400 படங்களுக்கு மேல் நடித்து நவரசங்களையும் வெளிப்படுத்தியவர் டெல்லி கணேஷ்! இவர் கடந்து வந்த பாதைகள், முன்னணி இயக்குனர்கள், ஸ்டார் நடிகர்களுடனான கலையுலகச் சாதனைகள், அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாடகங்களிலும், திரையிலுமான கலைப் பயணங்கள் குறித்த ஒரு பார்வை;
இயக்குனர் கே.பாலச்சந்தர், காத்தாடி ராமமூர்த்தி குழுவினர் போட்ட பட்டினப்பிரவேசம் நாடகம் மிகவும் பிடித்துப் போய் அதைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார். கிராமத்திலிருந்து சொத்துக்களை விற்றுவிட்டு நகரத்துக்குக் குடிபெயர்ந்த குடும்பத்தினர் படும் கஷ்டங்களை சிந்தனையைத் தூண்டும் விதமாக விசு எழுதிய நாடகம் அது.
ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்து முழுவதும் வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்க முடிவு செய்யப்பட்டது . ஜெய் கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, சிவச்சந்திரன் ஆகிய மூவருக்கும் மூத்த அண்ணன் வேடத்தில் யாரைப் போடலாம் என்கிற ஆலோசனை நடந்தபோது, ‘ஜெய்சங்கரைப் போடலாமா, அசோகனைப் போடலாமா’ என்று பாலசந்தர் கேட்ட போது, “நாடகத்தில் நடித்த கணேசனையே போடலாம் சார். நல்லாப் பண்ணுவான் ‘’ என்று நாடகாசிரியர் விசு சொன்னார். எல்லா டெஸ்ட்டுகளும் வைத்துப் பார்த்து விட்டு பாலச்சந்தர் ஓ.கே.சொல்லிவிட்டார்.
”உனக்கு என்ன பெயர் வைக்கலாம்’’ என்று கணேசனிடமே கேட்டார்.
“கணேசன்ங்கிற பேரே இருக்கட்டும் சார்” என்று பதில் வந்தது.
”கொஞ்சம் ஸ்டைலா இருக்கணும்யா பேரு. திருநெல்வேலிக்காரன் தானே. நெல்லை கணேசன்னு வைச்சுக்கலாமா?” என்று கேட்டு விட்டு “வேணாம்யா. அரசியல்வாதி பேரு மாதிரி இருக்கு’ என்றார்.
“ வல்லநாடு தான் சொந்த ஊர்.. அதனால வல்லை கணேசன்னு வைக்கலாம்” என்று கணேசன் சொல்ல,
பாலச்சந்தர் ”வல்லை கணேசன்னா’ செக் வல்லை, பணம் வல்லைன்னு நெகட்டீவா ‘வல்லை வல்லை’ன்னு சொல்ற மாதிரி இருக்கு. வேணாம்யா. இங்க வர்றதுக்கு முன்னாடி டெல்லிலே தானே இருந்தே. டெல்லி கணேசன்னு வைக்கறேன். நல்லாருக்கும்யா. நல்லாருப்பே’’ என்று சொல்லிப் பெயர் வைக்கும் படலத்தை முடித்து வைத்தார்.
டெல்லி கணேஷ் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாளில் பிறந்தார். படிப்பு முடிந்ததும் 1964 ஆம் ஆண்டில் ஏர்ஃபோர்ஸில் வேலை கிடைத்து டெல்லி சென்று விட்டார். டெல்லியில் உள்ள தமிழ் அமைப்புகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அடிக்கடி தலை காட்டுவார். ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிக்க நடிகர் வேண்டும் என்று தேடுதல் நடக்கையில் முதல் ஆளாக ஆஜராகிவிடுவார். சுற்றியிருப்பவர்களைப் போன்று மிமிக்கிரி செய்து நடித்துக் காட்டுவதும் அவரது பொழுது போக்காக இருந்தது.
