என்கெளண்டர்களை கேள்விக்கு உட்படுத்துவதா? காவல்துறை சித்திரவதைகளை தட்டிக் கேட்பதா? ரவுடிகளுக்கு புரியும் மொழியில் மட்டுமல்ல, மனித உரிமை ஆணைய நீதிபதிக்கு புரியும் மொழியிலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் …என சம்பவங்கள் நடக்கின்றன! என்ன நடக்கிறது இங்கே? – நீதிபதி ஹரிபரந்தாமன்
தமிழ்நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டு, எளியோர் பாதிக்கப்படும் போது அதை தட்டிக் கேட்டு நிவாரணம் வழங்குவதற்கான ஆணையமே மனித உரிமை ஆணையம். அந்த ஆணையத் தலைவரின் மனித உரிமையே மீறப்படும் வகையில் தமிழக காவல்துறை செயல்படுகிறது.
தமிழ்நாடு மனித உரிமை ஆணையத் தலைவர் முன்னாள் கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.மணி குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்ததை ஒட்டி கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்.
மணிக்குமார் மறைந்த உயர்நீதிமன்ற நீதிபதி சாமிதுரையின் மகன். வழக்குரைஞராக இருந்து தலித் சமூகத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்முதலாக நீதிபதியானவர் சாமித்துரை.
தற்போது மணிக்குமார் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருப்பதை ஒட்டி, அவரின் இல்லத்திற்கு பாதுகாப்பை தரவேண்டிய கடமை தமிழ்நாடு அரசிற்கு, குறிப்பாக சென்னை காவல்து றைக்கு உள்ளது என்ற வகையில் அவர் இல்லத்திற்கு காவல்துறையின் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது. ஒரு துப்பாக்கி ஏந்திய காவலர் உட்பட இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
காவல்துறையின் மனித உரிமைகள் மீறல் பற்றி புகார் வரும்போது அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது ,தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் பணியாகும்.
நீதிபதி மணிகுமார் தொடர்ந்து மனித உரிமைகளில் அத்துமீறும் காவல் துறையின் மீது சில நடவடிக்கைகளை எடுத்ததை தொடர்ந்து, அவரின் வீட்டுக்கு அளித்து வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதான நிகழ்வு இந்த ஆட்சிக்கு அவப்பெயரை வாங்கித் தரும்.
அவர் எடுத்த நடவடிக்கைகள் கூட கடுமையானவை என்று கூறிவிட முடியாது. அதற்கே இந்த விளைவு என்றால், கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் வேறு என்னென்ன இன்னல்களை அவர் சந்தித்திருக்க வேண்டுமோ என்பது தெரியாது.
சென்னை காவல்துறை ஆணையர், ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ”ரவுடிகளுக்கு புரியும் மொழியில் காவல் துறை செயல்படும்” என்று பேசியது மனித உரிமை ஆர்வலர்களை அதிரச் செய்து கடும் விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து ஏராளமானோர் குண்டர் தடுப்பு சட்டங்களில் கைது செய்யப்பட்டதும், மூன்று என்கெளண்டர்கள் நடந்துள்ளன என்பதும் கவனத்திற்கு உரியது. மேலும் வீடுவீடாகச் சென்று காவல்துறையினர் ரவுடிகளின் குடும்பத்தாரை மிரட்டும் காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரல் ஆனது.
இந்தப் பின்னணியில் சென்னை காவல் துறை ஆணையரின் பேச்சு தொடர்பாக, அவர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மணி குமார் ஒரு அறிவிப்பை அனுப்பி இருந்தார்.
காவல்துறை ஆணையர் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பி .வில்சன் சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றது முதல் சென்னையில் ரவுடியிசம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையரின் பத்திரிகையாளர் சந்திப்பானது குற்றங்களின் விளைவுகள் மற்றும் சமூகத்தில் அவற்றின் தாக்கம் குறித்தே பேசியதாகவும், சில ரவுடிகள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி பேசுபவர்களாய் இருப்பதால் அவர்கள் மொழியில் பேசுவது என்பதே இதன் பொருள். ஆகவே, இது மனித உரிமை மீறல் ஆகாது என வில்சன் வாதிட்டார். அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டது, தமிழ்நாடு மனித உரிமை ஆணையம்.
இந்தப் பிரச்சினையில் மனித உரிமை ஆணையத் தலைவர் சென்னை மா நகர காவல் ஆணையரை விசாரிக்க முனைந்ததை அரசு விரும்பவில்லை எனத் தெரிய வருகிறது. அதனால் ஆணையத் தலைவருக்கு தகுந்த முறையில் காவல்துறையின் அதிகாரத்தை புரிய வைக்க நினைத்தனர் போலும். மேற்சொன்ன நிகழ்வின் பின்னணியில் தான் ஆணைய தலைவரின் வீட்டுக்கு அளித்து வந்த காவல் விலக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் போலி மோதலை வீரச்செயலென்று பேசிய காவல்துறை அதிகாரி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், ஆணையம் கேட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது.
