தற்போதைய தமிழ் திரை உலகில் ட்ரெண்டிங்கில் முதலிடம் வகிப்பது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தான். நாட்டில் நடக்கும் பொது தேர்தலைப் போல ஏகபரபரப்புகளுடனும், முஸ்தீபுகளுடனும் களம் காண்கிறார்கள் வேட்பாளர்கள்!
மற்ற தேர்தல்கள் போல இங்கேயும் வாக்களிக்க பணம், இலவசப் பொருட்கள் கொடுப்பது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் உள்ளன. கோல்ட் காயின், ரிசார்ட் கிப்ட் வவுச்சர், அரிசி-பருப்பு, 32″ டிவி, நட்சத்திர ஓட்டல்களில் பார்ட்டி, குவார்ட்டர் பிரியாணி என்று பல்வேறு அணியினரும் செயலாற்றிக் கொண்டுள்ளனர்.
கடந்த தேர்தலில் விஷால் வெற்றி பெற்று தலைவர் பொறுப்பேற்று பின் நிர்வாகக் கோளாறு மற்றும் கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யாத குற்றச் சாட்டுக்களினால் அவரின் பதவிக்காலம் முடிந்த பின் அரசு பிரதிநிதி மூலம் சங்கம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அதன் பின் பல்வேறு தரப்பினரின் வழக்குகள் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதி அரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் தேர்தல் நடத்த நீதி மன்ற உத்தரவு அளிக்கப்பட்டு, இந்த தேர்தலானது நாளை 22-11-2020 அன்று நடக்கிறது.
இந்த தேர்தலில் கலைப்புலி எஸ். தாணு ஆதரவுடன் திரு டி. ராஜேந்தர் தலைமையில் ஓரணியும் தேனாண்டாள் பிலிம்ஸ் திரு இராம நாராயணன் புதல்வன் முரளி என்கிற ராமசாமி தலைமையில் ஓரணியும் போட்டி இடுகின்றனர்.
தலைவர் பதவிக்கு பி.எல். தேனப்பன் சுயேட்சையாகப் போட்டி யிடுகிறார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இரண்டு விதமான பொறுப்பாளர்கள் உள்ளனர். இதில் தலைவர், துணைத் தலைவர் (2), செயலாளர் (2) பொருளாளர் என்று நிர்வாகக் குழுவும் 21 அங்கத்தினர் கொண்ட செயற் குழுவும் உண்டு.
மற்ற எந்த தேர்தலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக இந்த தேர்தலில் நிர்வாகக் குழு இல்லாமல் செயற்குழுவிற்கு மட்டும் தனியாக இரு அணிகள் போட்டியிடுகின்றனர். அனைத்து குழுவிலும் நண்பர்களைக் கொண்டுள்ள பலர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
பெப்சி, நடிகர் சங்கம், இசை அமைப்பாளர் சங்கம் என்று ஆரம்பித்து, டப்பிங் பேசுவோர், போஸ்டர் ஓட்டுவோர் வரை திரை உலகில் சங்கங்கள் உள்ளன.
இந்த அனைத்து சங்கங்களுக்கும் தாய்க் கழகமானது தான் தயாரிப்பாளர்கள் சங்கம். பல்வேறு முக்கியமான முடிவுகளும் இந்த சங்கத்தின் கட்டுப் பாட்டில் தான் உள்ளது. எனவே, இந்த தேர்தல் முடிவு அனைத்து சங்கங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பார்க்கப் படுகிறது.
மேலும் இந்த தேர்தல் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீர்க்க முடியாத பல நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
- திரை உலகின் நீண்ட காலப் பிரச்சினையான தமிழ் ராக்கர்ஸ் என்ற piracy website முற்றிலுமாக தடை செய்வது.
- VPF எனப்படும் Virtual Print Fee என்ற பகல் கொள்ளைக்கு தீர்வு காண்பது.
- ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை முறையைக் கட்டுப் படுத்தி குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்கள் தவிர்த்து புதிய நிறுவனங்களுக்கும் டிக்கெட் புக்கிங் API என்பதை பகிர்வு செய்து பல்வேறு இணைய தளங்கள் மூலம் விற்பனையை பெருக்குவது.
- நீண்ட காலமாக கிடப்பில் போட்ட சாட்டிலைட் தொலைக் காட்சி நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை புதிப்பித்து, சங்கத்திற்கும் தயாரிப்பாளர்களுக்கும் இழந்த வருமானத்தை பெற்றுத் தருவது. (முழுப்படம் திரையிடல் தவிர்த்து பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் என இன்ன பிற ஒளிபரப்பு திரையிடலுக்கும் கட்டணம் பெறுவது. )
- முன்னணி நடிகர்கள் படம் தவிர்த்து சிறிய முதலீட்டுப் படங்களுக்கும் திரை அரங்கில் வெளியீடுவதற்கான கட்டுப்பாடுகள் கொண்டு வந்து அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது.
- தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் டிவி லோக்கல் சேனல் மூலம் நிரந்தர வருமானம் வர வழி வகை செய்து தருவது.
இதுபோன்ற பல்வேறு நீண்ட காலப் பிரச்சினைகள் நிர்வாகக் கோளாறு காரணமாகவும், தனி மனித சுயநலம் காரணமாகவும் தீர்க்கப் படாமல் இருந்தன.
கொரொனா காலகட்டத்தில் திரை அரங்கம் மூடப்பட்டு இருந்தது, பிறகு திறந்து செயல்படுவதில் உள்ள பல கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் தேக்க நிலைக்குத் தள்ளப்பட்ட தயாரிப்பாளர்கள் அனைவரும் கடந்த ஆறுமாத காலமாக வாட்சப் குழுக்களில் விவாதித்ததன் மூலம் அனைத்து விஷயங்களும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
எனவே, இந்த முறை தேர்தலில் வாக்களிக்கும் அனைத்து தயாரிப்பாளர்களும் விழிப்புணர்வுடன் வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.
ஆனாலும் 1300 தயாரிப்பாளர்கள் கொண்ட இந்த சங்கத்தில் இந்த மாதிரி இலவசங்களுக்கு மயங்கி ஒட்டு போடுபவர்கள் சுமார் 200 பேர் மட்டுமே. மீதமுள்ள சுமார் 1100 உறுப்பினர்கள் இன்னும் நல்ல நிலையில் உள்ளனர். இவர்கள் யாரும் இலவசத்திற்கு மயங்க மாட்டார்கள்.
எனவே, இந்த தேர்தலில் செயற்குழு உறுப்பினர் போட்டிக்கு ஏராளமான புது முகத் தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் போட்டியிடுகின்றனர்.
Also read
இவர்கள் நம்பிக்கை பலிக்குமா ? சிறந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்களா ? பல்வேறு விசயங்களுக்கும் முன்னோடியாகத் திகழும் திரை உலக ஜாம்பவான்கள் இந்தத் தேர்தலில் நேர்மையாக ஓட்டளித்து, புதிய வரலாறு படைப்பார்களா? இப்படி ஒரு திருப்பு முனை நடந்தால் பண-நாயகத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வருமா? இவர்களின் முடிவு வர இருக்கும் தேர்தல்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்குமா ? அல்லது இவர்களும் குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும், இலவசங்களுக்கும் ஆசைப் பட்டு ஜனநாயகத்தை குழியில் புதைத்து, பண-நாயகத்தை நிலை நிறுத்துவார்களா?
நாளை நடக்கும் தேர்தலின் முடிவுடன் வரும் திங்கள் கிழமை காலை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்! நல்லதே நடக்கட்டும்.
Leave a Reply