அடித்து ஆடும் ஆளுநர்! அடி வாங்கி பணியும் அரசு!

-சாவித்திரி கண்ணன்

இந்துத்துவர்கள் இமாலய குற்றம் செய்தாலும் மரியாதை. உண்மையான கல்வியாளர்களுக்கோ அவமரியாதை! ஆளுநர் அதிகாரமே உயர்கல்வி துறையில் கொடி கட்டி பறக்கிறது. தமிழக ஆட்சியாளர்களோ கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறர்கள்..என்பதற்கு பெரியார் பல்கலைக் கழகத்தில் நடக்கும் சம்பவங்கள் சாட்சியாகும்;

பெரியாரைப் பற்றி எப்படி ஆய்வு செய்யலாம்? என பெரியார் பெயரிலான ஒரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கடந்த ஓராண்டாக சொல்லொண்ணா அவமானங்களை சந்தித்து வருகிறார்! மற்ற சில நேர்மையான பேராசிரியர்களோ விசாரணை என்ற பெயரில் மிரட்டப்படுகின்றனர். அதே பல்கலைக் கழகத்தில்  ஊழல் முறைகேடுகளும், தகுதியற்ற பேராசிரியர் நியமனங்களும் கொடிகட்டி பறக்கின்றன. ஊழல் கறை படிந்த துணைவேந்தரும், பதிவாளரும் கைது செய்யப்பட்டாலும், ஆளுநர் தலையிட்டால் விடுவிக்கப்பட்டு, மீண்டும் கோலோச்சுகின்றனர்..!

பெரியார் பல்கலைக்கழகத்தில்  நீண்ட காலமாக பணியாற்றி வரும் 208 தற்காலிகப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம்  செய்யக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ”நீங்களெல்லாம் ஒப்பந்தக் கூலிகள் தான். பணி நிரந்தரமெல்லாம் கேட்கக் கூடாது. அப்படி கேட்கும் அளவுக்கு துணிச்சல் வந்துவிட்டதா”? என அந்த தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளையே அதிரடி பணி நீக்கம் செய்தனர்.

இது தொடர்பாக தொழிலாளர் துறை சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகந்நாதன், பதிவாளர் (பொறுப்பு) ஆர்.பாலகுருநாதன்  ஆகியோரை விசாரிக்கும் போது, சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியது.  அத்துடன், ”இவர்கள் குற்றமிழைத்தவர்களாக கருதப்பட்டு, அவர்கள் மீது உரிய நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடர சேலம் தொழிலாளர் உதவி ஆணையருக்கு அனுமதியளிக்கப்படுகிறது,” என்றும் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனாலும் பலனில்லை..

பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்  கல்விப்புலம் சார்ந்த நேர்மையான பேராசிரியர்களை மிரட்டி பணிய வைக்க சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் என்ற போர்வையில் பல்கலைக் கழக நிர்வாகமே மொட்டையாக பெயர், ஊர், விலாசம் மற்றும் கையெழுத்து ஏதும் இல்லாமல், ஆசிரியர்கள் மீது புகார் கடிதம் எழுதி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்புகின்றது.

அதனை தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, உயர் கல்வித்துறைக்கு அனுப்பி, பின்னர் உயர் கல்வித்துறை அதனை பல்கலை நிர்வாகத்திற்கு அனுப்பி நடவடிக்கை கோருகிறது. இது போன்ற சூழலில், பல்கலைக்கழகம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பது மற்றும் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது என தொடர் கதையாகியுள்ளது.

ஆனால், ஆசிரியர் சங்கமோ, பல்கலைக்கழக தொழிலாளர் சங்கமோ பல்கலைக்கழக நிர்வாகிகள் பற்றி தமிழக அரசுக்கு புகார் அளித்தால், அதற்கு எந்த விசாரணையும் நடப்பதில்லை’’ எனக் கூறியுள்ளது.

இது தமிழக ஆட்சியாளர்களின் யோக்கியதையை காட்டுகிறது.

அடுத்ததாக பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி கொண்டிருக்கின்ற பேராசிரியர் சுப்பிரமணியன் கடந்த 2023 ஆம் ஆண்டு பெரியாரின் போர்க்களங்கள் என்ற நூலை எழுதினார். மற்றும் 2007ஆம் ஆண்டு எழுதிய மெக்காலே – பழமைவாத கல்வியின் பகைவன் என்ற நூலை மறுபதிப்பு செய்தார்.

இந்தப் புத்தகங்கள் எழுதி வெளியிடுவது தொடர்பாக பல்கலை நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறப்படவில்லை என்றும், அனுமதியின்றி புத்தகங்கள் வெளியிட்டது பல்கலை சாசன விதிகளை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டு, பேராசிரியர் சுப்ரமணியிடம் விளக்கம் கேட்டு, பல்கலையின்  அன்றைய பொறுப்பு பதிவாளர் தங்கவேல் குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பியதும், அது அதிர்ச்சி அலைகளை தமிழக உயர் கல்வி வட்டாரங்களில் உருவாக்கியதும் அனைவரும் அறிந்ததே!

பெரியார் பல்கலைக்கழகத்தை பின்பற்றி  தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகமும் ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்களை வெளியிடுவதற்கு பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற வேண்டும் என புதிய சுற்றறிக்கையை அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ளது. இந்த சுற்றறிக்கை தமிழக அரசிடம் அனுமதி பெற்று தான் வெளியிட்டு உள்ளார்களா? அல்லது பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவின் அனுமதி பெற்று வெளியிட்டுள்ளார்களா? என்று தெரியவில்லை. இது யாருடைய தூண்டுதல்? என்பதும் தெரியவில்லை.

