புல்டோசர் கலாச்சாரத்தில் புளகாங்கிதப்படும் பாஜக!

-ச.அருணாசலம்
அதிரடியாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வாழும் வீடுகளை, வணிக வளாகங்களை இடித்து அவர்களை ஏதுமற்ற அனாதைகளாக்கி நடுத் தெருவில் நிறுத்துவது இங்கு அரசியல் தர்மமாகவே அனுசரிக்கப்படுகிறது! இந்த வகையில் சில லட்சம் வீடுகள், கடைகள்  இடிக்கப்பட்டு, சில லட்சம் ஏக்கர் நிலங்களும் பறிக்கப்பட்டுள்ளன;
கடந்த சில ஆண்டுகளாக பாஜக ஆளும் மாநில அரசுகள் இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் வீடுகளையும், வணிக இடங்களையும் புல்டோசர் மூலம் இடித்து நொறுக்குவதை ஒரு புதுவித கலாச்சரமாக வளர்த்து வருகின்றனர். இத்தகைய இடிபாடுகளுக்கு உள்ளானவர்கள், இந்துக்களின் ஊர்வலத்தில் கல்லெறிந்தார்கள், கலவரச் செயலில் ஈடுபட்டனர், என இஸ்லாமியர் மீது குற்றம் சுமத்தபடுகிறது. அடுத்த நாளே அவர்களின் வீடுகளோ, கடைகளோ புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கபடுகின்றன. குற்றஞ்சாட்டபட்ட நபர்களின் குடும்பத்தினர் அனைவரும் நிர்க்கதியாக நடுத்தெருவில் நிறுத்தப்படுகின்றனர்.
பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் போட்ட சண்டையில் ஒரு பையனுக்கு கத்திகுத்து விழுகிறது, குத்திய பையன் இஸ்லாமிய மத்த்தை சார்ந்தவன் என்பதால் அடுத்த நாளே
அவனது மாடி வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்படுகிறது.
இவ்வாறு ஒன்றிரண்டு சம்பவங்களல்ல, 2,50,000 வீடுகள் கடந்த 2022-2023 ல் இடிக்கப்பட்டுள்ளன, ஏறத்தாழ ஏழு லட்சத்தி முப்பத்தி எட்டாயிரம் மக்கள் இதனால் நடுத் தெருவில்
ஒண்ட இடமின்றி நிறுத்தப்பட்டனர். இந்த வகையில் இஸ்லாமிய சமூகத்திடமிருந்து உ.பியில் மட்டுமே 67,000 ஏக்கர் அபகரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது ஒரு அரசு வன்மத்தையும், வன்முறையையும் காட்ட முடியுமா ? அதை அந்த தவறை வெறும் அதிகார மீறல் என்று கடந்து போக இயலுமா?
இத்தகைய ‘ ஆளுக்கொரு நீதி, சமூகத்தினருக்கு ஒரு நீதி’ என்பது இருபதாம் நூற்றாண்டில் இருக்க முடியுமா?
வரலாறு நமக்கு நாஜி ஜெர்மனியில் 1935 ன் நுரெம்பர்க் சட்டங்கள் யூத சமூகத்தினரை அழித்தொழிக்க புகுத்தப்பட்டதை சுட்டி காட்டுகிறது, அமெரிக்க குடியேற்றத்தின் போது,
அமெரிக்க பூர்வீக குடிகளான செவ்விந்தியர்களுக்கு ஒரு சட்டம், வெள்ளை காலனியவாதிகளுக்கு ஒரு சட்டம் என இருந்தது உண்டு, பின்னாளில் அங்கு கறுப்பின மக்களுக்கு என ஒரு சட்டம், வெள்ளையருக்கு ஒரு சட்டம் என இருந்த காலமும் உண்டு, காலனி ஆதிக்கவாதிகள் நாடுகளை அடிமைப்படுத்தும் பொழுது பறங்கியருக்கு ஒரு சட்டம் சுதேசி நாட்டினருக்கு ஒரு சட்டம் என பாகுபாடு இருந்ததுண்டு.
ஏன், பழம்பெருமையும் , புராதனமும் மிகுந்த நமது ‘பாரத நாட்டில்’ பார்ப்பானுக்கு ஒரு நீதி ,
சூத்திரனுக்கு ஒரு நீதி என்று இருந்தது உண்டு அல்லவா? ஆனால் இந்தியா விடுதலை அடைந்த பின்பு , நமது அரசமைப்பு சட்டம் அமலுக்கு வந்த பின்னர் இத்தகைய முறை மாற்றப்பட்டு ‘எல்லாரும் ஓர் நிறை எல்லோருக்கும் ஒரு நீதி ‘ என்பது நடைமுறைக்கு வந்தது.
ஆனால், கடந்த பத்தாண்டுகளில்-மோடி பிரதமரான பின்னர் பாரபட்சமாக சட்டங்களை பிரயோகிப்பதும் தங்களது சார்பு நிலைகளுக்கேற்ப சட்டங்களை வளைப்பதும் பல்கி பெருகியுள்ளன.
உத்தர பிரதேசத்தில் தொடங்கி மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, புது தில்லி,
ராஜஸ்தான், சட்டீஸ்கர், அஸ்ஸாம் மற்றும் மும்பை என இந்துத்துவ சக்திகள் ஆட்சியில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் இந்த அநியாயங்கள் நடக்கின்றன.
குற்றம் சாட்டப்ட்ட ஒருவரை , உரிய விசாரணை இல்லாமல் , குற்றஞ்சாட்டிய அதிகாரிகளே உடனடியாக தண்டிப்பது அதுவும் அவரது குடும்பம் வசிக்கும் வீடுகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி இடிப்பது நீதி பரிபாலன முறையுமல்ல, இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழ் வரும் தண்டனையுமல்ல, சட்ட வழிமுறையுமல்ல.
ஆனால், நேர்மையற்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் இக்கொடுஞ்செயலை நியாயப்படுத்த முனிசிபல் சட்டங்களை துணைக்கு அழைக்கின்றனர். அரசு அங்கீகாரம் இன்றி , அனுமதியின்றி கட்டிடம் கட்டியுள்ளனர் என வாதம் புரிகின்றனர்.
அது மட்டுமின்றி இந்த சட்டமீறலையே, சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் செயலாக போற்றி
புளகாங்கிதம் அடைகின்றனர். இதனை தொடக்கி வைத்து கணக்கில்லா இஸ்லாமியரை
கருவறுத்த உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ‘ புல்டோசர் பாபா’ என்றும்
 மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானை ‘ புல்டோசர் மாமா’ என்றும், உத்திரகாண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமியை ’புல்டோசர் பையா’ என்றும் புகழ்கின்றனர்.
இவர்களது பாரம்பரியமும் , வேத புராணங்களும் இதைத் தான் இவர்களுக்கு கற்றுக் கொடுத்ததா!

