ஓயாத சாதி மோதல்கள்! உண்மையான தீர்வு என்ன?

-சாவித்திரி கண்ணன்

வன்முறையைத் தூண்டும் வன்ம பேச்சுக்கள்! சாதி உணர்வை  தழைத்தோங்க வைக்கும் சந்தர்ப்பங்கள்! இந்த இரு கட்சிகளும் ஏன் தொடர்ந்து மோதிக் கொண்டே இருக்கிறார்கள். இதன் பின்னணியில் ஆளும் கட்சி உள்ளது என்ற குற்ற்ச்சாட்டு உண்மையா? யாரின் தூண்டுதல்? யார்? யார் காரணம்?

”பாமகவை அடக்க முடியாது. நாங்க பழைய நிலைக்கு சென்றால் நீங்க தாங்கமாட்டீங்க. உங்க மனசெல்லாம் வன்னியர் வெறுப்பு தான் இருக்கு. எங்களுக்குள் சண்டை மூட்டி அதில் பெட்ரோல் ஊற்றி தீ வளர்த்து குளிர் காய்கிறீர்கள்” என்று ராமதாஸும், அன்புமணியும் கொந்தளிக்கிறார்கள்.

”கொடிக் கம்பத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை. வன்முறையை தூண்டியவர்களின் மீது நடவடிக்கை இல்லை. காவல்துறை வேடிக்கை பார்க்கிறது” என திருமாவளவனும் கொந்தளிக்கிறார்!

ஒரு சில தனி மனிதர்களின் சண்டைக்குள் இரு சாதிக் கட்சிகள் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள பகையையையும், வெறுப்பையும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்…உண்மையில் இந்த சம்பவத்தில் இந்த இரு கட்சிகளுக்குமே வேலையில்லை. தகராறுகளில் சம்பந்தப்பட்ட இரு தரப்பும் இந்த இரு சாதிகளையும் சேராதவர்களாக இருந்திருக்கும் பட்சத்தில் இந்தப் பிரச்சினைக்குள் பாமகவும் நுழைந்திருக்காது. விசிகவும் நுழைந்திருக்காது.

எங்காவது ஒரு  மூலையில் இது போன்ற ஒரு சம்பவம் நடக்காதா? என்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அலைகிறார்கள் இரு கட்சிகளிலும் உள்ள சாதி வெறியர்கள்! இந்த சம்பவத்தை ஆதியோடந்தமாக பார்த்தால் இந்த இரு கட்சிகளும் அடித்துக் கொள்வதில், வசைமாறிப் பொழிவதில்  இந்த இரு சாதியின் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகிலுள்ள மஞ்சகுப்பத்தைச் சேர்ந்த வன்னிய இளைஞர்கள் ஆறு பேர் தலித் மக்கள் வசிக்கும் உடையூர் அருகில் உள்ள சுடுகாட்டுக்கருகே மது அருந்தி ஜாலியாக இருந்துள்ளனர். அப்போது அந்த வழியே சென்ற தலித் இளைஞரை அழைத்து ஊரைக் கேட்டு வம்பிழுத்துள்ளார்கள். ‘நம்ம ஏரியாவுக்குள்ள வந்து நம்மையே வம்பிழுப்பதா? இவங்க திமிரை அடக்கணும்’ என இந்த இளைஞர் உணர்ச்சிவசப்பட்டு ஊரில் உள்ள தன்  ஆட்களை அழைத்து அந்த ஆறு பேரையும் அடித்து ஓட, ஓட விரட்டி உள்ளனர்.

இதோடு இந்த பிரச்சினை முடிந்திருந்தால் இவ்வளவு விஸ்வரூபம் எடுத்திருக்காது. இன்றைக்கு கடலூர் மாவட்டத்தையே பதற்றத்தில் ஆழ்த்தி இருக்காது. ஆனால், அந்த குடித்து வம்மிழுத்த கூட்டத்தை விரட்டிய தலித் இளைஞர்கள் கோஷ்டி அந்த வழியே வந்த செல்லதுரை என்ற இந்த பிரச்சினைக்கு சம்பந்தமில்லாத இளைஞரான செல்லத்துரையை வம்பிழுத்து அடிப் பின்னி எடுத்து அதை வீடியோவாகவும் போட்டுள்ளனர்.

