விவசாய வாழ்வாதாரங்களை வேரறுக்கும் திமுக அரசு!

-க.சுரேஷ் குமார்

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு மசோதாவின் கொடும் விளைவாக திருவண்ணாமலை மேல்மா, காஞ்சி பரந்தூர் விமான நிலையம், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக நெல் வயல்கள் அபகரிப்பு…. எனத் தொடர்ந்து, தற்போது திருவாரூர் மாவட்டமே திகுதிகுக்கும் காரியத்தை திமுக அரசு செய்கிறது;

திருத்துறைப்பூண்டி அருகில் கொருக்கை கிராமத்தில் 495 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசின் உம்பளச்சேரி நாட்டு மாடுகள் பண்ணையும், அதற்கான மேய்ச்சல் நிலமும் அமைந்துள்ளது.  1960 களின் இறுதியில் இப்பண்ணையை உருவாக்க அப்பகுதியில் வாழ்ந்த தகைசால் பெரியோர்கள் தானமாக வழங்கியதே இந்த நிலமாகும். இங்கு தற்போது  காளைகள், பசுக்கள்,கன்றுகள் என640 கால் நடைகள் உள்ளன.

இவ்வாறு தமிழகத்தில் ஒரு மாட்டினம் தோன்றிய பகுதியிலேயே மேம்பட்ட மனிதர்களின் பெருந்தன்மையால் அங்கேயே நிலம் கிடைத்து இந்த பண்ணை குளம் மற்றும் மேய்ச்சலுக்கான இடம் என்று சகலவிதமான அடிப்படை கட்டமைப்புகளையும் ஒருஙகே பெற்று தன்னியல்புடன் இன்றும் விளங்குவது சிறந்த அம்சமாக பார்க்கப்படுகிறது.

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ளது உம்பளச்சேரி கிராமம். இந்த கிரா மத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பாரம்பரிய நாட்டு மாடு இனமான உம்பளச்சேரி மாட்டினங்கள் தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டம் உள்ளடக்கிய காவிரியின் கடைமடச் சமவெளிக்கு உரித்தான நாட்டு மாட்டினமாகும்.

இவற்றை விவசாயிகள் பெரிதும் விரும்புவதற்கான காரணம்,  இவை சோர்வின்றி கடுமையாக உழைக்கக் கூடியவை. அதனால்,  உழவு மாட்டுக்கு டெல்டா விவசாயிகள் உம்பளச்சேரி இன மாடுகளுக்கு தான் பிரதான முக்கியத்துவம் தருகின்றனர். இதேபோல உம் பளச்சேரி எருதுகளும் பாரம் இழுப்பதற்கு பேர் போனவையாகும்.  இவை அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

இதனால் தான் இன்றும் இப்பண்ணையில் உம்பளச்சேரி நாட்டு மாடுகள் வேண்டுவோர் பதிவு செய்து விட்டு காத்திருந்து நியாயமான விலையில் உம்பளச்சேரி கன்றுகளை வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு ஆண்டுக்கு நூறு கன்றுகள் விற்கப்படுகின்றன.

இந்த உம்பளச்சேரி மாட்டினங்கள் சேற்று உழவிற்கு ஏற்ற சிறந்த தகவமைவுகளுடன் உள்ளது  இவற்றின் பாலும் மிகுந்த மருத்துவத் தன்மை உடையதாகும்.

இந்த மாவட்டங்களில் ஒரு பெண் தாய்மையடைந்தவுடன்  இந்த உம்பளச்சேரி மாட்டை பெரியோர்கள் தேடிக் கொண்டு போய் அந்த பெண் வீட்டிற்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் உள்ளது!

பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உள்ள இந்த உம்பளச்சேரி மாட்டின் பாலை வழங்குவதால் இந்த உம்பளச்சேரி மாட்டினங்கள் இரண்டாம் தாயாக இந்த மாவட்டங்களில் பார்க்கப் படுகிறது

இவ்வாறு நமது நாட்டில் ஒவ்வொரு நூற்றைம்பது கிலோ மீட்டர் தொலைவிலும் அந்தந்த மண்ணிற்கு ஏற்ற மரபான கால்நடைகள் போற்றி பாதுகாத்து வந்தனர் நமது பெரியோர்கள் விதை பன்மயம் மற்றும் கால்நடைகளின் பன்மயமும் நமது மரபில் இயல்பானது தான்.