பெரியார் பல்கலைக்கழக சாசன விதிகளின்படி கல்வி, வரலாறு, கலாச்சாரம், கலை, அறிவியல் படைப்பாக்கம் ஆகியவை குறித்து எழுத நிர்வாக அனுமதி பெறத் தேவை எழவில்லை என பேராசிரியர் சுப்பிரமணியன் பல்கலைக்கழக பதிவாளருக்கு  டிசம்பர் -14, 2023 அன்று விரிவான விளக்கத்தை சமர்ப்பித்திருந்தார்.  தற்பொழுது 10 மாதங்கள் கழித்து கடந்த வருடம் அளித்த பதிலுக்கு திருப்தி இல்லை எனக் கூறி ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என அக்டோபர் 21, 2024 அன்று மாலை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  பேரா.கி.கதிரவன்  ‘’உயர்கல்வியில் ஆராய்ச்சிக்காக தான் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. இங்கு பேராசிரியர்களின் பதவி உயர்வுகளுக்கு ஆராய்ச்சி  படைப்புகளுக்கான மதிப்பெண் அவசியம்.  இதன் அடிப்படையில் தான் மதிப்பெண்களும், பதவி உயர்வும் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர் சுப்பிரமணியன் தான் பணி புரிகின்ற  இதழியல் துறைக்கு ஏற்பவும், தந்தை பெரியார் இருக்கை,பேரறிஞர் அண்ணா இருக்கை ஆகியவற்றுக்கு பொறுப்பு வகிப்பதால் இவை சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்.  அவர் எவ்விதத்திலும் பல்கலைக்கழக விதிகளை மீறி செயல்படவில்லை. ஏனென்றால், பல்கலைக்கழக சாசன விதிகளின்படி விதி 14 (2) அடிப்படையில்  கல்வி, வரலாறு, கலாச்சாரம், கலை, அறிவியல் ஆகியவை குறித்து படைப்பாக்கம் வெளியிடுவதற்கு பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற தேவையில்லை என்று தெளிவாக உள்ளது.

பல்கலைக்கழக பதிவாளரின் இச்செயலானது ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்களிடையே ஒரு பயத்தை உருவாக்கியுள்ளது, சுதந்திரமாக செயல்பட வேண்டிய ஆராய்ச்சித் துறையில் கைவிலங்கினைப் போல  கட்டுப்பாடுகள், விதிமுறைகளை உள் நோக்கத்துடன் செய்வது ஆராய்ச்சியாளர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக தோன்றுகிறது’’ என்றார்.

இதே பல்கலையில் தமிழ்த்துறைத் தலைவராக உள்ள பெரியசாமி, கோயிலில் முழுநேர ஓதுவாராக பணியாற்றிக் கொண்டே, முழுநேர முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை முடித்ததாக போலி அனுபவ சான்றிதழ்களை சமர்ப்பித்து  உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார். இவருடைய பணி நியமனமே தவறானது என்ற சர்ச்சையில் இது வரை விசாரணையே இல்லை. ஆக,  பல்கலைக் கழகத்தின் அதிரகார மையத்தின் ஒரு சார்பு மன நிலையை தெளிவாக  காட்டுகிறது.

பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரான உயர் கல்வித் துறை அமைச்சர், உயர் கல்வித் துறை செயலாளர் ஆகிய இருவரும் இந்தப் பிரச்சினை தொடர்பாக நீண்ட நெடிய மௌனம் காப்பது புதிராக உள்ளது. தமிழக முதல்வரோ இது குறித்து வாய் திறக்கவே மறுக்கிறார். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருக்கின்ற கட்சிகள் பகுத்தறிவாளர் பெரியார் வழி தோன்றலாக தங்களை பறை சாற்றுகின்றன. ஆனால், இவர்கள் தன் ஆளுகைக்கு உட்பட்ட பெரியார் பெயரிலான பல்கலைக் கழகத்தில் பெரியார் பற்றி ஆராய்ச்சி புத்தகம் வெளியிடுவதற்கு இன்னல்கள் உருவாக்கப்படுவதையும், உயர் கல்வித் துறையில் தமிழக ஆளுநர் ரவியின்  இந்துத்துவ அஜந்தாக்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதையும் தடுக்க முன் வராமல் பாஜகவின் பாசிசத்தை எதிர்ப்பதாக பேசுவது போலித்தனமாகும்.

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சுதந்திர சிந்தனை இன்று நெருக்கடியில் உள்ளது, இதற்கு காரணம் பெரும்பாலும்  மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் சகிப்பு தன்மை இன்மை தான். உயர் கல்வித் துறையில் தங்கள் இந்துத்துவ சித்தாந்தத்தை ஏற்பவர்கள் மட்டுமே இயங்க இயலும் என்பதை அது எழுதாத விதியாக கொண்டு செயல்படுகிறது. இதை தடுக்க திரானியற்ற உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, உயர்கல்வித் துறை மூலமாக தன் கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக செயல்பட்டவண்ணம் இருந்தார். தற்போது பொறுப்புக்கு வந்துள்ள புதிய உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியனோ, ’தன் பதவியை பாதுகாத்து கொண்டால் போதும்’ என பதுங்குகிறார்.

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time