நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன. இளம் மாணவர்கள் செல்போன் சாட்டிங், கம்யூட்டர் கேம்ஸ், ஷாப்பிங் மால்களில் சுற்றித் திரிதல், சினிமா..போன்றவற்றில் ஈடுபாடு காட்டும் இந்தக் காலச் சூழலில் திருக்குறளில் ஈடுபாடு காட்டுவதற்கும் இத்தனை இளம் பிள்ளைகளா..? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இந்த நிகழ்வு;
மனப்பாடப் பகுதியில் வரும் திருக்குறள் பகுதியை எப்படியாவது கடந்து விட்டால் போதும் என்று மாணவர்கள் அச்சப்படுவதை பார்த்திருப்போம். ஆனால், சென்னையின் ஒரு பகுதியில் திருக்குறளின் இரண்டு அதிகாரங்களை ஒப்புவித்தலில் தொடங்கி, திருக்குறளை முற்றோதுதல் ( 1,330 திருக்குறளையும் முழுமையாக சொல்லுதல்) வரை திருக்குறள் சார்ந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய நிகழ்வு மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை (17.11. 2024) அன்று போரூர் திருக்குறள் வாழ்வியல் மன்ற முன்னெடுப்பில் சென்னை போரூர் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளியில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது.
போரூர் திருக்குறள் வாழ்வியல் மன்றம் மற்றும் குன்றத்தூர் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அறக்கட்டளை, குரோம்பேட்டை திருவள்ளுவர் பேரவை, நங்கநல்லூர் திருவள்ளுவர் பேரவை ஆகியவை இணைந்து திருக்குறள் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தன.
குன்றத்தூர் பாவேந்தர் தமிழ் வழிப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் எங்கள் மகள் அருவியுடன் காலை 9.15 மணிக்கு விழா நடைபெற்ற செயின் மேரிஸ் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தோம்.
சாரை சாரையாக விழாவிற்கு வருகை தந்து கொண்டிருந்த மாணவர்களையும், பெற்றோர்களையும் விழாக் குழுவினர் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.
அதைக் கடந்து சென்றதும், வளாகத்தில் பெரிய அளவிலான திருவள்ளுவர் சிலை! மலர் தூவி சிறப்பிப்பதற்காக அருகிலேயே மலர்கள்! திருவள்ளுவரை வணங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி!
மாணவர்களின் ஒன்றுகூடல்!
நூற்றுக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்களால் நிரம்பி வழிந்தது பள்ளி வளாகம். போரூர், குன்றத்தூர், மாங்காடு, ஸ்ரீபெரும்புதூர், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் சுமார் 1,500 பேர் இந்த விழாவில் பங்கெடுத்திருந்தனர்.
திருக்குறள் திருவிழாவில் தமிழ் வழிப் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி, ஆங்கில வழிப் பயிலும் மாணவர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக, காஞ்சிபுரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, வாலாஜாபேட்டை, சேலம் ஆகிய தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் பல மாணவர்கள் இந்நிகழ்வுக்கு வந்திருந்தனர்.
மழலைகள் முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குத் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், பேச்சு, கட்டுரை பொருள் விளக்கங்களுடன் எழுதுதல், முற்றோதுதல் உள்ளிட்ட போட்டிகளும் காலை 10 மணிக்குத் தொடங்கி நாள் முழுவதும் தனித் தனியாக நடைபெற்றன.
பண பலம், ஆள் பலம் கொண்ட அரசாங்கம் நடத்தக் கூடிய போட்டி தேர்வுகள், நீட் போன்ற தேர்வுகள் எல்லாம் குளறுபடிகள் நிறைந்ததாக இருக்கின்ற போது, தமிழறிஞர்கள் கொண்ட சிறு குழு நடத்திய இந்த விழா ஏற்பாடுகள் குழப்பங்களின்றி சிறப்புடன் நடத்தப்பட்டது.