ஆனால், இவர்கள் நீதிமன்றங்களின் முன்  வைக்கும் வாதங்களெல்லாம் நகராட்சி சட்ட மீறல்களை பற்றியும், இரண்டாம் மட்ட அதிகாரிகள் தவறு செய்துவிட்டதாகவுமே தான் உள்ளது.

என்ன நடக்கிறது என்றால், ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி என்ற விழாவைக் காரணமாக்கி இஸ்லாமியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள் வழியே காவி அணிவகுப்பை ஆர்ப்பாட்டத்துடன் நடத்துவார்கள்! அப்படி நடக்கும் போது வழியெங்கும் உள்ள இஸ்லாமியர் வசிப்பிடங்களையும், வணிக நிறுவனங்களையும், வழிபாட்டுத் தளங்களையும் குறி வைத்து அவற்றில் ஏறி நின்று காவி கொடியை ஏற்றி கோஷமிடுவார்கள். இதற்கு யாரேனும் அங்கு ஆட்சேபம் தெரிவித்தால், அது இவர்களுக்கு பெரும் வாய்ப்பாக மாறிவிடுகிறது. பெரும் கலவரத்தை அரங்கேற்றிவிடுவார்கள். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களின் கட்டிடங்களையும் நகராட்சி ஆணையின் பேரில் இரக்கமின்றி இடித்து தள்ளி விடுகிறார்கள்!

