வெற்றிக்கு பின்னால் இத்தனை தகிடுதத்தங்களா?

-ச.அருணாசலம்

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளுக்கு காங்கிரஸ் மீது பழியை போட்டு கடந்து விட முடியாது. அங்கு நடந்த ஏகப்பட்ட பித்தலாட்டங்கள், அத்துமீறல்கள்.. அதற்கு ஒத்துழைத்த அரசு நிர்வாக அமைப்புகள், ஆளுமையில்லாத தேர்தல் ஆணையம்.. பொய்மை கருத்துருவாக்க ஊடகங்கள்.. போன்றவற்றை குறித்து பேச நிறைய உள்ளது;

மகராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநில இடைத் தேர்தல்கள் முடிவுகள் வந்து விட்டன. இதனுடன் கூட சில மாநிலங்களில் – உ.பி,பீகார்,கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ம.பி – நடந்த இடைத்தேர்தல் முடிவுகளும் வெளி வந்துள்ளன.

முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, வெற்றிக்கொண்டாட்டங்களும், மனச்சலிப்புகளும் எழுவது இயற்கையே. வெற்றி தோல்விக்கான காரணங்களை கட்சிகள் தேடி கண்டுபிடிக்கும் முன்னரே அரசியல் நோக்கர்கள், விமர்சகர்கள், கடும் விமர்சனங்களை வைக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மிதப்பில் இருந்து விட்டனர், களத்தில் இறங்கி வேலை செய்யவில்லை.

கூட்டணியை விரிவு படுத்த வில்லை, தொகுதி பங்கீட்டில் ஒற்றுமை இல்லை.

தேர்தல் கூட்டணி, சமூக கூட்டணியாக செயல்படவில்லை. மகாவிகாஸ் அகாடி ஒரு புதிய சித்தரிப்பை அம்மாநில மக்கள் முன் வைக்கவில்லை.

ஷிண்டே அரசு அறிவித்த இலவச திட்டங்களை முதலில் எதிர்த்தனர், பிறகு எதிர்க்க வழியின்றி தாங்களும் வாக்குறுதிகளை கொடுத்தனர்.

மராத்தா இட ஒதுக்கீட்டை எதிர்த்த பிற்படுத்தப்பட்டோரை பாஜக வளைத்து விட்டது.

நேற்று வரை இவர்கள் பாஜக வின் தோல்விக்கான காணங்களை ,மோசடிகளை, பித்தலாட்டங்களை பட்டியலிட்டனர். அவைகளே பா ஜ க என் டி ஏ – மகாயுத்தி- கூட்டணியின் பலவீனம் என்றும் கூறினர், இந்த தேர்தலில் அந்த கூறுகள் எதுவுமே மாறாமல் நீடிக்கும் பொழுது, அவைகள் வெற்றிக் காரணிகளாக மாறி விடுமா? அல்லது அவைகளே இந்தியா ( எம் வி ஏ) கூட்டணியின் தோல்விக்கான காரணங்களாக மாறி விடுமா?

ஷிண்டே அறிவித்த இலவச திட்டங்கள் மட்டுமே இவ்வளவு பெரிய மாற்றத்தை கொடுத்ததா?

இலவச திட்டங்கள் மகளிரை மகாயுத்தி அரசின் பக்கம் இழுத்ததாக யார் தோற்றத்தை உருவாக்கினர்…?

 

யார் தேர்தலை தள்ளி வைத்தது?

மகாயுத்தி கூட்டணி கட்சிகளின் உள் தகறார்களை மூடி மறைத்து மகா விகாஸ் அகாடியின் பூசல்களை பூதாகரமாக்கிய குயுக்தியை என்னென்பது?

மகாயுத்தி அரசும், ஆர் எஸ் எஸ் அமைப்பும் அடி மட்டத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர், வெற்றியை எப்படியும் எட்டுவர் வியந்தோதியவர்கள் யார்?

