அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள், நோயாளிகள்!

-சாவித்திரி கண்ணன்

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ஏழை, எளிய, நடுத்தர பிரிவினர்களுக்கு அரசு மருத்துவமனைகளே விமோச்சனமாகும். இது உணர்ச்சிகரமாக அணுக வேண்டிய ஒற்றை சம்பவமல்ல! இங்கு மக்கள் சந்திக்க நேரும் துயரங்கள், மருத்துவர்களின் அணுகுமுறை, மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அனைத்தையும் உள்ளடக்கியது;

அரசு மருத்துவர் கத்திக்குத்தான சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர் அமைப்புகள் யாவரும், ”தாக்கிய இளைஞருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்” எனப் பேசி உள்ளனர்.

உயிர் காக்கும் மருத்துவர் மீதான இந்த தாக்குதல் ஏற்க முடியாதது. ஆழ்ந்த கவலை தரக் கூடியது. இந்த சம்பவம் அரசு மருத்துவர்களை ஆழமாக பாதித்து இருக்கும். அவர்கள் இனி நோயாளிகளை அணுகுவதில் ஒரு தயக்கத்தையும், அச்சத்தையும் இது ஏற்படுத்தி விடும். அதே சமயம் இந்த சம்பவத்தை நாம்  வெறும் உணர்வுபூர்வமாக மட்டுமே அணுகக் கூடாது.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் தன் தாய்க்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதாக அவரே தீர்மானிக்கவில்லை.  மற்றொரு மருத்துவர் உறுதிபடுத்தி உள்ளார். அந்த சிகிச்சையால்  தான் அவரது தாயின் உடல் நிலை மோசமாகி உள்ளது. ஆகவே, அவர் வேறு இடத்திற்கு தன் சக்தியை மீறி செலவு செய்து தாயை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். இந்தச் சூழலில் தன் தாயின் சிகிச்சைக்கு பணம் இல்லாத நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி பணம் கேட்கிறார். அவர் அவ்வாறு கேட்டது தவறு.

அதே சமயம் மருத்துவர் பாலாஜி, ”உன்னை உள்ளே விட்டதே தப்பு. வெளியே போடா..” என பிடித்து தள்ளியிராமல், ”மீண்டும் உன் தாயை இங்கேயே அழைத்துவா. செலவில்லாத தரமான சிகிச்சையை நாங்கள் தருகிறோம். அரசு மருத்துவமனை தராத சிகிச்சையையா தனியார் மருத்துவமனை தரப்போகிறது?” என விளங்க வைத்திருக்கலாம்.

கடுமையான பாதிப்புக்கு உள்ளான ஏழை, எளியோருக்கு முதலாவது தேவை ஆறுதல் மொழியே. ‘நான் தலைமை மருத்துவர் என்னை நீ நேரடியாக வந்து பார்க்க அனுமதித்தே பெரிய விஷயம். அதிலும் நீ என்னை கேள்வி கேட்பாயா’? என அணுகியது முறையல்ல.

கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி

‘ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை மருத்துவன்’  என்று அந்தக் காலம் முதலே ஒரு பழமொழி உண்டு. ஒருவர் சிறந்த மருத்துவராக உருவாவதற்கு முன் பல தவறுகளை செய்தே மருத்துவராக முடியும் என்பதை மக்கள் வழக்கு மொழியாக இவ்வாறு சொல்கிறார்கள். அது உண்மையும் கூட. சிறந்த மருத்துவருமே தவறு செய்யவே முடியாதவர் அல்ல, தவறு செய்வது மனித இயல்பு. தவறை திருத்திக் கொள்ள முன் வராத போது விபரீதங்கள் ஏற்படுகிறது.

கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் இனி வருங்காலங்களில் ஏழை, எளிய நோயாளிகள் அரசு மருத்துவரை சந்திக்கவே முடியாத கெடுபிடிகளை உருவாக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே பெரிய மருத்துவர்களை சந்திப்பது அரிதினும் அரிது. இனி ஒரு போதும் சந்திக்கவே முடியாத சூழல் உருவானால், அது சமுதாயத்திற்கே நல்லதல்ல.

அதே சமயம் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் , மருத்துவ ஊழியர்கள், மாத்திரை, மருந்துகள் பற்றாக்குறையும், அதீத பணிச்சுமையும் மருத்துவர்களை கடும் மன உளைச்சலில் வைத்துள்ளது. அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு கூட நேரம் செலவழிக்க முடியாமல் , சரியான நேரத்திற்கு சாப்பிட  முடியாமல் நோயாளிகளை பார்க்க வேண்டியுள்ளது.

இப்படி அர்ப்பணிப்புள்ள மருத்துவர்கள் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சரியான நேரத்திற்கு பணிக்கு வராத மருத்துவர்களும் உண்டு. வந்தாலும் வேலை செய்யாமல் கையெழுத்து போட்டு விட்டு’ அரட்டை அடித்து விட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும் உள்ளனர்.

