உன்னதமான தேச பக்தி எதற்காக? யாருக்காக?

-சாவித்திரி கண்ணன்

தேச பக்தியையும், உயிர்ப்பான காதலையும் ஆழமாக காட்சிப்படுத்தியதில் படம் முழு வெற்றி பெற்றுள்ளது. ராணுவ வீரர்களின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், சொந்த மக்களுக்கு எதிராக ராணுவம் ஏன் இவ்வாறு செயல்பட வேண்டும் போன்ற கேள்விகளை படம் ஏற்படுத்துகிறது;

காதல், வீரம், தேசபக்தி, தியாகம்..என கலவையாக வெளிவந்துள்ள அமரன் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைக் காவியம் என்பதில் சந்தேகமில்லை.

மேஜர் முகுந்த்  தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியில் படிக்கும் போது இயல்பாக மலரும் காதல், அதை இரு வீட்டார்களும் எதிர்கொள்ளும் விதம், பெற்றோர்களை சம்மதிக்க வைப்பதில் காதலர்கள் கடைபிடிக்கும் பொறுமை, காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும்  நெஞ்சை அள்ளும் காட்சிகள்…என பல வலிமையான காட்சிப் பின்னல்களோடு படம் நகர்கிறது.

மேஜர் முகுந்தாக நடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் ஒரு திருப்பு முனை படமாகும். பல படங்களில் பெண்களை கிண்டலடித்து சுற்றும் பொறுப்பில்லாத வாலிபனாக வந்து டூயட் பாடிச் சென்ற சிவகார்த்திகேயன், இது போன்ற நல்ல வாய்ப்புகளில் முழுமையாக ஸ்கோர் பண்ணிவிடுகிறார்.

அவரை விஞ்சும் வகையில் அன்பும், அர்ப்பணிப்புமுள்ள ஒரு காதலியாக, மனைவியாக  சாய் பல்லவி நடித்துள்ளார்.  காதலில் சொந்தக் குடும்பத்தின் எதிர்ப்புகளை மீறி அவர் காட்டும் உறுதி, காதலனே பின்வாங்கிக் கொள்கிறேன் என்ற போதும், தான் பின் வாங்கப் போவதில்லை எனக் காட்டும் காதல் மீதான ஆழம், கல்யாணத்திற்கு பிறகு காதல் கணவனை ராணுவத்திற்கு தாரை வார்த்து பிரிந்து வாட நேரும் எனத் தெரிந்தும் காதலில் காட்டும் பிடிவாதம், கல்யாணத்திற்கு பிறகு கணவன் எப்போது வருவார் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளக் கூட முடியாத சூழல்கள், துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே பயணப்படுவனை நம்பி தன் வாழ்க்கை பயணத்தை துணிவாக அமைத்துக் கொள்வது, இளம் வயதில் சின்னஞ்சிறு குழந்தையுடன் கணவனை பறி கொடுத்தும் உறுதி குலையாமல் வாழ்வை எதிர் கொள்ளும் காதலியும், மனைவியுமாக இந்து ரெபக்கா என்ற சாய் பல்லவி கதாபாத்திரம் மேஜர் முகுந்தின் தியாகத்தை விட ஒருபடி மேலானது என்பதில் சந்தேகமில்லை. இந்த கதாபாத்திரத்தை  மிகுந்த உயிர்ப்புடன் நடித்துள்ளார் சாய் பல்லவி.

77 ஆண்டுகளாக தீர்வில்லாமல் நீடிக்கும் காஷ்மீரை வலிந்து இந்தியாவோடு இணைப்பதற்கான ராணுவச் செயல்பாடுகளில் நம் வீரர்கள் எடுத்துக் கொள்ளும் உயிரை பணயம் வைக்கும் ரிஸ்க் இப்படத்தில் சிறப்பாகவே பதிவாகியுள்ளது.

