அமெரிக்கா, சீனா இரண்டிடமும் சம நிலை உறவை பேணத் துணிவின்றி, சர்வதேச அளவில் நம்பகத் தன்மையை இழந்து வருகிறது பாஜக அரசு! நேற்றொரு பேச்சு, இன்றொரு பேச்சு, நாளைக்கு ஒரு நாடகம் என்பதாக சர்வதேச உறவுகளை பேணுகின்ற மோடியால் சீன உறவு சின்னாபின்னமாகி வருவது குறித்த அலசல்;
நரேந்திர மோடி பிரதமரானவுடன் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் பன்மடங்கு பெருகி உள்ளதாக பாஜ கட்சியினரும், ஊடகங்களும் ஒரு பிம்பத்தை கட்டி எழுப்பத் தொடங்கினர். இத்தகைய சித்தரிப்பு , மோடி பங்கேற்கும் பல்வேறு நிகழ்வுகள் – டிராமாக்கள்- மூலம் உயிரூட்டப்பட்டன. ஆனால், பல்வேறு சர்வதேச நிகழ்வுகள் வெளி உலகிற்கு வந்து இந்த போலியான சித்தரிப்பை கேள்வி கேட்கின்றன.
உள்நாட்டில் , திடீர் திடீர் என முக்கியமான அறிவிப்புகளை – பண மதிப்பிழப்பு (நவ 8 ’2016) காஷ்மீர் மறு சீரமைப்பு (ஆக.5 2019) வெளியிட்டு இந்திய அரசியலரங்கில் அதிர்ச்சியையும், பொருளாதார அரங்கில் மிகப்பெரிய சீரழிவையும் ஏற்படுத்திய மோடி அரசு, அயலக விவகாரங்களிலும் இதே பாணியை கடைபிடித்து வருகிறது.
2014 செப்டம்பரில் இந்தியா வருகை தந்த சீனத் தலைவர் ஷீ ஜின் பிங் கை குஜராத்திற்கு அழைத்து சென்று பரவசப்படுத்தினார் மோடி. உலகத் தலைவர்களை ஆரத் தழுவுதன் மூலம் உள் நாட்டில் ‘தன் தகுதியை’ தம்பட்டமடிக்க இந்த சந்திப்புகள் மோடிக்கு பெரிதளவிற்கு உதவின.
1985ல் இந்திய பொருளாதார வலிமையும்(GDP), சீனா பொருளாதார வலிமையும் ஏறத்தாழ ஒரே அளவாகவே இருந்தது, ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் சீனா அசுர வளர்ச்சி அடைந்து ‘உலகத்தின் உற்பத்தி கூடமாக ‘ உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியும், ஆளுமையும் இந்த காலங்களில் பன்மடங்கு பெருகி சீனாவிற்கு அடுத்த ஆசிய வலிமையான நாடாக பரிமளித்தது. இதனடிப்படையில் தான் 21 ம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டாக- சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் தலைமையிலான நூற்றாண்டாக சித்தரிக்கப்பட்டது.
ஆசிய நூற்றாண்டு என்ற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் இந்திய ஆளும் வர்க்கம், நடைமுறையில் அது சீன நாட்டுடன் கைகோர்த்து வளர்ச்சி அடைவது என்பதை அடிப்படையாக கொண்டது என்ற உண்மையை அங்கீகரிக்க தயங்குகின்றனர்.
சீனத்தை சுற்றி வளைக்கும் அமெரிக்க வல்லரசின் திட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும் இந்தியா முதலில் கருத்தளவிலும் பின்னர் செயல் வடிவிலும் இடம் கொடுத்தது ஆசியாவில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவை தவிர்த்த ஏனைய ஆசிய நாடுகள் – இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியத்நாம், இலங்கை, மாலத்தீவு, பங்களா தேஷ், நேபால் , மியான்மர் , பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் – அனைத்தும் சீனாவுடன் சீரான உறவுகளையும், பொருளாதார ஒத்துழைப்பையும் பேணி வளர்த்து வருகின்றன.
