நகரமயமாக்கலை எதிர்த்து போராடும் கிராம சபைகள்!

-நந்தகுமார் சிவா

சமீபத்திய கிராம சபை கூட்டங்களில் பல நூறு ஊராட்சிகளில், ”எங்கள் கிராம பஞ்சாயத்துகளை வாழவிடுங்கள். அதனை பேரூராட்சியோடோ, நகராட்சியோடோ, மாநகராட்சியோடோ இணைத்து விடாதீர்கள்” என  தீர்மானம் நிறைவேற்றி, மக்கள் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்துகிறார்கள்.! என்ன நடக்கிறது?

தமிழ்நாடு அரசு தற்போது அதி வேகமாக கிராம ஊராட்சிகளை அதிரடியாக பேரூராட்சியுடனோ, நகராட்சியுடனோ, மாநகராட்சியுடனோ இணைத்த வண்ணம் உள்ளது. இப்படி கிராமங்களை வலிந்து நகரப்படுத்துவதால் இயற்கை அழிகிறது, விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆகிறது. விவசாயம் சார்ந்த சிறு தொழில்கள் அனைத்தும் அழிந்து மக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகிறது, நூறு நாட்கள் வேலை திட்டம் பறிபோகிறது, சொத்து வரிகள் தாறுமாறாக உயர்கிறது, ஆடு, மாடு,கோழி வளர்த்து வாழும் எங்களை சொந்தக் காலில் நிற்கவிடுங்கள்.. என மக்கள் நகரமயமாக்கலை எதிர்த்து  தமிழகம் முழுக்க போர்க் கோலம் பூண்டு போராடி வருகிறார்கள்! ஆனால், தமிழ் நாட்டரசோ, முதல்வரோ இந்தப் போராட்டங்களை கடுகளவும் பொருட்படுத்த தயாரற்ற நிலையில் உள்ளனர்.

மக்களின் குரலை மதிக்க வேண்டாமா?

தர்மபுரி மாவட்டம் இலக்கியபட்டி ஊராட்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் அச்சட்டிப்பள்ளி ஊராட்சி, ஈரோடு மாவட்டம் சதுமுகை ஊராட்சி, நல்லூர் ஊராட்சி, ஆண்டிகுளம் ஊராட்சி, திருப்பூர் மாவட்டம் மாணிக்காபுரம் ஊராட்சி, பழங்கரை ஊராட்சி, திண்டுக்கல் மாவட்டம் வில்ப்பட்டி ஊராட்சி, கோயம்புத்தூர் மாவட்டம் சீரப்பாளையம் ஊராட்சி, திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் ஊராட்சி, விருதுநகர் மாவட்டம் கூறைக்குண்டு ஊராட்சி, கடலூர் மாவட்டம் சி.கொத்தங்குடி ஊராட்சி, தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி, திருவள்ளூர் மாவட்டம் சேலை ஊராட்சி…. என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனை குறித்துப் பல கட்டமாக போராட்டங்களையும் கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்த மக்கள் இந்த அக்டோபர் 2 கிராம சபையை தங்கள் ஜனநாயக குரலைப் பதிவு செய்யும் களமாகப் பார்த்து இருக்கிறார்கள் என்பதைப் பரவலாக உணர முடிகிறது.

வடக்கே திருவள்ளுவர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை நடைபெற்ற காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் வலுவாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் நிலையில் இது குறித்து அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்த அசைவும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தனை கிராம ஊராட்சிகள் ஒரே சமயத்தில் கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சிகளுக்கு ஆதரவாகவும் வலுக்கட்டாயமாக நகரங்களாக மாற்றுவதற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை மாநில சுயாட்சி பேசும் அரசு மதிக்க வேண்டாமா?