1971-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரின் போது ஏராளமான இராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயம்பட்ட வீரர்களுக்கு ஆறுதல் சொல்லவும் உற்சாகப் படுத்தவும் முப்படை வீரர்கள் வாரந்தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். நடிகர் ஒருவர் வராததால், அந்த வேடத்தில் கணேசனை நடிக்கச் சொன்னார்கள். பதட்டத்தில் கணேசன் டயலாக்கை மறக்க. அவரது சக நடிகர் எரிச்சலில் அவரை அடித்தார், பார்வையாளர்கள் இதை ரசித்ததைப் பார்த்த அவர், உற்சாகமாகி மீண்டும், மீண்டும் அடித்தார். சூழ்நிலையைச் சமாளிக்க வலியை பொறுத்துக் கொண்டு கணேசன் சில மேனரிசங்களை வெளிப்படுத்தினார். இது அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது. இச்சம்பவம் அவரது கலை வாழ்க்கைக்கு ஆரம்பமாகவும், இன்னமும் பயிற்சி பெறத் தூண்டுவதாகவும் அமைந்தது.
இது போன்ற அனுபவங்களுக்குப் பின்னர் அவருக்கு மேடை நன்கு பழகியதும், எல்லோரும் அவரது நடிப்பைப் பாராட்ட ஆரம்பித்தனர். அதுவே நடிப்பைத் தொடர வைத்தது. பின்னர், டெல்லியில் உள்ள தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் தமிழ்நாடகக் குழுவில் உறுப்பினராகச் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
1974 ஆம் ஆண்டில் இந்திய வான்படையில் பணிக்காலம் முடிந்து, தன் கலைஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்ள 1979 களின் தொடக்கத்தில் இந்திய உணவுக் கழகத்தின் சென்னை அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். அமெச்சூர் நாடகக் குழுக்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்தார். மேஜர் சுந்தர்ராஜன், விசு, சோ ராமசாமி மற்றும் நாகேஷ் ஆகியோருடன் அறிமுகம் கிடைத்தது.
காத்தாடி ராமமூர்த்தியுடன் நட்பு ஏற்பட, அவருடைய நாடகக் குழுவில் இணைந்தார். விசு எழுதிய ‘டெளரி கல்யாணம் வைபோகமே’ நாடகத்தில் மாம்பலம் குசேலராக நடித்தார். இந்த நாடகத்துக்குப் பிறகு தான் ‘பட்டினப்பிரவேசம்’ நாடகம். இதைப் பார்க்க வந்த பாலசந்தர் திரைப்படமாக்க முடிவு பண்ணினார்.
திரைப்பட உலகுக்கு வந்த பின்னரும் நாடகங்களில் நடிப்பதை கணேஷ் நிறுத்தவில்லை. அவர் சொந்தமாக ‘ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ்’ என்ற பெயரில் நாடகக் குழுவைத் தொடங்கி, ‘மீண்டும் சுப்ரபாதம்’ ‘மாலை சூடவா’ ‘மாங்கல்யம் மனசு போல’ போன்ற நாடகங்களை அரங்கேற்றினார். சுமார் பதினைந்து வருடங்கள் நாடகங்களில் நடித்தார்.
பட்டினப் பிரவேசம் படத்திற்குப் பிறகு தொடர்ந்து படவாய்ப்புகள் வர ஆரம்பித்தன. துரை இயக்கத்தில் ஒரு வீடு ஒரு உலகம் திரைப்படத்தில் கதாநாயகி ஷோபனாவின் தந்தையாக குருக்கள் வேஷத்தில் டெல்லி கணேஷ் நடித்தார். இப்படத்தின் டைட்டிலில் டெல்லி கணேசன் ‘டெல்லி கணேஷ்’ஆக மாறி இருந்தார்.
துரையின் இயக்கத்தில் உருவான அடுத்த படமான ‘பசி’யிலும் டெல்லி கணேஷ் இடம்பிடித்தார். விளிம்பு நிலைக்கும் கீழ் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கும் மனிதர்களின் நிலைமையை எல்லோருடைய கவனத்துக்கும் கொண்டு வந்து தேசிய அளவில் பெரும் பாராட்டையும், விருதுகளையும் பெற்ற படம் ‘பசி.’ இந்தப் படத்தில் ஷோபாவின் தந்தையாக ரிக்சா ஓட்டுபவராக நடித்திருந்தார்.
