கனிவும், பணிவும், கர்வமில்லா மென்மையாளருமான ஏ.ஆர்.ரகுமானை அவரது மனைவி பிரிந்து செல்வதானது சமூகத் தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் விவாகரத்து ஆச்சரியமானதல்ல என்றாலும், நமது பேரன்புக்குரிய ஒழுக்க சீலரான ரகுமான் விஷயத்தில் நடந்திருப்பது குறித்த ஒரு நுட்பமான அலசல்;
குடும்பம் என்ற அமைப்பே சமீப காலமாக கேள்விக்கு உள்ளாகி வருகிறது. எங்கெங்கு பார்த்தாலும் விவாகரத்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குடும்ப நீதிமன்றங்களில் வழக்குகள் குவிகின்றன. குடும்பங்களில் நிம்மதி பறி போவது சமூக இயக்கத்தையே பாதிக்கும் என்பதால், இது குறித்த பரந்துபட்ட விவாதங்கள் தேவைப்படுகின்றன.
இயற்கை விதிகளின்படி எதிரெதிர் பாலினமாகவுள்ள ஆண்,பெண் இருவருக்குமே பரஸ்பர துணை தேவைப்படுகிறது. பெண் இல்லாமல் ஆணும், ஆண் இல்லாமல் பெண்ணும் வாழ இயலாது. எனில், இந்த உறவை எப்படி கண்ணியத்துடன் ஏற்றுத் தொடர்வது என்பதே தற்போதைய சமூகத்தின் முன் உள்ள கேள்வியாகும்.
சினிமா பிரபலங்கள் விஷயத்தில் நாம் பல திருமண முறிவுகளை பார்த்துள்ளோம்.
நடிகர் ஜெமினி கணேசன் – சாவித்திரி விஷயத்தில் ஏற்பட்ட பிரிவு சாவித்திரியின் வாழ்க்கையை பெரும் துயரத்தில் தள்ளியது.
நடிகர் கமலஹாசன் அடுத்தடுத்து மூன்று பெண்களோடு குடும்பம் நடத்தியதில் மூவரும் கடும் மன உளைச்சலில் அவரிடம் இருந்து விலகினர்.
சமீபத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் திருமண பந்தங்களும் முடிவுக்கு வந்தன.
பெரும்பாலான சினிமா கலைஞர்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க மறுப்பவர்கள். சினிமா கலைஞர்கள் சுய ஒழுக்கத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டவர்களாக தங்களை கருதிக் கொள்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட இணையருக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
திரைப்படத் துறையில் இருந்தாலுமே கூட, சுய ஒழுக்கத்தோடு வாழ முடியும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர்களும் உள்ளனர். கே.பி.சுந்தராம்பாள், சின்னப்பதேவர், நடிகர் சிவகுமார்..என சென்ற தலைமுறையினரை சொல்ல முடியும் என்றால், இந்த தலைமுறையில் ஏ.ஆர்.ரகுமான் சுய ஒழுக்கத்தில் கேள்விக்கு அப்பாற்பட்டவராக இருந்துள்ளார் என அவருடன் மிக நெருக்கமாக நீண்ட காலம் பயணித்த சக இசை கலைஞர்களே சொல்கிறார்கள். எனில், இந்த விவாகரத்து ஏன் ஏற்பட்டுள்ளது என்பதை அவர்களின் மொழியிலேயே புரிந்து கொள்வோம்.
ஏ.ஆர்.ரஹ்மான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாங்கள் 30 வருடத்தை எட்டி விடுவோம் என்று நம்பினோம். ஆனால், எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தான் இருக்கிறது.உடைந்த மனங்களின் எடையில் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கக் கூடும். இருந்தாலும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் சேராமல் போனாலும் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை கடக்கும் போது உங்களுடைய கனிவுக்கும், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிப்பதற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்
இது பற்றி சாய்ரா பானு தரப்பில் அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரியும் கடினமான முடிவை சாய்ராபானு எடுத்துள்ளார். அவர்கள் உறவில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிபூர்வ அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தபோதும், இருவருக்கும் இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவானது. மிகுந்த வலியுடனும், வேதனையுடனும் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த சவாலான தருணத்தில் அவரின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஆக, ரகுமான் தவறான உறவை கொண்டுள்ளார் என்றோ, தன்னை வார்த்தைகளாலோ, பிசிக்கலாகவோ துன்புறுத்தினார் என்றோ அவரது மனைவி கூறவில்லை. இழப்பீடுகளோ, ஜீவனாம்சமோ கேட்கவில்லை. அதே போல ரகுமானும் தன் மனைவி மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.
இந்த நிலையில் கோர்ட்டில் விவகாரத்து வழக்கு போடாமல் ஜூடீசியல் செப்பரேசன்’ (judicial seperation) என்ற ஏற்பாட்டின்படி இருவரும் தங்களை பிரித்துக் கொள்கிறார்கள்! இவர்கள் மனம் மாறி, பிறகு இணைவதற்கும் வாய்ப்பு உள்ளது. பிரிவானது இவர்களை சுயபரிசோதனைக்கு தள்ளும் போது இந்த மாற்றம் நிகழலாம்.
