சின்னஞ் சிறிய உருவம்! கவிதை சீற்றமோ எரிமலை வடிவம்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் கவிதை வானில் ஒளிவீசித் திகழ்ந்த இந்த பெருங்கவிஞர் போதுமான அளவு கவனம் பெறவில்லை. அவரது சமரசமற்ற குணங்கள் அவரை எந்த இயக்கத்திற்குள்ளும் கட்டுண்டு இருக்கவிடவில்லை. கவிஞரை பற்றிய ஒரு பார்வை;
எளிய சொற்களில் ஒரு எரிமலையின் வெப்பத்தை கடத்தும் ஆற்றல் பெற்ற கவிஞரும், ஒரு ஆற்றின் கரையோரம் பிறந்தவர் தான். அதனால் ஆறும் நீரும் நிலமும் வாழ்வும் பற்றி நிறைய அறிந்தவர்.
“காவிரியை கடக்க
ஓடம் தேவையில்லை .இனி
ஒட்டகம் போதும் ..!”
செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றின் கரையின் அருகில் உள்ள சிறிய ஊரான உரைக்காட்டுபேட்டையில் 1935 ஆம் ஆண்டு பிறந்தவர் கவிஞர் தணிகைச் செல்வன். இவரது இயற்பெயர் எத்திராஜன் .
எழுபதுகளில் தமிழகத்தில் ஓங்கி ஒலித்த கவிதை குரலுக்கு சொந்தக்காரர்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் -கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் இவரும் ஒருவர் .
இவரால் உத்வேகம் பெற்று கவிதை எழுத வந்த பல நூறு பேர் இன்றும் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். என்பதுகளில் காஞ்சி பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் போது தமுஎச மேடைகள் மட்டுமின்றி பல கவியரங்குகளிலும் என்னை முன்னிறுத்தியவர் கவிஞர் தணிகைச் செல்வன்.
சில மாதங்களுக்கு முன் கவிஞரை பார்க்க தாம்பரம் செனட்டோரியம் அருகில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றிருந்தேன்.
மாலை மங்கி இருள் சாயஆரம்பித்த நேரம் அது. குறுகலாய் படியேறிச் செல்லும் ஒரு மாடி வீட்டில் சாய்வு நாற்காலியில் மேல் சட்டை ஏதுமின்றி ஒரு துண்டை போர்த்தியபடி அமர்ந்திருந்தார் கவிஞர் .
பல ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது தான் பார்க்கிறேன். உடல் மெலிந்து, கை நடுக்கத்துடன் மூப்பின் அத்தனை அடையாளங்களும் அய்யாவிடம் இருந்தது .
ஆனால் பார்வையில் மட்டும் கூர்மை.
“..என்ன இந்த நேரத்துல என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க.. போன் பண்ணி இருக்கலாமே..?” -கவிஞர் தான் கூறினார் .
“பல தடவை முயற்சி பண்ணேன் அய்யா ..!நீங்க எடுக்கல …”
“.ஆமாம் பவா..! போனை நான் அதிகம் பயன்படுத்துறதில்லை.அது எங்க இருக்குன்னு கூட எனக்கு தெரியாது.. சரி வந்த செய்தியை சொல்லுங்க..! என்றார் கவிஞர்.
அப்போது எனது கவிதை தொகுப்பு ஒன்று தயாரிப்பு நிலையில் இருந்தது. அதற்கு அணிந்துரை வாங்குவதற்காகவே கவிஞரிடம் சென்றிருந்தேன் .
“.ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். கவிதை என்பது காலத்தின் பதிவு. படிக்கிற காலத்திலிருந்து கவிதையும் கையுமா இருப்பீங்க. புத்தகமா வந்தா நல்லாதான் இருக்கும். ஆனால் பாருங்க.. தமிழக அரசியல பத்தி ஒரு ஆய்வு நூல் எழுதிட்டு இருக்கேன். அதுக்காக பல புத்தகங்களை படிக்க வேண்டியதா இருக்கு. பல மணி நேரம் யோசிக்க வேண்டியதா இருக்கு .
