டிரம்ப்பின் வெற்றியும், வியாபார கணக்குகளும்!

-சாவித்திரி கண்ணன்

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் டிரம்ப் அடைந்துள்ள வெற்றி உலகம் முழுக்க வலதுசாரி, பிற்போக்கு சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை அடையாளப்படுத்துகிறது. நரகலான பேச்சுக்கள், நாகரீகம் இல்லாத நடத்தைகள், கார்ப்பரேட்கள் நலனே பிரதானம் என முழங்கிய டிரம்ப்பின் வெற்றி ஒரு அலசல்;

இந்தியாவில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு இரண்டாமிடம் என்பது பாஜக ஆட்சியில் எப்படி எழுதப்படாத நியதியோ, அது போல டிரம்பின் ஆட்சியில் வெள்ளையரல்லாதவர்களுக்கு இரண்டாமிடம் என்பது எழுதப்படாத நியதியாக இருக்கும்.

பெண்களை அடக்கியாள வேண்டும் என்ற பிற்போக்கு கருத்தியலில்  இந்தியாவின் பாஜகவிற்கும், அமெரிக்காவின் குடியரசுக் கட்சிக்கும் பெரிய வேறுபாடில்லை. பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமையை கமலா ஹாரீஸ் பேசியதற்கு டிரம்ப் கேவலமான எதிர்வினை ஆற்றினார்.

தன்னுடைய பிரச்சாரத்தில் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடியுமோ.., அந்த எல்லையையும் கடந்து டிரம்ப் பேசினார்.  நல்லோர்களும், பண்பாளர்களும் டிரம்ப் புறக்கணிக்கபட வேண்டியவர் எனத் தெளிவாக இருந்தனர். மக்களின் ஆதரவு கண்ணியமான பிரச்சாரத்தை மேற்கொண்ட  டிரம்பை காட்டிலும் சற்று அதிகமாக கமலா ஹாரிசுக்கே இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

எனினும் தேர்தல் முடிவுகள் டிரம்ப்புக்கு சாதகமாகவே உள்ளது.

எலன்மஸ்க் போன்ற கார்ப்பரேட்கள், இஸ்ரேலை டிரம்ப் கண்மூடித்தனமாக ஆதரிப்பதால் செல்வாக்கும், பணபலமும் உள்ள யூத முதலாளிகள் டிரம்ப் வெற்றிக்கு பக்கபலமாக நின்றனர். தேர்தல் பிரச்சாரத்திலேயே கார்ப்பரேட்களுக்கு என் ஆட்சியில் முன்பே வரிச்சலுகை தந்துள்ளேன். ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தருவேன்.. என பகிரங்கமாக பேசியும் அவர் வெற்றி பெறுகிறார். மறுபுறம் ”எளிய, நடுத்தர வர்க்க அமெரிக்கர்களின் வலிகளை உணர்ந்தவள் என்ற வகையில் அதற்கு தீர்வு காண்பேன்” என்ற கமலா ஹாரீஸ் தோல்வி கண்டுள்ளார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வந்தாரை வாழ வைத்த பூமியான அமெரிக்காவின் இன்றைய செல்வச் செழிப்பிற்கு குடியேறிய மக்களின் கடும் உழைப்பே பிரதானமாகும்.  ஆனால், குடியேறிகள் மீதான வெள்ளையின மக்களின் வெறுப்பை அரசியல் அறுவடையாக்கியதிலும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், ஆட்சியில் இருந்த பைடன் அரசின் ஊசலாட்டங்கள் கமலா ஹாரீசின் வெற்றியை பதம் பார்த்துவிட்டன. தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க வாக்குறுதி தந்தும் அதை கடைசி வரை நிறைவேற்ற முடியாததும், -ரஷ்ய- உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை நிலை நாட்டத் தவறியதும் பைடனை மட்டுமல்ல, கமலா ஹாரிசையும் பாதித்த அம்சமானது.

”அமெரிக்க நிறுவனங்கள் வெளி நாடுகளில் முதலீடு செய்து அங்குள்ளோருக்கு வேலை வாய்ப்பு தருவதையும், இங்கு அமெரிக்காவில் வேலையின்மை பெருகுவதையும் இனி அனுமதிக்கமாட்டேன். எல்லாம் அமெரிக்க மண்ணில் உற்பத்தியாக வேண்டும், சீன ஆதிக்கத்தை உறுதியாக கட்டுப்படுத்துவேன். இனி சீனப் பொருட்களுக்கு அதிக ( 60%) வரிதான்”  என டிரம்ப் கூறியதெல்லாம் அமெரிக்க மக்கள் மனதை கொள்ளை கொண்டது ஆச்சரியமில்லை.

சீனாவை கடுமையாக எதிர்த்துக் கொண்டே, சீன அதிபர் ஜீஜீன்பிங்குடன் நட்பையும், ரஷ்யாவை கடுமையாக எதிர்த்துக் கொண்டே, ரஷ்ய அதிபர் புதினிடம் செல்வாக்கு செலுத்தக் கூடியராகவும் டிரம்ப் வெளிப்பட்டது என்பது அவர் மீது சாதாரண அமெரிக்கனுக்கு ஒரு பிரமிப்பை உருவாக்கியது என்னவோ  நிஜமே. ஆனால், உண்மையில் டிரம்ப்  ‘டீலிங்’ செய்வதில் கைதேர்ந்தவர். ‘யாருக்கு என்ன தேவை? எதைக் கொடுத்து எதைப் பெறலாம்?’ என்ற ‘பிசினஸ்’ அறிவே அவருக்கு அரசியல் வெற்றிக்கும் அடித்தளம் போட்டுவிட்டது.

கமலா ஹாரீஸ் வெற்றி பெற்று இருந்தால் அது அமெரிக்காவின் முதல் ஆசிய –ஆப்ரிக்க முதல்வர் என்ற பெருமையையும், முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும், எல்லாவற்றுக்கும் மேலாக பன்முகக் கலச்சாரத்தையும், பலதரப்பட்ட மக்களையும் அரவணைக்கும் ஒரு தலைவரின் வெற்றியாகவும் பார்க்கப்பட்டு இருக்கும். தமிழ் மரபில் வந்த  கமலா, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என உலகத்திற்கு நிருபித்து இருப்பார்.

டிரம்ப் ஒரு வேளை தோற்க நேர்ந்திருந்தால்.., இந்த நேரம் அமெரிக்கா கலவர பூமியாக மாறி இருக்கும். வெற்றியைத் தவிர எதையும் ஏற்கு மன நிலையில் அவர் இல்லை என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது.

மக்களின் விருப்பத்தைவிட 48 மாகணத்தில் உள்ள 538   வேட்பாளர்களின் வாக்கை பெறுபவர் யாரோ, அவர் தான் அதிபராக முடியும் என்பதால் திட்டமிட்டு வேட்பாளர் சிலரை டிரம்ப் விலை பேசி வாங்கிவிட்டார் எனக் கூறப்படுகிறது. ஆக, ”டிரம்ப்பின் வெற்றி, மக்களால் தரப்பட்டதல்ல, விலை பேசி வாங்கப்பட்டதே” என்கிறார்கள் கமலா ஹாரீசின் ஆதரவாளர்கள்.

எது எப்படியோ, டிரம்பின் வெற்றியால் இனி அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமுமே, பதற்றத்தையும், பதைபதைப்பையும், துன்ப துயரங்களையும் அறுவடை செய்ய வேண்டியது தான்!

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time