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மதிக்காமல் மாநில ஆளுநர் செயல்படுகிறார் என உச்சநீதிமன்றம் சென்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நியமானதே. உச்சநீதிமன்றத்தில் அன்று கோரிக்கை வைத்தபோது தமிழ்நாடு அரசுக்கு இருந்த அதே மன நிலையில் தான் இப்போது பல கிராம பஞ்சாயத்துகளின் மக்கள் இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் உள்ள வழிமுறைகளை மக்கள் பின்பற்றி தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும்போது அந்த தீர்மானத்திற்கு உரியப் பதில்களை வழங்கி இருக்க வேண்டும், அரசு. ஆனால், எப்பொழுதும் போல அந்த தீர்மானத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார்கள் அலுவலர்கள்.

இந்த தீர்மானத்தின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது அல்லது பரிசீலனையில் உள்ளது என்றாவது சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாகவோ மாவட்ட ஆட்சியர் மூலமாகவோ தகவலைத் தெரிவிக்கும் போது தான் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கிறது என்பதையும், ஆட்சி நிர்வாகம் மக்களுக்கு செவிசாய்க்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கிட்டத்தட்ட ஒரு மாத காலம் முடிவடைய இருக்கும் நிலையில், எந்த ஒரு கிராம சபைக்கும்/ கிராம ஊராட்சிக்கும்/ மக்களுக்கும் எந்த தகவலையும் தராமல் மௌனமாக இருக்கிறது அரசு.

இவ்வாறு கிராமசபைகளில் பதிவு செய்யப்பட்ட மக்களின் கருத்துக்களைப் அலட்சியப்படுத்திவிட்டு பிறகு பஞ்சாயத்துத் தேர்தல் நடத்தாமல் முழுமையாக ஊராட்சி நிர்வாகத்தை அலுவலர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்போது, அலுவலர்கள் மூலம் தேவையான தீர்மானங்களைப் பெற்றுக்கொண்டு, கிராம பஞ்சாயத்துகளை நகரங்களாக மாற்றி விடலாம் என அரசு எண்ணுகிறதோ…, என நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அவ்வாறு மக்களிடம் கருத்துக் கேட்காமல் அலுவலர்கள் மூலமாகத் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு ஊராட்சிகளை நகர்ப்புறமாக வகை மாற்றம் செய்து விடலாம் என அரசு நினைத்தால் அது ஆபத்திலேயே முடியும்.

ஜனநாயகத்தின் குரலைக் கேட்காமல் இருப்பது அல்லது அதனை முழுவதும் புறக்கணிப்பது என்பது ஆபத்தானது. அந்த முயற்சியில் அரசு இறங்கி விட வேண்டாம். மக்களை எதிர்கொள்ளத் தயங்கி கிராம சபைக்கு முகம் கொடுக்காமல் மறைமுகமாக அலுவலர்களைக் கொண்டு வலுக்கட்டாயமாக நகரமயமாக்கி விடலாம் என்ற அரசு சிந்திக்குமானால், அது சிக்கலாகிவிடும்.

ஊராட்சி சபையும், கிராம சபையும்

2019 நாடாளுமன்ற தேர்தலில் தனது பிரச்சாரத்திற்கு ஊராட்சி சபை எனப் பெயர் வைத்த திமுக, 2021 தேர்தல் பிரச்சாரத்திற்கு ‘மக்கள் கிராம சபை’ எனப் பெயர் வைத்தது. அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ‘கிராம சபை’ யை, கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு வைக்கக் கூடாது என பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அது ‘மக்கள்’ கிராம சபையாக மாற்றப்பட்டது.

கிளர்ந்து எழுந்து விட்டது கிராம சபைகள்!

2020 அக்டோபர் 2 கிராம சபைக்கு முன்பு கிளர்ந்து எழட்டும் கிராம சபைகள் என்ற கோரிக்கையை முன் வைத்தார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கிராம சபைகளில் பெரும்பான்மையான மக்கள் பங்கெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை தமிழக மக்களுக்கு முன் வைத்தார். நான்காண்டுகள் கழித்து, தற்போது நடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி கிராம சபையில் தங்கள் ஊராட்சி ஊராட்சியாகவே இருக்க வேண்டும் என மக்கள் கிளர்ந்தெழுந்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த தீர்மானங்களுக்கு முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உரியப் பதிலைக் கூட வழங்காமல் புறக்கணித்து வருகிறது தமிழ்நாடு அரசு!

