ஸ்டெர்லைட் மூலம் தூத்துக்குடியை தூங்கா குடியாக்கி 15 உயிர்களை காவு வாங்கிய வேதாந்தா நிறுவனம், தற்போது மதுரை மாவட்டத்தில் மலைகளை விழுங்கும் ‘குவாரி சுரங்கங்கள்’ நிறுவி, பேரழிவில் தள்ள உரிமை பெற்றுள்ளதாம்! தேரோடும் சீரான மதுரை, தற்போது போராடும் ஊரான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறித்த பார்வை;
அரிட்டாபட்டி, மதுரைக்கு அருகில் மேலூரை ஒட்டியுள்ள மிக அழகான கிராமம். இந்த கிராமம் மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. களிஞ்ச மலை, நாட்டார் மலை, ஆப்டான் மலை, ராமாயி மலை, கழுகு மலை, தேன்கூடு மலை, கூகைகத்தி மலை என ஏழு மலைகள் மேலூர் – அரிட்டா பட்டியில் உள்ளன. இந்த ஊரைச் சுற்றி கண்மாய்கள், நீரோடைகள், குளங்கள் என நூற்றுக்கும் நீராதாரங்கள் உள்ளன. மேற்பட்ட இயற்கையின் எழில் பூத்துக் குலுங்கும் ஊராகும். இங்கு அரிய பறவை இனங்கள் இங்கு வந்து போகின்றன.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், இங்கு தேன் பருந்து, கொம்பன் ஆந்தை, அழங்கு, கரும்பருந்து, லகடு வல்லூறு, ராஜாளி கழுகு, சிவப்பு வல்லூறு, செந்தழை வல்லூறு, குட்டைக் கால் பாம்பு திண்ணிக் கழுகு, என்று 160 க்கும் மேற்பட்ட பறவையினங்களும், மலைப் பாம்புகள் புள்ளி மான்கள், மினா மான்கள், அழிந்து வரும் தேவாங்கு, … போன்ற உயிரிங்களும் காணக் கிடைக்கின்றன.
கிராமத்தின் தர்மக்குளம், மலைகள், சுனை பறவைகள், குடைவரை கோவில், சமணர் படுக்கை, மூலிகைச் செடிகள்,கொடிகள் ஆகியவை, இந்த இடத்தை ஒரு பூலோக சொர்க்கம் என்றே பார்ப்போரை உணர வைக்கும்.
இப்படிப்பட்ட இடத்தை விழுங்கி, இங்குள்ள அரிய கனிம வளங்களை அபகரிக்க பற்பல கிரானைட் குவாரி முதலைகள் தொடர்ந்து முயற்சித்த வண்ணம் இருந்தனர். இவர்களுக்கு பல கட்சி அரசியல்வாதிகளின் ஆதரவும் உள்ளது. அதே சமயம் அதை எதிர்த்து ஏழுமலை பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு வலுவாக போராடி வருகிறது. இந்த அரிட்டாபட்டி கிராமத்தின் காலஞ்சென்ற இரவிச்சந்திரன் இதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து போராடி வந்தார்.
இவர்களுக்கு ஆதரவாக தோழர் முகிலன் போன்றவர்களும் சேர்ந்து சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் என்பதாக அமைபபி ஏற்படுத்தி அன்றைய மதுரை ஆட்சியர் சகாயத்திற்கு உறுதுணையாக இருந்து, கிரானைட் கொள்ளையர்கள் இந்த இடத்தை விழுங்காமல் காப்பாற்றி வந்தனர்.
இவ்வளவு அரும்பாடுப்பட்டு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இந்த இடத்தை காப்பாற்றி வந்த போதிலும் 2018 ஆம் ஆண்டு இங்கே வேதாந்தா குழுமத்தின் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் மத்திய அரசின் உதவியுடன் ஆய்வு செய்வதாக அறிவித்தது. அப்போதே மக்கள் இந்த பேழிரழிவை தடுத்து நிறுத்தக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து போராடினர். ஆனாலும் அன்று தொடங்கி அரிட்டாபட்டியின் மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசின் சுரங்கங்கள் அமைச்சகம் கடந்த ஏழாண்டுகளாக கனிமவளங்கள் குறித்த ஆய்வை தமிழக அரசு அதிகாரிகள் துணையுடன் நடத்தி வந்துள்ளதன் விளைவாக இங்கு எட்டு இடங்களில் கனிம புதையல் உள்ளதாக கண்டறிந்துள்ளது.