மோடி பிரதமரான பிறகு இந்தியா, ஆசிய வர்த்தக கூட்டமைப்பிலிருந்து (ASEAN) வெளியேறியது, சீனத்தின் பெல்ட் ரோடு இனிஷியேட்டிவ் (BRI) என்ற கூட்டுறவை புறக்கணித்தது.
வூஹான் ஸ்பிரிட் என்று சொல்லிக் கொண்டே இந்திய சீன நட்புறவுக்கும், ஆசிய நாடுகளின் ஒற்றுமைக்கும் வேட்டு வைத்தார் மோடி.
2019 ஆகஸ்டு 5ல் , மோடி அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிளவு படுத்தி, மறுசீரமைப்பு என்பதன்பெயரில் சீனாவின் ‘அக்சாய் சின்’ பகுதியை லடாக் பகுதியுடன் இணைத்து தனி யூனியன் பிரதேசமாக அறிவித்தது! இதற்காக இந்திய வரைபடம் அதிகாரபூர்வமாக திருத்தி வரையப்பட்டது.
இதை , கார்ட்டோகிராபிக் அக்ரெஷன் (Cartographic Aggression) என சீனா கடுமையாக கண்டித்தது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடனே (ஆகஸ்டு 11, 2019) சீனா விரைந்தார். ‘’இத் திருத்தம் வெறும் உள்நாட்டு ஏற்பாடு தான், சர்வதேச எல்லைகளில் நாங்கள் மாற்றம் செய்யவில்லை, நடைமுறையிலும் அவ்வாறு கருத மாட்டோம்’’ என சீன தலைவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் சீன அரசு, இதை ‘’ஆக்கிரமிப்பு செயல் என கண்டித்து அதை ஏற்கமுடியாது’’ என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
ஆனால், சீனத் தலைவர் ஷீ ஜின் பிங் இந்திய தலைமை அமைச்சரான மோடியை சந்தித்து உரையாட விரும்பிதாக தெரிகிறது. வூஹான் மாநாட்டிற்குப் பின் அடுத்த உச்சி மாநாடு இந்தியாவில் நடக்க வேண்டும் . அதை எதிர் நோக்கி சீனத் தலைவர் காத்திருக்க , இந்திய அரசோ வேண்டா வெறுப்பாக தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-13 தேதிகளில் உச்சி மாநாடு நடைபெறும் தெரிவித்தது.
மாமல்லபுரம் வந்த சீனத் தலைவர் , மோடியிடம் இந்தியா சீனா இடையே அமைதி நிலவ வேண்டும், இந்திய பாக்கிஸ்தான் இடையே அமைதி நிலவ வேண்டும் . இந்த மூன்று நாடுகளின் உறவிலும் அமைதி ஏற்படுவது நமது பிராந்திய வளர்ச்சிக்கு முதல்படி என்றும், அதற்கு சீனா தயாராக இருப்பதையும் ஷீ ஜின் பிங் சுட்டிகாட்டினார் எனசீன அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பை ‘இந்து ‘ பத்திரிக்கை (அக்.14 2019) வெளியிட்டது. இந்திய அரசின் அறிவிப்போ, இது பற்றி வாய் திறக்கவில்லை.
இந்த சூழலில் ஏப்ரல் 2020ல் கல்வான் பள்ளத் தாக்கில் இந்திய சீன படைகளிடையே ஏற்பட்ட கைகலப்பில் சுமார் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தது இருநாட்டு உறவுகளிலும் பேரிடியை கொடுத்தது.
பத்திரிக்கை செய்திகளோ, சீனா கிட்டத்தட்ட 2000 சதுர கி. மீட்டர் பரப்பளவு பகுதியை (grey area) ஆக்கிரமித்துள்ளது என்கின்றன.
இதன் எதிர்வினையாக சீன மொபைல் போன்களான விவோ மற்றும் ஒப்போ ஆகியவற்றின் லைசன்சை ரத்து செய்தார், சீன மொபைல் செயலிகளுக்கு (mobile Apps) இங்கு தடை விதிக்கப்பட்டது.