இதையெல்லாம் இரண்டு வருடங்களுக்கு மேல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உச்சநீதி மன்றம் இப்பொழுது இத்தகைய சட்ட புறம்பான  ‘புல்டோசர் கலாச்சாரத்தை’ முடிவுக் கொண்டுவர வழிமுறைகள் அளித்துள்ளது.

உச்சநீதி மன்ற அமர்வு , 2022 ம் ஆண்டு மத்திய பிரதேசம் கார்கோன் (Khargone) நகரிலும், புது தில்லி , ஜகாங்கீர்புரி பகுதியிலும் தொடங்கி இன்றுவரை இந்தியாவில் நடந்த புல்டோசர் இடிப்புகளை கணக்கில் கொண்டு ஒரு பொது உண்மையை கோடிட்டு காட்டி உள்ளது.

அந்த உண்மை என்னவென்றால், இடிக்கப்பட்ட வீடு கடைகளின் சொந்தக்கார்ர்கள் -குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் – அனைவருமே முஸ்லீம் மக்கள் தான்! அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு நாட்களில் அவர்களது வீடுகள்/கடைகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகின்றன என்பது தான்.

குறிப்பிட்ட சமூகத்தினரை (இஸ்லாமியரை) குற்றம் சுமத்துவது, உடனே அவர்களது வீடுகளை இடித்து தரைமட்டமாக்குவது என்ற புது பாணியை மாநில அரசுகள் கடைபிடிப்பதை உச்சநீதி மன்றம் படம் பிடித்து காட்டியுள்ளது.

இங்கு அதிகார பிரிவு (separation of powers) சிதைக்கப்பட்டு, சேதமிழைப்பதற்காகவே சட்டத்தை ஏவுதல் (Punitive use of the law) என்ற குற்றஞ்சாட்டும் எழுகிறது. அதிகாரிகளே , விசாரணை ஏதுமின்றி தண்டனை வழங்கும் நீதிபதிகளாக மாறுவதை காட்டுகிறது.

மேலும் , வாழ்விடங்களை நொறுக்குவது ‘வாழ்விடத்திற்கான உரிமையை’ மறுக்கின்ற செயல். குடும்பத்தையே தண்டிப்பது ஏற்புடையதல்ல’’ என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

இதனடிப்படையில் , 15 நாள் நோட்டீஸ், தனிப்பட்ட விசாரணை, காரணங்களை முன் வைத்த ஆணை, சாட்சியங்களின் முன்னிலையில் கள ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தல் ஆகிய நடைமுறைகள் நீதிமன்றம் வகுத்து அளித்துள்ளது.

அதிகாரிகள் டிஜிட்டல் போர்ட்டல் -இணைய தளம்- ஒன்றை ஏற்படுத்தி அதில் முன்னறிவிப்புகள் , பதிலுறைகள், மற்றும் ஆணைகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும், என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தங்களது செயல்களுக்கு பொறுப்பாக்கும் விதத்தில் வழி முறைகளையும் உச்சநீதி மன்றம் வகுத்து அளித்துள்ளது.

உச்சநீதி மன்றத்தின் “பல்லில்லாத” அறிவுறுத்தல்களும், ஆணைகளும் உரிய பலன் தருமா?

ஒரு வகையில், ”நடக்கும் அநீதிகளை சட்ட வழிமுறைப்படி செய்தால், இதில் நாங்கள் தலையிட முடியாதல்லவா?” என நீதிமன்றம் கேட்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனபோதிலுமே கூட, இந்த உச்சநீதி மன்ற வழி காட்டலை பாரதீய ஜனதா கட்சியை சார்ந்த முதல்வர்கள் யாரும் வரவேற்கவில்லை.

