கஸ்தூரி கைதுக்கு பழிக்கு பழி வாங்க துடிப்பதா?

-சாவித்திரி கண்ணன்

சாதி, மதம், கடவுள் பெயரால் உணர்ச்சியை தூண்டுவது, மிரட்டுவது, விடுதலைக்கான குரல்களை ஒடுக்குவது, என்ற வகையில், ”எங்க பொண்ணு கஸ்தூரியை கைது செய்தீங்கல்ல, உங்க பொண்ணுங்களை தூக்குவோம் பார்’’ னு சீன் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் ஒவியா, இசைவாணி விரிவாக பார்ப்போம்;

இசைவாணி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், பெண்ணுரிமைக்கான குரலாகவும் பாடி வரும் ஒரு கானா பாடகி. இவர் பாடிய ஒரு பாடலைத் தான் பிரச்சினையாக்கி உள்ளனர்.

ஐ ஆம் சாரி ஐயப்பா…

நான் உள்ளே வந்தால் என்னப்பா..

பயம் காட்டி அடக்கி வைக்க

பழைய காலம் இல்லப்பா

நான் தாடிக்காரன் பேத்தி…

இப்ப காலம் மாறிப் போச்சு…

நீ தள்ளி வச்சா தீட்டா..

நான் முன்னேறுவேன் மாஸா..”

இது தான் இசைவாணி பாடிய பாடல்!

இந்த பாட்டிலே எங்கே ஐயப்பன் இழிவுபடுத்தப்படுகிறார்.

”ஐயப்பன் கோவிலுக்குள் எங்களையும் அனுமதிக்க வேண்டும்” என்ற பெண்களின் நீண்ட காலக் கோரிக்கை தான் இங்கே கானா பாடலாக வெளிப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு பெண்ணை கைது செய்யச் சொல்வதும், தண்டிக்கத் துடிப்பதும் ஏற்புடையதா? என ஆன்மீக அன்பர்கள் சிந்திக்க வேண்டும்.

கானா பாடகி இசைவாணி

மேலும், இந்தக் குரல் தான் 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒலித்தது.

’சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும்’ என்ற குரல் நீதிமன்றத்தில் முதன் முதலாக ஒலித்தது 1991ல் தான்! பிறகு 2006 அ ஆண்டு இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடுத்த வழக்கு பல கட்ட விசாரணைகள், பல்வேறு அமர்வுகள் எனத் தொடர்ந்து ஐந்து நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு 2018-ல் தீர்ப்பு வழங்கியது.

அதுவும் கடைசியக தொடர்ந்து ஏழு நாட்கள் நடந்த விசாரணையில், அரசியலமைப்பு பெஞ்ச் பெண்களுக்கான தடை சமத்துவ உரிமை, பாகுபாடுகளுக்கு எதிரான உரிமை மற்றும் தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை மீறுகிறதா..? என்றெல்லாம் விவாதித்தது.

”சபரிமலைக்கு பெண்கள் தடை அத்தியாவசியமான மத நடைமுறையா? ஏன்? எதற்கு?” என்றெல்லாம் கேட்டு திணறடித்தது.

‘பொது வழிபாட்டு விதிகள் பெண்களைத் தடை செய்ய அனுமதிக்கும் பட்சத்தில் இதை ஏற்க முடியாது’ என்றது. ‘வழிபாட்டு விதிகள் பாரபட்சமான பாலின அணுகுமுறையை கைகொள்வது முறையல்ல’ என்றது. நீதிபதிகள் மிஸ்ரா, கான்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர், ”இந்த வழக்கம் ஒரு அத்தியாவசிய மத நடைமுறை என்பதை ஏற்க முடியாது” என தெரிவித்தனர்.

இறுதியாக செப்டம்பர் 28, 2018 அன்று, ”சபரிமலை கோவிலில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது” என்று ஐந்தில் நான்கு நீதிபதிகள் தீர்ப்பு எழுத ஒரே ஒருவர் மட்டும், ‘தடையை எதிர்க்க வேண்டியதில்லை’ என்றார்.