சீனத்தின் 5G நெட் வொர்க்கை தடை செய்தனர், சீனத் தொழில்நுட்பம் இந்தியாவிற்குள் நுழைய தடைகள் பல ஏற்படுத்தப்பட்டன. சீன முதலீடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, விசாக்கள் வழங்குவது குறைக்கப்பட்டன.
சீன தொழில்நுட்ப வல்லுனர்கள் திருப்பி அனுப்ப பட்டனர், புதிதாக வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.சீன முதலீடுகள் அல்லது நன்கொடை பி.எம். கேர்ஸ் போன்ற அமைப்புகளைத் தவிர மற்ற அமைப்புகளுக்கு கிடைப்பது தடுத்து நிறுத்தப்பட்டது.
பத்திரிக்கையாளர்கள் பலர் சீனத்திடம் பண உதவி பெற்றனர் என பயங்கரவாதச் சட்டங்களின் கீழ் கைதும் செய்யப்பட்டனர்.
சீனா எல்லைப் பகுதியில் அத்துமீறவில்லை என்றால், ஏன் இந்த பதிலடி?
ஆண்டுகள் பல கடந்து , தற்பொழுது -அக்டோபர் 22-24ல் ரஷ்யாவில் “பிரிக்ஸ் “உச்சி மாநாடு நடக்கும் தருவாயில் , இந்தியா சீனாவிடையே கிழக்கு லடாக்கில் LAC பகுதியில் ரோந்து படைகள் மற்றும் துருப்புகள் விலகுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அக்டோபர்21 அன்று இந்திய வெளியுறவு அதிகாரி மிஸ்ரா திடீரென தில்லியில் அறிவித்தார்.
சீனாவோ, இவ்வாறு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது (agreement) என்று எந்த அறிவிப்பும் இன்று வரை செய்யவில்லை.
வெளி நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் , அதன் முடிவுகள் யாவும் மூடு மந்திரமாகவே இன்று வரை உள்ளன.
ஜனநாயக நாடாக தன்னை சொல்லிக் கொள்ளும் இந்தியாவில், அயலக உறவு தொடர்பான அறிவிப்புகளை கூட தேர்தல் கண்ணோட்டத்திலேயே அணுகுவது விசித்திரமாக உள்ளது.
முதலில் நேற்றுவரை இந்தியா ‘பிரிக்ஸ்’ (BRICS) மாநாட்டிற்கு கொடுக்காத முக்கியத்துவத்தை இன்று கொடுப்பதேன் என்ற கேள்வி எழுகிறது.
ஆண்டிற்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரும் ஜி-20 மாநாட்டு தலைமை பொறுப்பை ஏதோ வராது வந்த மாமகுடமாக சித்தரித்து ஏகப்பட்ட கோடிகளை விரயமாக்கிய மோடி அரசு, இந்திய நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும், இந்திய மக்களின் வாழ்வுநிலை மேம்பாட்டிற்கும் உதவக் கூடிய பிரிக்ஸ் பொருளாதாரக் கூட்டுறவை ஏன் இதுகாறும் ஒதுக்கி வைத்துள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.
உலகின் உற்பத்திக் கூடமாக திகழும் சீனாவை வெட்டிவிட்டு இந்திய பொருளாதார வளர்ச்சியை நினைத்து பார்க்க முடியாது. வளரும் நாடுகளுடன் ( குளோபல் சௌத்) நிற்காமல், இந்தியா அமெரிக்க மற்றும் முன்னாள் காலனியாதிக்க நாடுகளான குளோபல் நார்த் நாடுகளுடன் நிற்கிறது. சீனாவை எதிர்ப்பதால் ஏற்படும் பாதகங்களை அமெரிக்கா சரி செய்யும் என்ற கற்பனையில் , நப்பாசையில் இந்திய அரசு மூழ்கியிருக்கிறது.
