காவல்துறை அராஜகத்தை வேடிக்கை பார்க்குமா அரசு?

-ஹரி பரந்தாமன்

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளியின் பத்து வயது சிறுமி பாலியல் பலாத்காரக் கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் தமிழக காவல்துறையின் அணுகுமுறை என்ன? இதில் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது..? – நீதிபதி ஹரி பரந்தாமனின் கட்டுரை;

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாக வெளியிட்டது. சமூக அக்கறை கொண்ட வழக்குரைஞர்  ஏ.பி.சூரியபிரகாசம் அந்த செய்தியை சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து அதை ஒரு பொதுநல வழக்காக  விசாரித்தது.  இரு நீதிபதிகள்  எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் வி. சிவஞானம்  அமர்வே இந்த வழக்கை விசாரித்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தாக்கல் செய்த வழக்கையும் மேற் சொன்ன வழக்குடன் சேர்த்து விசாரித்தது நீதிமன்றம். இந்த வழக்கை நடத்தியவர் வழக்குரைஞர் முனைவர் ஆர். சம்பத் குமார். அவரை நான் அறிவேன். இந்த வழக்கை பொதுநல நோக்குடன் எந்த கட்டணமும் பெறாமல் நடத்தியதாக கூறினார். மேலும், பல தகவல்களையும் வழக்கின் ஆவணங்களையும் எனக்கு அளித்து உதவினார்.

29. 8 .2024 அன்று மாலை சிறுமி மிகுந்த உடல் உபாதைகளால் துன்புறுவதை அறிந்து பதறிய  சிறுமியின் தாயார், அருகிலுள்ள பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதித்த அந்தப் பெண் மருத்துவர், சிறுமி கடுமையான பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு இருப்பதை தெரிவித்ததோடு சிறுமியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

அடுத்த நாள் காலை அந்த சிறுமி அவளது பள்ளிக்கு சென்றாள். பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்த தாயார், அன்று (30-8-2024) மதியத்திற்கு பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துச் சென்றார்.

சிறுமியை பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ,அந்த சிறுமி மிகக் கடுமையான பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தினர். இந்த கொடுஞ்செயலை  செய்தவன், அந்த சிறுமியின் வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் 30 வயது  சத்தீஸ்  என்பதையும் கூறினாள் அந்த சிறுமி. அவன் ஏற்கனவே திருமணம் ஆனவன். அவனுக்கு குழந்தையும் உண்டு. அவன் வாட்டர் கேன் சப்ளை செய்யும் சாதாரண ஆள் தான்.

அவனது வீட்டில் வைத்து 19-8-2024 முதல் தொடர்ந்து ஒரு வாரத்தின் ஐந்து நாட்கள் அந்த சிறுமியை வன்புணர்வு செய்துள்ளான் அவன். அதனால் அந்த சிறுமியின் பெண் உறுப்பு பலத்த காயத்திற்கு உட்பட்டு, அதில் துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது.

இது குற்ற வழக்கு என்பதால், இந்த விவரங்களை மருத்துவமனையில் உள்ள விபத்து பதிவேட்டில் (ஆக்சிடென்ட் ரிஜிஸ்டரில்) பதிவு செய்தனர் மருத்துவர்கள். இந்த விபரம் உடனடியாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் அரசு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு காவலர்கள் வந்தனர். அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ராஜி அவர்களும் வந்தார். அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு பெண்மணி தான். விபத்து பதிவேட்டில் இருந்து குற்றவாளி யார் என்பதை தெரிந்து கொண்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜிதான் இந்த குற்ற வழக்கில் புலனாய்வு அதிகாரி.

சிறுமியின் தாயாரை அந்த சிறுமியின் ஆதார் அட்டையுடன் காவல் நிலையம் வருமாறு கூறினார், இன்ஸ்பெக்டர் ராஜி. காவல் நிலையம் சென்ற தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நேரம் இரவு 8 மணி 20 நிமிடம். சத்தீஸ் குற்றம் சாட்டப்பட்டவராக அந்த முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.