இதே போல சென்னையில் அண்மையில் நடத்தப்பட்ட 3 என்கவுண்டர்கள் குறித்தும், காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை பெண் ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான சித்திரவதைகள் குறித்தும் விசாரணை நடத்திய தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசன், காவல்துறையினருக்கு எதிராக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார்; இதனால், கடந்த 10-ஆம் தேதி அவர் திடீரென மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மனித உரிமை ஆணைய புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக காவலில் அடைத்து வைத்து மிருகத்தனமாக தாக்கிய காவல்துறையினரின் மேல் நடவடிக்கை எடுக்காமல், அது சம்பந்தமாக அறிக்கை அளித்த அதிகாரியை மாற்றல் செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்ட மனித உரிமை ஆணையத்தின் தலைவர் வீட்டிற்கு அளித்த பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் காவல்துறை உதவியாளர் மற்றும் நான்கு காவலர்கள் மேல் எடுத்த நடவடிக்கையும் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ளது.
மேற் சொன்ன பின்னணியில் தமிழ்நாடு மனித உரிமை ஆணைய தலைவரின் வீட்டிற்கு அளித்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டதற்கு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக வழக்கறிஞர் பாலு வழக்கும் தொடர்ந்துள்ளார்.
நமக்கு புரியாத புதிர் என்னவென்றால், தவறு செய்யும் காவல்துறையின் மேல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்?
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பந்தமாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 13 பேரை காவல்துறை சுட்டுக் கொன்றது குற்றச் செயல். அதற்கான உரிய குற்றவியல் நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று அறிக்கை அளித்தும் இதுநாள் வரை எந்த காவல்துறையினர் மீதும் குற்ற வழக்கு தொடரப்படவில்லை. அந்த துப்பாக்கி சூடு நடந்த போது ஆட்சியில் இருந்தது அதிமுக அரசு .இருப்பினும் ஏன் இப்போதைய திமுக அரசு குற்றம் இழைத்த காவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என்பது புரியவில்லை.
Also read
இருப்பதிலேயே மிக அப்பட்டமான மனித உரிமை மீறல் மேற்சொன்ன துப்பாக்கி சூடு தான். அதைப் பற்றியும் மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற அணுகுமுறைகள் பாஜக ஆட்சி செய்யும் மா நிலங்களில் நடப்பதைத் தான் நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், தமிழ் நாட்டில் – அதுவும் திராவிட மாடல் என சொல்லப்படும் ஆட்சியில் நடப்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது.
காவல்துறையினர் சில நேரங்களில் மனித உரிமைகளை காலில் போட்டு துச்சமாக செயல்படுகையில், அவர்களுக்கு கடிவாளம் போட்டு சமூகத்தில் சுமூகச் சூழல் உருவாக்குவதற்கே மனித உரிமை ஆணையம் உள்ளது. அந்த நீதிபதியையே அச்சுறுத்துவதை விட்டு, சுதந்திரமாக இயங்க வழி சமைப்பதே நல்லாட்சிக்கு அழகாகும்.
ஆகவே, எந்த கால தாமதமும் இன்றி, உடனடியாக தமிழ்நாடு மனித உரிமை ஆணைய தலைவரின் வீட்டிற்கு மீண்டும் பாதுகாப்பு அளிப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்வதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற அணுகுமுறைகளை தவிர்க்க வேண்டும்.
கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்
மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு ரத்து விவகாரம் : நீதியரசர் ஹரிபரந்தாமன் கட்டுரை அருமை.
நீதித்துறை ஒழுங்காக செயல்பட்டால் இதற்கான தேவை இருக்காது. சாட்சி வைத்துக் கொண்டா ரெளடிகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஏன் உங்களுக்கு தெரிவதில்லை.
மேனாள் நீதிபதிபதி பரந்தாமன் அவர்கள் தமிழ்நாட்டில் போலீஸ் ராஜ்ஜியம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டு வருகிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளார்,
காவல்துறையை யார் எதிர்த்தாலும் அவர்களை அச்சுறுத்தி அடக்கி ஒடுக்கி மிரட்டப் பார்க்கிறது. சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் காவல்துறைக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் அனைத்து வாகனங்களையும் சட்ட விதிகளுக்கு உட்படுத்தி வழக்குகள் போட்டது.பிறகு அமைச்சர்கள் மட்டத்தில் இந்த பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டு ஒரு கட்டப்பஞ்சாயத்து நடந்தேறியது .
தற்போது வெளிப்படையாக மனித உரிமை ஆணையத்தின் தலைவரையே காவல்துறை அச்சுறுத்துகிறது .
இது திராவிட மாடல் அரசுக்கு நல்லது அல்ல!
அபாய மணியை அளிக்கிறோம்…..அப்புற உங்க பொறுப்பு ஆட்சியாளர்களே….,