விவசாயிகளுக்கு தரமான விதைகள்,மரக் கன்றுகள், இயற்கை உரங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட தமிழக அரசின் 216 விவசாயப் பண்ணைகள் தற்போது அழிந்து வருகின்றன. ஏன்? எதனால்? தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பண்ணைத் தொழிலாளர் சங்கத் தலைவர் உ. அரசப்பன் நேர்காணல்;
அரசின் விவசாயப் பண்ணைகள் எதற்காக உருவாயின? அவற்றின் பணிகள் என்ன?
பொதுச் சந்தையில் தரமான விதைகள், செடி மற்றும் மரக் கன்றுகள் சரியாக கிடைப்பதில்லை. ஆகவே, விவசாயிகளுக்கு இவற்றை தரமாகவும், நியாய விலையிலும் தர இவை ஆரம்பிக்கப்பட்டன. அத்துடம் விவசாயக் கூலிகள் சிலருக்கு வேலை வாய்ப்பாகவும் இவை அமைந்தன. இப்படியாக பயிறு வகைகளுக்கு, எண்ணெய் வித்துகளுக்கு, தென்னைக்கு, கால் நடைகளுக்கு, காய்கறிகளுக்கு, தோட்டப்பயிர்களுக்கு, கரும்பு, பருத்தி என விதவிதமாக சிறிதும் பெரிதுமாக 216 பண்ணைகள் தமிழகம் முழுவதும் உள்ளன.
வேளாண்மை பல்கலைக் கழகங்களிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் உற்பத்தி செய்யப்படும் விதைக் கன்றுகள் இங்கு பயிரிடப்பட்டு அவை விவசாயிகளிடம் விற்கப்படும். இத்தகைய பண்ணைகள் மூலமாகத் தான் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி வெற்றி பெற்றன. விவசாயிகளுக்கு மானிய விலையில் மர,செடிக் கன்றுகள் விற்கப்படுகின்றன. இயற்கையான பூச்சு விரட்டியான ஆடா தொடை, நொச்சி செடிகளையும் பயிரிட்டு விவசாயிகளுக்குத் தருகிறார்கள். பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் அதிகமாக தென்னை போன்ற பயிர்கள் உற்பத்தியாவதற்கு இவையெல்லாம் ஒரு காரணமாகும்.
நீங்கள் இருக்கும் கிராமத்தில் உள்ள அரசுப் பண்ணை எதற்காக உருவாக்கப்பட்டது?
இது, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள 900 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட மாநில எண்ணெய் வித்துப் பண்ணையாகும். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் இருந்து வந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புத் தரவும், குடியமர்த்தவும் 1974 ல் தமிழக முதல்வர் கலைஞரால் உருவாக்கப்பட்ட பண்ணை இது. காலப்போக்கில் உள்ளூர் மக்களும் இதில் தொழிலாளர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
தமிழக அரசுப் பண்ணைகளின் தற்போதைய நிலை எப்படி உள்ளது?
அரசாங்கம் பண்ணைகளுக்கு இப்போது போதுமான அக்கறை காட்டுவதில்லை. பொது பட்ஜெட் போடப்பட்ட காலங்களை விட, விவசாயத்திற்கென தனியாக பட்ஜெட் போடும் இக்காலங்களில் அரசுப் பண்ணைகள் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள், தென்னம் பிள்ளைகள் குறைந்த விலையில் கிடைப்பது இல்லை. கலப்பட விதை நெல்லை வாங்க வேண்டி உள்ளது. கள நிலவரம் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
பண்ணைகளில் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளின் பயன்பாடு குறைந்து விட்டது. நீர்மட்டம் கீழிறங்கி விட்டது. விவசாய நிலப்பரப்பு குறைந்துவிட்டது. 900 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வெள்ளாளவிடுதியில் 600 ஏக்கரில் விவசாயம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது; அரசின் தொடர் அலட்சியம் காரணமாக விவசாயம் நடைபெறும் பரப்பு படிப்படியாகக் குறைந்து 150 ஏக்கராக குறைந்துவிட்டது. இதனால் பண்ணை சார்ந்து வேலைசெய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள் கிடைத்த வேலை இப்போது வாரத்திற்கு ஒரு நாளாக குறைந்து விட்டது. இதனால், விவசாயிகள், வியாபாரிகளிடம் அதிக விலைக்கு வாங்க வேண்டி உள்ளது. நானே இந்த வருடம் தனியாரிடம் தான் விதை நெல் வாங்கினேன்; அது கலப்பட விதைநெல்லாகி விட்டது; விளைச்சல் இல்லாமல் போய் விட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பண்ணைகளின் நிலமை இது தான்.
