இலங்கையில் நம்பிக்கை தரும் அரசியல் மாற்றங்கள்!

-சாவித்திரி கண்ணன்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவின்  தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. நம்பிக்கை தரும் புதிய அரசியல் கலாச்சாரமாக, இனப் பாகுபாடு இனி இருக்காது என்ற அனுராவுக்கு தமிழர்கள் பெரும் வரவேற்பு தந்துள்ளனர். முழுமையான அலசல்;

இலங்கை சரித்திரத்தில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல் தடவை. 1948ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஆளும் சிங்கள தலைமை கொண்ட கட்சிக்கு தமிழர்கள் பெரும் ஆதரவு அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த வெற்றிக்கு பின்னுள்ள மக்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் – அதை நிறைவேற்றத் தகுதியான தலைமை என்ற தோற்றத்தை உருவாக்கிய அனுராவின் அணுகுமுறை – ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

அதிபர் தேர்தல் நேரத்திலேயே இலங்கையை பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்வது, ஊழல் செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பது, கட்டுக்கடங்காமல் சென்ற விலைவாசி உயர்வை மட்டுப்படுத்துவது, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது… என பல வாக்குறுதிகளை அளித்த வகையில் அதை நோக்கிய அவரது செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

# பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடனாக பெற்றது.

# முன்னாள் அதிபர்கள், அமைச்சர்கள், ஆளுநர்கள் பயன்படுத்திய அரசாங்க வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்தது,

# வெளிநாட்டினர் இலங்கைக்கு வர விசா பெறுவதில் உள்ள சிக்கல்களைக் களைந்து ஆன்லைன் வழி 24 மணி நேரத்தில் விசா பெறுவதற்கான நடவடிக்கை எடுத்தது,

# இலங்கையில் 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை சேதம் அடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க சீன அரசிடம் இருந்து 30 மில்லியன் உதவிப் பொருட்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது,

# 30 ஆண்டு கோரிக்கையான பலாலி – அச்சுவேலி பிரதான வீதி திறக்கப்பட்டதானது வடக்கு மாகாண தமிழர்கள் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

# பணி செய்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இடைக்கால ஓய்வூதியமாக 3000 ரூபாய் வழங்கியது.

# சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான 11 ஆயிரம் ஏக்கர் நிலங்களை  பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்கியது.

போன்றவை மக்களிடையே நம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளது.

 

இதே போல சென்ற வாரம் தமிழர்களிடையே பேசிய அனுரா, ‘’நாங்கள் உங்களுக்குரிய தீர்வை பெற்றுக் கொடுப்போம். தமிழர்கள் வாழும் வடக்கிழக்கு இலங்கைக்கும், தென் இலங்கைக்கும் வித்தியாசம் இல்லாத தீர்வை தருவோம்’ என்று ஜனாதிபதி அங்கு ஆற்றிய உரை மக்கள் மனதில் ஒரு பெரிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளது..”

தமிழர்கள், முஸ்லீம்கள் வாழும் வடக்கிலும், கிழக்கிலும் தேசிய மக்கள் சக்தி கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளதன் மூலம்  இலங்கையில் உள்ள பலதரப்பட்ட சமூகங்களை ஒன்றிணைக்கக் கூடிய தலைவராக ஜனாதிபதி அனுரா உயர்ந்துள்ளார் என்ற புரிதலுக்கு தான் வர முடிகிறது.

அனுராவுடைய இடதுசாரிப் பார்வையும், அதிகார குவிப்பை தவிர்த்து அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்ற போக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் கவர்ந்துள்ளது.

”மக்கள் பிரதிநிதிகளின் ஒப்புதலின்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் வாக்குறுதியைவிரைவாக நிறைவேற்றுவேன்” என அவர் கூறி இருந்தது கவனிக்கத்தக்கது.

‘ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிபரானதன் பின்னர் இலங்கை அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள புதிய புத்துணர்ச்சி தரும் மாற்றம் குறித்து பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்’ என்பதற்கு இந்த வரலாற்று வெற்றி ஒரு  அத்தாட்சியாக பார்க்கப்படுகிறது.