மேஜர் முகுந்தின் நெருங்கிய ராணுவ சகாவாக விக்ரம் சிங்காக வரும் (புவன் அரோரா) கதாபாத்திரம் இந்திய ராணுவத்தில் தொன்று தொட்டு உயிரைத் தியாகம் செய்யும் ஒரு ராணுவ பாரம்பரியக் குடும்பத்தின் மன நிலைக்கு சரியான உதாரணமாகும். தன் தந்தையை ராணுவத்திற்கு தந்து, தன் உயிரையும் ராணுவத்திற்கு தத்தம் செய்கிற அந்த வீரன்,  தன் ஏழரை வயது மகனையும் ராணுவத்திற்கு தயார் படுத்தி வருகிறேன் என்று சொல்லியபடி உயிர் விடுகிறான்.

இப்படியாக ராணுவ விரர்கள் செய்யும் தியாகங்கள் எதற்காக? அந்நிய நாட்டு பகை ராணுவத்தை எதிர்த்து நாட்டை காப்பதற்கென்றால், அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் நாம் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதும் காஷ்மீரில் உள்ள மக்களை எதிர்த்து எனும் போது தான் மனம் பதறுகிறது.

அவ்வளவு பீரங்கி வண்டிகள் அணிவகுத்து ராணுவ வீரர்கள் வந்தாலும், தாங்கள் மதிக்கும் போராளிகளை காப்பாற்ற அந்த மக்கள் ஆயுதங்களின்றி வெறும் கற்களை எறிந்து ராணுவத்தை எதிர்கொள்கிறார்கள் என்பது இந்தப் படத்தில் பல இடங்களில் பதிவாகியுள்ளது.

இன்னொரு காட்சியில் ராணுவத்தின் பார்வையில் தீவிரவாதியாக கருதப்படும் ஒருவரின் வீடு தேடி சென்று  மேஜர் முகுந்த் பேசும் போது, அந்த வயதான தந்தை, ”என மகன் இந்த காஷ்மீரின் சுதந்திரத்திற்காக போராடுகிறான், அவன் பயங்கரவாதியல்ல, சுதந்திர போராட்ட வீரன், நீங்க போகலாம்” என்ற காட்சியும் பதிவாகியுள்ளது.

 

இன்னொரு காட்சியில் மேஜர் முகுந்தின் வயதான அப்பா தன் மகனிடம், ”ஏண்டா காஷ்மீரில் மட்டும் தொடர்ந்து சண்டைகள், அங்கே அமைதி வராதா?” எனக் கேட்கும் போது, ”இதை நீயும், நானும் பேசி என்ன ஆகப் போகுது நைனா! பேச வேண்டியவங்க பேசணும்” என அவர் சொல்வார்.

அங்கே அமைதி திரும்புவதற்கு இந்திய ஆட்சியாளர்கள் அங்குள்ள மக்கள் மனநிலை அறிய வேண்டும். அங்கு மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு முடிவை எடுக்க வேண்டும். இந்த பெருந்தன்மையான முடிவில் தான் நமது ராணுவ வீரர்களின் விலை மதிப்பில்லாத உயிர் பலிகள் தடுக்கப்படும். அங்குள்ள கொந்தளிப்பு சூழல் முடிவுக்கு வரும். அமைதி நிலை பெறும்!

இதைச் சொல்லும் துணிச்சல் இங்கு எந்த படைப்பாளிக்கும் இருக்கிறதா? எனத் தெரியவில்லை. அப்படி படம் எடுத்தால், அதைப் படைப்பு சுதந்திரம் என்ற தன்மையில் இந்திய அரசு அணுகுமா? என்றும் தெரியவில்லை.

கனத்த மெளனத்துடன் படம் ஏற்படுத்திய தாக்கங்களை நாம் அசைபோடுகையில், தேச பக்தி என்ற உணர்ச்சியில் இந்திய ராணுவ வீரர்களும், அவர்கள் குடும்பத்தினரும் எதிர்கொள்ளும்  ஈடு செய்ய முடியாத இழப்புகளுக்கு ஒரு தீர்வு கிடைக்காதா? இந்திய பட்ஜெட்டின் பெரும்பகுதி காஷ்மீருக்காக விரயமாவது முடிவுக்கு வரதா..? என்ற ஏக்கங்களை ஏற்படுத்துகிறது.

படம் மாபெரும் வசூலை அள்ளித் தருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் வசூலில் மேஜர் முகுந்த் குடும்பத்திற்கும் ஒரு சிறு பங்களிப்பை தந்தால் அது சிறப்பாக இருக்கும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time