நுழைவு வாயில் அருகிலேயே மாணவர்களின் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், கலந்து கொள்வதற்கான அறை எண், வரிசை எண் ஆகியவற்றை எவ்வித குழப்பமும் இல்லாமல் தெளிவாக அறிவிப்புப் பலகையில் ஒட்டி இருந்தனர். விழாக்குழு மாணவர்கள் அருகில் இருந்து உதவி செய்தனர். அவ்வப்போது ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து ஒழுங்கமைத்தனர்.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளில் அமர வைத்துவிட்டு, வளாகத்திற்கு வந்து விட்டனர். ஆர்வ மிகுதியிலும், தங்கள் பிள்ளைகள் வெற்றிபெற வேண்டும் என்ற உணர்விலும் மழலைகளின் பெற்றோர் சிலர் அறைக்கு வெளியே நின்று தங்கள் பிள்ளைகள் எப்படிச் சொல்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சியையும் பார்க்க முடிந்தது.
பொதுவாக மாணவர்களுக்கான போட்டிகள் ( விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நீட் வரை) என்றாலே மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு விதமான பதற்றம் தொற்றிக் கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், இந்த திருக்குறள் திருவிழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் எவ்வித அச்ச உணர்வும் இன்றி, பதற்றமும் இன்றி நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவே இருந்தனர்.
கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் போதுமான அளவு குடிநீர் வைத்திருந்தனர். தேவைப்பட்ட மாணவர்கள் பசியாற காலை, மதியம் இரண்டு வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டன. கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் தேநீர், பிஸ்கெட் வழங்கி மகிழ்ந்தனர்.
சூரியனைப் போன்று பிரகாசித்த மாணவர்கள்!
விழாவை ஒழுங்கமைப்பதற்காக அப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களை (NSS) ஏற்பாடு செய்திருந்தனர். அந்த மாணவர்கள் திட்டமிட்டபடி ஒவ்வொன்றையும் செய்தவாறு சுறு சுறுப்பாக சுழன்று கொண்டிருந்தனர். மாணவர்களை நம்பி ஒரு பொறுப்பை வழங்கிவிட்டால் அவர்கள் அதை நேர்த்தியாகவும், சரியாகவும் செய்வார்கள் என்பதற்கு கண்முன் கண்ட காட்சியே சாட்சி.
கனிவான நடுவர்கள்! ஆளுமையான மாணவர்கள்!
பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், முனைவர் பட்டம் பெற்ற அறிஞர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் என தன்னார்வலர்களாக பலர் நடுவர் பணிக்கு வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் போட்டியைச் சிறப்பாக நடத்தினர். பொதுவாக மழலைகள் முதல் 3 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் புதியவர்களிடம் பேசுவதற்கு காட்டுவார்கள். ஆனால், இந்த நிகழ்வை நடத்தியவர்கள் கனிவாக நடந்து கொண்டதால், மாணவர்கள் எவ்வித அச்சமும் தயக்கமும், இல்லாமல் குலுக்கல் முறையில் சீட்டை எடுத்து அதில் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களில் உள்ள குறட்பாக்களை ஆளுமையுடன் சொன்னார்கள்.
ஒரு அறையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு ஒரு மழலைப் பிள்ளை தன் அம்மா அருகிலேயே இருக்க வேண்டும் என்று அழுதாள், அவர் அம்மா சமாதானம் செய்து கொண்டிருந்தார். நிகழ்ச்சி தொடங்கியதும் அந்த அறை நடுவர் அந்த மழலையை அழைத்து ” உங்க பேரு என்ன? எந்தப் பள்ளியில் படிக்கிறீங்க, திருக்குறள் சொல்லப் போறீங்களா ” என்று கலந்து பேசியவுடன் அந்தக் குழந்தை சமாதானம் அடைந்தது. உடனே குலுக்கல் முறையில் தனக்கு வந்த இரண்டு அதிகாரங்களின் குறள்களைச் சொல்லிவிட்டு, மகிழ்ச்சியுடன் சென்று விளையாட ஆரம்பித்துவிட்டது.