முந்தைய படத்தில் கோயில் குருக்களாக பிராமண பாஷை பேசிக்கொண்டு நடித்த டெல்லி கணேஷ் பசி படத்தில் வேறொரு புதிய மனிதராக நம் முன்னால் தெரிந்தார். தனக்கு எந்த வேடம் வழங்கப்படுகிறதோ, அந்தப் பாத்திரத்துக்குள் தன்னை அச்சு அசலாக அப்படியே பொருத்திக் கொள்ளக் கூடியவர் என்ற பெயரெடுத்தார்.
பாலச்சந்தருடன் நெடிய பயணம்;
டெல்லிகணேஷின் இயல்பான நடிப்பும், உடல்மொழியும், முகபாவங்களும் பாலசந்தருக்கு ரொம்பவுமே பிடித்துப் போனதால் சிம்லா ஸ்பெஷல், அச்சமில்லை அச்சமில்லை, சிந்து பைரவி, கல்யாண அகதிகள், புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி, ஜாதிமல்லி என்று தன் படங்களில் தொடர்ந்து டெல்லிகணேஷூக்கு வாய்ப்பளித்தார். பாலச்சந்தர் படங்களின் ஆஸ்தான அப்பாவாகவே டெல்லி கணேஷ் உருவெடுத்தார்.
பாலச்சந்தரின் ‘சிந்து பைரவி’ படத்தில், குடிப்பழக்கம் உள்ள மிருதங்கக் கலைஞர் குருமூர்த்தியாக, டெல்லி கணேஷ் மிரட்டியிருப்பார்.’இனிமேல் நீ எனக்கு வாசிக்கக்கூடாது’ என்று சிவகுமாரால் துரத்தப்பட்ட அன்று, நள்ளிரவு நேரத்தில் நல்ல போதையில் குருமூர்த்தி ஆவேசமாக மிருதங்கம் வாசித்துக் கொண்டிருப்பார். “அண்ணா.. என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்ற வரைக்கும் நான் வாசிச்சிக்கிட்டேதான் இருப்பேன். நிறுத்த மாட்டேன்’ என்று அடம் பிடிப்பார்.
குடிபோதையில் சிவகுமாரின் காரை மறித்து ‘நீயெல்லாம் ஒரு மனுஷனாய்யா.. இன்னொரு பொண்ணோட சகவாசம் உனக்குத் தேவையா.. அந்தப் பொம்பளையோட பழக்கத்தை விட்டுடு’ என்று வாய்க்கு வந்ததைப் பேசுவார்.
“குடிக்க மாட்டேன்னு என் மேல கூட சத்தியம் பண்ணீங்களே?’ என்று பிறகு சுலட்சணா விசாரிக்கும் போது “இல்ல மன்னி.. சத்தியமா நான் குடிக்கலை. உங்களுக்குத் தந்த வாக்கை மீறலை. குடிச்சா மாதிரி நடிச்சேன்.. அப்பதானே அவர் முன்னாடி போய் தைரியமா பேச முடியும்?” என்று சொல்லி விட்டுக் கடந்து செல்லும் போது டெல்லி கணேஷின் உடல் மொழி, பாவனை, குரல் எல்லாம் கலந்து ஆஹா! அது ஓர் அற்புதம்.
மாற்று சினிமா இயக்குனர்களின் கலைஞன்!
தான் நடிப்பதற்கு என்ன பாத்திரம் தரப்படுகிறதோ, அதை நன்கு உள்வாங்கிக் கொண்டு நியாயம் செய்யக்கூடிய ஒரு நடிகர் கிடைத்து விட்டால் இயக்குனர்களுக்கும் கொண்டாட்டம் தானே. வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட படங்களைக் கொடுக்க நினைக்கும் ஒவ்வொரு இயக்குனரும் டெல்லி கணேஷைத் தம் படங்களில் இணைத்துக் கொண்டார்கள்.
கே எஸ் சேது மாதவனின் ‘நிஜங்கள்’, ஆர் சி சக்தியின் ‘உண்மைகள்’, கோமல் சுவாமிநாதனின் ‘அனல் காற்று’, டிவி சந்திரனின் ‘ஹேமாவின் காதலர்கள்’, ஜெயபாரதியின் உச்சி வெயில் ஐ வி சசியின் ‘கோலங்கள்’ நாசரின் ‘அவதாரம்’ ஆகிய படங்களில் டில்லி கணேஷ் நடித்து முத்திரை பதித்தார்.
