அதிகரிக்கும் மீன் விலைகள்! அகதிகளாகும் மீனவர்கள்!

- பீட்டர் துரைராஜ்.

கடலை தனது தெய்வமாக நினைக்கிறார்கள் மீனவர்கள். ஏனெனில்,அது தான் அவர்களின் வாழ்வாதாரம்! ஆனால் இப்போது மீன்பிடிக்க மீனவர்களுக்கு ஏககெடுபிடிகள் கொடுக்கிறது அரசு!  உரிமம் வாங்க வேண்டும். இந்த குறைந்த தூரம் வரை தான் மீன் பிடிக்க வேண்டும்,ஆழ்கடலுக்கு செல்லக் கூடாது…என்றெல்லாம் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிமுறைகள் போட்டுவிட்டு, பன்னாட்டு நிறுவனக் கப்பல்களுக்கு- குறிப்பாக கார்ப்பரேட் கடல் வணிகம் செய்பவர்களுக்கு மட்டுமே – ஆழ்கடல்களுக்குச் சென்று  மீன் பிடிக்கும் உரிமை என்ற வகையில் சட்டங்களை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே, பல நூற்றாண்டுகளாக, காலம்,காலமாக மீனவர்கள் தடையின்றி மீன்பிடிக்க அனுமதி இருந்தது. அடிமை இந்தியாவில் கூட மீன் பிடிக்க தடை போட்டதில்லை பிரிட்டிஷார்! ஆனால்,இன்றைய அரசு இதனை மாற்ற இருக்கிறார்கள்.

’’ எளிய மீனவர்கள் எக்கேடுகெட்டால் என்ன? பெரும் கடல் வணிகர்கள் வளமாக்குவது ஒன்றே அரசி நோக்கம் என்பதாக புதிய பொருளாதார கொள்கைக்கு இணங்க சட்டம் போடுகிறார்கள். ஓய்வுவிடுதிகளும், செயற்கை குஞ்சு பொறிப்பகங்களும், அலங்கார மீன்களை  உருவாக்கும் நிலையங்களையும் உருவாக்கும் வகையில் கடற்கரைகளை தனியாருக்கு கொடுத்துவிட்டு, அங்கிருந்து மீனவர்களை  அப்புறப்படுத்தும் வகையில் கொள்கைகளை உருவாக்கியுள்ளனர். விவசாயச்  சட்டங்களை அரசியல் கட்சிகள் ஓரணியில் நின்று எதிர்க்கின்றன. ஆனால் மீனவர்களுக்கு எதிரான இத்தகைய சட்டங்களை எதிர்த்து பேச நாதியில்லையே…! இடதுசாரி கட்சிகள் கூட வலிமையாக பேசுவது இல்லையே…” என்றார் வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமான லிங்கன்.

மீன்களை வெளி நாட்டிற்கு அள்ளிக் கொடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றன அரசின் கொள்கைகள்! நுகர்வு உள்ளூரிலேயே இருந்தால் மீன்விலை குறைவாக இருக்கும் ‘ஏழைகளின் புரதம்’ என்று மீனை சொல்லுவார்கள். ஆடு,மாடு,கோழி போன்ற கால்நடைகள்  மூலமாகவும் புரதம் கிடைக்கும். மீன் இயற்கையில் கிடைக்கிறது. புரதச்சத்து  நோய் எதிர்ப்புச் சக்தியை  தருகிறது. மீன் உணவை 60 சதம் பேர் சாப்பிடுகின்றனர். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 8 முதல் 9 கிலோ வரையில்  ஒரு நபர் இப்போது  கடல் உணவை சாப்பிடுகிறார். ஆனால் ஓர் ஆண்டுக்கு, ஒரு நபருக்கு 15 கிலோ வரை கடல் உணவு தேவை. ஆனால், பலரால் மீன் உணவு நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. நல்ல அருமையான மீன்களை சாப்பிடுவது என்பது மீனவனுக்கே அரிதான ஒன்றாக மாறிவருகிறது! அந்த அளவுக்கு இதில் அறம் கடந்த வணிக நோக்கம் மேல் எழும்பி உள்ளது. விரும்பிய போதெல்லாம் மீன் வாங்கி சாப்பிடுவது என்பதை அனைவருக்கும் சாத்தியமாக்கக் கூடிய நெடிய கடற்கரைகளும், நீர்நிலைகளும் நம்மிடம் இருந்தும், அதை நடைமுறைப்படுத்துவது எளிதானதாக இல்லை!