எதிர்க்கட்சியாக இருக்கும் போது கிராம சபை அதிகாரங்களை வலியுறுத்திப் பேசியும், அன்றைய அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்ட கிராம சபையை நாங்கள் நடத்திக் காட்டுவோம் எனச் சொல்லி அவ்வாறு நடத்தி, திருவள்ளூர் வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழக்கையும் பெற்றவர் தான் நமது இன்றைய முதல்வர்.  கிராம சபைகள் முடக்கப்பட்ட போது அன்று வந்த அந்தக் கோபம் ஏன் இப்போது வரவில்லை?

ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சிகள் தின கிராம சபை!

வருடத்திற்கு நான்கு நாட்கள் நடைபெற்று வந்த கிராம சபைக் கூட்டங்களை ஆறு நாட்களாக உயர்த்தியது தற்போதைய திமுக அரசு. இந்த ஆறு நாட்களில் ஒன்று தமிழ்நாடு உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1.  கடந்த ஆண்டு நவம்பர் 1 கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆனால் வருகின்ற நவம்பர் 1 கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதனை ஒத்தி வைப்பதாகச் செய்தி வெளியிட்டு இருக்கிறது தமிழ்நாடு அரசு.

இதில் நாம் கவனிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட கிராம சபை கூட்டத்தினை கூட்டும் அதிகாரம் முழுக்க முழுக்க கிராம ஊராட்சிகளுக்குத் தான் உள்ளது எனச் சட்டமும் அதனை உயர்நீதிமன்ற உத்தரவும் உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில் கிராம ஊராட்சிகளிடம் கலந்து ஆலோசிக்காமல்/ கருத்துக் கேட்காமல் தன்னிச்சையாகத் தமிழ்நாடு அரசு நவம்பர் 1 கிராம சபையை ஒத்தி வைத்திருக்கிறார்கள்.

அரசு அலுவலர்களுக்கு அன்று விடுமுறையாக இருக்கலாம். ஆனால் விருப்பப்பட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு எந்த தடையும் இருந்துவிடக் கூடாது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளும் தமிழ்நாடு அரசு தனது கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

சட்டம் சொல்லியும், நீதிமன்ற உத்தரவு மிகத் தெளிவாகக் கிராம சபைக் கூட்டம் என்பது சம்பந்தப்பட்ட கிராம மக்களின்/ கிராம ஊராட்சியின் அதிகாரம் என்றும் அதில் மாநில அரசு தலையிடக்கூடாது என்பதைத் திரும்பத் திரும்பத் தெளிவு படுத்திய பிறகும் இது போன்ற ஒரு சூழலை உருவாக்குவது அதிகார பரவலைப் பேசும் அரசுக்கு நல்லதல்ல.

கிராம சபைக் கூட்டங்களில் இயற்றப்படும் தீர்மானங்களை மதித்து, அது மக்களின் நேரடியான கருத்து  என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற்று முடிந்த அக்டோபர் 2 கிராம சபை கூட்டத்தில் பல கிராம ஊராட்சிகளில் தங்கள் கிராம பஞ்சாயத்து தொடர்ந்து பஞ்சாயத்தாகவே இருக்க வேண்டும் என மக்கள் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை மதித்து அரசு உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

மேலும், கிராம சபைக் கூட்டங்களைத் தன்னிச்சையாக ஒத்தி வைக்கும் முயற்சியினை அரசு மேற்கொள்ளக் கூடாது என்பதே பல சமூக அமைப்புகளின்/ மக்களின் அழுத்தமான கோரிக்கையாக இருக்கிறது.

 நந்தகுமார் சிவா

சமூக செயற்பாட்டாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time