நவரசங்களை வெளிப்படுத்திய நல்லதோர் கலைஞன்
தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தை ஏற்று நடித்த டெல்லி கணேஷ், அப்பாவியாக, நல்லவனாக, ஏழையாக, பணக்காரனாக, தீயவனாக, போலியானவனாக, பக்தனாக,கொடூரமானவனாக, உன்னதமானவனாக, அகம்பாவியாக, மலிவானவனாக என்று பல்வேறு படங்களில் பலவித கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார். உச்ச நடிகர்கள், மிகப்பெரிய இயக்குனர்கள் அனைவரும் தங்கள் படங்களில் டெல்லி கணேஷ் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள்.
ரஜினிகாந்துடன் இணைந்த படங்கள்
பொல்லாதவன், மூன்று முகம், எங்கேயோ கேட்ட குரல், புதுக்கவிதை, சிவப்பு சூரியன், ஸ்ரீ ராகவேந்திரா, மிஸ்டர் பாரத், நான் அடிமை இல்லை, மனிதன், வேலைக்காரன், சிவா, நாட்டுக்கு ஒரு நல்லவன், பாபா ஆகிய ரஜினிகாந்த் படங்களில் இடம் பெற்றுள்ளார். ரஜினிகாந்துக்கு மாமனாராக ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப் படத்தில் டெல்லிகணேஷ் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி, நம் மனதை உருக வைத்திருப்பார். புதுக்கவிதை’யில் எதையாவது நோண்டி ரிப்பேர் பார்த்துக் கொண்டிருக்கும் கேரக்டரை சிறப்பாகச் செய்திருப்பார்.
ரஜினிகாந்தின் 100வது படமான ராகவேந்திரா படத்தில் அப்பண்ணசாமியாக நடித்தார். இறுதியில் ஸ்லோகம் ஒன்று சொன்னால் நல்லா இருக்கும் என்று இயக்குநர் கேட்க, அதற்கு டெல்லி கணேஷ் ஒரு ஸ்லோகம் சொல்லியிருக்கிறார்.
அதே சமயத்தில் ‘பாபா’ பட இறுதியில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ரஜினி சாமியாராகப் போகிறார் என்பதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்று ரஜினியிடம் அந்தக் காட்சியை ஷூட்டிங் எடுப்பதற்கு முன்பாகவே போய்ச் சொல்லியிருக்கிறார். “அப்படியா சொல்றீங்க..?” என்று கேட்டுக் கொண்ட ரஜினி, அதே கிளைமாக்ஸ்தான்னு உறுதியாக இருந்திட்டாராம். படம் வெளியான போது ரசிகர்கள் தியேட்டரில் இருக்கைகளைக் கிழித்தெறிந்து ரகளைபண்ணியது அனைவரும் அறிந்ததே.
கமலஹாசனனுடன் கைகோர்த்த படங்கள்
கமலுடன் இணைந்து டெல்லி கணேஷ் நடித்து ஒவ்வொரு படமுமே கொண்டாடும் படியிருக்கும்.
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மனதுக்கு நெருக்கமான நடிகர் பட்டியலில் இருப்பவரல்லவா!. ராஜ பார்வை, சிம்லா ஸ்பெஷல், புன்னகை மன்னன், நாயகன், உன்னால் முடியும் தம்பி, சத்யா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், நம்மவர், அவ்வை சண்முகி, காதலா காதலா, ஹேராம் தெனாலி, இந்தியன் 2 என்று எத்தனை படங்கள்!