செல்லத்துரை ஏற்கனவே அங்கு  என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில் தன் குடிகார நண்பர்களை அங்கு தேடியுள்ள வகையில் தான் இந்த ஆபத்திற்கு ஆளாகியுள்ளார். குற்றுயிரும், குலை உயிருமாக  செல்லத்துரையை ரத்தம் சிந்தச்  சிந்த இந்த கோஷ்டி அடித்த நிலையில் போட்டு சென்ற நிலையில், அங்கு திரண்ட வன்னிய அமைப்பினரும், பாமகவினரும் உடனடியாக அவரது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவர் உயிரை காப்பாற்ற முயற்சி எடுக்காமல், அங்கு  போராட்டம் நடத்த, அங்கு ஆம்புலன்ஸுடன் போலீஸ் வந்து செல்லத்துரையை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க முயற்சித்தனர். இந்தக் கூட்டத்தினரோ, அந்த ஆம்புலன்ஸை மறித்து, ”முதலில் தாக்கியவர்களை கைது செய்யுங்கள்” எனக் கூறியுள்ளனர்.

உண்மையில் இந்த செயலானது,செல்லத்துரையை தாக்கிய இளைஞர்களின் செயலைவிட மோசமானது. தங்கள் சாதியை சேர்ந்த ஒருவன் உயிருக்கு போராடும் போது, அவன் உயிரை காப்பாற்ற தாங்களும் முயற்சிக்காமல், அப்படி உயிரை காக்க வந்த காவல்துறையையும் தடுக்கிறது என்றால், அங்கு சிகிச்சை கிடைக்காமல் செல்லதுரை இறந்திருக்கும் பட்சத்தில் அது மிகப் பெரும் வன்முறைக்கு தான் அங்கு வழிவகுத்திருக்கும். அத்துடன் தலித் குடியிருப்பு பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறி இருக்கும்.

இந்தச் சூழலில் தான் அங்கு திரண்ட அந்த ஊரின் எளிய மக்கள் ”இதற்குத் தான் இந்த ரெண்டு சாதிகட்சிகளுமே இங்கு வேண்டாம் என்று சொல்கிறோம். உங்களுக்கு இங்க இடம் கொடுத்தால் எங்க நிம்மதியே போயிடும். ஆகவே, உங்க கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுகிறோம்” என சொல்லி உள்ளனர். அதில் ஒரு பெண்மணி ஒரு கட்சிகளின் கொடிக் கம்பத்தையுமே கடப்பாறையால் இடித்துள்ளார். இந்த ஊர் மக்களின் மன நிலை தான் – அதுவும் குறிப்பாக அந்தப் பெண்மணியின் உள்ளக் கொந்தளிப்பு தான் – இன்றைக்கு வட தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களின் உணர்வாகும்.

என்ன செய்திருக்க வேண்டும் இந்த இரு கட்சிகளின் தலைமையும், முதலில் தங்களுக்கு உரிமையானவர்களை கண்டிக்க வேண்டும். தங்கள் தரப்பு இளைஞர்களிடம் நிதானத்தையும், சமூக பொறுப்பையும் வளர்த்தெடுக்க இது போன்ற சந்தர்ப்பங்களில் வினையாற்றி, இருதர்ப்பிலும் மேலும் விரோதங்கள் வளராமல் நல்லிணக்கம் வளர செயலாற்ற வேண்டும்.

அதைவிட்டு வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழியோ, ”ஏண்டா  நீங்கள்ளாம் அடிச்சுட்டு வர்ரறவங்களாக இருப்பதைவிட்டுட்டு அடி வாங்கிட்டு வருகிறீர்களே, வெக்கமாக இருக்கு..”என தூண்டிவிடுவதும்,

”ஒகோ அடிப்பீங்களா? அப்படி சொல்ற உங்க தலையை வெட்டி எடுப்போம்”னு விசிகவில் உள்ள செல்வி முருகன், செல்லப்பன் போன்றோர் பேச பிரச்சினை மேன்மேலும் உச்ச நிலையைத் தான் அடைகிறது.

சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரு கட்சிகளும் வட தமிழகத்தை எப்போதும் பதற்றத்திலேயும், அச்சத்திலேயுமே வைத்துள்ளனர். இதனால் அங்கு புதிய, பெரிய கல்வி நிலையங்களை தோற்றுவிக்கவும், நல்ல தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவும் முதலீட்டாளர்கள் பயப்படுகிறார்கள். ஆகவே கல்வி என்றாலும், வேலை வாய்ப்பு என்றாலும் வட தமிழகத்தில் உள்ள மாணவர்களும், இளைஞர்களும் வேறு இடங்களை நோக்கி வருகின்றனர்.