சாதாரணமாக ஒரு பண்ணையில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்?
சிறிய பண்ணைகளாக இருந்தால் 15 முதல் 20 பேர் வரையிலும், 200 ஏக்கர் உள்ள நடுத்தர பண்ணைகளாக இருந்தால் 60- 70 வரையிலும் வேலை செய்கிறார்கள். நிதி ஒதுக்கீடு இல்லை என்றுச் சொல்லி, சிறுகச் சிறுக ஆட் குறைப்பு நடக்கிறது. போதுமான ஆட்பலம் இல்லாததனால் சரியாக களையெடுக்காமல், நிலம் பண்படுத்தப்படாமல் விளைச்சல் குறைகிறது. குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு கள யதார்த்தம் தெரியாமல் அதிகாரிகளால் போடப்படும் உத்தரவுகளால் சாகுபடி பாதிக்கப்படுகிறது.
அரசு பண்ணைகள் நஷ்டமடையக் காரணம் என்ன?
100 ரூபாய் செலவு செய்து விவசாயிகளுக்காக மானிய விலையில் 50 ரூபாய்க்கு விற்றால் லாபம் எப்படி கிடைக்கும்? தனியார் பண்ணைகள் 100 ரூபாய் முதலீடு போட்டு 150 ரூபாய்க்கு விற்கிறார்கள். அவர்களுக்கு இலாபம் வரும். அரசுப் பண்ணைகளில் விவசாயிகளுக்கு முன்பு பயிற்சி தந்து வந்தார்கள். இப்போது அத்தகைய பயிற்சிகளை நிறுத்தி விட்டார்கள்.
பொதுவான வரவு செலவு அறிக்கை மூலம் நிதி வந்த காலத்திலே இவையெல்லாம் இருந்தன. ஆனால், விவசாயத்திற்கு என தனியாக பட்ஜெட் போடுகிற இந்தக் காலங்களில் இவைகளையெல்லாம் நிறுத்தி விட்டார்கள். பண்ணைகளில் இருக்கும் விவசாயக் கருவிகள் பழுதடைந்து விட்டன. இதனால் தனியாரிடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சில தவறுகளும் இடங்களில் நடக்கின்றன.
பண்ணைகளுக்கு கூட்டுறவு அமைப்புகளிடம் இருந்து உரம் வாங்காமல் வியாபாரிகளிடம் வாங்குகிறார்கள். விவசாயப் பண்ணைகளில் இருந்து வரும் விதைக் கழிவுகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக விற்பதாக ரசீதுகளை வைத்து, அவைகளை தனியாரிடம் விற்பதும் நடக்கிறது. முழுமையான உற்பத்தியையும் கணக்கு காட்டுவதில்லை. எனவே, அரசாங்கம் இதற்கு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
கால்நடைப் பண்ணைகள் எப்படி இயங்குகின்றன?
மாதவரம், ஈச்சங்கோட்டை என ஐந்து இடங்களில் கால்நடைப் பண்ணைகள் உள்ளன. இவை கால்நடைத்துறை அமைச்சரின் கீழ் உள்ளன. கால்நடை மருத்துவமனைகள் மூலமாக நவீன விந்தணு செலுத்தப்பட்டு, பசுக்கள் ஐந்து லிட்டர், பத்து லிட்டர் என பால் தருகின்றன. விவசாயிகளுக்கு இணை வருமானம் கிடைக்கிறது. கால்நடைகளின் கழிவுகள் இயற்கை உரமாகவும் விவசாயிகளுக்கு பயன்படுகின்றன.
கால்நடைப் பண்ணைகளில் சுய உதவிக் குழுக்கள் மூலமாக தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. பண்ணைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி, உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச ஊதியத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
கடந்த ஜுன் 17, 2024 அன்று கோவிந்த ராஜூ என்ற தொழிலாளி தீவனம் வைக்கும் போது மாடு முட்டி இறந்து போனார். 47 வயதான அவருக்கு மனைவியும், பள்ளிக் கூடங்களில் படிக்கும் மகளும், மகனும் உள்ளனர். இணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டோம். கால் நடைத்துறை அமைச்சர் அனிதா ராமச்சந்திரனிடம், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து மூலம் முறையிட்டோம். இதுன் வரை பலன் இல்லை.