”கடந்த காலங்களில் ஆளும் அரசியல் கட்சிகள் பெரும்பான்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் சட்டங்களை இயற்றினர். அது போன்ற ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை சிதைக்கும் சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம்” என அனுரா கூறியது மக்கள் மன்றத்தில் பெரும் நன்மதிப்பை ஏற்படுத்தி உள்ளதையும் கணிக்க முடிகிறது.

ஆகவே, இந்த வெற்றி அனுராவுக்கு மிகப் பெரிய கடமையை வழங்கி உள்ளது என்ற வகையில்,

# நலிந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்தவும்,

# மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும்,

# வீங்கி பெருத்துள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும்,

# ஊழலற்ற நிர்வாகத்தை சாத்தியப்படுத்தவும்,

# அனைத்து தேசிய இனங்களிடையே இணக்கத்தை உருவாக்கவும்,

# சமநீதி கொண்ட அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ஏற்படுத்தவும்,

# பாரபட்சமற்ற சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும்

# வெளியுறவுக் கொள்கையில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளிடையேயும் சமச்சீரான உறவுகளைப் பேணவும்

மக்கள் அளித்துள்ள மகத்தான தீர்ப்பு எனக் கருதலாம்.

கடந்த காலங்களில் 1994 ல் சந்திரிகாவும், 2010 இல் மகிந்த ராஜபக்சே அரசாங்கமும் 2020 இல் பொதுஜன பெரமுனவும் மக்கள் தந்த வெற்றியை வீணடித்துக் கொண்டதைப் போல அனுராவும் செய்து விடக் கூடாது என்ற எதிர்பார்ப்பு அனைத்து இலங்கையரிடமும் உள்ளது.

குறிப்பாக தமிழர் அதிகமாக வாழும் பகுதிகளில் அனுராவின் தேசிய மக்கள் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் எந்த அளவுக்கு அங்கு தமிழ் கட்சிகள் மக்களிடையே நம்பிக்கை இழந்துவிட்டுள்ளனர் என்பதற்கு அத்தாட்சியாக திகழ்கிறது.

தமிழர்களின் யாழ்பாணத்தில் தேசிய மக்கள் கட்சி பெற்ற வாக்குகள் 80,830, தமிழரசு கட்சி பெற்ற வாக்குகள் 63,327.

தமிழர்களின் அம்பாறையில், தேசிய மக்கள் கட்சி பெற்ற வாக்குகள் 1,46,313 தமிழரசு கட்சி பெற்ற வாக்குகள் 38,632,

திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளில், தேசிய மக்கள் சக்தி கட்சி  25,479 வாக்குகளைப் பெற்றுள்ளது என்றால், இலங்கை தமிழரசுக் கட்சியோ  18,461 வாக்குகளையே பெற்றுள்ளது.

குறிப்பாக திருகோணமலை மாவட்டம் சேருவில தொகுதியில், தேசிய மக்கள் சக்தி கட்சி  27,702 வாக்குகளைப் பெற்றுள்ளது என்றால், இலங்கை தமிழரசுக் கட்சியோ 5,543 வாக்குகளையே பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சி  87,031 வாக்குகளைப் பெற்றுள்ளது.  இலங்கை தமிழரசுக் கட்சி 8,415 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான வன்னி மாவட்ட வவுனியா தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சி 19,786வாக்குகளைப் பெற்றுள்ளது என்றால், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்போ 5886 வாக்குகளையே பெற்றுள்ளது.

அதே சமயம் தமிழரசு கட்சியானது அதிக வாக்குகளை வென்று மட்டகளப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அதிபர் பொறுப்பேற்று இரண்டு மாதம் கூட முடியாத நிலையில்,  சில நம்பிக்கை தரும் நடவடிக்கைகள் மூலம் மாற்றத்தை நோக்கி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி, நாடாளுமன்ற தேர்தலில் சரித்திர வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ள  அனுரா திச நாயகே நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவாரா? என்பதை காலம் தான் சொல்லும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time