இந்திய அரசின் எதிர்பார்ப்புகள் வெறும் ‘கானல் நீர் ‘ என கூறுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று உலகம் இன்று ஒருமுனை (அமெரிக்க) ஆதிக்கத்திலிருந்து
நகர்ந்துவிட்டது. அமெரிக்காவால் இன்று ரஷ்யாவையும், சீனாவையும் இரு முனைகளில் மோதி வெற்றி பெற இயலாது.
இரண்டு, ரஷ்யா மற்றும் சீனா இரு நாடுகளின் நலன்களும் ஒரு முனையில் இருப்பதை எதிர் கொள்ள இந்தியாவிற்கு இயலாது, இதில் அமெரிக்க உதவியும் வேலைக்கு ஆகாத நகர்வாகி விட்டது.
இதை தொடர்ந்து சீனாவுடனான உறவுகளை சீரமைக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமான சேவைகளை மீண்டும் துவக்க வேண்டும், சீன தொழில் நுடப வல்லுனர்களை மீண்டும் வரவழைக்க வேண்டும் என்ற குரல்கள் ஒன்றிய அமைச்சர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் வெளிபட்டன. அதன் நீட்சியே இந்திய சீன எல்லை யில் பதட்டத்தை தணிக்க படைவிலகலுக்கு இந்தியா முயன்றது என்று கூறுகின்றனர். இந்த முயற்சி முழு மனதுடன் செய்யப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அதைத் தவிர்த்த மற்றொரு காரணமும் நமது கவனத்தை கவருகிறது எனலாம். சென்ற ஆண்டு ஜூலை முதல் முதலில் கனடாவிலும் பிறகு அமெரிக்காவிலும் புகையத்தொடங்கிய ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை, மற்றும் அமெரிக்காவில் குர்பந்த வந்த் சிங் பன்னும் என்ற சீக்கிய பிரமுகரை கொலை செய்ய நடந்த முயற்சியில் இந்திய அரசு சம்பந்தப் பட்டிருப்பது இப்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது.
Also read
இதை சமாளிக்க நமது ‘விஸ்வகுரு ‘ புதிய முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. அந்த முயற்சி என்னவெனில் , யாரை எதிர்க்க அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்தாரோ, அந்த நாட்டுடன் நட்பாக இருப்பது போல் காண்பித்தால் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் கொடுக்கும் நெருக்கடிகளை சமாளிக்கலாம் அல்லது குறைந்த பட்சம் தள்ளி போடலாம் என்ற நப்பாசை தான் மோடியை இந்த முயற்சியில் இறங்க தூண்டியுள்ளதாக தெரிகிறது.
பரஸ்பர நம்பிக்கை (Mutual Trust) துளியும் இன்றி இந்திய சீன உறவுகள் மேம்பட முடியாது. நாடுகளுக்கிடையேயான உறவுகளில் ஒப்புக்காக பேசுவதும் , நம்பிக்கையற்ற அரைகுறை முயற்சிகளும் ஒரு நாளும் எதிர்பார்த்த முடிவுகளைத் தராது, மாறாக இரு தரப்பு நாடுகளும் இந்திய அரசின் தலைமை மீது நம்பிக்கை இழக்கும் அபாயமும் உள்ளது.
எல்லோரிடமும் நாடகமாடும் மோடி அரசின் செயல்களால் நட்டமடையப் போவது இந்திய நாட்டு மக்களே!
ச.அருணாசலம்
Poorly Analysed Article.
China aggression has been not be properly acknowledged and not blamed on China.
China has been a unfriendly aggressive bully neighbor.
India can never trust China.
விளம்பரத்தை நம்பி வாங்கும் பெருளே நம்மை ஏமாற்றும் போது.,
விளம்பரங்கள் மூலம் ஒர் தலைவர் ஏற்பட்டால் நாடு இந்த நிலைதான்….
இனியாவது வெற்று சொல்லாடள்களையும் பகட்டு விளம்பரத்தையும் மக்கள் புறகனிக்க வேண்டும்