அரசு புதிதாகப் பண்ணை தொடங்கலாம் என்று நினைக்கிறீர்களா?
இருக்கிற கட்டமைப்பையே அரசு முழுமையாகப் பயன்படுத்துவதில்லை என்பது தான் எங்கள் வருத்தம். கோயமுத்தூரில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் இருப்பதால், அந்தப் பகுதியில் அதிகம் பண்ணைகள் உள்ளன. வேப்பங்குளம், பட்டுக்கோட்டை பகுதியில் தென்னை மரப் பண்ணைகள் உள்ளன. நெய்வேலியில் காய்கறி ஆராய்ச்சி பண்ணை உள்ளது. இராமநாதபுரத்தில் கடல்சார் உறபத்திக்கு பண்ணை உள்ளது. இப்போது ஈச்சங்கோட்டையிலும், குடுமியான் மலையிலும் வேளாண் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இருக்கின்ற அரசுப் பண்ணைகளில் முழு உற்பத்தியை எட்டுவதில் அரசு முனைப்பு காட்டுவதில்லை.
இப்பண்ணைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் இல்லை. ஓய்வுபெற்றால் எந்த நிதிப் பலனும் இல்லை. ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 10 நாட்கள்தான் வேலை கிடைக்கிறது. நூறு நாள் வேலைத்திட்ட அளவுக்குக் கூட வேலை கிடைப்பதில்லை. அறுபது வயது முடிந்தவுடன் உடல் தகுதி இருந்தாலும், வேலை தர மறுக்கிறார்கள். பண்ணைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு பாதி சம்பளம் கொடுத்து மீண்டும் வேலையில் அமர்த்தும் பண்ணைகள், உடல் தகுதி இருந்தாலும், தினக்கூலி தொழிலாளர்களுக்கு பணிதர மறுக்கின்றன.
நீங்கள் அரசு பண்ணைத் தொழிலாளர்களின் தலைவரானது எப்படி?
நான் முப்பது ஆண்டு காலம் கூட்டுறவு சொசைட்டியில் செயலாளராக இருந்தேன். புதுக்கோட்டையில் நிறுவப்பட்ட தனியார் சாராய ஆலை நிலத்தடி நீரை பாழ்படுத்தியது. இதனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் என் மீது மூன்று வழக்குகள் போடப்பட்டன. இந்த நெருக்கடியால் வேலையை ராஜினாமா செய்தேன். பண்ணைத் தொழிலாளர்களுக்காக தஞ்சாவூரைச் சேர்ந்த சந்திரகுமார், திருத்துறைப்பூண்டி அ.பாஸ்கர் வேலை செய்து வருவதை பார்த்த போது இந்த அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதால் இதில் ஈடுபாடு காட்டினேன்.
Also read
அடிப்படையில் நான் ஒரு விவசாயி. கடந்த 16 ஆண்டுகளாக பண்ணைத் தொழிலாளர்களுக்காக பணியாற்றி வருகிறேன். இந்தப் பண்ணைகளில் வேலை செய்த தினக்கூலி தொழிலாளர்களுக்கு நிரந்தரம் கோரி கூட்டம் போட்ட போது என்னைக் கேலி செய்தார்கள். 2006 ல் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது 2000 பேர் நிரந்தரம் செய்யப்பட்டனர். நன்னிலம் பத்மாவதி, திருத்துறைப்பூண்டி உலகநாதன், ஈரோடு நா.பெரியசாமி போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உதவி செய்தனர்.
நிரந்தரம் செய்யத் தகுதி வாய்ந்தவர்கள் என பட்டியல் எடுத்ததில் 846 பேர் வந்தனர். அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை. அதில் 400 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர் அல்லது ஓய்வு பெற்று விட்டனர். பத்து ஆண்டுகள் தினக்கூலிகளாக வேலை செய்தவர்களையாவது தமிழக அரசு நிரந்தரம் செய்ய வேண்டும்.
நேர்காணல்; பீட்டர் துரைராஜ்
சோரம் போன அரசுகள், வேளாண்மைப் பல்கலைக்கழகங்களிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் உள்ள விஞஞானிகள் – உயர் விளைச்சல் விதைகக்காக, உள்நாட்டு விதைகளை ஒதுக்கி, இயற்கை உரம் இல்லை. நோய்களை பெ௫க்கியதுதான் கண்கூடு.