சாதி சர்ச்சையில் சிக்கிய அமரன் திரைப்படம்!

-சாவித்திரி கண்ணன்

அமரன் படம் தேச பக்தி, காதல் என்ற தளத்தில் ஆழமான உண்மை தன்மையோடு எடுக்கப்பட்டு உள்ளது. இதில் இரு வேறு மதத்தின் காதலர்கள் ஒன்றுபடுகிறார்கள். சாதி கடந்து, மத நல்லிணக்கத்தை சொல்லிய இந்த படத்தின் நல்ல அம்சங்களை புறம் தள்ளி, தங்கள் சாதி அடையாளம் மறைக்கப்பட்டதாக பிரச்சினை  செய்கிறார்கள்:

தற்போது இந்த படத்தை பற்றி ஒரு சர்ச்சையை ஒரு சாதி அமைப்பினர்  கிளப்பி காரசாரமாக சமூக வலைதளங்களில் எழுதியதோடு, தங்கள் சாதியினர் நடத்தும் தின இதழான ‘இந்து தமிழ் திசை’யிலும் நான்கு காலத் தலைப்பிட்டு பெரிதாக எழுத வைத்துள்ளனர்.

அவர்களின் கோபத்திற்கு காரணம், மேஜர் முகுந்த் என்பவர் ஒரு பிராமணர் என்பதை மறைத்துவிட்டார்களாம்! ‘படத்தில் கதாநாயகி இந்து ரெபக்கா வர்கீஸ் எனபவர் ஒரு கிறீஸ்த்துவ பெண் என்பதை அழுத்தமாக காட்டும் போது, முகுந்த் ஒரு பிராமணர் என்பதை ஏன் காட்டவில்லை…?’ என  இந்த சாதியினர் சமூக வலை தளங்களில் கொந்தளிக்கிறார்கள். அதையே இந்து தமிழ் திசையும் பிரதிபலித்துள்ளது.

உண்மையில் இவர்களின் காதலுக்கு  குறுக்கே இருந்தது சாதியல்ல, மதமே. அதனால் தான் இருவரது சாதியுமே சொல்லப்படவில்லை. இதை முகுந்த்தின் அம்மா ஒரு சந்தர்ப்பத்திலும், ரெபக்கா வர்கீஸீன் தந்தை சில சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்திய போதிலும், முகுந்த் குடும்பத்தில் பெரிய எதிர்ப்புகளை காட்டவில்லை. ரெபக்கா வீட்டில் தான் எதிர்ப்பு வலுவாக இருந்தது. எனினும், இருவரது உண்மையான, ஆழமான காதலை உணர்ந்த பிறகு அவர்களும் ஏற்கிறார்கள்.

இந்து தமிழ் திசையின் சாதி அபிமானம்.

இந்த படத்தில் முகுந்த் ஒரு தமிழர், இந்து என்ற அடையாளமும், ரெக்கா ஒரு கிறிஸ்துவர், மலையாளி என்ற அடையாளமும் மட்டுமே, அதுவும் மிக இயல்பாக போகிற போக்கில் சில காட்சிகளின் வழியே குறியீடாக காட்டப்படுகிறது. இருவரது சாதியுமே சொல்லப்படவில்லை. அந்த வகையில் கதாநாயகியின் சாதியைச் சேர்ந்தவர்கள் யாரும், ”எங்கள் சாதி அடையாளத்தை ஏன் காட்டவில்லை?” எனக் கேட்கவில்லை. சாதி அங்கு பிரச்சினையாகவே எழவில்லை.

முகுந்த் பிறந்த போது, ‘என்ன பெயர் வைக்கலாம்?’ என்ற போது, கிருஷ்ணர் பொம்மை காட்டப்பட்டு, முகுந்த் என்ற பெயர் சூட்டுவதும், முகுந்துக்கு வேலை கிடைத்த போது, ரெபக்கா வர்கீஸ் ஐயப்பன் கோவிலில் வேண்டிக் கொண்டிருந்த காட்சியும், பின்னணியில் கோவில் அணி ஒலிக்க, ”நீ அங்கேயே கோவிலில் இரு நான் வருகிறேன்” எனச் சொல்லி முகுந்த் வருவதும், முகுந்த் ஒவ்வொரு முறை விடுமுறை முடிந்து ராணுவத்திற்கு செல்லும் போதும் ஐயப்பன் படத்தை வணங்கிச் செல்வதும், வீட்டு கிரகபிரவேசத்தில் இந்து வழக்கப்படி பூஜைகள் நடப்பதும், ராணுவ வீரர்கள் ‘அன்பே சிவம்’ எனப் பாடுவதுமாக மிக இயல்பாக காட்சிகள் வருகின்றன. ”அச்சமில்லை, அச்சமில்லை’’ பாடலை முகுந்த் தானும் பாடி, மற்ற ராணுவ வீரர்களையும் மொழி வேறுபாடின்றி பாட வைப்பதன்  மூலமாக தமிழன் என்ற அடையாளம் படத்தில் தூக்கலாகவே வெளிப்பட்டு உள்ளது.