அந்த மழலை உட்பட கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் தெளிவான உச்சரிப்போடு திருக்குறளை ஒப்புவித்து மகிழ்ந்தனர் என்பது வெகு சிறப்பு.
மாணவர்களின் கைகளில் தவழ்ந்த திருக்குறள்!
போட்டி என்பதால் வெற்றியும், அதற்கான பரிசும் இருக்கத் தானே செய்யும்.
1 முதல் 2-வது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு
முதல் பரிசு ரூ.500, இரண்டாம் பரிசு ரூ.300, மூன்றாம் பரிசு ரூ.200.
3 முதல் 4 வது வகுப்பு மாணவர்களுக்கு
முதல் பரிசு ரூ.750, இரண்டாம் பரிசு ரூ.500, மூன்றாம் பரிசு ரூ.300.
5 முதல் 6 வது வகுப்பு மாணவர்களுக்கு
முதல் பரிசு ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.750, மூன்றாம் பரிசு ரூ.500.
7 முதல் 11 வது வகுப்பு மாணவர்களுக்கு
முதல் பரிசு ரூ.1500, இரண்டாம் பரிசு ரூ.1000, மூன்றாம் பரிசு ரூ.750.
பொதுப்பிரிவு
முதல் பரிசு ரூ.2000, இரண்டாம் பரிசு ரூ.1500, மூன்றாம் பரிசு ரூ.1000.
சிறப்புப் பிரிவு (1330 குறட்பாக்கள் ஒப்புவித்தல்)
முதல் பரிசு ரூ.2500, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1500.
என பரிசுத்தொகை வழங்குவதாக விழாக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.
பிழையின்றி சொல்லுதல், தடுமாற்றம் இன்றி சொல்லுதல், சரியான உச்சரிப்புடன் சொல்லுதல் என வகைப் பிரித்து நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கினர். 1,500 மாணவர்கள் கலந்து கொண்டதாலும், நாள் முழுவதும் நடைபெற்றதாலும் வெற்றி பெற்றதன் முடிவை உடனடியாக அறிவிக்கவில்லை. ஒரு சில நாட்களில் வெற்றி பெற்றவர்களின் முடிவை அறிவிக்க உள்ளனர். அவர்களுக்கு விரைவில் நடத்தப்படும் ‘’ திருக்குறள் மாணவர் மாநாடு’ நிகழ்வில் பரிசு வழங்க உள்ளனர்.
அதே நேரத்தில், வெற்றி, தோல்விகளைக் கடந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கப் பரிசாக திருக்குறள் புத்தகம் ( மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரூபாய் – 500 மதிப்புள்ள புத்தகம்) அன்றே வழங்கப்பட்டது. புத்தகத்தை கையில் வாங்கியதும் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர். திருக்குறட்பாக்களும் பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளியும்!
தமிழ்நாட்டில் 17 தாய்த் தமிழ் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் குன்றத்தூரில் உள்ள பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளி. இந்த திருக்குறள் திருவிழாவில் பள்ளியின் 160 மாணவர்களில் 70 மாணவர்கள் கலந்து கொண்டர்.
அன்பு, அறிவு, ஆளுமை என்ற முழக்கங்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இப்பள்ளியில் காலை கூடுகையின் போது அறநெறியை வலியுறுத்தக்கூடிய 10 குறட்பாக்களைச் சொல்வதை நடைமுறையாக வைத்துள்ளனர். ஆசிரியர் ஒருவர் ஒரு குறள் சொல்லி, அதற்கான விளக்கத்தையும், அது அன்றாட வாழ்வில் தனக்கு எப்படி உதவியது என்ற உதாரணத்தையும் சொல்கின்றனர். இதன் வழி மாணவர்களுக்குத் திருக்குறள் மீதான ஈடுபாடும், ஆர்வமும் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து அன்றாடம் பாட வேலைகளுக்கு இடையில் மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிக்கப்படுகிறது. துளிர் வகுப்பு ( எல்.கே.ஜி ) மாணவர்களுக்கு குறைந்தது 30, தளிர் ( யூ.கே.ஜி) மாணவர்களுக்கு 50 வரையும், 1 ஆம் வகுப்பு முடிக்கும் போது 100 திருக்குறள் வரை சொல்லத் தெரிந்துவிடும் என்பது இயல்பான (போட்டிக்கு தயார் செய்வதில்லை) நடைமுறையாக உள்ளது.
