அங்கீகாரமில்லா பள்ளிகள்! பலிகடா மாணவர்கள்!

-மணிகண்டன்

அங்கீகாரமின்றி பள்ளி தொடங்கி, பெற்றோர்களிடமே வட்டியில்லா கடனாக முதலீடு பெற்று பள்ளியை விரிவுபடுத்தி, அடிமாட்டுக் கூலிக்கு ஆசிரியர்கள், பணத்தை திரும்ப  கேட்டால் அடியாட்கள் என கல்வித்துறை, காவல்துறை இரண்டையும் கையாலாகாதவர்களாக்க முடிந்தால், இதோ இது போல் நீங்களும் கோடீஸ்வர கல்வி வள்ளலே:

தமிழ்நாட்டில் அங்கீகாரமில்லாத பள்ளிகள் பெற்றோர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்து நாமம் போடுகிறார்கள் என்பதற்கும், இது தொடர்பான புகார்களுக்கு கல்வித் துறையும், காவல்துறையும், நீதிமன்றங்களும் எப்படி மதிப்பளிக்கிறார்கள் என்பதற்கும் இது ஒரு  சான்று;

செங்கல்பட்டு , காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் மண்ணிவாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி  சிக்ஸா கிட்ஸ் ( SHIKSHAA KIDZ – E – TECHNO & SHIKSHAA LITERA MOUNT NURSERY AND PRIMARY SCHOOL)  என்பதாகும்.

கட்டிட உரிமம் இல்லாமலும் மற்றும் அரசு அங்கீகாரம் இல்லாமலும், 250 மாணவர் மாணவிகளுடன் இரண்டு கிளைகளாக இயங்கி, அரசாங்கத்தையும், கல்வித் துறையையும், பெற்றோர்களையும் ஏமாற்றி வருகிற இந்தப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து ஏமாந்த பெற்றோர்கள் காய்த்திரி, கணேசன், குமார், ராஜகோபால் ஆகியோர் தரப்பில்  கூறியதாவது;

2016ல் மேற்கண்ட பள்ளி துவங்கப்பட்டது. அப்போது அந்த பள்ளியில் PLAY SCHOOL, PRE – KG, LKG, UKG, மட்டும் தான் இருந்தது. பின்னர், 2020ல் MOUNT LITERA PUBLIC SCHOOL என்ற பெயரில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பும் துவங்கப்பட்டது. அதுவும் ZEE குழுமத்தில் PRIMARY பள்ளிக்கு மட்டும் நடத்துவதற்கான முறை.

2021ல் PRIMARY பள்ளியை 5- ஆம் வகுப்பு வரை பள்ளியில் கொண்டு வர வேண்டும் என பள்ளியின் கட்டிட விரிவாக்காத்திற்காக  நிறுவனர் சரண்யா மற்றும் அவரது கணவர் V. M சிவசங்கரனும் இணைந்து  பெற்றோர்களிடம் தனித்தனியாக இந்த விவரத்தை கூறி, ’’எங்களுக்கு கடனாக பணம் கொடுத்து உதவுங்கள் அந்தப் பணத்தை மாணவர்கள் படிப்பு முடித்து பள்ளியின் சான்றிதழை வழங்கும் போது கொடுத்து விடுகிறோம்’’ என  எங்களிடம் கூறினார்கள்.

நாங்களும் ZEE குழுமம் என்ற நம்பிக்கையில் பணத்தை தந்தோம் . அப்போது பள்ளியின் நிறுவனர் சரண்யா, எங்களிடம் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் வரை வாங்கினார்கள். வாங்கியதற்கு சாட்சியாக அந்தப் பள்ளியின் கடித திண்டிலேயே அவர்கள் எழுதிக் கொடுத்து பச்சை மையினால் நிறுவனர் சரண்யாவும் அவரது கணவர் V. M சிவசங்கரனும் கையெழுத்திட்டு பள்ளியின் முத்திரை வைத்து கொடுத்துள்ளார்கள். (இந்த வகையில் காய்த்திரி இழந்த தொகை ரூ 4,50,000, முருகதாஸ், சுரேஷ், சுரேஷ் ஆகியோர் இழந்தது தலா ரூ 50,000)

