நோயாளியாக்கப்பட்டுள்ள தமிழக மருத்துவத் துறை!

-சாவித்திரி கண்ணன்

தமிழகத்தில் மருத்துவ துறை உச்சகட்ட அவலத்தில் உள்ளது. நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்து பாதிப்பு ஏற்படுத்தும் மருத்துவர்களுக்கு துணை போகும் ஒரு சில மருத்துவர் சங்க தலைவர்களின் யோக்கியதை என்ன? இவர்கள் மருத்துவப் பணியே செய்யாமல் அதிகார மையத்தின் பவர் புரோக்கர்களாக வலம் வருவது எப்படி?

சமீபத்தில் கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தையடுத்து நோயளிகளுக்கும், அவர்களோடு வருபவர்களுக்கும் அதிகமான கெடுபிடிகள் காட்டப்படுகின்றன. இதனால் அரசு மருத்துவர்களுக்கும், பொது மக்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள அச்சம் நியாயமானதே! அவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, பொதுச் சமூகத்தின் கடமையும் கூட! ஆனால், பயம், பாதுகாப்பு ஆகிய காரணங்களால் மக்களிடம் இருந்து மருத்துவர்கள் அன்னியப்பட்டுவிடக் கூடாது.

அரசு மருத்துவமனை சென்று பெரும் பாதிப்பு அடைந்தவர்கள் தொடர்பாக வெளி வந்தது ஒரு சில நிகழ்வுகள் தான்! ஆனால், நூற்றுக்கணக்கான சம்பவங்கள் கவனத்திற்கே வருவதில்லை.

செலவின்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனடைந்தவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், தவறான சிகிச்சையால் உடல் உறுப்புகளை இழந்தவர்கள்,

நடமாடவே முடியாமல் நடை பிணமாகி  குடும்பத்திற்கு நிரந்தர பாரமானவர்கள்,

மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இறந்து போனவர்கள்..

போன்றோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காது எனும் போது, இதற்கு தீர்வு வேண்டாமா?  தவறு இழைத்தால் மருத்துவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்பதை உறுதிபடுத்தாத வரை இது போன்ற ஆணவ டாக்டர்களும், அலட்சியத்தால் நிகழும் துயரங்களும் தொடர் நிகழ்வாகவே இருக்கும்.

தவறான மருத்துவ சிகிச்சையால் உயிர் இழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா

அரசு மருத்துவப் பணியை புனிதமாக கருதி வேலை செய்யும் மருத்துவர்கள் 80 சதவிகிதம் என்றால், அலட்சியமான வகையில் அங்கு நோயாளிகளை அவமரியாதையாக நடத்துபவர்கள், மருத்துவமனைக்கே சரியாக வராதவர்கள், மருத்துவமனைக்கு வந்தாலும் தங்கள் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டும், செல்போனில்  பேசிக் கொண்டும் இருப்பவர்கள், பயிற்சி மருத்துவர்களையே பிழிந்து எடுத்து வேலை வாங்கிவிட்டு, மாதாமாதம் சுளையாக சம்பளத்தை வாங்குபவர்கள், அரசு சம்பளம் வாங்கிக் கோண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்று உழைத்துக் கொடுப்பவர்கள் ..எனச் சில மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பது தான் யதார்த்தம். இப்படிப்பட்டவர்கள் சங்கம் என்றும், அசோசேசியன் என்றும் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு, தங்கள்  மீது நடவடிக்கைகள் பாயா வண்ணம் அரசு அதிகார மையங்களுக்கு அடிவருடி வேலை செய்வதும் நடக்கிறதே?

அரசு மருத்துவர்களுக்கு ஐந்துக்கு மேற்பட்ட சங்கங்கள் உள்ளன! காரணம், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் செந்திலின் சுயநல நடவடிக்கைகள் பிடிக்காமல் பிரிந்து சென்றதால் உருவானவையே இவை! இவர் அடிப்படையில் அதிகார மையத்தின் ஒரு புரோக்கர்!

ஆம், டெல்லியில் அகில இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவராக இருந்த – தங்க கட்டிகள் புகழ் – ஊழல் மன்னன் டாக்டர் கேதான் தேசாய் போல, தமிழ்நாட்டில் வலம் வருபவர் தான் டாக்டர். செந்தில்.

சென்ற ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ‘குட்கா புகழ்’ ஊழல் மன்னன் விஜயபாஸ்கரின் எடுபிடியாக இருந்து அனைத்து ஊழல்களுக்கும் வழிகாட்டி கமிஷன் பார்த்தவர் தான் இந்த செந்தில் என்பது அரசு வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே! அந்த வகையில் தான் ஆட்சி மாற்றம் நடந்ததும் மருத்துவர் செந்தில் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால், ரெய்டுக்கு பிறகு விஜயபாஸ்கரைப் போலவே, திமுக ஆட்சியாளர்களை சரிகட்டி விட்டார். குட்கா புகழ் விஜயபாஸ்கரும், செந்திலும் தற்போது இந்த ஆட்சியாளர்களுக்கும் நெருக்கமாகவே உள்ளனர்.