இந்தியாவில் 8118 கி.மீ. நீளத்திற்கு கடற்கரை, ஒன்பது மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களில் உள்ளது. இந்த வளங்களை முறைப்படுத்த மத்திய அரசு மீன் வளக் கொள்கை 2020 ஐ  அறிமுகப்படுத்தி உள்ளது. ‘கடல் உணவு உற்பத்தியை அதிகரிப்பது, அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது, கடல் வாழ் உணவு அல்லாத கடல்பாசி, முத்து சிப்பிகள், ஆடம்பர நண்டு போன்றவைகளை வளர்ப்பது, அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் வகையில் தனியாரையும் ஈடுபடுத்துவது’ என்பது இந்த மீன் வளக்கொள்கையின் முக்கியமான நோக்கங்களாகும்.

 மீன்வளப் பேராசிரியரான வறீதையா கான்ஸ்தந்தின்,  “பழவேற்காடு முதல் நீரோடி வரை” “அந்நியப்படும் கடல்” போன்ற  நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். குமரி மாவட்டத்தைச் சார்ந்தவர். அவரிடம் கேட்டபோது, “காஷ்மீரில் உற்பத்தியாகும் ஆப்பிள் போக்குவரத்து, பேக்கேஜ் செலவு, சுங்க கட்டணம், விற்பனைவரி, பதப்படுத்த ஆகும் செலவு போன்றவைகளோடு தமிழ்நாட்டிற்கு வரும் போது அதன்விலை பத்துமடங்கு ஆகிவிடும். இதே போலத்தான் மீன்களின் விலையும் கூடுகிறது. மீன்களை உள்ளூர் சந்தையிலேயே விற்பனை செய்தால் விலை குறைவாக இருக்கும்; மக்களின் நுகர்வும் அதிகரிக்கும். அதனால் மக்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதனைச் செயல்படுத்த போதுமான அறிவு நம்மிடம் உள்ளது. ஆனால்,பிடிக்கும் மீன்கள் உள்ளூர் சந்தைக்கே கிடையாது என்ற போக்குகள் நல்லதல்ல! மீனவர்கள் அறுவடை செய்யும் உணவை பதப்படுத்த, சேமிக்க, அதனைச் சந்தைப்படுத்த தேவையான வசதிகளை அரசு செய்ய வேண்டும். கூட்டுறவு அமைப்புகளை, மீனவர் வங்கிகளை உருவாக்கலாம். தொழில் நுட்ப வசதிகளைத் தரலாம். இதனால் விற்பனையும், நுகர்வும் அந்தந்த இடங்களிலேயே இருக்கும்.

மீன் வளக்கொள்கை என்ற பெயரில் “அறிவுரைகளை” அரசு மேலிருந்து  தர வேண்டியதில்லை. நமது பாரம்பரிய அறிவு வாழ்விடம் சார்ந்ததுதான். வாழ்விடப் பகுதியும்,தொழிலும் சார்ந்து தான் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என உருவாக்கினார்கள்! ஒருவர்,மற்றவரை  சார்ந்து தான் நாம் வாழ்ந்தோம்; அறிவைப் பரிமாறிக் கொண்டோம். இப்போது அது மாறிவிட்டது. மாட்டுக்கறி சாப்பிடுவர்கள், மீன் சாப்பிடுபவர்களை மதிப்புக் குறைவாக நினைப்பது என்ற வெறுப்பு அரசியலுக்கு நாம் ஆளாகிவிட்டோம். அரிசி உணவை அதிகம் சாப்பிடுகிறோம்,மாவுச்சத்து மட்டுமே கிடைக்கிறது; இதனால் நீரிழிவு நோய்க்கு ஆளாகிறோம்.

மீனவர்களை கடலிலிருந்து அப்புறப்படுத்தும் கொள்கையை த்தான் அரசு அறிவித்துள்ளது. ஏற்றுமதியை மையப்படுத்திய கொள்கை இது. நமக்கு ஏராளமான  வளங்கள்  இருக்க, இந்தோனேசியாவிலிருத்து மீன்களை இறக்குமதி செய்கிறோம். இந்த புதிய மீன்வளக்கொள்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது. மீனவர்கள் பிரச்சினைகளை தங்களுடைய பிரச்சினைகளாக பொதுமக்கள் பார்ப்பதில்லை. ‘ஆற்றில் நீர் வற்றிவிட்டது, மணல் அள்ளப்படுகிறது, நீர்மட்டம் இறங்கி விட்டது   என்றால் ஊடகங்கள் குரல் கொடுக்கின்றன; ஆனால் கடலுக்காக யாரும் கவலைப்படுவதில்லை. மீனவர்கள் அகதியாகும் நிலை வெகுதூரத்தில் இல்லை” என்றார் வறீதையா.