இதை வேதாந்தா நிறுவனம் வேண்டுமளவு அள்ளிக் கொள்ள தற்போது சுமார் 5,000 ஏக்கர் நிலங்கள் அவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் சுரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரா.சா.முகிலன் தலைமையில் கிராம மக்கள் நேற்றைய தினம் (நவ.18) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கடந்த நவ.7-ல், ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் 5,000 ஏக்கர் பரப்பளவில் மதுரை மேலூர் வட்டத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் ஏலம் எடுத்துள்ளது. இதனால், அரிட்டாபட்டி , நாயக்கர் பட்டி ,தெற்குத் தெரு, முத்துவேல்பட்டி, குளனிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளாளப்பட்டி, சிலீப்பியாபட்டி, செட்டியார்பட்டி.. எனும் 10 கிராம மக்கள் அகதிகளாகும் நிலை உள்ளது. சுற்றுச் சூழலும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகும். எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த பேராபத்து குறித்து தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளும் இது வரை வாய் திறக்கவில்லை. மதுரை சி.பி.எம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். இதை எதிர்த்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
’’மதுரை அரிட்டாபட்டி துவங்கி அழகர் மலை வரை மாமதுரையின் வளங்களையும், வரலாற்றையும் அழிக்கும் முயற்சி! டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு ஏலம். கீழடி அகழாய்வுக்கு அனுமதி தராத ஒன்றிய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது. ஒன்றிய அரசே ஏலத்தை ரத்து செய். தமிழக அரசே இந்த திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் தராதே! பண்பாடு சார்ந்து, வரலாறு சார்ந்து இயற்கை எழிலுடன் பலவிதமான கொன்றுண்ணி பறவைகள் மற்றும் உயிரினங்கள் வாழும் இத்தகைய இடங்களை பாதுகாப்பது நமது தலையாய கடமை.’’
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கி சுற்றுச் சூழல் கேடுகளை விளைவித்து பெரும் போராட்டம் வெடித்து 15 பேர் இறப்பதற்கு காரணமான வேதாந்தா நிறுவனம் மீண்டும் தமிழ் நாட்டுக்குள் பேரழிவை விளைவிக்க அனுமதிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த இடம் இயற்கை எழிலுக்கும், பல்லுயிர் பன்மத்திற்குமான இடம் மாத்திரமல்ல. பல வரலாற்று சிறப்புகளும், அன்மீகச் சிறப்புகளும் அரிட்டாபட்டிக்கு உள்ளன.
அரிட்டாபட்டி வரலாறு என்பது ஆசிவகர்கள் காலத்தோடு தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு சான்றாக இங்கு ஆறு கற்படுகைகளும், ஒரு தீர்த்தங்கரரின் சிற்பமும் உள்ளன. மேலூர் அரிட்டாபட்டி கள்ளர்கள் தங்கள் குல தெய்வ கோயில் களரிக்காக கள்ளழகர் கோயில் தீர்த்தம் எடுத்து வந்து வளரி கொண்டு சாமியாடி வழிபடுவது தொன்று தொட்டு இன்று வரை தொடர்கிறது.
மேலும் கி.பி. 7 அல்லது 8 ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கருதப்படும் ஒரு குடை வரைக் கோயிலும் இங்கு உள்ளது. தொல்லியல் துறையின் அறிவிப்புப் பலகை இது முற்காலப் பாண்டியர் காலத்தைச் சார்ந்தது எனச் சொல்கிறது. இந்தக் குடைவரைக் கோயிலில் பாறையில் செதுக்கப்பட்ட லகுலீசர் என்ற சிவன் லிங்கமும் செதுக்கப் பட்டிருக்கிறது.
