பேசியதெல்லாம் பாஜகவினர் எழுதி தந்த வசனங்கள்.

# எம்.ஜி.ஆரை புகழ்ந்தார். ஆகவே, எம்.ஜி.ஆரை போல மோசமான ஆட்சியையே தருவார்.

# திமுகவை அழிக்க களம் இறக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் தான் அழிந்தனரே அன்றி, திமுக அழியவில்லை.

இப்படியான கருத்துக்களை பேசுபவர்களின் நோக்கம், ‘திமுகவை பாதுகாக்க வேண்டும். விஜய் வருகையால் அது  வலுவிழந்துவிடக் கூடாது’ என்ற பதற்றமே மேற்படி விமர்சனங்களுக்கு காரணமாகும்.

தமிழகத்தில் திராவிடக் கருத்தியலுக்கான தேவை இப்போதும் இருக்கிறது. அந்தத் தேவையை எந்த இயக்கம் சிறப்பாக நிறைவேற்றுகிறதோ, அந்த இயக்கத்தை மக்கள் அழியவிட மாட்டார்கள். திமுக அழிகிறதென்றால், அது திராவிடக் கருத்தியலை வெறும் பேச்சளவில் கொண்டு, நிஜத்தில் அதற்கு எதிராக செயல்படுகிறது என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஆக, திமுகவை அதன் இன்றைய தலைமை தான் அழித்துக் கொண்டுள்ளது.

விஜய் பாஜகவோடு மறைமுக உறவு வைத்திருக்கிறார் என குற்றம் சாட்டும் திமுக ஆதரவாளர்கள், இன்றைய திமுக தலைமை பாஜகவின் செயல் திட்டங்களை திமுக அரசு தமிழகத்தில் அமல்படுத்தி வருவதை ஏன் பேச மறுக்கிறார்கள்?

# தேசிய கல்வித் திட்டம் பள்ளிக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரை வெகு தீவிரமாக அமலாக்கப்படுகிறது. கல்வித் துறையில் சனாதன நோக்கங்கள் அமைதியாக சாத்தியப்படுத்தப்படுகின்றன.

# விவசாய விளை நிலங்களை உள்ளாட்சிகளின் விருப்பத்தை மீறி கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி அமல்படுத்தி வருகிறது.

#  பாஜக கொண்டு வந்த தொழிலாளர் விரோத சட்டங்கள் அச்சுபிசகாமல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

# போக்குவரத்து விதிமீறல்களுக்கான கொடூரமான அபராதங்கள் பாஜக கொண்டு வந்த சட்டமே!

இது போல பத்துக்கு மேற்பட்ட விவகாரங்களை பட்டியலிட முடியும். தங்கள் விழாக்களுக்கு பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் அழைத்து நெருக்கம் பாராட்டி வரும் திமுகவினர நோக்கி பாஜகவுடன் கள்ள உறவு பேணிக் கொண்டு திராவிட மாடல் வசனம் எதற்கு? எனக் கேட்கலாமே!

திமுக தலைமையும், அமைச்சர்களும் பாஜக தலைமைக்கு கப்பம் கட்டி சரி கட்டினாலும் , பாஜக தலைமை எப்போது வேண்டுமானாலும் இவர்களை தூக்கும். அமலாக்கத் துறை, வருமான வரித் துறையை ஏவும். அப்போது வெளிப்படையாக சரணாகதியாகி கூட்டணி வைக்கும் சூழல் உருவாகிடும்.

இன்றைய ஆளும் ஊழல் திமுக அரசை வலுவாக கேள்வி கேட்கவும், அதன் ஊழல்களை தட்டிக் கேட்கவும் பிரதான எதிர்கட்சியான அதிமுக தன் தார்மீகத் தகுதியை இழந்து கிடக்கிறது.

இது தான் விஜய்யின் அரசியல் மாநாட்டுக்கு கிடைத்த வரவேற்புக்கான பிரதான காரணமாகும்.  ’விஜய்க்கு பின்னணியில் பாஜக இருக்கலாம்’ என்ற யூகத்தின் அடிப்படையில் நாம் எதிர்க்க முடியாது. அப்படி இருந்தால், அது விரைவில் வெளிப்பட்டுவிடும். அப்போது கண்டிப்பாக எதிர்க்கலாம்.