மருத்துவர் செந்தில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவரான வகையில் தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு பெரிய தவறுகள் செய்தாலும் – நோயாளிகளுக்கு எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டாலும், அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு எல்லா புகார்களையும் நீர்த்து போக வைத்தது எல்லாம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்! அதே போல தடை செய்யப்பட்ட பல தவறான மருந்து, மாத்திரைகள் தடையின்றி தமிழகம் முழுக்க புழக்கத்தில் இருப்பதற்கும் இவரும் இவரை போன்றவர்களுமே காரணமாகும்.

இவரைப் போல இன்னொரு மருத்துவர் சங்கத் தலைவர் அகிலன். தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம். ஆரம்ப சுகாதார மையங்களில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் தலைவராக காட்டிக் கொள்ளும் இவர் திமுக மாவட்ட செயலாளர் ஒருவரின் சகோதரர். அந்த வகையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கம். அந்த நெருக்கத்தால் ஆரம்ப சுகாதர மையங்கள் மேம்பட்டாலோ, மருத்துவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலோ பரவாயில்லை. இந்த வகையில் இன்றைக்கு மருத்துவர் சங்கங்கள் நடத்துபவர்கள் யாருமே மருத்துவர்களுக்கானாவர்களும் இல்லை. மக்களுக்கானாவர்களும் இல்லை.

பிரச்சினைகள் தலை தூக்கும் போது மருத்துவர்களின் பாதுகாவலர்களாக அறிக்கை வெளியிடுவார்கள்! தவறு செய்துள்ள மருத்துவர் மீது நடவடிக்கை பாய்ந்தால் போராட்டம் வெடிக்கும் என மிரட்டுவார்கள். ஆனால், ஒரு போதும் நடந்த விவகாரத்தில் உள்ள உண்மை தன்மையை ஏற்று தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளவே மாட்டார்கள்! உண்மையில் இவர்கள் தான் மருத்துவர்கள் மீது மக்களுக்கு உள்ள மரியாதையை கெடுப்பவர்கள். மருத்துவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளியை அதிகப்படுத்துபவர்கள்.

 

ஒரு சில வருடங்களுக்கு முன்பு கால்பந்தாட்ட இளம் வீராங்கனை பிரியாவின் கால் தவறான சிகிச்சையால் அகற்றப்பட்டு உயிர் இழந்த நிலையில், சம்பந்தப்பட்ட  இரு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்து முட்டுக் கட்டை போட்டது மருத்துவர் அமைப்புகள் தாம்!

தற்போது கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜிக்கு ஆதரவாக அறிக்கைகள், போராட்டங்கள் ஆகியவை நடத்தி, நடந்த உண்மைகளை மூடி மறைத்து திரித்துப் பேசி, பாலாஜி சரியான சிகிச்சை வழங்கியவர் தான் எனக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கின்றன இந்த மருத்துவர் சங்கங்கள்!

ஆரம்ப நிலை புற்று நோயாளியாக வந்த விக்னேஷின் அம்மாவை அபாயகரமான ஐந்தாவது நிலைக்கு கொண்டு போனவர் மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களை  மிகக் கேவலமாக நடத்தி மரணத்திற்கு நெருக்கமான நிலைக்கு தள்ளியவர் தான் பாலாஜி. ஒரு சாதாரண, மென்மையான இளைஞன் மீது இன்று படுமோசமான ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என விசாரணை இல்லாமலே ஆட்சியாளர்களால் அறிவிக்க நிர்பந்தப்படுத்தும் நிலை உருவாக யார் காரணம்? என்ன காரணம்?

விக்னேஷ் செய்தது மாபெரும் தவறு. அந்த இளைஞருக்கு சட்டப்படி தண்டனை கொடுங்கள். கொடூரமாக தண்டித்துவிடாதீர்கள். அவரது வெறித்தனமான தாக்குதலை ஒரு போதும் ஏற்க முடியாது. ஆனால், அந்த குற்றத்திற்கு அவரை தூண்டிய மருத்துவர் பாலாஜியை ஒரு போதும் தப்பிக்கவிடக் கூடாது. இவரால் ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயமின்றி புகார் தரும் நிலை உருவாகுமானால், அனேக அதிர்ச்சி உண்மைகள் வெளிவரக் கூடும்.

மருத்துவர் பாலாஜி ஏதோ பெரிய தியாகி போல அவருக்கு ஆதரவாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுவதையும்,  நேரில் சென்று பார்ப்பதையும் பார்க்கும் போது, எதில் தான் அரசியல் செய்வது என்ற விவஸ்த்தை இவர்களுக்கு இல்லையே என்ற வேதனையே மிஞ்சுகிறது.

இப்படி ஒரு பேராதரவு கிடைக்குமானால், தவறான மருத்துவர்களுக்கு இதுவே தெம்பாகி பல தவறுகளை அரங்கேற்றிவிட்டு, சப்பைகட்டு கட்டவே இவை வழி வகுக்கும்.