இப்பள்ளி பிள்ளைகளின் உறவினர்கள், குடும்ப நண்பர்களை சந்திக்கும் போதும், குடும்ப நிகழ்வுகளின் போதும் 10, 20 திருக்குறள்களை சொல்வதும், அவர்கள் அப்பிள்ளைகளைப் பாராட்டுவதும், பள்ளி குறித்து பெருமையாகப் பேசுவதும் அவ்வப்போது நம் காதுகளில் தேனாக வந்து பாயும். இது அப்பள்ளியின் சிறப்புகளில் ஒன்று.
கடந்தாண்டு தமிழ்நாடு அரசு அறிவித்த திருக்குறள் முற்றோதுதல் நிகழ்வில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் ( இப்பள்ளியில் 5 வகுப்பு படிக்கும் போது முற்றோதுதல் பயிற்சியைத் தொடங்கியவர் ) ஆதன் என்பவர் வெற்றி பெற்று தமிழநாடு அரசின் பரிசும் பாராட்டும் பெற்றார்.
திருக்குறள் வழி மாணவர்களிடம் ஆளுமையை வளர்ப்பதற்கு பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளி எடுக்கும் முயற்சிக்கு இவை ஒரு எடுத்துக்காட்டு.
தமிழ் அறிஞர்களின் திருக்குறள் தன்னார்வம்!
தமிழ்ச் சமூகத்தை தலை நிமிரச் செய்யும்!
Also read
போரூர் திருக்குறள் வாழ்வியல் மன்றத்தின் செயலாளர், ஆட்டோ ஓட்டுநர் வள்ளிமுத்து திருக்குறளை வாழ்வியல் நெறியாக வரித்துக் கொண்டவர். இவ்வைமைப்பின் தலைவரான ஓய்வு பெற்ற ஆசிரியர் முருகானந்தம் ஓய்வின்றி திருக்குறள் பணியாற்றி வருபவர். பொருளாளர் தமிழன் காசி, ஒரு தையல் கலைஞர், திருக்குறள் பரப்புவதை வாழ்நாள் கடமையாக கொண்டுள்ளார். நாடு கடந்தும் தாய்த் தமிழுக்கு தொண்டாற்றி வரும் புலவர் வெற்றிச் செழியன் பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளி தாளாலர் மற்றும் முதல்வர். குன்றத்தூர் தெய்வப்புலவர் திருவள்ளூவர் அறக்கட்டளை தலைவர் புலவர் குப்புசாமி, குரோம்பேட்டை திருக்குறள் பேரவைத் தலைவர் திருமிகு பாண்டியன், நங்கநல்லூர் திருக்குறள் பேரவைத் தலைவர் முனைவர் பெரியண்ணன் ஆகியோர் இணைந்து திருக்குறள் பேரவைகளை, மு.நடராசன், வ. செல்வம், சு. சீதாராமன், உமா சாரதி உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களை ஒருங்கிணைத்தும், புரவலர்களை கண்டறிந்து அவர்களை பங்களிக்கச் செய்தும் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை முனைப்புடன் செய்தனர்.
தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களும் திருக்குறளை வாழ்வியல் நெறியாக கடைபிடிக்கவும், ஆர்வமுடன் தமிழைக் கற்று, ஆளுமைபெற்று தமிழ்ச் சமூகத்தை காக்கவும் இது போன்ற திருக்குறள் திருவிழாக்களை பள்ளிகள் தோறும் முன்னெடுக்க வேண்டும்.
கட்டுரையாளர்; த.கணேசன்
கல்விச் செயற்பாட்டாளர்,
மக்கள் கல்விக் கூட்டியக்கம்.
Leave a Reply