அதே சமயம் மிக நெருக்கத்தில் இருக்கும் வலுவான எதிரியை சமாளித்து எதிர்கொள்ள, அந்த எதிரிக்கு எதிரியை பயன்படுத்திக் கொள்வதும் அரசியல் ராஜதந்திரங்களில் ஒன்றே. அதனால், மத்தியில் உள்ள பெரிய எதிரியையும், மாநிலத்தில் உள்ள வலுவான எதிரியையும் இப்போது தான் பிறந்த ஒரு புதிய கட்சியால் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது…என்பதே யதார்த்தம். திமுகவை எதிர்ப்பதால் த.வெ.கவை உடனே அழித்துவிடாமல், பாஜகவானது ‘பிறகு பார்க்கலாம்’ என சற்றே விட்டு வைக்கும். ஆம் ஆத்மியை சற்றே விட்டுப் பார்த்து அழிப்பது போல, த.வெ.கவிற்கும் நேரம் குறித்து வைத்திருக்கும்.

அதே சமயம், ’75 வருட அடித்தளமுள்ள திமுகவை எதிர்க்கும் அளவுக்கு வலுவானது தானா தமிழக வெற்றிக் கழகம்’ என்ற சந்தேகம் எழாமலில்லை.

தற்போது வரை அந்தக் கட்சியில் விஜய்க்கு அடுத்தபடியாக நன்றாக அறியப்பட்ட ஒரே நபர்  புஸ்லி ஆனந்த் தான்! அவரைப் பற்றியும் இது வரை ஒரு ஆரோக்கியமான பிம்பம் ஏற்படவில்லை.

இரண்டாம் கட்ட வலுவான தலைவர்களின் அணி வகுப்பு இல்லாமல் ஒரு இயக்கம் நிலைத்து காலூன்ற முடியாது. ‘ஒன்மேன் ஷோ’வாக செயல்படும் இயக்கம் ஒரு கட்டத்திற்கு மேல் நகராது. இது தான் நாம் தமிழர் இயக்கத்தின் பிரதான பலவீனம்.

இவ்வளவு பெரிய அரசியல் மாநாட்டில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பற்றிய அறிமுகம் சரியாக கிடைக்கவில்லை. சும்மா பேருக்கு நான்கு பேரை தன்னோடு விஜய் அமர வைத்து பேச வைத்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் பக்கத்து மேடையில் கொலு பொம்மையாக உட்கார்ந்து எழுந்து சென்றனர். ஒவ்வொருவரையும் அழைத்து குறைந்தபட்சம் ஒரு நிமிட அறிமுகத்திலாவது வெளிச்சம் தந்திருக்கலாம். அது அந்தந்த மாவட்டத்தில் அவர்கள் மேலும் வீரியமாக செயல்படும் உத்வேகத்தை தந்திருக்கும்.

பல சிற்றூர்களில், மாநகர்களில் தவெகவின் கிளை அலுவலகத்திற்கு இடம் கிடைப்பதைக் கூட லோக்கல் திமுக- அதிமுக புள்ளிகள் சேர்ந்து தடுத்துக் கொண்டிருப்பது விஜய்க்கு தெரியுமா? தெரியாதா?

பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கூட விஜய்யை சுலபமாக சந்தித்து பேச முடியாத நிலை உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், அந்த இயக்கத்திற்கு எதிர்காலமே கிடையாது.

த.வெ.க.வில் முக்கிய பொறுப்புக்கு வருவதற்கே பணம் தந்தால் தான்  வாய்ப்பு என்ற பேச்சை கேட்க முடிந்தது. இந்த நிலை ஆரோக்கியமான ஒரு இயக்கத்திற்கு அடையாளமல்ல.

ஆகவே, மக்கள் பணி என வந்துவிட்ட பிறகு, விஜய் தன்னுடைய உச்சபட்ச நடிகர் என்ற பிம்பத்தை தூக்கி எறிந்து விட்டு, தொண்டனுக்கு தொண்டனாக பட்டி தொட்டி எங்கும் களம் காணவில்லை என்றால், பெருகியுள்ள ஆதரவை தக்க வைக்க முடியாது.

இன்றைய நிலையில் மாவட்டம், ஒன்றியம் கிளை என பகுதி  வாரியான முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என பத்து அணிகளின் நிர்வாகிகள், 122 கவுன்சிலர்கள், இரண்டு பஞ்சாயத்து தலைவர்கள் என அந்தக் கட்சியில் பல்லாயிரக் கணக்கில் நிர்வாகிகள் உள்ளனர். இவர்களில் ஐநூறு பேர்களிடமாவது விஜய் தனிப்பட்ட முறையில் நல்ல தொடர்பில் இருக்காவிட்டால், கட்சி அடுத்த கட்டத்திற்கு ஆரோக்கியமாக வளராது.

அரசியல் கட்சி என்பது மனித உறவுகளை, உணர்வுகளை சரியாக கையாளும் ஒரு கலையாகும். மாநாட்டுக்கு வருகின்ற வழியில் உயிர் நீத்த கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கூட , இது வரை விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதை எளிதல் கடக்க முடியாது.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time