இத்தனை சித்தரிப்புகளை கருத்துருவாக்கி நடமாடவிட்டது, அதற்கு முத்தாய்ப்பாகதேர்தல் ஆணையத்தின் மனமுவந்த உதவியுடன் மின்னணு வாக்கு எந்திர மோசடி மூலம் எதிர்பார்க்ப்பட்ட முடிவுகளை கொடுப்பது இன்று ஆள்பவர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது.

தேர்தல் நாளான நவம்பர் 20 மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்கு பதிவு

எண்ணிக்கை 58.22%

அன்று இரவு 11.30 மணிக்கு தே. ஆணையம் வாக்கு சதவிகித்த்தை 65.02% கூட்டி அறிவிக்கிறது,

வாக்கு எண்ணும் நாளான 23/11/24 காலை தே. ஆணையம் வாக்கு பதிவை 66.05% ஆக அறிவிக்கிறது!

தேர்தல் நாள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு , வாக்கு சதவிகிதத்தை கூட்டி தேர்தல் ஆணையம் அறிவிப்பதன் மர்மம் என்ன?

பதிவு செய்ய பட்டதாக அறிவிக்கப்பட்ட வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதேன்?

வாக்கு எண்ணும் இயந்திரங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தாத்தும் ,பழுதாவதும் ஏன்?

சந்தேகங்களோ, பிரச்சினைகளோ ஏற்பட்டால் அதை திருப்திகரமாக தீர்த்து வைக்க வெளிப்படையாக தேர்தல் ஆணையம் முன் வராததது ஏன்?

குறிப்பாக ’நான்டட்’ நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5,86,788 வாக்குகள் பெற்று வெற்றி பெருகிறது. ஆனால். ஆறு சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் மொத்தம் 4,27,465 வாக்குகள் மட்டும் பெற்று ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் தோல்வியை தழுவுகிறது.

ஒரே நாளில், ஒரே தொகுதியில் வாக்காளர் காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வேறு வேறு விதமாக வாக்களிக்க வேண்டும்?

அனுசக்தி நகர் தேர்தலில் தேசியவாத சார்பில் போட்டியிட்ட பஹத் அகமது 17  சுற்றுகள் வரை தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். ஆனால், கடைசி இரண்டு சுற்றுகளில் அவரை எப்படி காலி பண்ணினார்கள் என்பது புதிராக உள்ளது.

இப்படியான முரண்பாடுகளும், குறைபாடுகளும், அனைத்து தொகுதிகளிலும் காணப்படுகின்றது. தேர்தல் ஆணையம் இந்த முரண்பாடுகளை, சந்தேகங்களை தீர்க்க முன்வரவில்லை.

தேர்தல் ஆணையம் அனைத்து தொகுதிகளிலும் விவிபாட் சீட்டுகளை எண்ணி இந்த முரண்பாடுகளை, சந்தேகங்களை நீக்க முடியும், நீக்க வேண்டும்.

ஆனால், தேர்தல் ஆணையம் அதற்கு முன் வரவில்லை, உச்ச நீதி மன்றமும் தேர்தல் ஆணையத்தை வற்புறுத்தாமல், வேடிக்கை பார்க்கிறது, மேலும் மக்கள் தேர்தல் ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

ஆளுபவர்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். அவர்கள் நியமித்த ஆணையர்கள் , அவர்கள் கொடுத்த அறிவுரைகளை நிறைவேற்றுகின்றனர், பிற கட்சிகளும் மக்களும் இதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள உச்சநீதி மன்றம் வலியுறுத்துகிறது.

இரண்டு சுயாதீன அமைப்புகளும்- நீதி மன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகிய இரண்டும்- தங்களது நடுநிலை போக்கில் இருந்து சாக்கு போக்குகளையும் கவைக்குதவாத சட்டவிதிகளையும் கூறி நழுவும் பொழுது அங்கு ஜனநாயகம் செத்து மடிகிறது!

சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட , நேர்மையான, சுதந்திரமான தேர்தலை  தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தவுமில்லை. ஏற்படும் ஐயங்களை பகுத்து களையவோ, தீர்த்து வைக்கவோ தேர்தல் ஆணையம் முன் வரவில்லை.