அரசியலமைப்பு சட்ட 15 வது பிரிவின்படி, ‘இந்த நடைமுறை பாரபட்சமானது’ என்றும், ‘தீண்டாமைக்கு எதிரான உரிமைக் குரல் முக்கியமானது.மதிக்க வேண்டியது’ என்றும் கூறினர். மேலும், ‘பொது வழிபாட்டு விதிகளின் விதி 3(b) பெண்களை தடை செய்யும் வழக்கம் அரசியலமைப்பிற்கு விரோதமானது’ என்று அறிவித்தது அமர்வு.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இன்று வரை பெண்களை நுழைய விடாமல் தடுத்து வைத்துள்ளனர் சனாதனவாதிகள்.

ஒரு காலத்தில், ‘அடர்ந்த காட்டுக்குள் இருந்த ஐயப்பனை தரிசிக்க வருவது பெண்களுக்கு பாதுகாப்பில்லை’ என்ற நோக்கத்திலும், ‘ஆண்களின் சபல மனம் அடர்ந்த காட்டுச் சூழலை சாதகமாக்கி தவறு செய்ய வாய்ப்புள்ளது’ என்றும் கருதி பெண்களை அனுமதி மறுத்திருப்பதில் நியாயம் இருக்கலாம். ஆனால், தற்போது 41 நாட்கள் விரதம், செருப்பு போடாமல் மலை நெடுக நடக்க வேண்டும்..போன்ற எண்ணற்ற கட்டுபாடுகளை விலக்கி, மூன்று நாட்கள் விரதம் இருந்து நேரடியாக தேவஸ்தானம் வரை காரில் வர அனுமதிக்கபடுவதை போல, பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதே பெண்களின் குரலாகும்.

ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய சனாதன விதிகள் அனுமதிக்கவில்லை. கணவன் இறந்தால் பெண்கள் மறுமணம் செய்ய சனாதனம் சம்மதிக்கவில்லை…இன்று எல்லாம் மாறிவிட்டதைப் போல, சபரிமலையில் பெண்கள் நுழைவு என்பதும் கால வெள்ளத்தில் மாறியே தீரும்.

ஆகவே, பார்ப்பனர்கள் தங்களுக்கு ஆதரவான சூத்திர இந்து அமைப்புகளைத் தூண்டிவிட்டு, குளிர் காய்வதை நிறுத்திவிட்டு, சமூகத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ ஒத்துழைக்க வேண்டும். 2019 அதிமுக ஆட்சியில் இருந்த போது இசைவாணி பாடிய இந்தப் பாடலுக்கு அப்போது தங்களுக்கு தோதான கட்சியான அதிமுகவிற்கு சிக்கல்கள் தரக் கூடாது என அடக்கி வாசித்த பார்ப்பனர்கள், இப்போது திமுக ஆட்சிக்கு தலித் மக்களிடம் அதிருப்தியை உருவக்கி நெருக்கடி தர இசைவாணி அன்று பாடிய பாடலை தூசிதட்டி எடுத்து, கஸ்தூரியை கைது செய்தாய் அல்லவா? எனக் கேட்கின்றனர்.

இதே போலத் தான் பெண்ணுரிமைவாதியும், பெரியாரிஸ்டுமான ஓவியாவின் ஆதங்கக் குரலையும் திசை திருப்பி, ஒரு சாதிக்கானவர்களை அவருக்கு எதிராக திருப்புகின்றனர்.

புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ’தங்கள் சமுதாயத்திற்கு தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும், தங்கள் சமுதாயத்தை பட்டியலினப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து போராடி வருகிறார்.

இந்த கோரிக்கையை பொறுத்த வரை ஒரு சமுதாயம் தன்னை இழிவாக அழைக்காமல் கெளரவமாக இன்ன பெயரிட்டு அழையுங்கள் எனக் கேட்பது நியாயமானது. நாம் அனைவரும் அதை ஆதரிக்க கடமைப்பட்டுள்ளோம். அதே சமயம் அந்த சமுதயாயத்திற்கு அரசியல் சட்டம் தந்த பாதுகாப்பையும், கல்வி, மற்றும் வேலை வாய்ப்புகளில் கிடைத்து வரும் சிறப்பு சலுகைகளையும் துறப்பது என்பதை எந்த ஒரு தனி மனிதரும் தீர்மானிக்க முடியாது. அது அந்த சமூகத்தில் கருத்துக் கணிப்பு நடத்தி, அந்த சமூக மக்களின் முடிவுக்கே விடவேண்டிய ஒன்று தான்.

