பிழைப்புவாத அரசியல்! பின் தொடரும் தொண்டர்கள்!

-சாவித்திரி கண்ணன்

‘மதம் ஒரு அபீன்’ என மார்க்ஸ் கூறினார்! இந்த ஜனநாயக யுகத்தை சர்வாதிகாரமாக்கி கொள்ள அரசியலையே அபினாக மாற்றிவிட்டார்கள், அரசியல்வாதிகள்! ‘கட்சி விசுவாசம்’ என்பது கண்களை குருடாக்க வல்லதாகவும், ‘தலைமை விசுவாசம்’ என்பது தற்கொலைக்கு ஒப்பானதாகவும் மாறியுள்ள காலச் சூழல் குறித்த ஒரு அலசல்;

ஒரு காலத்தில் –சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு லட்சியவாத அரசியல் தழைத்தோங்கி இருந்தது. ‘பொது வாழ்வும், அரசியலும் தொண்டாகப் பார்க்கப்பட்ட பொற்காலம்’ ஒன்று நிஜமாகவே இருந்தது என்பதை  ஆச்சரியத்தோடு நினைத்துப் பார்க்கும் நிலையில் தான் நாம் இன்று உள்ளோம். இன்றைக்கும் அரசியலில் லட்சியவாத மனிதர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக அரிதாகக் காணப்பட்டாலும், பிழைப்புவாத அரசியலே தற்காலத்தில் தழைத்தோங்கி உள்ளது.

கட்சி விசுவாசத்திற்காக தர்ம நியாயங்களை காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு தொண்டர்களை மயக்கி வைத்துள்ளார்கள் நம் அரசியல் கட்சித் தலைவர்கள்!

எதிர் கருத்தாளர்களை எதிரிகளாக கருதி, வன்மத்தை வெளிப்படுத்துவதே ஒருவர் கட்சிக்கு செய்யும் தொண்டு என்றாகிவிட்டது.

‘மதம்’ என்பது எப்படிச் சிலருக்கு பிழைப்பாக உள்ளதோ, அதே போல ‘கட்சி’ என்பதும் தற்போது பலருக்கு ஒரு பிழைப்பாகிவிட்டது.

மதத் தலைமை பீடத்தில் உள்ள குரு  எப்படி கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகார மையமமோ, பக்தர்களால் அவரிடம் ”ஏன்?”  ”எதற்கு?” என கேள்வி எழுப்ப முடியாதோ.., அதே போல அரசியல் கட்சித் தலைவரும் என்ன செய்தாலும், அந்தக் கட்சியில் உள்ள தொண்டர்களால் கேள்வி கேட்க முடியாது.

”ஏன்? எதற்கு?” என்ற கேள்விகளையோ, ‘இது ஏற்க முடியாதது’, ‘இதில் நியாயமில்லை’, ‘இது தவறு’, என்ற விமர்சனங்களையோ தலைமையைப் பார்த்து மதத்தில் இருப்பவனும் செய்ய முடியாது. கட்சியில் இருப்பவனும் செய்ய முடியாது.

பேசிய கொள்கைக்கும், நடைமுறை செயல்பாட்டுக்கும் தொடர்பே இல்லாமல் போனாலும், ஏன் கொள்கைக்கு எதிராகவே செயல்பட்டாலும், தன் கட்சித் தலைமையை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பவனே கட்சியில் தொடர்ந்து இருக்க தகுதியானவனாகிறான்.

அதுவும் அதிகாரத்தில் உள்ள கட்சித் தலைமைக்கு அடிமைச் சேவகம் செய்வதன் மூலம், தானும் ஒரு சிறு அதிகார மையமாக விரும்புகிறார்கள் பலர். கட்சிப் பதவிகளை சமூக அந்தஸ்த்துக்கான அடையாளமாக்கிக் கொண்டபடியால் கட்சித் தலைமை செய்யும் அநீதிகளை தட்டிக் கேட்பதால்  அந்த அந்தஸ்த்து தலைமையால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே, ‘ஆன வரை நம் பிழைப்பு நடந்தால் போதும்’ என அமைதியாகிவிடுகின்றனர், இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்கள்! இன்றைய அரசியலில் கொத்தடிமையாக இருப்பதே பிழைப்பதற்கான வெற்றி வழியாக பார்க்கப்படுகிறது.

‘அதிகாரத்தில் தொடர்போடு இருந்தால் தான் நான்கு பேர் கேட்கும் உதவிகளை செய்ய முடியும்…’என அதிகாரத் தொடர்பில் அகம் மகிழ்பவர்கள் சிலர்! நான்கு பேர் கேட்கும் உதவிகளை செய்யும் அளவுக்கு இருக்கும் அதிகாரத் தொடர்புகளை பெற்றதையடுத்து, தன்னை வளமாக்கிக் கொள்வதற்காக நாட்டு மக்களை சுரண்டவும் பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள்!

‘அதிகாரத் தொடர்பே இல்லாமல் வாழும் ஆயிரமாயிரம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை கிடைக்கச் செய்வதே அரசியல் அறம்’ என்பது மாறி, ‘தன்னைச் சார்ந்தவர்களின் நலனுக்காக  பெருந்திரள் மக்களின் நியாயமான உரிமைகளை பலிகொடுப்பவனே சிறந்த அரசியல்வாதி’ என அவனால் பலன் பெற்ற துதிபாடிகளால் கொண்டாடப்படுகிறான்.