‘மைக்கேல் மதன காமராசன்’ படத்தில் மடித்துக்கட்டிய வேஷ்டியும் கக்கத்தில் வெற்றிலைப்பெட்டியும் வாயில் வெற்றிலையைக் குதப்பியபடி பாலக்காட்டுத் தமிழில் பேசுகிற சமையல்காரராக இவரும் இவர் மகனாக கமல்ஹாசனும் “ஏய் என்னவாக்கும் பண்றே, இஞ்சி , சுக்கு” என்று எதைப் பேசினாலும் மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பூந்திக்கரண்டியை வைத்து இவர்கள் மீன்பிடித்ததும், ‘நீ கையைப் புடிச்சியா?’ என்று கேட்டுவிட்டு கமலுக்குப் பளாரென அறைவிடுவதும் வின்டேஜ் காமெடி தான்.
புன்னகை மன்னன் படத்திலும் கமலஹாசனுக்கு இவர் தான் அப்பா. அதே சமையல்காரர் வேஷம். பெயர் மூணு சீட்டு முத்தப்பா. சீட்டு ஆடிக் கொண்டிருந்த பணக்காரர்கள் பக்கத்தில் போய் நின்று கொண்டு ஏடாகூடமாகப்பேசுவார். ஏற்கனவே சீட்டாட்டத்தில் தோற்றுக் கொண்டிருந்த முதலியாரிடம் போய் ”உங்க பொண்ணு என் பையனைக் காதலிக்கிறா. நாம சம்பந்தியாகப் போகிறோம்” என்று உண்மையை உளறியதோடு “என்ன முதலியார்வாள் மறுபடியும் ஃபுல்லா” என்று நக்கலாகக் கேட்டுவிட்டு போவார்.
நாயகனில் தாராவிப் பகுதியின் இந்தி பேசத் தெரிந்த ஐயராக வேலுநாயக்கருடனேயே இருப்பவராக நடித்திருப்பார். கடத்தல் தாதாக்கள் கூட்டத்தில் கமல் “நாம எடுக்கிறோம்னு சொல்லுங்க ஐயரே” என்றதும் ஆரவாரமில்லாமல் அதேநேரம் அழுத்தமாக இந்தியில் சொல்வார். ஆஸ்பத்திரியில் அடிபட்டவர்களைப் பார்க்க கமல் வரும் காட்சியில் காயங்களுடன் வந்து, ‘ஒருவார்த்தை சொல்லலியே… எனக்கு எப்படித்தான் தைரியம் வந்துச்சோ தெரியல’ என்பார். “நா போறேன். நான் இருந்து என்ன பண்ணப் போறேன். நீ நல்லா இருக்கணும், நாய்க்கேரே.” என்று நம்மை நெகிழ வைப்பார். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
’அவ்வை சண்முகி’யை நினைக்கும்போதே கமல் மாமியுடன் சேர்ந்து நமக்கு நினைவுக்கு வருபவர் சபல கோடீஸ்வரனுக்கு, ஜால்ரா தட்டும் சபல மேனேஜராகக் காதில் பூ சுற்றிக் கொண்டு வரும் டெல்லி கணேஷ் தான்.
‘காதலா காதலா’ படத்தில் கமல் பிரபுதேவா என்கிற இரண்டு லிங்கங்களையும் தவறுகள் செய்யத் தூண்டும் வீட்டு உரிமையாளராக, தெனாலியில் டாக்டர் ஜெயராமுக்கு விதவிதமாகச் சிக்கல்கள் கொடுத்து அவை எல்லாமே திரும்பித் தன் தலையில் விழும் அபாக்கியசாலியாக ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமாக நடிப்பில் ஜொலித்த டெல்லி கணேஷை, கமலஹாசன் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நான்கு வில்லன்களில் ஒருவராக நடிக்க வைத்தார்.
விசுவின் இயக்கத்தில் ‘சிதம்பர ரகசியம்’ படத்தில் சஸ்பென்ஸ் உடையும் வரை நல்லவராகத் தோற்றமளிக்கும் வில்லனாக நடித்திருந்தார்.