மேற்படி விவகாரத்தில் காவல்துறை இருதரப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்துள்ளது. தங்களுக்கு மத்தியில் அதிகாரத்தில் உள்ள பாஜகவின் ஆதரவு இருக்கிறது என்ற துணிச்சலில் தமிழக அரசு மீதும், முதல்வர் மீதும் இஷ்டத்திற்கு குற்றச்சாட்டு வைத்து மிரட்டல் தொனியில் பேசுகிறார்கள், ராமதாஸும், அன்புமணியும். இவர்களின் சுய நல நடத்தையால் சொந்த சாதி மக்களிடமே முற்றிலும் செல்வாக்கு இழந்துள்ள பாமகவை தூக்கி நிறுத்த இந்த வாய்ப்பை பெரிய ஜாக்பாட்டாக பார்த்து வன்முறையை தீயை வளர்க்கத் துடிக்கிறது பாமக தலைமை!

அதே போல தலித் மக்களிடம் செல்வாக்கு இழந்து, வெறும் உணர்ச்சிகரமான இளைஞர்களின் சிறு கூட்டத்தை வைத்துக் கொண்டு, மக்களிடம் இருந்து  முற்றிலும் விலகி அதிகார அரசியல் செய்யும் விசிக தலைவர் திருமாவளவனும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இளைஞர்களை உசுப்பேற்றி தன் ‘வீரத்’ தலைமையை நிலை நாட்டிக் கொள்ளத் துடிக்கிறார்.

வன்முறையை தூண்டும் பேச்சுக்கள் இருதரப்பிலும் பேசப்பட்டன!

இந்த இரு கட்சிகளும் தனித்து  நின்றால் ஒரு தொகுதியில் கூட ஒரு போதும் வெற்றி பெற முடியாது. இத்தனை வருட அரசியலில் – எம்.பி, எம்.எல்.ஏ பதவிகள் மூலமாக தங்களுக்கு சேவையாற்றக் கிடைத்த வாய்புகளை சரியாக பயன்படுத்தி இருந்தாலே இவர்கள் மக்களிடம் ஆழமாக வேருன்றி இருப்பார்கள், குறிப்பிட்ட அந்தந்த இடங்களிலேனும். ஆனால், வாய்ப்பு பெற்ற இடங்களில் எல்லாம் இவர்களின் கட்சிகள் வளரவில்லை. மாறாக சுருங்கிக் கொண்டே தான் வருகின்றன.

இந்த இரு சாதி கட்சிகளாலும் இரு சாதிகளின் மக்களே அதிகமாக பாதிப்படைகிறார்கள். இவர்களை யாரும் தூக்கி சுமக்காமல் விட்டுவிட்டால் – பத்து வருடத்திற்கு ஒரு எம்.எல்.ஏவோ, எம்.பியோ கூட தராமல் விட்டால் – இந்த இரு கட்சிகளுமே காணாமல் போய்விடும். பெரிய கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே இந்த சாதி கட்சிகளுக்கு சாதகமாகிவிடுகிறது.

இந்தப் பிரச்சினையை பொறுத்த வரை இரு தரப்பையுமே போராட அனுமதித்து காவல்துறையினர் இடம் தந்திருக்கக் கூடாது. ஆர்ப்பாட்டத்திற்கோ, மறியலுக்கோ இது போன்ற சந்தர்ப்பத்தில் அனுமதி தந்தால் இருதரப்பும் நிதானம் இழந்து அனல் வார்த்தைகளைத் தான் கக்குவார்கள். எனவே, பிரச்சினையின் துவக்கத்திலேயே  வலுவாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் பேசுபவர்கள், செயல்படுபவர்களை வீடு போய் சேரும் முன்பாகவே கைது செய்திருக்க வேண்டும்.

ஆட்சியாளர்கள் இந்த நிகழ்வுக்கு காரணமில்லை. இதை தூண்டவோ, எந்த தரப்பிற்கும் ஆதரவாகவோ திமுக அரசு செயல்பட்டதாகத் தெரியவில்லை. இவர்களே அடித்துக் கொண்டு பழியை ஆட்சியாளர்கள் மீதும், காவல்துறை மீதும் போடுகிறார்கள்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time