இவர்களுக்கெல்லாம் மேலாக நவ இந்தியா பற்றி பேசிவரும் மோடி இத்தீர்ப்பு பற்றி எதுவும் பேசவில்லை. மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பரப்புரைகளில் மோடியும், யோகியும் எதிர் கட்சிகளுக்கு புல்டோசரை எங்கு அனுப்ப வேண்டும் என தெரியவில்லை எனக் கூறுகின்றனர்.

ஒரு சிறிய கலாச்சார கூட்டம் தனது சடங்குகளையே, தனது வழிமுறைகளையே இந்துக்களின் அடையாளமாக முன்னிறுத்தி, இந்திய நாட்டையே இந்துக்களின் நாடாக உருவகப்படுத்தியதில், வேற்றுமை படுத்திய, புறந்தள்ளிய, ஒதுக்கி வைத்த மக்கள் சிறு பான்மையினரும், தலித்துகளும் தான்.

சாதிக் கொடுமைகளுக்கெதிராக களம் கண்ட நாராயண குரு, ஜோதிராவ் பூலே போன்றோரை மட்டுமல்ல, இந்து சமய சீர்திருத்தவாதிகளையும் கூட இந்துத்துவவாதிகள் ஏற்றுக் கொள்ளுவது இல்லை.

இத்தகைய சீரழிவு , இந்திய சமூகத்தில் குறிப்பாக படித்த கூட்டத்தினரிடையே வேறூன்றி உள்ளது. அதன் வெளிப்பாடு , சமூக ஊடகங்களில் வெறுப்பை தூண்டும் பதிவுகளுக்கும், வன்மத்தை விதைக்கும் பதிவுகளுக்கும் பெருகி வரும் ஆதரவில் தெரியவருகிறது.

தேர்தல் அரசியலில் கிடைக்கும் வெற்றிகளோடு மட்டும் தமது நடவடிக்கைகளை நிறுத்தாமல், முற்போக்காளர்களும், நல்லெண்ணங்கொண்டோரும், சமூக அக்கறையாளர்களும் அனைத்து தளங்களிலும் – கலை, இலக்கிய , மற்றும் பொது வெளிகளிலும் வன்மத்தை மறுதலித்து அனைவரின் முன்னேற்றத்தையும், முன்னெடுக்க வேண்டும். இதற்கு பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பழம் பெருமை யாருடைய பெருமை என்று புரிய வரும். யார் யார் ஏனையோரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளனர் என்பதும் புரியவரும்.

இதற்கு எது தடையாக உள்ளது?

அமெரிக்க வரலாற்று பேராசான் திரு ஹோவாரட் ஜின் கூறுவது இங்கே சிந்திக்க தக்கது.” நமது பிரச்சினை என்னவெனில் சமூக ரீதியாக கீழ் படிந்து போவது தான்…. நமது பிரச்சினை என்னவெனில், வறுமைக்கும் பட்டினி மற்றும் முட்டாள்தனங்களின் மத்தியிலும் அடக்குமுறைகளின் மத்தியிலும் மக்கள் கீழ்படிந்து

நடந்து கொள்வது தான், நமது பிரச்சினை நமது சிறைச்சாலைகள் எல்லாம் சிறிய திருடர்களால் நிரம்பி வழியும் போது மிகப்பெரிய திருடர்கள் நாட்டை ஆளுகின்றனர் என்பது தான் . அப்போதும் மக்கள் கீழ்படிந்து போவது தான்….நாஜி ஜெர்மனியிலும் இதுதான் நடந்தது, மக்கள் ஹிட்லருக்கு அடிபணிந்தார்கள், மக்கள் கீழ்படிந்தார்கள் அதுதான் பிரச்சினை, அதுதான் தவறு, அவர்கள் எதிர்த்து இருக்க வேண்டும் , அவர்கள் போராடியிருக்க வேண்டும்… நாம் அங்கு இருந்திருந்தால் நாம் அதை காட்டியிருப்போம்…”

இந்த வரிகள் இன்று இந்திய இளைஞர்களை சிந்திக்கத் தூண்டுமா?

ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time