பிறகு எழுத உட்கார்றேன். இதுக்கெல்லாம் உடம்பு இடம் கொடுக்கல. முடியிற வரைக்கும் அதை கொஞ்சம் கொஞ்சமா செஞ்சுட்டு இருக்கேன் .இந்த நிலையில் உங்க புத்தகத்தை நான் வாசிக்கிறதுக்கு பல வாரம் – மாசம் கூட ஆகலாம் .இதனால உங்க தொகுப்பு வெளிவருவது தள்ளி போகும் …!”
தயக்கமோ தடுமாற்றமோ இல்லாமல் முகத்திற்கு முகம் பார்த்து என்னிடம் கூறினார் கவிஞர்.
’’கொடுத்துட்டு போ’’
’’அப்புறம் பாக்கலாம்’’
’’பிறகு சொல்றேன்’’
என்கிற சமாளிப்பு -சங்கடங்கள் எல்லாம் கவிஞர் இடத்தில் இல்லை.
“.பரவாயில்லையா, நீங்க பொறுமையாக எழுதி குடுங்க உங்கள் அணிந்துரை வந்ததுக்கு அப்புறம் புத்தகத்தை வெளியிடுறேன்…!” என்றேன், நான் .
“என் ஒருத்தனுக்காக ஒரு படைப்பு வெளிவருவது தள்ளிப்போறதோ தடைபட்றதோ சரி இல்ல. அதற்கான வேலை நடக்கட்டும்
ஒரு படைப்பில் உண்மையும் நியாயமும் இருந்தால் அந்த படைப்பு நிச்சயம் வெற்றி பெறும் .. போய் வேலையை பாருங்க..!”
என்று விடை கொடுத்தார் கவிஞர் தணிகைச் செல்வன்.
தனக்கு சரி என்பதையும் தவறு என்றும் , முடியும் என்பதையும் முடியாது என்றும், யார் முகத்திற்கும் நேராக கூறும் துணிவும் தோரணையும் கடைசி வரை கவிஞரிடத்தில் இருந்தது. அவரது இந்த குணம் தான் எந்த ஒரு நபரையும் எந்த ஒரு இயக்கத்தையும் எந்த ஒரு கட்சியையும் தனக்கு நெருக்கமாக்கிக் கொள்ளவில்லை.
தணிகைச் செல்வன் கவிதைகள் (1975)-
சமூகசேவகி சேரிக்கு வந்தாள் (1978)-
பூபாளம் (1989)-
இந்தியாவும் நானும் (1983)-
சிவப்பதிகாரம் (1986)-
உலக்கையிலும் பூப்பூக்கும் (1991)-
சகாராவின் தாகம் (1997)
சமூக சேவகி சேரிக்கு வந்தாள்
உலக்கையிலும் பூ பூக்கும்
நண்பனாக நடிப்பவர்கள்
இலக்கும்,இலக்கியமும்
தத்துவத் தலைமை
சாக்கடை கொசிக்களா நாம்
சரித்திரச் சக்கரங்கள்
தலித்தியம், தமிழியம், இந்தியம்,
இலக்கும் இலக்கியமும்
கிழக்கு முதல் கிழக்கு வரை,
கவிதைகளில் அவன் மானிடன்
போன்ற படைப்புகள் குறிப்பிடத்தக்கவை!
சரித்திரம் சுழலும் போதும்
சமுத்திரம் குமுறும் போதும்
பொறுத்தவன் பொங்கும் போதும்
புயல் காற்று சீறும் போதும்
பறித்தவன் ஆதிக்கத்தை
பசித்தவன் எதிர்க்கும் போதும்
மறித்தவன் வென்றதில்லை
மறுப்பவன் புவியல் இல்லை ..!”
கவிஞர் தணிகைச் செல்வன் அவர்களின் ஒட்டுமொத்த படைப்பு வாழ்க்கைக்கு இந்த கவிதையே அடி நாதமாக இருந்தது என்று கூறலாம்.
பொதுவுடமை தத்துவங்களில் அவர் ஈடுபாடு கொண்டிருந்த போதும் பொதுவுடைமை இயக்கங்களில் அவர் ஒரு செயல்பாட்டாளராக இருந்த போதும் –
“இந்தியா என்பது
வர்க்கங்களால் மட்டுமல்ல,
வர்ணங்களாலும் பிளவு பட்டிருக்கிறது .
