அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு பெருமையா? சிறுமையா?

சாவித்திரிகண்ணன்

மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்கள் வாய்ப்பு பெற்று வருவது அளப்பறிய சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி,விவசாய கூலிகள் போன்றோரின் குழந்தைகளுக்கெல்லாம் எம்.பி.பி.எஸ்சீட் கிடைத்தது போன்ற செய்திகளெல்லாம் நம் மனதில் ஏற்படுத்தும் பரவசத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது! ஆயினும், இந்த மகிழ்ச்சிகிடையில் சில யதார்த்தங்களை புறந்தள்ள முடியாது. ஒரு வகையில் இந்த 7.5% ஒதுக்கீடு என்பது நமக்கு பெருமை தரக்கூடியதல்ல,சிறுமையே! இதை தான் இந்த கட்டுரையில் கூறவுள்ளேன்.

அரசு பள்ளிகளின் அவல நிலைக்கு குறிப்பாக அவசியமான பல சப்ஜெக்ட்களுக்கு கூட ஆசிரியர்கள் இல்லாத நிலை…, அரசு பள்ளிகளின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்ற மறுக்கும் அரசின் மெத்தனம் ஆகியவற்றை 405 மாணவர்களுக்கு மருத்துவ சீட் கொடுத்ததன் மூலம் மறைக்கவோ, அலட்சியப்படுத்தவோ முடியாது!

அரசுபள்ளிகளின் அவலச் சூழல்கள்!

அரசுமேல் நிலைப்பள்ளிகள் பலவற்றில் ப்ளஸ் டூ மாணவர்கள் மருத்துவ தேர்வு எழுதுவதற்கு தேவைப்படும் பிசிக்ஸ்,கெமிஸ்டிரி,பயாலஜி ஆகியவற்றுக்கு ஆசிரியர்களே இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு எழுத இந்த பாடங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன! அத்துடன், நீட் தேர்வுக்கு அரசு மாணவர்களை தயார்படுத்தக் கூடிய இலவச பயிற்சி மையங்களுக்கு என பிரத்தியேகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை! மேலும், இந்த பயிற்சி மையங்கள் சரியாக இயங்குவதும் இல்லை.இந்த நிலையில் இந்த ஆண்டு மிகக் குறைவான அரசு பள்ளி மாணவர்களே நீட் தேர்வே எழுதினார்கள். இந்த சூழல்களை அரசு கவனத்தில் கொண்டு அடுத்த ஆண்டுக்குள் இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

அரசுபள்ளி மாணவர்களுக்கு எப்படி கிடைத்துள்ளது

தமிழகத்தில் 26 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைகளை தவிர்த்த 14 தனியார் மருத்துவ கல்லூரிகள் ஆகியவற்றில் மொத்தம் 5,550 எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ளன. இதில் அகில இந்திய கோட்டாவிற்கு 15% சதவிகிதம் போய்விடும்.தனியார் கல்லூரிகளின் நிர்வாக கோட்டா சீட்டுகளும் உண்டு. இத்தனைக்கு இடையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் 227 இடங்கள் உறுதிபட்டுள்ளன! தனியார் மருத்துவ கல்லூரிகளில்  86 இடங்கள் உறுதிபட்டுள்ளன.ஆக மொத்தம் 313 இடங்கள் அரசுபள்ளி மாணவர்களுக்கு உறுதிபட்டுள்ளன! இதே போல பல்மருத்துவ கல்லூரிகளில் 92 இடங்கள் கிடைத்துள்ளன! ஆக,அனைத்துமாக 405 இடங்கள் அமைந்துள்ளன!

நீட்டை இதனால் நிரந்தரப்படுத்திவிடக் கூடாது.