பெற்றோர்கள்; முருகதாஸ், சுரேஷ், சுரேஷ்

அதன் பிறகு தான் தெரிய வருகிறது,  ஏற்கனவே நடத்தி வரும் பள்ளிக்கு PRE-KG முதல் இரண்டாம் வகுப்பு வரை அவர்கள் ZEE குழும விதிகளை பின்பற்றாததாலும், உரிமத்தை புதுப்பிக்க தவறியதாலும்,  ZEE குழுமம் பள்ளியின் அங்கீகாரத்தை  ரத்து செய்த நிலையில்  நிறுவனர் சரண்யா  2021-லிருந்து தன்னிச்சையாக பள்ளியை நடத்தி வருகிறார் என்பது! ஆனால், இது சி.பி.எஸ்.சி பாடத் திட்டம் என அதிக கல்வி கட்டணத்தையும் வாங்கிவிடுகிறார்கள்!

பின்னர் ZEE குழுமத்தின் அங்கீகாரம் இருக்கும் பொழுது பள்ளி நடத்தி வந்த கட்டிடத்தை விட்டு வெளியேறி அந்தக் கட்டிடத்திற்கு எதிரிலேயே, மூன்று கடைகள் வரிசையாக இருக்கும் கடை கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, பழைய கட்டிடத்தின் முகவரி, மற்றும் உரிமையே பயன்படுத்தி பள்ளியை நடத்தி வருகிறார்கள். கடை கட்டிடத்திற்கு தனியாக அவர்கள் கட்டிட அனுமதி பெறவில்லை.

அதே போன்று அறிஞர் அண்ணா பிரதான சாலை, பொன்னுசாமி நகரில் இரண்டாவது கிளையை துவங்கினார்கள். இரண்டாவது புதிய கிளையின் கட்டிடம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடமாகும். இந்தக் கட்டிடத்திற்கும் முன்பு இருந்த பழைய கட்டிடத்தின் உரிமம் எண்ணையே பயன்படுத்தி வருகிறார்கள்.

ZEE குழுமத்தின் அங்கீகாரம் இல்லாததால் அவர்களுக்கு மாணவர்களின் பாட புத்தகம் கிடைக்கவில்லை. ஆதலால் அவர்கள் வெளியில் இருந்து பாட புத்தகத்தை நகலாக எடுத்து மாணவர்களுக்கு பாடப் புத்தகமாக கொடுத்தார்கள்.

எங்க பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்க்கும் சூழல் ஏற்ப்பட்ட பிறகு  நாங்கள் பணத்தை திரும்ப கேட்டோம். அவர்கள் பள்ளிக்குள்ளயே இருந்து கொண்டு எங்களை சந்திக்க மறுத்து, பள்ளி காவலாளியை விட்டு  விரட்டினார்கள்.

பின்பு ஒரு தருணத்தில் அருண் சௌத்திரி என்ற சாகுல் ஹமீது (பள்ளியின் CEO) அவர்களது ஆலோசனைப்படி,  ”என்னால் பணம் கொடுக்க முடியாது, உங்களால் ஆனதை பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று எங்களை அசிங்கப்படுத்தி, அவமானபடுத்தி வெளியேற்றினார்கள்.

SHIKSHAA KIDZ -பள்ளியின் நிறுவனர் சரண்யா, தலைவர் அருண் செளத்திரி என்ற சாகுல் ஹமீது.

மற்றொரு புறம் எங்கள் பிள்ளைகள் வேறு பள்ளியில் சேர்வதும் சவால் ஆனது. அங்கீகாரமற்ற பள்ளியின் சான்றிதழ்,மாணவர்களுக்கு எமிஸ் நம்பர் இல்லாதது ஆகியவற்றால் நாங்க பட்ட சிரமங்கள் சொல்லி மாளாது. இதே நிலை நாளை அந்தப் பள்ளியில் இருந்து வெளி வரும் மணவர்களுக்கும் ஏற்படும். ஆகவே தான் கல்வித் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகிறோம்.

