இந்தியா எங்கும் இட ஒதுக்கீடு வரக் காரணமானவர்! 

- வாலசா வல்லவன் நேர்காணல்

ஆனைமுத்து நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருவது , பெரியார் எழுத்துக்களை தொகுத்ததில் ஆனைமுத்துவின் சாதனைகள், இந்தியா முழுமையும் இடஒதுக்கீடு மலர ஆனைமுத்து எடுத்த முயற்சிகள், மபொசிக்கும் – சீமானுக்கும் உள்ள ஒற்றுமை.. ஆகியவை குறித்து வாலாசா வல்லவன் நேர்காணல்;

ஆனைமுத்து. நூற்றாண்டு விழா ஜீன்,2024 தொடங்கி ஜூன்2025 வரை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினரால்!  அவரது சாதனைகளை விவரிக்கிறார், அக்கட்சியின் வாலசா வல்லவன்;

ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறீர்கள். பெரியார் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியவர் அல்லவா ஆனைமுத்து…?

ஆம். ஆனைமுத்து நூற்றாண்டு கருத்தரங்குகள் தமிழகம் முழுக்க நடந்த வண்ணம் உள்ளது.

பெரியார் நூற்றாண்டு விழாவை தமிழகம் மட்டுமின்றி பீகாரின் 32 மாவட்டங்களிலும் கொண்டாடச் செய்தவர் ஆனைமுத்து. 1978 ஆம் ஆண்டு, பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ம் நாள் முதல் அக்டோபர் 19 ம் நாள் வரை, பீகாரின் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் ராம் அவதேஷ் சிங் உதவியோடு இவ்விழாக்கள் நடந்தன.  லோகியாவாதியான இவரோடு ஆனைமுத்து, சேலம் சித்தையன், சீர்காழி மா.முத்துச்சாமி, தாதாம்பட்டி ராஜூ ஆகியோரும் பொதுக் கூட்டங்களில் பேசினார். அப்போது மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தார். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க அமைக்கப்பட்ட காகா கலேல்கர் அறிக்கையை அமலாக்குவதாக அவர் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அதுவரை வட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கிடையாது. நீதிக் கட்சி ஆட்சியில் இருந்ததால் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகவில் இட ஒதுக்கீடு அமலில் இருந்தது. பீகாரில், பெரியார் நூற்றாண்டு விழாவிற்குப் பிறகு இட ஒதுக்கீட்டை அமலாக்கக் கோரி சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. இதில் 10,000 பேர் கைதாயினர். பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அக்டோபர் 25, 26  நாட்களில் சுற்றுப் பயணம் செய்த போது, காக்கா காலேல்கர் ஆணைய அறிக்கையை அமலாக்காத பிரதமரே திரும்பிப் போ என்ற போராட்டம் நடந்தது.

இதன் தொடர்ச்சியாகத் தான், அவர் மண்டல் ஆணையத்தை அமைத்தார். பீகாரில் அப்போது கர்ப்பூரி தாக்கூர் முதல் அமைச்சராக இருந்தார். அவர் முதலில் 20 % வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். அதன் பிறகு தான் மற்ற வட மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தன. வட நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற சிந்தனையோட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் அங்கும் இட ஒதுக்கீடு அமலாக காரணமானார்.

மண்டல் ஆணைய அறிக்கை வெளியாக வே.ஆனைமுத்து தான் காரணம் என்று கூறி வருகிறீர்களே ?

1978 ல் மண்டல் ஆணையத்தை மொரார்ஜி அமைத்தார். மண்டல் தனது அறிக்கையை 1980ல் அரசிடம் கொடுத்துவிட்டார். ஆனால் ஒன்றிய அரசு அறிக்கையை வெளியிடவில்லை. எனவே அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சரண்சிங் வீட்டு முன்பு மறியல் நடத்தினார் ஆனைமுத்து. அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்திரா காந்தியும் ஒரு பார்ப்பனர்;  மண்டல் அறிக்கையை அவரும் பொருட்படுத்தவில்லை. எனவே, 1982 ஆம் ஆண்டு குடியரசு நாளை துக்கநாள் என அறிவித்து போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தார். தமிழ்நாட்டில் அது கடைபிடிக்கப்பட்டது. அதற்கு முதல்நாள் ஜனவரி 25 ல் உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில்சிங் ஆனைமுத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

உதவியாளர் இல்லாமல் உங்களிடம் பேச வேண்டும்  என கேட்டுக் கொண்டு, பிறகு அவரிடம் பேசினர். ஜெயில் சிங்  பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் ; ஆசாரி சாதி. ஆனைமுத்து ஆலோசனைப் படி, பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் கேட்காமலேயே மக்களவையில் மண்டல் அறிக்கையை ஜெயில் சிங் தாக்கல் செய்தார். வேறு வழியின்றி அன்று மாலையே, மாநிலங்களவையில் பிரதமரான இந்திரா, பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார்.