இந்த பிரிவை பொறுத்த வரையில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் ரகுமான் குடும்பத்திற்கு நேரம் தரவில்லை. அவரது பிசியான வேலை பளுவால் மனைவிக்கு கொஞ்சமும் நேரம் தர முடியவில்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் குடும்ப விழாக்களுக்கு இருவரும் சேர்ந்து செல்வதோ, ஷாப்பிங் செல்வதோ என்பது இல்லாமல் போகிறது. இதனால் எல்லா உறவுகளுமே அன்னியப்பட்டு சாய்ராபானு சேர்ந்து வாழ்ந்தாலுமே தனிமையில் வாழ்வது போன்ற உணர்வையே அனுபவித்து மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார். அவருக்கு தன் மனதில் ஏற்படுகிற எண்ணங்களை, வலிகளை, சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ள வழியில்லாத தகிக்கும் தனிமையே இந்த முடிவுக்கு காரணமாகும்.
பொதுவாக பெண்கள் உறவுகளோடு பேசிப் பழகி, கலந்து வாழ விரும்புவார்கள். உறவுகள் தரும் சந்தோஷமே அவர்களை உயிர்ப்போடு வைத்திருக்கும். அதிலிருந்து அவர்களை துண்டித்துவிட்டால், அவர்கள் துவண்டு போவார்கள்.
கணவனோடும், அவன் தொடர்பான உறவுகளோடும் கிடைக்கும் பிணைப்பும், பந்தமுமே அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நம்புவார்கள். அவருக்காகவே நான் இருக்கிறேன் எனும் போது அவரும் ஓரளவுக்கேனும் எனக்காகவும் இருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பது இயல்பே! கணவனின் அன்பும், அக்கறையும், அருகமையும் இல்லாமல் ஒரு பெண் மண உறவை தொடர்வது என்பது அவளைப் பொறுத்த வரை ஒரு நரகமேயாகும்.
ஏ.ஆர்.ரகுமான் சர்வதேச அளவில் பிசியான ஒரு இசை அமைப்பாளர்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடு,
ஒவ்வொரு பொழுதும் ஒரு பெரிய விஐபியின் சந்திப்பு,
இசையறாத இசைப்பணி,
இத்துடன் ஒரு சர்வதேச தரத்திலான இசைக்கல்லூரியையும் நிர்வகிக்கிறார்.
எத்தனை உயரம் சென்றாலும், அவர் மேலும், மேலும் பறக்க நினைக்கிறார்.
எத்தனை விருதுகள் கிடைத்தாலும், அவர் மேன்மேலும் சாதிக்க ஓய்வின்றி பாடுபடுகிறார்.
உலகப் பேரழகிகளே ரகுமான் பார்வை தங்கள் மீது படாதா? என ஏங்கிய போதும், அவர் இசைந்து கொடுத்தவர் இல்லை.
இத்தனை பெருமைக்குரிய தன் அன்புக் கணவர் பார்வையும், கவனமும் தன் பக்கம் திரும்பாதா? என உடனிருந்து காத்துக் காத்துப் பார்த்து ஏமாற்றமடைந்ததன் விளைவே, அவர் மனைவி எடுத்த முடிவாகும்.
29 வருட காத்திருப்பு என்பது மிக நீண்ட காத்திருப்பாகும். ரகுமான் தன்னுடைய இறுதி மூச்சு வரை இப்படித்தான் வாழ்வார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? என அவர் மனைவி வருந்துவதில் யாரும் குறை சொல்ல முடியாது.
ரகுமானின் முன்னோடியான இளையராஜாவும் இப்படித்தான் தன் மனைவியை அலட்சியப்படுத்தினார். இதே அனுபவங்களை அவரது மனைவியும் அனுபவித்தார். அதன் விளைவை இளையராஜாவும் சந்திக்க நேர்ந்தது என்றாலும், அவர்களுக்கு இடையே பிரிவு என்பது ஏற்படவில்லை.
Also read
பொதுத் தளத்தில் அவரவர் துறையில் வரலாற்று நாயகனாக ஒருவர் சாதிக்க துடிப்பதும், அடைந்த புகழை தக்க வைக்க தொடர்ந்து உழைப்பதும் தவறில்லை. ஆனால், யார் ஒருவர் வாழ்வதற்கும் அன்பே அடிப்படை. வாழ்க்கை துணையும், குடும்பமுமே நம்மை வாழ வைக்கும் ஆதார சக்தியாகும். ஆண்களின் உலகம் மிகப் பெரிது. ஆனால், பெண்களின் உலகம் என்பது பெரும்பாலும், கணவனும், பிள்ளைகளுமே!
ரகுமான் தன் மனதிற்கு சாந்தியும், அமைதியும் வேண்டி தர்க்காக்களுக்கும், மசூதிகளுக்கும் செல்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொண்டு, தன்னை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டார். ஆனால், அவரது மனைவியோ கணவனின் தரிசனத்திலும், அருகமையிலுமே அந்த மனநிறைவை காணத் துடித்தார். அது ஒருபோதும் கிடைக்க வாய்ப்பில்லை எனும் போது, விரக்தியின் விளிம்புக்கு சென்றுள்ளார். இவ்வளவு மென்மையான கலைஞனால் தன்னை மட்டுமே எண்ணி வாழும் தன் மனைவியின் வலிகளை உணர முடியாதது துரதிர்ஷ்டமே!
வாழ்க்கை பல பரிமாணங்களைக் கொண்டது. தொழிலில் கிடைக்கும் வெற்றியும், பணமும், புகழும் மட்டுமே வாழ்க்கையல்ல. இதை ரகுமானைப் போன்றவர்கள் உணர்வதற்கு இன்னும் சில காலம் தேவைப்படலாம்.
சாவித்திரி கண்ணன்
உருது இஸ்லாமியரான திருமதி ரகுமான் அவர்கள், என்றும் ஐயா பெரியார் வழியில்
“Enjoyment without responsibilities”.
Periyarism beyond centuries