இதே கலைஞர் நூற்றாண்டு மருத்துவனையில் அதே பெயர் கொண்ட விக்னேஷ் என்ற இளைஞர் கல்லீரல் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டு அந்த வார்ட்டுக்கு மருத்துவர்கள் யாரும் வராத நிலையில், உடனடி சிகிச்சை கிடைக்காத நிலையில் அலட்சியத்தால் தற்போது இறந்துள்ளார். அந்தக் குடும்பத்தின் கதறல் நம்மை கலங்கடிக்கிறது.

ஆம்பூரில் பிரசவத்தின் போது ஏற்பட்ட தவறால் ஒரு பச்சிளம் குழந்தை இறந்துள்ளது. அந்த ஏழைக் குடும்பம் ஒரிரு மணி நேரம் மருத்துவமனை எதிரே போராட்டம் நடத்தி, கோஷம் போட்டு கிளம்பி சென்றதோடு அது முடித்து வைக்கப்பட்டது.

ஏழைகளுக்கு அரசு மருத்துவமனையை விட்டால் போக்கிடம் ஏது? எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும், அரசு மருத்துவமனைகளே ஏழை நோயாளிகளின் சரணாலயமாகும்.

அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகரிக்கின்றன. புதிய, புதிய பளபளப்பான அரசு மருத்துவமனை கட்டிடங்கள் எழுந்து நிற்கின்றன. ஆனால், அதற்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையை அரசு ஏற்க மறுக்கிறது. இருக்கிற பணியாளர்களையே அங்குமிங்கும் தூக்கி போட்டு சமாளிக்கிறது.

சென்னை ஜி.ஹெச்சில் தினசரி 6,000 புற நோயாளிகள் வந்த நிலை மாறி, தினசரி 15,000 நோயாளிகள் வரும் நிலை உருவான நிலையில், அதே பழைய எண்ணிக்கையில் உள்ள மருத்துவர்களும், பணியாளர்களும் எப்படி போதுமானதாக இருக்க முடியும்? இது தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளின் நிலையாகும்! இன்றைக்கு இருக்கும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை இன்னும் ஒரிரு மடங்கு அதிகரித்தால் மட்டுமே அரசு மருத்துவமனைகளை பிரச்சினையின்றி நடத்திச் செல்ல இயலும்.

உள் நோயாளிகள் பிரிவில் இருக்கும் மருத்துவர்கள் சுமார் 14 மணி நேரம் வேலை பார்க்க நிர்பந்திக்கப் படுகிறார்கள்! இந்த வேலைப் பளுவானது  மருத்துவர்களையே நோயாளியாக்கிவிடுகிறது.

தற்போது மருத்துவர்கள் எண்ணிக்கை 19,000

தேவைப்படும் எண்ணிக்கை -38,000

தற்போது செவிலியர் எண்ணிக்கை 40,000

(அதாவது 40 பெட்டுக்கு ஒரு செவிலியர்)

தேவைப்படும் எண்ணிக்கை 2,00,000

(அதாவது 8பெட்டுக்கு ஒரு செவிலியர்)

தற்போது துப்புறவு பணியாளர்,பிளம்மர், எலக்டிரிசியன் 60,000

தேவைப்படும் எண்ணிக்கை 3,00,000

இந்தப் பற்றாகுறை மட்டுமல்ல, இந்தியாவிலேயே மருத்துவர்களுக்கு குறைந்த சம்பளம் இங்கு தான்! இது குறித்து எந்தப் புரிதலுமற்ற ஒரு முதல்வர் தற்போது உள்ளார். ஆர்வம், திறமை இருந்தும் செயல்பட முடியாத ஒரு சுகாதார  அமைச்சர் உள்ளார். இது தான் இன்றைய தமிழகத்தின் நிலையாகும்.

மருந்து, மாத்திரைகள் பற்றாகுறை, பழுதான மருத்துவ இயந்திரங்கள், சுகாதாரத்தை பேணும் துப்புறவு தொழிலாளர்களின் பற்றாகுறை போன்றவை அரசு மருத்துவமனைகள் சந்திக்கும் மிகப் பெரிய சவாலாக எப்போதுமே தொடர்கிறது.

துப்புறவு பணியாளர்கள் இல்லாவிடில் மருத்துவமனைகளே நாறிவிடும். ஆனால், அவர்களை நிரந்தர பணியில் வைத்துக் கொள்ளாமல், ஒப்பந்தக் கூலிகளாகவே பல்லாண்டுகள் வைத்திருக்கும் அணுகுமுறையை போலவே தற்போது படித்த மருத்துவர்களையும் அரசு மருத்துவ மனைகளில் தினக்கூலி வேலை செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளனர். தமிழக அரசு மருத்துவ துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்.

இறுதியாக நாம் வைக்கும் வேண்டுகோள் இது தான்; ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் தவறான சிகிச்சை, அலட்சியமான அணுகுமுறை, அவமரியாதையான நடவடிக்கைகளில் பாதிக்கப்படும் நோயாளிகளின் புகாரை செவி கொடுத்து கேட்கவும், பாரபட்சமற்ற நடவடிக்கைகள் எடுத்து தீர்வு தரத்தக்க அதிகாரம் கொண்ட தனிப் பிரிவு ஒன்று அவசியம் இருக்க வேண்டும்.  இது காலத்தின் கட்டாயமாகும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time