மண்டல் பரிந்துரையை அமலாக்கக் கோரி திராவிடர் கழகம் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள் போராடின. அதன் விளைவாக வி.பி.சிங் ஆட்சியில் மண்டல் பரிந்துரைப்படி வேலை வாய்ப்பில் மட்டும் முதலில் 27 % பிற்படுத்தப்படவர்களுக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பிறகு 2006 ல், அர்ஜூன் சிங் கல்வி அமைச்சராக இருந்த போது, திமுகவைச் சேர்ந்த  டி.ஆர்.பாலு எடுத்த முயிற்சியினால் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அமலானது.  மண்டல் மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்த போது மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஜோதிபாசு  மேற்கு வங்காளத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலே இல்லை என்று கூறிவிட்டார். அன்று மார்க்சிஸ்ட் கட்சி மண்டல் ஆணைய அறிக்கைக்கு ஆதரவாக இல்லை.

இப்போதுள்ள பெரியார் இயக்கங்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்த மண்ணில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் என மூவரையும் இணைத்து  முதன்முதலாக மேடைதோறும் பேசியவர் ஆனைமுத்து. திருச்சியில் சிந்தனையாளர் கழகத்தை அமைத்து  பல நிகழ்ச்சிகளை ஆனைமுத்து நடத்தி இருக்கிறார். 2018 ம் ஆண்டு 160 பெரியார் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து நடத்திய  திருச்சி  கருஞ்சட்டைப் பேரணியில் 30,000 பேர் கலந்துகொண்டனர்.  அங்கு தான் பிரிந்திருந்த கி.வீரமணியும், வே.ஆனைமுத்துவும் மேடையில் ஒன்றாகச் சந்தித்தார்கள். பிறகு கோவையில் நீலச்சட்டைப் பேரணி நடந்தது. தற்போது ஆனைமுத்து  உயிரோடு இல்லை. பெரியார் இயக்கங்கள் ஒன்றுபட்டு இயக்கம் நடத்த வேண்டும் என்ற அவரது லட்சியத்தை நடைமுறைப்படுத்த செயல்படுகிறோம்.

1946 ல் மத்தியிலும், மாநிலத்திலும் தேர்தல்கள் நடந்தன. அதில் படித்தவர்கள், சொத்து(நிலம்) உள்ள 14 % மட்டுமே வாக்களித்தனர். அவர்கள் உருவாக்கிய அரசியல் சாசனம் சாதியை பாதுகாக்கிறது, ஜனநாயக உணர்வு கொண்ட அரசாக இல்லை. இதனை விளக்கி ‘இந்திய அரசியல் சட்டம் ஒரு மோசடி’ என்ற நூலை வே. ஆனைமுத்து எழுதினார். அதேபோல ‘தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி’ என்பதும் அவருடைய முக்கியமான நூல்.

வெள்ளைக்கார அரசாங்கத்தில் அனைவருக்கும் அவரவர்களின் சாதி அடிப்படையில் 100 சத இட ஒதுக்கீடு இருந்தது. ஆனால், இந்திய  அரசியல் அமைப்புச் சட்டம் இந்த நிலையை மாற்றியது. எம்.ஜி.ஆர்.காலத்தில் 31 % இட ஒதுக்கீடு பிற்படுத்தப்படவர்களுக்கு இருந்தது. இதனை 60 % ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உடனடியாக எம்.ஜி.ஆர்.ஏற்றுக் கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து வந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்கவே, எம்.ஜி.ஆர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டை 50 % ஆக உயர்த்தினார்.

ஆனைமுத்துவின் சிறப்புகளை சொல்லுங்கள்?

பெரியாரின் சீடராக அவரது கொள்கைகளை வாழ்நாள் முழுவதும் பரப்பியவர் வே.ஆனைமுத்து. சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு என்பதில் உறுதியாக இருந்தார். பெரியாருடைய எழுத்துக்களையும், பேச்சுகளையும் குடியரசு, விடுதலை, உண்மை போன்ற இதழ்களில் வெளி வந்தவைகளை தலைப்பு வாரியாக, பெரியாரிடம் பதிப்புரிமை பெற்று 1974 ல் ‘பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்’ மூன்று தொகுதிகளாக வெளியிட்டார். பின்னர் 2010 இல் 20 தொகுதிகளாக விரிவாக்கம் செய்து வெளியிட்டார்.