“ஐரோப்பிய நாடுகளில் துறைமுகங்களில் இருந்து மீன்பிடிப்பார்கள். ஆனால் தெற்காசிய நாடுகளில் கடற்கரையில்  இருந்து மீன் பிடிப்பார்கள். தமிழ்நாட்டில் 1076 கி்மீ நீளத்திற்கு, 13 மாவட்டங்களில் கடற்கரை உள்ளது. ஐரோப்பிய மீன்பிடி வழக்கத்தை இங்கு கொண்டு வரும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. ஏற்கெனவே சாமிநாதன் குழு, மீனா குமாரி குழு கொடுத்த பரிந்துரைகளை மீனவர்கள் எதிர்த்தனர். அரசு அவைகளை கைவிட வேண்டியதாயிற்று. இப்போது அதே கொள்கைகளைத் தான் புதிய மீன்கொள்கையாக அரசு அறிவித்துள்ளது; கொஞ்சம் கொஞ்சமாக அமலாக்கியும்  வருகிறார்கள்.

“கடற்கரைகளை கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கக் கூடாது, கடலோர மேலாண்மை மண்டல அறிவிப்பாணையை (Coastal Regulation Zone)  திரும்பப்  பெற வேண்டும், மத்திய அரசு மீன்வளத்திற்கென்று   தனி அமைச்சகத்தை  உருவாக்க வேண்டும்”  என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடற்கரை மாவட்டங்களில் பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறது  ஏஐடியுசி மீனவர் தொழிலாளர் சங்கம்.

இதன்  நிர்வாகியான பா. கருணாநிதி பேசுகையில்” இந்த புதிய மீன்வளக் கொள்கை கடலில் மீன் பிடிப்பதை மட்டுமல்லாமல் குளம், ஏரி, குட்டைகளில் போன்ற உள்நாட்டில் மீன் பிடிப்பவர்களையும் கட்டுப்படுத்துகிறது. இது ‘மீனவ விவசாயி’ என்ற புதிய பிரிவை  உருவாக்குகிறது. இது  மீனவர் அல்லாதவர்களையும் இத் தொழிலில் ஈடுபடுத்த வாய்ப்பு அளிக்கிறது. மத்தியில்  ஒரு ஒழுங்காற்று  அமைப்பை உருவாகி, அதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை கடடுப்படுத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலை கண்காணிப்பது, பாதுகாப்பது என்ற பெயரில் மீனவர்களுக்கு பல்வேறு தடைகள், மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் என்று மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்தக் கொள்கை பாதிக்கும். அடிப்படையில் இயற்கைவளமான கடலையும், கடற்கரையும் தனியாருக்கு கொடுக்கும் கொள்கை இது” என்றார்.

“பெரிய மால்களில் எண்பது ரூபாய்க்கு காபி கிடைக்கிறது; குடிக்கிறார்கள். மீன் போன்ற கடல் உணவுகளை இதே போல மால்கள் மூலம் விற்பனை செய்யும் முறை வளர்ந்து வருகிறது. இது பெரிய நிறுவனங்களுக்கு கிடைத்து இருக்கும் வாய்ப்புகள். அவர்களுடையை இலாப வேட்டைக்காகவே இதுபோன்ற கொள்கைகள் மேலிருந்து திணிக்கப்படுகின்றன. மீனவர்களின் கருத்துகளை கேட்டு சட்டம் இயற்றினால் பல சாதனைகளை நிகழ்த்த முடியும். மக்களுக்கு சரிவிகித உணவை உறுதி செய்ய முடியும்.மீனவர் வாழ்க்கைத்  தரத்தை மேம்படுத்த முடியும்” என்று கூறினார் வறீதையா கான்ஸ்தந்தின். அரசு மீனவர்களின் அச்சங்களை போக்கும்வகையில் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனெனில், மீனவர்களையும் உள்ளடக்கியதுதான் வளர்ச்சி .

இன்று உலக மீனவர் தினம்: நவம்பர் 21

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time