இதையடுத்து  நாங்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தோம். அங்கும் அலைக்கழிக்கப்பட்டோம். அது  பலன் அளிக்காததால்  நாங்கள் நான்கு மாணவர்களின் பெற்றோர்கள் நவம்பர் 2023ல் இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சியை அணுகினோம். கட்சியின் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர்  ம. பாலாஜி  எங்களை அழைத்து கொண்டு  டிசம்பர் 2023ல் T 7-ஓட்டேரி காவல் நிலையத்தில்  பெற்றோர்கள் சார்பில் புகார் அளிக்க செய்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்)கட்சி உள்ளூர் தலைவர் ம.பாலாஜி

இது குறித்து ம.பாலாஜியிடம் பேசிய போது, ’’நாங்கள் தந்த புகாரை மூன்று ஆய்வாளர்கள்  விசாரித்து இறுதியாக ஆகஸ்ட் 2 2024 அன்று முதல் தகவல் அறிக்கை அதாவது FIR#309/2024 IPC SECTION 420, 406, 506 (1) நிறுவனர் சரண்யா மீது போடப்பட்டனர். அந்த வழக்கில் அவர்கள் தலைமறைவாகி முன் பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, ரூ 50,000 செலுத்தி நிபந்தனை பிணையில் வெளியில் வந்துவிட்டனர்.

பிறகு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அவர்களிடம் நாங்கள் கேட்டதில், ’’நீங்கள் குறிப்பிட்டுள்ள பள்ளியானது எங்கள் அலுவலகம் குறிப்பேட்டில் இல்லை. ஆதலால் , இது அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் பள்ளியாகும்” என்று தெளிவாக பதில் அளித்தார்.

இதில் இருந்து தெரிய வந்தது என்னவென்றால், SHIKSHAA KIDZ – E – TECHNO &SHIKSHAA LITERA MOUNT NURSERY AND PRIMARY SCHOOL அரசாங்கத்தின் அங்கிகாரம் இல்லாமலும் மற்றும் போலி கட்டிட உரிமத்தை பயன்படுத்தி பணம் பறிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து பெற்றோர்களையும், மக்களையும் அரசாங்கத்தையும், கல்வித் துறையையும் 2021ஆம் ஆண்டிலிருந்து ஏமாற்றி இதுவரையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதாகும்.

ஆதலால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை (தனியார் பள்ளிகள்) துணை இயக்குனரை அக்டோபர்1, 2024 அன்று நேரில் சந்தித்து மனு அளித்தோம். பிறகு அக்டோபர்-7   அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாளில் மனு அளித்தோம். பின்னர்,  அக்டோபர்14,  அன்று வண்டலூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தோம். பின்னர் அதே நாளில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தோம். இவர்கள் அனைவரும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள். ஆயினும் இன்று வரை இதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மேலும், இதுபோல அங்கீகாரம் இல்லாத பள்ளியில் படித்தால் அவர்களுக்கு EMIS (EDUCATION MANAGEMENT INFORMATION SYSTEM ) அதாவது (கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு) என்ற எண் மாணவர்களுக்கு கொடுக்க முடியாது. இந்த எண் இல்லாமல் மற்றொரு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது சவாலாகும். இந்த எண் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஆதார் எண் போன்றது. இந்த எண் தர இயலாத பள்ளியின் சான்றிதழ் செல்லாததாகும்.

அதேபோல், ஒவ்வொரு பள்ளிக்கும் UDISE (UNIFIED  DISTRICT  INFORMATION  SYSTEM FOR EDUCATION) (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு) எண் ஆகும். இந்த மேற்கண்ட குறியீடு இல்லை என்றால், அந்தப் பள்ளி அங்கீகாரம் பெறாத பள்ளி ஆகும்’’ என்றார் ம. பாலாஜி

இது குறித்து பள்ளியின் நிர்வாகிகளிடம் விளக்கம் பெறுவதற்கு அவர்களின் செல்பேசி எண்கள் 9940501028 மற்றும் 8428051028 ஆகியவற்றில் தொடர்பு கொண்டோம். செல்பேசி அடித்து ஓய்ந்தது. பதில் இல்லை.

பெற்றோர்களை ஏமாற்றி வரும் அங்கீகரமற்ற பள்ளியை தொடர்ந்து நடத்த முடியும், மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்க முடியும்… என இது போன்ற பள்ளிகள் தடையின்றி செயல்பட முடிவது, இங்கு ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வியைத் தான் மக்களிடம் ஏற்படுத்தும். இனியேனும் கல்வித் துறையும், காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து இனியும் மாணவர்கள் பலிகடா ஆவதையும், பெற்றோர் ஏமாற்றப்படுவதையும் தடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மணிகண்டன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time