அதாவது பெரியாரின் அரசியல் என்ன என்பதை – ‘பெரியாரியல்’ என்றால் என்ன – என்பதைக் காட்டியவர். இதனை கலைஞர் அறிவாலயத்தில்  வெளியிட்டார்.  இதன் பிறகுதான் பெரியார் குறித்த ஆய்வுகள் நிறைய வெளிவந்தன. பெரியாருடைய கருத்துகளைப் பரப்ப குரல் மலர் (1950), குரல் முரசு(1957) போற்ற இதழ்களை நடத்தி வந்தார். 1974 முதல் சிந்தனையாளன் என்ற இதழையும் நடத்தி வந்தார். (இப்போது அது புதிய சிந்தனையாளன் என்ற பெயரில் வந்து கொண்டிருக்கிறது). அவருடைய எழுத்துகள் ‘திருச்சி வே.ஆனைமுத்து கருத்துக் கருவூலம்’ என்ற பெயரில் 21 தொகுதிகளாக 2012 ல் வந்துள்ளது. அவர் எழுதியது 16 தொகுதிகள்; பதிப்பித்தது 6 தொகுதிகள். அவரது எழுத்துகளை தமிழக அரசு நாட்டுடமை ஆக்க வேண்டும்.

பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை சான்றுகளோடு எழுத வேண்டும் என முயற்சி செய்தார். பெரியாருடைய குடும்பம் மைசூரில் இருந்து ஈரோட்டிற்கு வந்தது, அவர்கள் வாங்கிய சொத்துப் பத்திரம், அவர் படித்த தொடக்கப் பள்ளிக் கூடத்தின் படம், 1917 ல் ஈரோட்டின் நகர்மன்றத் தலைவராக இருந்த போது கெங்குபறத் தெரு என்று இருந்ததை திருவள்ளுவர் தெரு என தீர்மானம் நிறைவேற்றி அதனை தனது கையால் ஆங்கிலத்தில் நடவடிக்கைக் குறிப்பேட்டில் எழுதியுள்ளார். இவைகளை தொகுத்துள்ளார். பெரியார் ரஷ்யா சென்று வந்தது நமக்குத் தெரியும். ஆனால், சீனா செல்ல கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்த போது அதற்கு உளவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதனை தில்லி அருங்காட்சியகத்தில் இருந்து எடுத்துள்ளார். மைசூர், தில்லி, திருவாங்கூர் (வைக்கம் போராட்டம்), சென்னை, காந்தி சபர்மதி ஆசிரமம், கல்கத்தா, அம்பேத்கர் நூலகம் என இந்தியா முழுவதும் அலைந்து பெரியார் பற்றிய குறிப்புகளை எடுத்துள்ளார்.

21.6.1925 ல் பிறந்த வே.ஆனைமுத்து 96 வயது வரை வாழ்ந்தார். தனது 90 வயது வரை நின்றபடியே பேசி இருக்கிறார். தொண்டர்களுக்கு தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார். திராவிடர் கழக மாநாட்டில் பாலதண்டாயுதத்தை அழைத்து மார்க்சியம் பற்றி பேசச் செய்துள்ளார். ஆனைமுத்து பெயரில் தமிழக அரசு சொற்பொழிவு அரங்கத்தை நிறுவ வேண்டும்.

சீமான் பேசி வரும் அரசியல் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

பெரியார் நடத்திய எந்தப் போராட்டமும் தோற்றதில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டமாக இருந்தாலும் (1938 – ராஜாஜி ஆட்சியில் ஒரு ஆண்டு போராட்டம்; 1948 ஓமந்தூரார் ஆட்சியில் 50 நாள்), குலக்கல்வி எதிர்ப்பு போராட்டம், இட ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்த போராட்டம் (செண்பகம் துரைராஜன் வழக்கு), அரசியல் சட்ட எதிர்ப்பு போராட்டம், கருவறை நுழைவு போராட்ட ம் (அனைத்து சாதியினரும் அர்சகர்)  என பலவற்றைச் சொல்ல முடியும்.

வாலாசா வல்லவன்

அப்போது காங்கிரஸ் கட்சியில் பெரியாரை எதிர் கொள்ள களம் இறக்கி விடப்பட்டவர் தான் ம.பொ.சி. அவர் காங்கிரசில் இருந்தபடியே தமிழரசு கழகத்தை 1946 ல் தொடங்கினார். தமிழரசு கழகத்தை கலைக்க வேண்டும் அல்லது காங்கிரசை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டதால் வேறு வழியின்றி காங்கிரசை விட்டு 1954 இல்  வெளியேறினார். இந்தக் காலங்களில் திராவிடர் கழகத்தின் வளர்ச்சி உச்சியில் இருந்தது.

அவரது ‘செங்கோல்’ இதழ்களை ஆய்வு செய்து புத்தகமாக எழுதியிருக்கிறேன். மபொசியின் இக்கால வடிவம் தான் சீமான். அவரை ஒன்றிய அரசு பேச வைக்கிறது. அதனால் தான் ‘ராஜீவ் காந்தியை கொன்று புதைத்தோம்’ என அவரால் பேச முடிகிறது. இதனை வேறு யாராவது பேசியிருந்தால் சும்மா விட்டிருப்பார்களா ?

நேர்காணலும், தொகுப்பும்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time