கதாநாயகனாக டெல்லி கணேஷ்
1981 ஆம் ஆண்டில் வெளிவந்த எங்கம்மா மகாராணி என்ற படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். சுமித்ரா மனைவியாக நடித்தார்.. இன்னொரு ஜோடி ஒய்.விஜயா. எம்.ஏ.காஜா இயக்கத்தில் வெளிவந்த படம் சரியாக ஓடவில்லை. 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த தணியாத தாகம் படத்தில் வெள்ளைக்கலரில் பெல்பாட்டம் பேன்ட், டீ சர்ட் , கருப்பு ஷூ எல்லாம் அணிந்து கொண்டு கதாநாயகி சுபத்ராவுடன் “பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்” என்று மலேசியா வாசுதேவன் குரலில் டூயட் எல்லாம் பாடி நடனமாடி இருப்பார். ஒரு தலை ராகம் படத்தை இயக்கிய இ.எம். இப்ராஹிமின் அடுத்த படம் இது. அதன் பிறகு எந்தப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கவில்லை.
விஜய்யுடனும் நடித்துவிட்டார்
‘தமிழன்’ படத்தில் விஜய்யுடன் வக்கீல் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தவர் எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கவில்லையாம். அந்த நடிகரின் பேச்சில் காமெடி வரவில்லை என்று விஜய் அபிப்பிராயம் பட்டிருக்கிறார்.
“டெல்லி கணேஷ் ஸார் வருவாரான்னு கேளுங்க…” என்று அந்தப் படத்தின் இயக்குநரை அனுப்பி வைத்திருக்கிறார்.
ஒரே நாளில் படம் பிடித்து விடக்கூடிய சின்னக் கதாபாத்திரம்தான். ஆனால் முழுக்க முழுக்க விஜய்யுடன் காம்பினேஷன் உள்ள காட்சிகள். கதையைக் கேட்டுவிட்டு, “விஜய் கூட மட்டும்தான நடிக்கணும். அங்க போன பின்னாடி மாத்த மாட்டீங்களே..?” என்று உறுதிமொழி வாங்கிக் கொண்ட பிறகு மறுநாள் போய் நடித்துக் கொடுத்தார்.
விஜய் எதிர்பார்த்த மாதிரியே அந்தக் காமெடி சீன் நன்றாக வந்தது.. இன்றைக்கும் நகைச்சுவை டி.வி.சானல்களில் அடிக்கடி ஒளிபரப்பாகும் சிகரெட்டை நிப்பாட்டும் சீன் தான் அது
அஜித்துடனும் அசத்தி இருப்பார்
‘நேர்கொண்ட பார்வை’ படத்தில், குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் மகள், உண்மையில் குற்றம் இழைத்திருக்கிறாளா அல்லது சிக்க வைக்கப்பட்டிருக்கிறாளா என்று புரியாமல், கோர்ட்டில் துக்கத்தில் ஊறிய பார்வையுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கலங்கிப் போய் உட்கார்ந்திருப்பார். பார்ப்போருக்கும் அடிவயிறு கலங்கும்.
மைக்கேல் மதன காமராஜன், புன்னகை மன்னன் போன்று சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ஆஹா’ திரைப்படத்திலும் சமையல் கலைஞர் வேஷம். மூன்று படங்களிலும் மூன்று விதமாக ஸ்கோர் செய்திருப்பார்.
‘அரசு’ ‘லண்டன்’ படங்களில் வடிவேலுவுடன் இணைந்து இவர் அடித்த லூட்டிக்கெல்லாம் அளவே இல்லை.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘எதிரி’ படத்தில் கனிகாவின் தந்தை பாத்திரத்தில் நடித்திருப்பார். பாட்டில் மணியாக மாதவனும் ஆட்டோக்காரனாக விவேக்கும் அடித்த லூட்டிகளை விட அவர்களைச் சமாளிக்கும் வேடத்தில், கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு டெல்லி கணேஷ் அபாரமாய் நடித்திருந்தார்.
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வில், மகனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செலவையும் டைரியில் குறித்து வைத்துக் கொண்டு, மகனைத் திட்டிக்கொண்டே , தன்வசதிகளைப் பார்த்துக் கொள்ளும் பென்ஷனர் கேரக்டர் அது. நாம் நம் வாழ்வில் சந்தித்திருக்கும் மிடில் கிளாஸ் அப்பாக்களை, அப்படியே நம் கண்முன்னே கொண்டு வந்திருப்பார்.