போக்சோ சட்டத்தின் பிரிவு 5(l), 5(m) மற்றும் 6-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவை கடுமையான குற்றங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட முறை சிறுமியை வன்புணர்வு செய்வது பிரிவு 5(l)-இன் கீழ் குற்றம். 12 வயதுக்குள் குறைவான சிறுமியை வன்புணர்வு செய்வது பிரிவு 5(m)-ன் கீழ் குற்றம். இந்த குற்றங்களுக்காக குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கொடுஞ்சிறை அல்லது அதிகபட்சமாக தூக்கு தண்டனையை நீதிமன்றம் வழங்கலாம்.

எனவே , உடனடியாக அந்த குற்றம் சாட்டப்பட்டவரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தது போலீஸ். அப்போதுதான் அவனுக்கு பின்னால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர் சுதாகர் இருப்பது தெரிகிறது.  அவர் ஆளுங்கட்சியை கூட சேர்ந்தவர் இல்லை. இருப்பினும் அந்தக் காவல் நிலையத்தில் மிகுந்த செல்வாக்கு உள்ளவராக அவர் உள்ளார். அதனால் குற்றம் சாட்டப்பட்டவர் ராஜமரியாதையுடன் பெஞ்சில் உட்கார வைக்கப்படுகிறார். ஆனால், சிறுமியின் தாயாரை உள்ளே அழைத்துச் சென்று இன்ஸ்பெக்டர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

விபத்து பதிவேட்டிலும் முதல் தகவல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ள சத்தீஸ் மிகக் கடுமையான குற்றச் செயலை செய்துள்ளவர் என்ற நிலையில், அவரை உடனடியாக கைது செய்திருக்க வேண்டும். ஏன் அவரை கைது செய்யவில்லை என்பது காவல் துறையை நோக்கி எழும் முக்கிய கேள்வியாகும்.

குற்ற வழக்கை பதிவு செய்ய ஆதார் கார்டு அவசியம் இல்லை. ஆதார் கார்டை எடுத்து வருமாறு  கூறியதற்கு ஏதோ உள்நோக்கம் இருக்கலாம்.

தாயாரை அடித்ததுடன் நிற்கவில்லை அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர். தன்னுடைய குழந்தை மிக பலவீனமான நிலையில் இருக்கும் போது கூடவே தான் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலையை அந்தச் சிறுமியின் தாய் கெஞ்சியதை அந்த பெண் இன்ஸ்பெக்டர் பொருட்படுத்தாமல் காவல் நிலையத்திலேயே இருக்குமாறு கட்டளை இட்டுவிட்டு சென்றார் .

கிட்டத்தட்ட  அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு நேரத்தில் சென்ற அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பெண்மணி, தூக்க கலக்கத்தில் இருந்த அந்த சிறுமியை வெளியே  லிப்ட்டுக்கு அருகில் வைத்து விசாரித்துள்ளார். அந்த விசாரணையும் அந்த சிறுமியை மிரட்டுவதாகவே இருந்துள்ளது.

10 வயது சிறுமியிடம் பலவாறான கேள்விகளை எழுப்பி, பயமுறுத்தியதுடன், உனக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு…? வேறு யாரும் உன்னை பலாத்காரம் செய்தனரா? என்பது உள்பட ஏராளமான கேள்விகளை எழுப்பி அந்த சிறுமியை மனரீதியிகவும் துன்புறத்தி உள்ளதாக தெரிய வருகிறது.

இதற்கு ஆட்சேசபம்  தெரிவித்த சிறுமியின் பெற்றோரை சில போலீசார் தாக்கி உள்ளனர். ஒரு ஆண் போலீஸ்காரர் சிறுமியின் தந்தையை எட்டி உதைத்தாக கூறப்படுகிறது.

அந்த இன்ஸ்பெக்டர் வாய்ஸ் ரெக்கார்ட் செய்தது எப்படி வெளியானது என்பது தெரியவில்லை. அந்த வாய்ஸ் ரெக்கார்டில், அந்த சிறுமி மிரட்டப்பட்டது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார் வழக்குரைஞர் சம்பத்குமார்.