தவமின்றி கிடைத்த வரமாய் நமக்கு நமது முன்னோர்களின் பெருந்தன்மையால் கிடைத்த இந்த கொருக்கை உம்பளச்சேரி நாட்டு மாடுகள் பண்ணைக்கு சொந்தமான மேய்ச்சலுக்கான நிலத்தில் 200 ஏக்கர்கள் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் தந்து திட்டங்கள் வகுப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. இது நமது மரபின் வேர்களில் விஷம் பாய்ச்சும் பணியாகும்.

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க பல்வேறு இடங்களில் தரிசு நிலங்கள் இருக்க தஞ்சை சமவெளியின் தனி சிறப்பான அடையாளமான  உம்பளச்சேரி பண்ணையில் இடத்தை பிரிப்பது  நமது  பத்தாயிரம் வருட தற்சார்பான கிராமங்களையும் வேளாண்மையையும் மற்றும் குடும்பங்களையும் அழிப்பது போன்றதாகும்.

எனவே, அரசு மாடுகள் மேய்ச்சலுக்கு என்று உள்ள இந்த நிலத்தை விட்டு விட்டு, வேறு தரிசு நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க திட்டமிட வேண்டும்.பக்கத்திலே வடபாதி மங்களத்தில் ஆரூரான் சர்க்கரை ஆலைக்காரர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள 1000 ஏக்கர் தரிசு நிலத்தில் சிப்காட் தொடங்கலாம்.

2021 தேர்தலில், ”கொருக்கை கால் நடைப் பண்ணையை ஓட்டி கால் நடைக் கல்லூரியையும், ஆராய்ச்சி மையத்தையும் ஏற்படுத்துவோம்” என ஸ்டாலின் வாக்குறுதி தந்தார். ஆனால், அதை செய்யாமல் தற்போது இருப்பதையும் அழிக்கிறார். இந்த மேய்ச்சல் நிலத்தை அபகரிப்பது இந்த வாயில்லா ஜீவன்களுக்கும் செய்யும் துரோகமாகும். நமது மரபை அழிக்கும் முயற்சியாகும்.

நமக்கு கிடைத்திருக்கும் மரபான கால்நடைகள்‌ , விதைகள் , சித்த மருத்துவம் போன்ற விஷயங்களை  நமது காலத்தை கடந்து எதிர் வரும் தலைமுறைகளுக்கு பாதுகாத்து கடத்தி கொடுக்கும்  பொறுப்பும் கடமையும் இந்த தலைமுறைக்கு உள்ளது.

இதைத் தவறவிடாமல் நமது மரபின்  வேர்களை அனைவரும் பாதுகாக்க நம்மால் ஆன சிறிய அளவிலான செயலையோ அல்லது குரலையோ எழுப்புவோம்.

அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பி.ஆர்.பாண்டியன் தலைமையில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்பதாக பல போராட்டங்கள் மாவட்ட ஆட்சியரின் செயலை கண்டித்து நடந்த வண்ணம் உள்ளன.விவசாயிகள் நிறைவேற்றிய தீர்மானங்கள் கூறுவதாவது;

# மாவட்ட ஆட்சியர் சிப்காட் அமைக்க கொற்க்கை கால்நடை பண்ணைக்கு சொந்தமான நிலங்களைகிராம சபா ஒப்புதல் பெறாமலும்,ஊராட்சி அனுமதி பெறாமலும்,விவசாயிகளிடம் கருத்து கேட்காமலும் சட்ட விரோதமாக தன்னிச்சை போக்கோடு பரிந்துரை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை உடனடியாக முதலமைச்சர் திரும்ப பெற வேண்டும்.

#  திமுக 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை பின்பற்றி.கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கால்நடை கல்லூரி உடன் துவங்கிட வேண்டும்.

# மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ரத்து செய்ய மறுத்தால் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக மாவட்ட ஆட்சியரை பணி நீக்க செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் .

க.சுரேஷ் குமார்

இயற்கை உழவர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time