அப்படி இருக்க, ‘பெண்ணின் கிறிஸ்த்துவ அடையாளத்தை அழுத்தமாக காண்பித்துவிட்டு, முகுந்தின் சாதி அடையாளத்தை மறைத்துவிட்டதாக’  படத் தயாரிப்பாளர் கமலஹாசன் மீது இந்து தமிழ் திசை பாய்ந்துள்ளது.

‘நிஜ வாழ்க்கையில் மேஜர் முகுந்த் ஒரு பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை திரையில் காட்ட என்ன தயக்கம் கமலஹாசனுக்கு? ஒரு பிராமண சமூகத்து இராணுவ வீரரை அவரது சொந்த அடையாளத்துடன் காண்பிப்பதில் ஏதேனும் பிரச்சினையா?’ எனக் கேட்க தெரிந்த இந்து தமிழ் திசைக்கு, ‘கதாநாயகி ரெபக்கா வர்கீஸ் நாயாரா? நம்பூதிரியா ? அவரது சாதி அடையாளம் என்ன?’ எனக் கேட்க விருப்பமில்லையே ஏன்?

தமிழரான முகுந்தின் மூலம் தேச பக்தி, காதல் ஆகியவற்றின் பெருமிதங்கள் வெளிப்பட்டதைக் கொண்டு மகிழ்ச்சி அடைய முடியாத அளவுக்கு, தன் சொந்த சாதி அடையாளத்தை மட்டுமே பிரதானமாக கருதும் இத்தகைய பிரகிருதிகள் தான் சமூக முன்னேற்றத்தும், நல்லிணக்த்திற்கும் பெரிய எதிரிகளாவர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் நாம் கமலஹாசனை ஆதரிப்போம். அதே சமயம் அப்பாவை, ’நைனா’ என முகுந்த் படத்தில் அழைத்திருப்பது கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும். அது முற்றிலும் வேறு அடையாளத்தை – தெலுங்கு மொழி வழி வந்தவராக – சுட்டுவதாகும்.

மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் தன் குழந்தையுடன்!

பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத்தின் துணைத் தலைவர் தியாகராஜன் என்பவரும், ”முகுந்த் பிராமணர் என்பதை எப்படி மறைக்கலாம்?” என கொந்தளித்துள்ளார். அமைப்பின் பேரிலேயே இது  பார்ப்பனர்களின் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பாக  இருப்பதற்கான சாத்தியக் கூறு தெரிகிறது. அத்துடன் இந்த நபர் இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினெண்ட் கர்னலாம். ஒரு இராணுவ அதிகாரி எனச் சொல்லிக் கொள்வதற்கே இவருக்கு அருகதை இருக்கிறதா? முகுந்த் பெயரை உச்சரிக்கவும் இவர்களுக்கு தகுதி இல்லை.

அதே போல தன் கடின உழைப்பின் மூலம் ‘ஏர் டெக்கான்’ நிறுவனத்தை நிறுவி முன்னேறிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ‘சூரரைப் போற்று’  படத்திலும் கோபிநாத் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது மறைக்கப்பட்டதாக கொந்தளித்தனர். சாதியைக் கடந்து கொண்டாட வேண்டியவர்களை சாதி அடையாளத்துடன் ஒரு சிமிழுக்குள் அடைப்பது அவர்களுக்கே செய்யும் துரோகமாகும். அந்த வகையில் சூர்யா எடுத்தது தான் சரியாகும்.

மனிதன், தமிழன், இந்தியன் என்ற அடையாளங்களைவிட,  தங்கள் சொந்த சாதி அடையாளமே முக்கியம் எனக் கருதி, இத்தகைய பிற்போக்கான கருத்தியலுக்கு மேடை போட்டு வெளிச்சம் தரும் ‘இந்து தமிழ் திசை’ மற்றும் ‘ஒன் இந்தியா’ போன்ற ஊடகங்களுக்கு  நமது கண்டனங்கள்!

-சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time