இறக்குமதி சித்தாந்தங்களால் இங்கு புரட்சி வராது.
இந்தியாவிற்கென தனியான ஒரு சிந்தாந்தமும் -செயல்திட்டமும் தேவை என காலம் முழுக்க அவர் கவிதைகளில் வலியுறுத்தி வந்தார். அதனால் பலரோடும் பலவற்றோடும் அவர் எப்போதும் முரண்பட்டே நின்றார். விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் தன் மனதிற்கு நியாயம் எனப்பட்டதை தனது படைப்பின் மொழியாக்கியவர் கவிஞர் தணிகைச் செல்வன்.
கணவனை இழந்ததாலே
கண்ணகி சீற்றம் நியாயம்
துணியினை இழந்ததாலே திரௌபதை சபதம் நியாயம்
தனது மண் இழந்ததாலே
தருமனின் யுத்தம் நியாயம்
அனைத்தையும் இழந்த
எங்கள் ஆவேசம் நியாயம், நியாயம் ..!”
கவிஞர் தணிகைச் செல்வன் கவிதைகளில் இருக்கிற அடர்த்தியும் ஆழமும், படிப்பவர்களிடத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கமும் தனித்துவமானவை.
சில நிமிட நேர மன அதிர்வையேனும் தணிகைச் செல்வனின் கவிதைகள் நமக்கு தந்தே தீரும்.
ஒவ்வொரு சொல்லும் ஒரு நெருப்புத் துண்டை போல வெப்பத்தை கக்குகிற விந்தையை தணிகைச் செல்வன் கவிதைகளிடத்தில் மட்டுமே நாம் காண முடியும் .
ஒப்பனைகளோ மேல்பூச்சுகளோ கவிஞர் தணிகைச் செல்வனிடம் நெருங்கவே முடியாது.
கவிதைகள் மட்டுமல்ல, கவிஞரும் தனது வாழ்க்கை முழுவதும் அப்படியே இருந்தார்.
அவரிடம் யாரும் அவ்வளவு எளிதில் நெருங்கி விட முடியாது. அவரது ஆழ்மன உலகில் அவர் அனுமதி இன்றி யாரும் நுழையவே முடியாது. அவர் அதிகம் பேசி பழகிய நபர்கள் யார் என நாம் விரல் விட்டு எண்ண முடியாது.
படைப்புகளால் மட்டுமே தன்னை முன் நிறுத்திக் கொண்ட கவிஞர் கடைசி வரை, தனக்கு எந்த வட்டங்களையும் போட்டுக் கொள்ளவில்லை இந்த வண்ணங்களையும் பூசிக்கொள்ளவில்லை. அதனால் – இந்த மக்கள் கவிஞன் மக்கள் பார்வைக்கு வராமலே மறக்கடிக்கப்பட்டார்.
கட்டுரையாளர்; பவா சமத்துவன்
ஊடகவியலாளர், கவிஞர்,எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு. இந்தப் பதிவின் வாயிலாகத்தான் கவிஞரைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி
காவிரியை கடக்க ஓடம் தேவையில்லை இனி ஒட்டகமே போதும் கவிதை வரிகளிலேயே அவருடைய ஆழ் மனதில் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவது குறித்த கோபம் தணல் என இருந்தது தெரிய வருகிறது. அது மட்டுமல்ல இப்படி ஒரு கவிஞர் இருந்தார் என்று பவா சமத்துவன் கட்டுரை படித்த பின்பு அறிந்து கொண்டேன்.
கவிதை, எழுத்துக்கள் ஆகியவற்றில் அவர் காட்யிருக்கும் நெருக்கம் மற்றவர்களிடம் சற்று எட்டியே இருந்தார் என்பது இக்கட்டுரையில் புரிகிறது. சில கவிஞர்களைப் போல் பிறரிடம் அவர்ஸமுகஸ்துதி செய்திருந்தால் விருதுகள் வாங்கக்கூடிய அளவிற்கு உச்சம் தொட்டிருப்பாரோ என்னவோ?