நள்ளிரவில் லிப்ட் அருகில் அந்த குழந்தையிடம் வாக்குமூலம் பெற்ற சட்டவிரோத செயலை செய்தது மட்டுமின்றி, குழந்தையின் பெற்றோரை அருகில் அண்டவிடாமல் அந்த வாக்குமூலத்தை பதிவு செய்தார் பெண் இன்ஸ்பெக்டர். பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை சட்டம் தெளிவாக கூறியுள்ளது.

சிறுமியின் வாக்குமூலத்தை பெற்றோர்கள், (parents) மற்றும் மாஜிஸ்திரேட் முன்னால் தான் காவல்துறை அதிகாரி பதிவு செய்ய வேண்டும் என்று போக்சோ சட்டம் பிரிவு 26 தெளிவாகக் கூறுகிறது.

எப்படியோ கெஞ்சி கூத்தாடி காவல் நிலையத்தில் இருந்து அனுமதி பெற்று அரசு மருத்துவமனைக்கு வந்தார் சிறுமியின் தாயார். அவர் வந்த போது நள்ளிரவு ஒரு மணி தாண்டி விட்டது. அப்போதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜி ,அந்த சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கும் நோக்கில் மிரட்டிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெறுவது  போக்சோ சட்டம் பிரிவு 24 க்கு விரோதமானது. மேலும், அந்த பிரிவின் படி குழந்தையிடம் வாக்குமூலம் பெறும் காவல்துறை அதிகாரி யூனிஃபார்முடன் இருக்கக் கூடாது. இந்த சட்ட பிரிவுகள் எதையும் அந்த இன்ஸ்பெக்டர் கடைபிடிக்கவில்லை. சிறுமியை தொந்தரவு செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் செயலை கண்டித்து சிறுமியின் தாயார் போட்ட சத்தத்தில் அந்த சம்பவம் முடிவுக்கு வந்தது.

இத்துடன் விட்டாரா அந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ? அதுதான் இல்லை. 31-8-2024  அன்று சிறுமியின் தந்தையை காவல் நிலையத்துக்கு அழைத்து, அவரையும் கடுமையாக தாக்கினார்.

அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பெண்மணியின் நோக்கம், குற்றவாளி சத்தீசை காப்பாற்றக் கூறிய அந்த அரசியல்வாதியின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் என்கிறார் வழக்குரைஞர் சம்பத்குமார்.

எனவே தான், பெற்றோர்கள் இல்லாத போது பதிவு செய்யப்பட்ட நள்ளிரவு வாக்குமூலத்தில் ஒரு சிறுவன் (juvenile) குற்றம் செய்ததாக பதிவு செய்து உண்மையான குற்றவாளியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார் அந்த இன்ஸ்பெக்டர் பெண்மணி. ஆகவே கடுமையான குற்றத்தை செய்தவரையும் கைது செய்யவில்லை அந்த இன்ஸ்பெக்டர் பெண்மணி.

இந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பெண்மணியின் நடவடிக்கையை நீதிபதிகளே கேள்விக்கு உட்படுத்தியதையடுத்து புலனாய்வு பணியை அவரிடம் இருந்து மாற்றி கோயம்பேடு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தரப்பட்டதேயன்றி, அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

புதிய புலனாய்வு பெண் அதிகாரி பொறுப்பேற்ற பின்னர் தான் 9-9-2024 அன்று மேஜிஸ்திரேட் முன்னிலையில் சிறுமியின் வாக்குமூலம் பெறப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார். இவரும் கூட உடனடியாக கைது செய்யாமல் காலம் தாழ்த்தி தான் 12-9-2024 அன்று கைது செய்துள்ளார். ஆகஸ்ட் 30 ஆம் தேதி தரப்பட்ட புகாருக்கு, நீதிமன்ற நிர்பந்தத்தை தொடர்ந்து செப்டம்பர் 12-ல் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை மிக விரைவாக விசாரித்த  நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, அக்டோபர்-1 அன்று ஒரு அறச் சீற்றம் கொண்ட தீர்ப்பை வழங்கியது.


நடைபெற்ற நிகழ்வுகளை அவதானித்த உயர்நீதிமன்றம், தமிழக காவல்துறையின் மீது  நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது .

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது தமிழக அரசு. ஆனால் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, தவறு செய்யும் காவல்துறையினருக்கு பாதுகாப்பு அரணாக ஏன் இப்படி செயல்படுகிறது என்பது புரியாத புதிர்.

1-11- 2024 அன்று தமிழக அரசின் மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  இரு நீதிபதிகள் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அந்த அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி சூரியகாந்த் அவர்கள்.

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் வழக்கை நவம்பர் 18 அன்று விசாரணைக்கு ஒத்தி வைத்தது. அதே உத்தரவில் , மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட தமிழகத்தில் பணியாற்றும் ஏழு வெளிமாநில ஐ.பி.எஸ் அதிகாரிகளை பட்டியலை அளிக்கச்  சொன்னது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர் கட்டணத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என்றது உச்ச நீதிமன்றம்.

நவம்பர்-18 அன்று வரலாற்று சிறப்புமிக்க இறுதி உத்தரவை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். தமிழக அரசின் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலில் இருந்து 3 பேரை சிறப்பு புலனாய்வு குழுவாக நியமித்தது உச்ச நீதிமன்றம். அதில் இருவர் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள். அத்துடன் மட்டுமன்றி, இந்த சிறப்பு புலனாய்வு குழு , விவரங்களை காலதாமதமின்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

சிபிஐ வசம் புலன் விசாரணையை ஒப்படைத்தால் நீதி கிடைப்பதில் பல்லாண்டு தாமதமாகும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து, விரைவில் நீதி கிடைக்க ஏற்பாடு செய்தது மிகவும் சிறப்பாகும். இந்த வகையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு ஒரு படி மேலே சென்று பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை பெற்று தருவதில் அக்கறை காட்டியுள்ளது உச்சநீதிமன்றம். அதன் விபரமாவது;

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை சி.பி.ஐ அமைப்பிடம் ஒப்படைத்தால் 4 அல்லது 5 ஆண்டுகள் வரை கால தாமதம் ஆகும். எனவே, காவல்துறையின் சிறந்த அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் ஆகியோர்களை வைத்து விசாரணை நடத்தலாம். குறிப்பாக இதற்காக டி.ஐ.ஜி சுரேஷ் குமார் தாக்கூர் (இணை ஆணையர் கிழக்கு மண்டலம்) அவரது தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படுகிறது. மேலும், ஐமன் ஜமால் ஐபிஎஸ் (துணை ஆணையர் சட்டம் ஒழுங்கு ஆவடி சரகம்), பிருந்தா ஐ.பி.எஸ் (துணை ஆணையர் சேலம் மாநகரம் வடக்கு) ஆகிய அதிகாரிகளும் இடம் பெறுவார்கள்.

இந்த சிறப்பு புலனாய்வு குழு தினந்தோறும் விசாரணையை நடத்த வேண்டும்.

அதனை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் .சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை விசாரிக்க உரிய  அமர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அமர்வு முன்பு சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை நிலை அறிக்கையை வாரம் ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும். இதைத் தவிர, இந்த வழக்கு செலவுக்காக ரூ.50 ஆயிரத்தையும், மேலும் இதர செலவுக்காக ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரத்தை தமிழ்நாடு அரசு ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை கவனப்படுத்திய பத்திரிகையாளர்கள், முன்னெடுத்த வழக்கறிஞர்கள், ஏழை குழந்தை பாதிப்பு விஷயத்தில் விரைந்து  விசாரித்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர்.

பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றவாளியை காப்பாற்ற ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்த பகிரத பிரயத்தனதை ஆட்சியில் இருப்போர் கண்டித்து சரிப்படுத்த தவறியதன் விளைவாக, இந்த வழக்கு அகில இந்திய கவனத்தையும், உச்ச நீதிமன்ற தலையீட்டையும் பெற வேண்டியதாயிற்று! லோக்கல் அரசியல்வாதியை திருப்திபடுத்த முயன்ற காவல்துறை, தற்போதைய ஆட்சிக்கு தீராத அவப் பெயரை ஏற்படுத்தி உள்ளதை முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்

ஓய்வு பெற்ற நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time