‘தலைநகரம்’அரசியல்வாதியாகவும், ஜே ஜே படத்தில் அரசியல்வாதியின் கையாளாகவும்,’தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் காசு வாங்கிக் கொண்டு தேவைப்படும் அட்மாஸ்பியரில் தற்செயலாகக் தோன்றி மறையும் இன்ஃப்ளுயன்சராகவும், இரும்புத் திரை படத்தில் சைபர் குற்றமிழைப்பவர்களால் தன் பணத்தை இழந்த முதியவராகவும் என இவர் நடிக்காத வேடங்களே இல்லை எனலாம்.
இயக்குனர் விசுவுடன் நிறைய படங்கள்
இவர் சினிமாவில் அறிமுகமாகக் காரணமானவரான இயக்குனர் விசுவின் படங்களில் இவர் ஏழ்மை, இயலாமை, குற்ற உணர்வு, பலவீனம், அறியாமை, அப்பாவித்தனம், பிடிவாதம், விசுவாசம்,கோழைத்தனம், இப்படி மனித வாழ்வின் யதார்த்தங்களையும் அன்றாட வாழ்வில் அபத்தங்களை எதிர்கொள்வதையும், அச்சுப்பிசகாமல் வெளிப்படுத்தி நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும், அழவும் வைத்திருப்பார்.
தொலைகாட்சித் தொடர்கள்
திரைப்படம் மட்டுமல்லாமல், தொலைக்காட்சித் தொடர்கள், குறும்படங்கள், வெப் சீரிஸ், விளம்பரம் என எங்கும் எதிலும் சக்கை போடு போட்டார் டெல்லி கணேஷ். பாலசந்தர் சின்னத்திரையில் இயக்கிய ‘சஹானா’ நெடுந்தொடரில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் சின்னத்திரை சிவாஜி. அதிலிருந்து இவர் ‘சின்னத்திரை சிவாஜி’ என்று அழைக்கப்பட்டார். அது உண்மையும் கூடத்தான்.
மர்ம தேசம், கஸ்தூரி, பொறந்த வீடா புகுந்த வீடா, பல்லாங்குழி, வசந்தம், மனைவி, எங்கே பிராமணன், செல்லமே, இப்படிக்குத் தென்றல், திருப்பாவை, மனிதர்கள், தினேஷ் கணேஷ், வீட்டுக்கு வீடு லூட்டி, ஆஹா என்று ஏகப்பட்ட தொடர்களில் நடித்திருக்கிறார்.
கேட்பரீஸ், டிவிஎஸ் 50, பாப்புலர் அப்பளம் போன்ற பல தொலைக்காட்சி விளம்பரங்களில் அகில இந்திய அளவில் தென்னிந்திய அப்பாவாக, பெரியவராகத் தோன்றினார். வட இந்திய நடிகர்களுடன் நல்ல தொடர்புகள் உருவானது.
கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்குடன் இணைந்து ரிலையன்ஸ் விளம்பரத்தில் இடம்பெற்றது டெல்லி கணேஷை மிகவும் பிரபலமாக்கியது மட்டுமல்லாமல் சஞ்சய் தத்தின் “தஸ்” திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. அதில் முக்கிய வில்லனாக வரும் மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்தார்.
டெல்லி கணேஷ் மிகவும் வியந்ததோர் ஆளுமை பழம்பெரும் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு. அவரிடம் ’எனக்கு ஒரு கதை எழுதிக் கொடுங்கள் அதை தூர்தர்ஷனில் நாடகமாக போடுகிறேன்’ என்று கேட்க அவரும் எழுதி கொடுக்க சம்மதித்தார். ஆனால், அவர் இறப்புக்கு பின்பு தான் அந்த நாடகம் ஒளிபரப்பானது.
Also read
அவர் இறந்த பிறகுதான் அந்த நாடகம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. அதற்கு சன்மானமாகக் கிடைத்த நாற்பதாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டுபோய் எழுத்தாளரின் மனைவியிடம் டெல்லி கணேஷ் கொடுத்தார்.
அவர் அதை வாங்கிக்கொண்டு கண்கலங்கி, “இதுவரை இவர் எழுத்திற்கு 500 ரூபாய்க்கு மேல் யாரும் தந்ததில்லை, நீங்கள் 40 ஆயிரம் தருகிறீர்களே” என்றிருக்கிறார்.