இன்றைய தினம் அரசு மருத்துவர்கள் எண்ணிக்கை இன்னும் ஒரு  மடங்கு அதிகரித்தால் மட்டுமே நோயாளிகள்  கூட்டத்தை சமாளிக்க முடியும்.  ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தும் நிலையில்  ஆட்சியாளர்கள் இல்லை.  ஓட்டு வங்கிக்காக எவ்வளவோ இலவச திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும் ஆட்சியாளர்கள், கூடுதல் மருத்துவ பணியிடங்கள், கூடுதல் செவிலியர்களை நியமிக்க மறுப்பது மாத்திரமல்ல, அரசு மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு  நியாயமான சம்பள உயர்வையும் தராமல் இழுத்தடித்த வண்ணம் உள்ளனர்.

மருத்துவர்களும் மனிதர்கள் தானே!  அதீத பணிச்சுமை, வேலையின் அழுத்தம், நோயாளிகளின் நச்சரிப்பு ஆகியவை அவர்களையும் கோபப்பட வைக்கலாம். ஆகவே, அவர்களுக்கு சிறந்த பணிச் சூழலை உருவாக்கித் தர  வேண்டியது அரசின் கடமையாகும். மருத்துவர்களுக்கு தேவையான ஓய்வையும், கெளரவமான ஊதியத்தையும் உறுதிபடுத்த வேண்டும் அரசாங்கம்.

இந்த சம்பவத்தை வைத்து நோயாளிகள் அரசு மருத்துவமனையில் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்கவும், அதை தீர்க்கவும் அரசு முன்வர வேண்டும்.  அரசு மருத்தவமனைகளில் நடக்கும் அலட்சியங்களால் உடல் ஊனமானவர்கள், நடை பிணமானவர்கள், உயிர் இழந்தவர்கள் ..போன்றோர்களின் எண்ணிக்கைக்கு கணக்கு வழக்கில்லை. அதை சொல்லி மாளாது.

இதனால் தான் சிலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பையும் இழந்து, கடனையும் வாங்கியாவது தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் ‘எட்டு படுக்கைக்கு ஒரு செவிலியர் வீதம்’ இருப்பார்கள். ஆனால், ‘அரசு மருத்துவமனையிலோ நாற்பது, ஐம்பது படுக்கைக்கு ஒரு செவிலியர் தான்’ இருக்கிறார்.  ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று நோயாளிகளுக்கு அவசர  அட்டென்ஷன் தேவைப்பட்டால் அவர்களால் என்ன செய்ய இயலும்…? எப்படி கவனிக்க முடியும்? அப்போது அங்கு அதிருப்தியும், சண்டை, சச்சரவுகளும் தானே தலை தூக்கும்?

நம்மில் பலர் அர்ப்பணிப்புள்ள பல அரசு மருத்துவர்களை, செவிலியர்களை அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர்கள் என்றென்றும் நம் மனதில் நிலைத்து விடுகின்றனர். அவர்களை தெய்வத்திற்கு நிகராக பாவிப்பவர்களும் உள்ளனர். அதே சமயம் எரிந்து விழும் டாக்டர்கள், செவிலியர்கள், போதுமான கவனம் தர மறுக்கிறார்களே… என நம்மை ஏங்க வைப்பவர்களையும் பார்த்திருக்கிறோம்.

அரசு மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் ஒரு தொழில்முறை குற்றவாளியோ, ரவுடியோ அல்ல. ஊடகங்கள் விசாரித்த வரை வம்புதும்புக்கு போகாத இளைஞர் என்றே சொல்கிறார்கள். அந்த இளைஞர் ஏற்கனவே ஒரு சில முறை தன் தாய்க்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் பாலாஜியை அணுகி வருத்தப்பட்ட போது அவர் கடுமையாக திட்டி அனுப்பி உள்ளார். அப்போதெல்லாம் அழுது கொண்டே சென்றவர், தற்போது தாய்படும் இன்னல்கள் தாங்காது மீண்டும் நியாயம் கேட்க வந்து அவமானப்பட்டத்தில், நிலைதவறி ஆவேசமாகி மருத்துவரை கடுமையாக தாக்கி உள்ளார். இது ஒரு  உணர்ச்சிகரமாக நடந்த சம்பவம். அந்த இளைஞருமே பதிலுக்கு அங்குள்ளவர்களால் கண் மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைகளின் பிரச்சினைகளை பேசும் போது , இதைக் காட்டிலும் தனியார் மருத்துவமனையே சிறந்தது என்ற முடிவுக்கும் நாம் போக முடியாது. தனியார் மருத்துவமனைகள் பணம் ஒன்றே குறிக்கோளாக இயங்கி வருவதையும், பல கெடுபிடிகள் அங்கு நடப்பதையும் நாம் அறிவோம்.

நாம் எதிர்பார்ப்பதெல்லாம் அரசு மருத்துவமனையில் தங்களுக்கு தவறான சிகிச்சை தரப்படுவதாகவோ, அலட்சியமாக நடத்தப்படுவதாகவோ நோயாளிகள் கருதும் பட்சத்தில், அதை வெளிப்படுத்தவும், அதை முழுமையாக செவி கொடுத்து கேட்டு தீர்வு காணவும் ஒரு தனிப் பிரிவை உருவாக்க வேண்டும். அதில் மிக அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், அதிகாரிகள் இடம் பெற வேண்டும். அவர்கள் தரும் ரிப்போர்ட்படி பாரபட்சமற்று நடவடிக்கைகள் பாய வேண்டும். அப்போது தான் இரு தரப்பிலும் ஏற்படும் பிணக்குகளுக்கு தீர்வு கிடைக்கும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time