இதன் வெளிப்புறத்தில் ஒரு விநாயகர் சிலையும், சிவபெருமானின் சிலையும் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த விநாயகர் சிலை பிள்ளையார் பட்டியில் உள்ள சிலைக்கு ஒத்ததாக இருக்கிறது. ஆயினும் ஏனோ இது பிரபலமடையவில்லை.
2022 ஆம் ஆண்டு அரிட்டாபட்டியை பாதுகாக்க வேண்டிய இடம் எனக் கூறி, பல்லுயிர் பாதுகாப்பு மண்டலம் என அரசாங்கம் அறிவித்துவிட்டு, தற்போது அதை அனில் அகர்வாலின் பணப்பசிக்கு இரையாக தருவதற்கு இசைந்துள்ளது என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது. அரசின் கவனத்திற்கு கொண்டு போகிறோம் என மனுவை பெற்றுக் கொண்டு பேசுவது அரசு நிர்வாகமே பொய், பித்தலாட்டமயமாகிவிட்டதன் அறிகுறியாகும்.
பற்பல போராட்டங்கள், தியாகங்களுக்கு பிறகு இந்திய மக்களுக்கு பிரிட்டிசாரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. ஆனால், நம் இந்திய ஆட்சியளர்களும், அரசியல்வாதிகளும் நம் நாட்டின் அழிக்கக் கூடாத இயற்கை செல்வங்களை தங்களின் சொந்த ஆதாயத்திற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், மார்வாடி தொழில் அதிபர்களுக்கும் தந்து அழித்து வருகிறார்கள். இயற்கையை இழந்தால், மீண்டும் திரும்பப் பெற இயலாது. அணில் அகர்வால் என்ற இந்தியாவில் பிறந்த மார்வாடி தொழில் அதிபர் தற்போது பிரிட்டிஷ் பிரஜையாகி, இந்தியாவின் பல மாநிலங்களில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்து இவ்வாறு சுரங்கங்கள் நிறுவி, பேரழிவுக்கு வித்திட்டு வருகிறார்.
இது மதுரையிலும், அதை சுற்றிலும் உள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மட்டுமே போராடும் விவகாரமல்ல. இந்த குவாரிகளுக்கான எதிர்ப்பு சமூக வலதளங்களுடனோ, வெறும் அறிக்கை மற்றும் அடையாளப் போராட்டங்களுடனோ எதிர்த்து விட்டு, கடந்து செல்லக் கூடியதல்ல. ஏனெனில், இந்த குவாரிகள் இயற்கையை அழிப்பதால் தென் மாவட்டங்களையே பாலைவனமாக்கிவிடும்.
ஒட்டுமொத்த தமிழக மக்கள் விழிப்படைந்து, சமரசமின்றி உறுதிபடத் தொடர்ந்து போராடி எதிர்க்காவிட்டால், எழிலார்ந்த மதுரையை சில ஆண்டுகளில் ஏதுமற்ற மதுரையாக ஆக்கி விடுவார் அணில் அகர்வால்!
சாவித்திரி கண்ணன்
என்ன சொல்ல?
இந்த கார்ப்பரேட் கைக்கூலி அரசியல் கட்சிகளை மக்கள் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ?
இன்னும் துப்பாக்கிச்சூடு நடந்தாலும் ஆச்சரியமாக இருக்காது.
எழில் ஆழ்ந்த மதுரை ஏதுமற்ற மதுரையாக மாறுவது தவிர்க்க இயலாது என்பதை கட்டுரை ஆணித்தரமாக பலவிதமான சான்றுகளுடன் சொல்கிறது கட்டுரையின் வடிவமைப்பு இயற்கை நகரத்தின் மீது உள்ள ஈடுபாட்டை உணர்த்துகிறது
தடுத்து நிறுத்தும் வரை போராட வேண்டிய விஷயம்
பண்பாட்டு மண்டலமாக மாமதுரையை அழிக்காதே!
மக்களை அகதிகளாக வெளியேற்றாதே!!
இந்த அநியாயத்தை தடுத்தே ஆக வேண்டும்…..