தன்னை அவர் உற்சாகமாகக் காட்டிக் கொண்டிருந்தாலும் அவருடைய கடைசி நாட்கள் அவருக்கு இதமான நாட்களாக அமையவில்லை.தன் மகனைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்த ஆசைப்பட்டு ‘ என்னுள் ஆயிரம்’ என்று ஒரு சினிமா எடுத்து, னஷ்டப்பட்டார். நாற்பது வருடங்களாகச் சின்ன சின்ன வேடங்களில் நடித்துச் சிறுகச் சிறுகச்சேர்த்த பணத்தை எல்லாம் டெல்லி கணேஷ் இதில் இழக்க நேர்ந்தது. இறுதி வரை கலைஞனாகவே வாழ்ந்து காலப் பதிவாகவும் ஆகிவிட்டார் டெல்லி கணேஷ்.
கட்டுரையாளர்; முத்துக்குமார்
டெல்லி கணேஷ் அவர்களின் பேட்டிகளை பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். மிகவும் வெளிப்படையாக, ஒளிவு மறைவு இல்லமால் பேசுபவர். இதுவே ஓர் உண்மையான கலைஞனின்
அடையாளம். டெல்லி கணேஷின் ஆன்மா அமைதி பெறட்டும் !
எஸ். எஸ். ஜெயமோகன்
அருமையான நடிகர்.
சிந்துபைரவியில் மிக அதி உன்னத உண்மையான மிருதங்க வித்துவானவாக வாசித்து வாழ்ந்து காட்டியவர்.
விஜயகாந்த் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.
கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் சாப்பாடு பத்தி பேசும் உடல்மொழி அனுபவத்தின் மொழியாக அந்த படத்தில் வாழ்ந்தவர்.
கடைசியுல் தன் மகனை இயக்குனராக சொந்த பட கம்பெனி ஒன்றை ஆரம்பித்து கடைசி நாட்கள் சிரமத்துடன் சென்றது.
இறைவன் திருவடியில் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்
அருமையான நடிகர்.
சிந்துபைரவியில் மிக அதி உன்னத உண்மையான மிருதங்க வித்துவானவாக வாசித்து வாழ்ந்து காட்டியவர்.
விஜயகாந்த் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.
கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் சாப்பாடு பத்தி பேசும் உடல்மொழி அனுபவத்தின் மொழியாக அந்த படத்தில் வாழ்ந்தவர்.
கடைசியில் தன் மகனை இயக்குனராக சொந்த பட கம்பெனி ஒன்றை ஆரம்பித்து கடைசி நாட்கள் சிரமத்துடன் சென்றது.
இறைவன் திருவடியில் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்
ஒருவரைப் போல் இன்னொருவர் இருக்க முடியாது. தகப்பனின் ஒரு சில குணங்கள் பிள்ளைக்கு இருக்கலாம். ஆனால் தகப்பனின் குணம் அப்படியே பிள்ளைக்கு இருக்க முடியாது.
நடிப்புலகில் எவருடைய நடிப்பை எடுத்துக் கொண்டாலும் ஏதேனும் ஒரு கட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பின்பற்றி இருப்பார்கள்.
இதனை நடிகர் விஜயகுமார் நடிப்பில் அதிகம் காணலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் (இந்தப் பட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கூறிவிட்டார் அல்லவா?) கமலஹாசன் ஆகியோரின் நடிப்பில் சில படங்களில் சிவாஜி கணேசன் நினைவிற்கு வருவார்.
ஆனால் நடிகர் டெல்லி கணேஷ் நடிப்பில் அவருக்கென்று ஒரு பாணியை (ஸ்டைல்) பின்பற்றினார். படத்திற்கு படம் மாறுபட்ட நடிப்பு. ஒரு படத்தில் நடித்தது போல் இன்னொரு படத்தில் நடிக்கவில்லை. எந்த ஒரு நடிப்பிலும் நடிகர் சிவாஜி கணேசனின் சாயல் இல்லவே இல்லை. மேலும் எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காத, அடிபடாத மிகச் சில நடிகர்களில் இவரும் ஒருவர். அவர்தான் டில்லி கணேஷ்.