’’நீட்டினால் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று தானே சொன்னீர்கள்.இப்போது வாய்ப்பு கிடைத்துவிட்டதே! ஆக, இனி நீட் எதிர்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்ற நிலை தோன்றுவது ஆபத்தானது! ஏனெனில், நீட் என்பது எந்த வகையில் பார்த்தாலும் ஒரு நியாயமற்ற தேர்வு முறையாகும். அதை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி 2017ல் அனைத்து கட்சி தீர்மானம் போடப்பட்டது. அதை நிராகரித்தற்கான காரணத்தை இன்று வரை ஜனாதிபதி தமிழக மக்களுக்கு சொல்லவேயில்லை. ஆகவே, அதை திருப்பி அனுப்பி அவரை கேள்வி கேட்கும் அவசியம் நமக்கு உள்ளது. 2016 ல் ஜெயலலிதா பகிரங்கமாக தேர்தல் வாக்குறுதியாக நீட்டை ஒரு போதும் அதிமுக அரசு அனுமதிக்காது என்றதை இந்த ஆட்சியாளர்கள் மறக்க கூடாது.  நீட்டை எதிர்த்து உயிர் நீத்த அனிதா உள்ளிட்ட 14 மாணவர்களின் உயிர்தியாகத்தை மறக்க கூடாது. இப்போது எம்பிபிஎஸ் வாய்ப்பு பெற்ற அரசு மாணவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு அல்லது முன்றுமுறை நீட் தேர்வுக்கு முயன்று தான் இந்த வாய்ப்பை பெற முடிந்தது. நீட்டுக்காக தனியாக ஓரிரு ஆண்டுகளை ஏழை மாணவர்கள் பலி கொடுக்க வேண்டும் என்பது எல்லா மாணவர்களாலும் முடியாத ஒன்றாகும்.

அத்துடன், இந்த ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் தமிழ் வழிகல்வி மாணவர்களுக்கு இடமில்லை.அரசு உதவி பெறும்பள்ளி மாணவர்களுக்கும் இடமில்லை! காரணம், மொத்த ப்ளஸ் டூ மாணவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே 41% உள்ளனர். அவர்களுக்கு வெறும் 7.5% என்பதே மிகப் பெரிய அநீதியாகும்! ஆகவே நீட்டை தூக்கிவிட்டு அனைத்து அரசுபள்ளி மாணவர்களுக்கும் தரமான கல்வி, தகுதியான ஆசிரியர்கள் என்ற உத்திரவாதத்தை வழங்குவதே நிரந்தர தீர்வாகும்!

பெருமை அல்ல சிறுமையே!

அடுத்ததாக எந்த ஒரு ஒதுக்கீட்டையும் குறுக்கு வழியில் புகுந்து அபகரிப்பது என்பது நம்மவர்களுக்கு கைவந்த கலை,மற்றும் அத்துப்படியான விஷயமாகும். இந்த ஆண்டே அதை பார்க்க முடிந்தது. ஆந்திரா,கேரளாவில் உள்ள மாணவர்கள் தமிழக விலாசம் கொடுத்து அரசு கோட்டாவை அபகரிக்க முயன்ற நிகழ்வுகளை பார்த்தோம். மேலும், இந்த அரசு பள்ளி ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் அரசு கோட்டாவில் படித்த மாணவர்களை இணைக்கும் முயற்சிகள் நடந்தேறும் போது அரசுபள்ளி மாணவர்கள் வாய்ப்பு இன்னும் பெறுமளவு அடிபடும். ஆகவே அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சிறப்பான கல்வி தரத்தை உத்திரவாதப்படுத்தாத அலட்சியத்தை,அநீதியை இந்த 7.5% ஒதுக்கீடு மூலம் ஒரு போதும் ஈடுகட்ட முடியாது. இந்த தற்காலிக தீர்வுக்கு தற்பெருமை கொள்வது போன்ற அயோக்கியத்தனம் வேறில்லை என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

‘அறம்’ சாவித்திரி கண்ணன்

 

7.5% உள் ஒதுக்கீடு வெற்றியா தோல்வியா? – தீர்வில்லாத குழப்பங்கள்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time