இத் தேர்தல் முடிவுகள் நேர்மையான முடிவுகளல்ல, ஒரு சித்தரிப்பை நிலைநாட்டுவதற்காக வளைத்து நெளிக்கப்பட்ட முடிவுகள் ( manipulated results) என்பது பெருவாரியான மக்களின் எண்ணமாகும்.

 

பத்திரிக்கையாளர்கள் பலரும், அரசியல் விமர்சகர்கள் பலரும், லோக்நிதி போன்ற கள ஆய்வு அமைப்புகளும் ஆயிரம் விளக்கங்களும் , வியாக்கியானங்களும் இந்த தேர்தல் முடிவுகளுக்கு கூறுகின்றனர்.

ஆனால், நாம் கேட்கும் ஒரு சிறிய கேள்வி இதுதான்.

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகளை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க பகுத்து, உணர்ந்து, அறியக்கூடிய ஆதாரங்கள் தடயங்கள் இருக்கின்றனவா? அவை பரிசோதிக்கப்பட்டனவா? என்பது தான்.

ஒரே ஆதாரமான விவிபாட் சீட்டுகள் முழுமையாக எண்ணப்பட்டாலே அனைத்து தொகுதிகளின் உண்மை நிலவரம் வெளிப்படும். ஆனால் தேர்தல் ஆணையமும் உச்ச நீதி மன்றமும் என்ன நோக்கத்திற்காக விவிபாட் முறை கொண்டுவரப்பட்டதோ அதை மறந்து தொகுதிக்கு ஐந்து மின்னணு வாக்கு எந்நிரங்களில் இணைக்கப்பட்டுள்ள விவிபாட் சீட்டுகளை மட்டும் எண்ண அனுமதிப்பது நியாயம் அல்ல, நேர்மையும் அல்ல, வெளிப்படையான நடைமுறையும் அல்ல.

இந்த முடிவுகளை வைத்துக்கொண்டு மயிர்பிளக்கும் வாதங்களை மேன்மை தங்கிய பத்திரிக்கையாளர்கள் , விமர்சகர்கள் முன்வைப்பது நமக்கு வேதனையளிக்கிறது. சித்தரிப்பை நிலைநாட்ட எண்ணும் ஆளுங்கும்பலுக்கோ இது மகிழ்வைத் தருகிறது!

இந்த தேர்தல் முடிவுகளை நாம் சந்தேகிக்கும் பொழுது அனைவரும் நம்மை நோக்கி கேட்பது , ஜார்க்கண்ட மாநில தேர்தல் முடிவுகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்களா? என்பது தான்.

ஜார்க்கண்ட் முடிவுகளை நாங்கள் ஏற்கிறோமா இல்லையா என்தல்ல பிரச்சினை, அந்த முடிவுகளையும் மேற்கூறிய விவிபாட் சீட் முறையில் ஆய்வு செய்ய நாங்கள் தயார், நீங்கள் தயாரா? என்பது ன் இங்கு கேட்க வேண்டிய கேள்வி.

மின்னணு இயந்திரங்கள் தேவைப்படும் இடத்தில் வளைக்கப்படலாம் என்பது அடிப்படை உண்மை. ஆளுபவர்களின் தேவைக்கேற்ப இது- இத் தேர்தலில் வளைக்கப்படுகிறது என்பதே எமது குற்றச்சாட்டு.

இன்று மகாராஷ்டிரத்தில் வளைக்கப்பட்டுள்ளது என்பதும், ஜார்க்கண்டில் அவ்வாறு வளைக்கப்படவில்லை என்பதும் ஒரு மிகப்பெரிய போர் தந்திரத்தின் வெளிப்பாடே என்கிறோம்.

ஆளுபவர்கள் புனிதர்களும் அல்ல, நேர்மையானவர்களும் அல்ல !

எதிர் கட்சியினர் ஜனநாயகத்தை இந்த நாட்டில் பாதுகாக்க விரும்பினால் கழுதையை கழுதை என்று பெயரிட்டு அடித்து துரத்த ஆவன செய்ய வேண்டும்!

இரண்டுங்கெட்டானாக இருப்பதில் பயனில்லை!

ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time