மகத்தான நன்மைகள் தரும் மருதாணி!

-அண்ணாமலை சுகுமாரன்

“மருதோன்றி” எனும்  மருதாணி !

திபாவளிக்கு வண்ணமய  வாழ்த்து !

மருதாணி சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மருதாணி இலை நம்மை அழகுபடுத்திக் கொள்ள மட்டுமல்ல, இது ஆரோக்கியம் சார்ந்த இயற்கையான நிறமூட்டியாகும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, மனிதனுக்குப் பலனளிக்கும் மருதாணிக்கும், தீபாவளிக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது;

மருதாணி இலையின்  சாறினால் சிவந்த நிறத்தில் மரு எனும் மச்சம் போன்ற சிறு புள்ளி,  தோன்றுவதால் அந்த இலைக்கு “மருதோன்றி” என்று பெயர் வைத்தனர். அதுவே பிற்காலங்களில் மருவி மருதாணி என்றாயிற்று.

சித்த மருத்துவத்தில், ஆயுர்வேதத்தில் மருதாணிக்கு தனி இடம் உண்டு மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக பாரம்பரிய மருத்துவத்தில் இன்றும் இருந்து வருகின்றது.

சங்க காலத்து மக்கள் வண்ணங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் பச்சைக் குத்துதல், மருதாணிச் சித்திரங்கள் போன்ற உடலோவியம் கொண்டு தங்களை அழகுப் படுத்துவதைத் “தொய்யில்” என்று அழைத்துள்ளனர்.

சங்க இலக்கியங்களுள் ஒன்றானக் குறுந்தொகையில் உள்ள சில பாடல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

அதே போல சோழர் காலத்தைச் சேர்ந்தப் பெருங்கதையில்  தமிழர்கள் தங்கள் உடலை ஓவியங்களால் அழகுப் படுத்தியதை உறுதி செய்கிறது. எனவே இன்று பிரபலமாக அறியப்படும் மருதாணி இட்டுக் கொள்வதும், உடலில் தற்காலிக அல்லது நிரந்தரப் பச்சைக் குத்திக் கொள்வதும், தொய்யில் இடும் பண்டையப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியே ஆகும்.

பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணி மிக முக்கியமாக இடம்பெறுகிறது. ஆனால்,  தொல் தமிழர்கள் உண்ணும் உணவை மருந்தாக உண்டவர்கள். எனவே, அழகுப் பொருட்கள் என்று நாம் நினைப்பவைக் கூட ஆரோக்கியம் சார்ந்ததாகவே இருக்கும்.

பண்டிகளைகளில் திபாவளியுடன் மருதாணி  தொடர்புடையது . திபாவளி அன்று இரவு மகளிர் தவறாது வேலைகளை  முடித்து பின்பு மருதாணி இட்டுக் கொள்வது இன்றும் தமிழ் நாட்டு கிராமங்களில் வழக்கமாக உள்ளது. பண்டிகை நாட்களில் சமையல் வேலை அதிகமிருப்பதால் சூடாகும் உடலை குளிர்விப்பதற்கும், அன்றைய தினம் உட்கொண்ட பலகாரங்களால் உடலில் பித்தம் கூடிவிடாதிருக்கவும் பெண்கள் மருதாணி இட்டுக் கொள்வதை நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தி இருந்தனர்.

மருதாணியின் முழுத் தாவரமும் மருத்துவப் பயன் உடையவையாகும். இவற்றின் இலைகள், பட்டை, மலர், கனிகள் என ஒவ்வொன்றும் வெவ்வேறு நோய்களைக் குணப்படுத்த வல்லவை என சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இலை பித்தத்தை சமன் செய்யவும், உடல் சூட்டைத் தணிக்கவும்,
வேர் நோயை நீக்கி உடலைப் பலப்படுத்தவும்,
விதை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யவும்

மருத்துவச் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், காயங்களுக்கும், புண்களுக்கும், ரத்தத்தில் இருக்கும் நச்சை நீக்கவும் மருதாணி பயன்படுத்தப்படுகிறது.

மேலும், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருதோன்றியின் விதையை நெருப்பிலிட்டு புகைக்க, பாதிப்புகள் மாறும் என்று சித்த மருத்துவத்தின் தந்தையான அகத்தியர் தனது அகத்தியர் குணபாடம் என்ற நூலில் கூறுகிறார்.

ஆனால், நவீன காலத்தில் ரசாயன வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும், செயற்கையான மருதாணியே இன்று பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. அவற்றில் உள்ள ரசாயனங்கள் உடலுக்குப் பாதிப்பைத் தருகின்றன. எனவே, செயற்கையை விடுத்து இயற்கைக்கு மாறுவோம்.

என்னென்ன மருத்துவ குணங்களை கொண்டது மருதாணி தெரியுமா….!

மருதாணி இலைகள் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக இரத்தப்போக்கினை தடுக்கும். மாதவிடாய் சுலபமாய் இருக்க உதவும்.
பெண்களின்  வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாயில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகியவற்றை தீர்க்கும்.

கால் எரிச்சலைத் தடுக்க இலைகளை அரைத்து பசையாக வைப்பதின் மூலம் அவற்றை சரிசெய்யலாம். தொண்டை கரகரப்புக்கு  இதை வெந்நீரில் கொப்பளிப்புசெய்யலாம்
இலைகளின் வடிசாறு, அல்லது கசாயம் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியினை கட்டுப்படுத்தும்.

உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.

மருதாணி பூக்கள் அனைவருக்கும் இரவில் ஆழ்ந்த உறக்கம் வர பெரிய உதவியாக இருக்கும் .
இது தூக்க மாத்திரை பயன்பாட்டிற்கு இயற்கையின் பதில் ஆகும் .

பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணி மிக முக்கியமாக இடம்பெறுகிறது.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது  குறையும். ஆழ்ந்த உறக்கமும் கிடைக்கும்.

மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும்  மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை., மேலும் அவைகளில் அதிக விஷமும் இருக்கிறது .

மருதாணி இட்டுக் கொண்டவதால் சிலருக்கு சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை  சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். அதிகம் சிவக்க அரைக்கும்  போது சிறிது காசு கட்டி வைப்பார் .

ஆறாத வாய்ப்புண் அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப்  பூசலாம்.

மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும், துவர்ப்புச் சுவையும் கொண்டது. இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.

மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும்; மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணை போல் செய்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும்.

மருதாணி மலர்கள், சிறியவை. வெண்மை, இள மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறமானவை. மணம் கொண்டவை. பெரிய நுனிக் கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும்.

மருதாணி பழங்கள் சிறியவை. பட்டாணி அளவில் பல விதைகளுடன் காணப்படும். அழகுக்காகவும், அதன் மருத்துவ உபயோகங்களுக்காகவும் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.

இளநரையை அகற்றும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன், கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.

6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாக்கும்.

மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்சனைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும். நம்புங்க இது மிக நல்ல மருந்து.

மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும்.

சிறிதளவு மருதாணிக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் தீரும்.

மருதாணி விதை எண்ணெயை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும். மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இந்த தகவல்கள் மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
நம்மைச் சுற்றி இருக்கும் , தினமும்  காணும் அத்தனை  இயற்கையின் கொடையான மூலிகைகளை பற்றி அறியும் போது  எத்தனை நன்றி வரவேண்டும். இத்தனையும் படைத்த அந்த இயற்கையைப்போற்றுதும் ! மாமழைப்போற்றுதும் !
அறம்  செழிக்கட்டும்!

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time