இந்த விவகாரத்தில் ஓவியா சொன்னது என்னவென்று பார்ப்போம்;

இந்த சமூகத்தில் ஒரு பார்ப்பனர் அல்லாத மற்ற சமூகத்தினர் தங்களை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், இந்து சட்டத்தின் ஆளுகைக்குள்ளான அனைத்து மக்களும்  பார்ப்பனருக்கு சேவகம் செய்கின்ற தாசி மக்கள் என்கின்ற பொருளிலேயே மனுதர்மத்தில் வரையறை செய்யப் பட்டிருக்கிறது.  இந்து சட்டம் இயற்றப்பட்ட காலத்திலிருந்து இன்று வரையிலும் மனுதருமம் என்பது சட்டத்தின் மூலநூல் என்கிற மதிப்பிலிருந்து வருகிறது.  இந்த இழிவிலிருந்து விடுபடாமல் இந்து மதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு பெயரை மாற்றுவதால் என்ன பயன்? அதையும் மீறி பெயர் மாற்ற விரும்பினால், அதில் முடிவு செய்ய வேண்டியது அந்த சமுதாய மக்கள் தானே தவிர பிறருக்கு அதிலென்ன ஆட்சேபமிருக்கிறது?”’ என்று தான் ஓவியா பேசி இருக்கிறார்.

இங்கே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமல்ல, தங்களாவா அல்லாத அனைவரையுமே பார்ப்பனர்கள் கீழ்த்தரமாக மதிப்பீடு செய்து வைத்துள்ளதாகத் தான் அவர் கூறுகின்றார்.

இங்கே இந்த கூற்றுக்கு,  ”அவ்வாறு மனுவில் இருந்தாலும், தற்போது நாங்கள் அதை விட்டுவிட்டோம்’’ என பார்ப்பனர்கள் விளக்கமளித்து இருந்தால், அதை கவனத்தில் கொள்ளலாம். ஆனால், தேவேந்திர குல வேளாள மக்களுக்கான தலைவர்களாக தங்களை தாங்களே அறிவித்துக் கொண்டு, அந்த மக்களிடமே முற்றிலும் செல்வாக்கு இழந்து பாஜகவின் காலடியில் கிடக்கும் தலைவர்களை உசுப்பிவிட்டு அறிக்கை விடச் செய்வதும், சீமான் போன்றவர்கள் அதை வழிமொழிந்து, ”ஓவியாவை கைது செய்ய வேண்டும்’’ என முழங்குவதும் என்ன மாதிரியான சூது, பித்தலாட்டம் எனத் தெரியவில்லை.

ஓவியா, இசைவாணி ஆகியோரின் குரல்கள் பெண் விடுதலைக்கான குரல்கள், ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகத்திற்காகவும் கரிசனம் காட்டும் குரல்கள்!

ஆனால், கஸ்தூரியின் குரல் எப்படிப்பட்டது? பார்ப்பனர் அல்லாத அனைவரையுமே இழிவுபடுத்திய குரலாகும்.

”ஊழல் செய்பவர்கள் எல்லாம் பிராமணரல்லாதவர்கள்” என்று சொல்லும் குரல் எத்தகையது?

”பிராமணர்கள் அல்லாத மற்ற சாதியினர் எல்லாம் பாலியல் ஒழுக்கமற்றவர்கள். அவர்களை திருந்த சொல்வதால் எங்களை எதிர்க்கிறார்கள்” என்பது எத்தகைய குரல்?

”தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மொழி மக்கள் அந்தக் கால ராஜாக்களின் அந்தப்புர சேவகத்திற்காக இங்கே வந்தவர்கள்” என்பது எத்தகைய குரல்?

கஸ்தூரியை காவல்துறை விசாரணைக்கு தான் அழைத்தது. கைது செய்வதாகச் சொல்லவில்லை. ஆனால், விசாரணையை எதிர் கொள்ளாமல் ஓடி ஒளிந்தார் கஸ்தூரி. கஸ்தூரியை திமுக அரசே காவல்துறையை ஏவி கைது செய்திருந்தால், ”எவ்வளவு மாற்றுக் கருத்து இருந்தாலும் கைது அவசியமில்லை” என்றே என்னைப் போன்றவர்கள் குரல் கொடுத்திருப்போம். ஆனால், விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற பின்னும் கஸ்தூரி தன் ஆணவப் பேச்சிற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. இதை நீதிபதியே சுட்டிக் காட்டினார். ஆகவே, அவரை கைது செய்ய அணையிட்டது நீதிமன்றம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time