எங்கே மக்களுக்கு நன்மைகள் செய்யும் வாய்ப்புள்ள பதவிகள் வாய்த்தாலும், அங்கே மக்கள் பயன்பெறுவதற்கான வாய்க்கால்களை திசைமாற்றி, தனி வழி சமைத்து  தன் தோட்டத்திற்கும், தன்னைச் சார்ந்தவர்களின் தோட்டங்களுக்கும் மட்டுமே தண்ணீர் பாய்ச்சும் துணிச்சல் உள்ளவன் தனிப் பெரும் தலைவனாகிறான்.

பொது நலச் சிந்தனையை தூக்கி எறிந்துவிட்டு, பொது நலக் கண்ணோட்டம் உள்ளவனாக நடிக்கத் தெரிந்தவனை மக்கள் மீண்டும், மீண்டும் நம்பி ஏமாறுகிறார்கள். பிறகு, ‘ஏமாற்றுவது அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமை, அதில் நாம் எப்படித் தலையிட முடியும்..?’ என சமாதானமாகிக் கொள்கிறார்கள்.

பக்தி மார்க்கத்தில ”ஜெய் ஸ்ரீராம்” என்றோ, ”சம்போ சிவ சம்போ” என்றோ, ”கோவிந்தா, கோவிந்தா” என்றோ, ”ஓம் நமச்சிவாய” என்றோ, ”வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா” என்றோ, ஓங்கி குரல் கொடுக்கும் போது ஏற்படும் சிலிர்ப்புகளைப் போல,

”பாரதமாதாகி ஜெ” என்றோ,

”ரெட் சல்யூட், ரெட் சல்யூட்” என்றோ,

”இந்துஸ்தான் ஜிந்தாபாத்”  என்றோ,

”தானைத் தலைவர், தங்கத் தலைவர் வாழ்க” என்றோ,

”புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி வாழ்க” என்றோ,

”எழுச்சித் தலைவர், ஏழைகளின் தலைவர் வாழ்க” என்றோ,

”தளபதி வாழ்க” என்றோ,

கழுத்து நரம்பு புடைக்க குரல் எழுப்பும் போது சிலிர்த்துப் போகிறார்கள் தொண்டர்கள்!

‘கொள்கைகள் என்பவை கடைபிடிக்க வேண்டியவை அல்ல, கவர்ச்சியான கோஷத்திற்கானவை. அவை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லாதவை! எப்போதும் நடைபிணமாகவே வைத்திருக்க வேண்டியவை’ என்பது இன்றைய பிழைப்புவாத அரசியலின் எழுதப்படாத விதியாகி உள்ளது.

உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டே, அவற்றை கொடுப்பது போல உற்சாகப்படுத்த முடிந்தால் நீ தலைவன்!

தோல்விகளையும், துன்பங்களையும் பெற்றுத் தந்து, வெற்றிக்கு வித்திட்டதாக மக்களை நம்ப வைக்க முடிந்தால் நீ தலைவன்.

அதிகாரத்தில் உட்கார்ந்துவிட்டால் மக்கள் குரலுக்கு செவி சாய்க்கவே வேண்டியதில்லை.

தேர்தல் நேரத்தில் காதில் தேன் ஊற்றினால் போதும் சிலருக்கு!

கரன்ஸியை காட்டினால் போதும் மற்ற சிலருக்கு!

எதிர்கட்சி குறித்த அச்சத்தையும், அவ நம்பிக்கையையும் விதைத்தால் போதும் வேறு சிலருக்கு.

இது தான் சிம்பிளான அரசியல் சூத்திரம்!

அவனவன் பசிக்கு அவனவன் உழைக்கத் தானே போகிறான்! அவனவன் முன்னேற்றத்திற்கு முட்டி மோதி சக்தியுள்ளவன் பிழைத்துக் கொள்வான், சக்தியில்லாதவன் விதியை பழிபோட்டு ஆறுதல் அடைவான். தங்கிவிட்டவனோ கட்சிக் கொள்கைகளை பேசி புளகாங்கிதப்பட்டு கிடைக்கும் ரொட்டித் துண்டுகளை கவ்வி அமைதியாகிவிடுவான்.

மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற வகையில் கும்பல் கலாச்சாரம், அடையாள அரசியல், கோஷ்டி செயல்பாடுகள், அதிகார ஆசை அவன் ரத்தத்திலும், சித்தத்திலும் கலந்து போய்விட்டன. இதைத் தான் அரசியல் கட்சிகள் அறுவடை செய்கின்றன.

அரசியல் கட்சி என்ற அபீனை  கொள்கை பேசியோ, லட்சிய நோக்கங்களை விதைத்தோ, அதிகார மயக்கத்தை ஏற்படுத்தியோ, ஆதாயங்களை தந்தோ குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கூட்டத்திற்கு கடத்திவிட்டால் நீங்கள் தான் கடவுள்!

இரக்கமுள்ளவனை போல பாவனை காட்டி இரக்கமில்லாமல் வாழும் கலை தெரிந்தவர்களே அரசியல்வாதிகள்!

மந்தை சமூகம், விந்தை மனிதர்கள்! இரக்கமில்லா அரசியல்வாதிகள்!

ஜனநாயகம் என்பது காகிதத்தில் இருந்தால் போதுமானது. மக்களாட்சி என்பது அவனை மனதளவில் நம்ப வைத்துவிட்டால் போதுமானது. இது தான் இன்றைய சமூக, அரசியல் யதார்த்தமாகும்.

அரசியல் போதையானது! கொள்கைகளோ அபீனானது! லட்சியங்களோ நீர்த்துப் போனது!

வாழ்க ஜனநாயகம்!, வாழ்க மக்களாட்சி!

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time