சோசலிசம், மதச் சார்பின்மைக்கு ஏற்பட்ட நெருக்கடி!

-ஹரி பரந்தாமன்

நமது நாட்டின் சோசலிசம், மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகளே இவர்களுக்கு இப்படி கசக்கிறது. நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இவற்றை முற்றாக ஒழித்துக் கட்டியே தீருவது என கங்கணம் கட்டுகின்றனர். ஆனால், உச்ச நீதிமன்றம் ‘இவற்றை தொடுவதற்கே அனுமதியில்லை’ என கறார் காட்டிய விதம் அபாரம்! முழு விபரங்கள்;

நமது நாட்டை வழி நடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில்  சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நேற்றைய நாள் (நவம்பர் 25, 2024) தள்ளுபடி செய்தது. முன்னாள் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி, வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய், விஷ்ணு சங்கர் ஜெயின் மற்றும் பல்ராம் சிங் ஆகியோர் தாக்கல் செய்த நான்கு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வு அரசியலமைப்பை திருத்தும் அதிகாரத்தை நாடாளுமன்றம் சரியாக செய்துள்ளதை உறுதிபடுத்தியது. இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது; வரவேற்கத்தக்கது.

குறுகிய உள்ளம் கொண்டவர்கள் தாக்கல் செய்த இந்த ரிட் மனுக்கள் மீதான விசாரணையின் போது, ​​மனுதாரர் வேண்டுகோள்படி, ‘இந்த விவகாரத்தை பெரிய அமர்விற்கு அனுப்ப’ இந்த இரு நீதிபதிகள் அமர்வு மறுத்ததோடு, ‘உச்ச நீதிமன்றத்தின்  விசாரணைக்கே தகுதி இல்லை’ என்று தள்ளுபடி செய்யத்தக்கது என்றது. அதாவது, ‘அரசின் தரப்பை கூட, கேட்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று வழக்கை ஆரம்ப நிலையிலேயே  தள்ளுபடி செய்துள்ளது, உச்ச நீதிமன்றம்.

அரசமைப்புச் சட்டம் பிரிவு 32 இன் கீழ் ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்தனர், சுப்பிரமணியசாமி வகையறாவினர். இவர்களுக்கு வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய், ஜி.விராவ் ஆகிய  இரு தீவிர இந்துத்துவ வழக்கறிஞர்கள் வாதாடினர்.

சுப்பிரமணியசாமி, அஷ்வினி உபாத்யாய், விஷ்ணு சங்கர் ஜெயின்

அவசர நிலை காலத்தில் அரசமைப்புச் சட்டத்தை 42 ஆவது திருத்தத்தின் மூலம் திருத்தியது. அந்த வகையில், இத்திருத்தம் முன்னுரையில் இந்தியா பற்றிய விளக்கத்தை “இறையாண்மை, ஜனநாயக குடியரசு” என்பதிலிருந்து “இறையாண்மை, சோசலிஸ்ட், மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு” என்று மாற்றியது.

“மதச்சார்பின்மை” மற்றும் “சோசலிசம்” என்ற வார்த்தைகளை அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சேர்த்தது ,அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும்,  எனவே அந்த வார்த்தைகளை முகப்புரையிலிருந்து நீக்க வேண்டும் என்பதே அந்த ரிட் மனுக்களில் கோரப்பட்டது.

மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்திற்கு விரோதமாக தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் குரல் கொடுத்து வருகின்றன .அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது மேற்சொன்ன உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. நீதிமன்றம் சொன்னாலும் அந்த குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும் . இருப்பினும் இந்த தீர்ப்பு அந்த அந்த குரலை பலவீனப்படுத்தும்.

மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகளை ,அரசமைப்பு அவை அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கவில்லை என்பதால், அவைகளை 1976 ஆம் ஆண்டு சேர்த்தது சட்ட விரோதம் என்ற வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், “சோசலிஸ்ட்” மற்றும் “மதச்சார்பற்ற” சொற்களை மேற்கத்திய கருத்தாக்கம் போல் கருத வேண்டிய அவசியமில்லை’’ என்றது.

அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய காலத்தில் சில சட்ட வல்லுனர்கள் “மதச்சார்பின்மை” என்பது மதத்திற்கு விரோதமானது என்று கருதியதால் ,அந்த வார்த்தையை சேர்க்கவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், பிந்தைய நாட்களில் மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் ஆதரிப்பது இல்லை என்றும் எந்த மதத்தை ஆதரிப்பவரையும் தண்டிப்பதில்லை என்றும் சரியாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ள நிலையில், மனுதாரர்களின் வாதம் நிராகரிக்கப்படுவதாக கூறியது உச்ச நீதிமன்ற இருவர் அமர்வு.

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.வி.சஞ்சய் குமார்

மேலும் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள சமத்துவம் ,சகோதரத்துவம்,சுதந்திரம், நீதி போன்ற வார்த்தைகளுக்கான பொருள் மதச்சார்பின்மை என்பதே என்று அழுத்தம் திருத்தமாக தீர்ப்பில் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

எந்தக் குடிமகனும் தான் விரும்பும் மதத்தை சார்ந்து இருப்பதற்கும் அதை பிரச்சாரம் செய்வதற்கும்  அடிப்படை உரிமை உள்ளது என்று கூறும் அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 25 -ன் பொருளும் மதச்சார்பின்மை தான் என்று கூறியுள்ளது உச்சநீதிமன்றம். அதேபோல ஒவ்வொரு  குடிமகனின் தனிப்பட்ட கலாச்சார உரிமையும் பாதுகாக்கப்படும் என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 29 ம்,மத சிறுபான்மையினர் மற்றும் மொழிச் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை அமைத்து நிர்வகிப்பதற்கான உரிமையை அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 30ம் , மதச்சார்பின்மை கோட்பாட்டை வெளிப்படுத்தும் பிரிவுகளே என்று உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பில் பறைசாற்றியுள்ளது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 ம் , எந்த குடிமகனையும் மதம், இனம் ,சாதி, பாலினம், பிறப்பிடம் போன்ற எந்த காரணங்களை கூறியும் அரசு பாகுபாடு காண்பிக்க கூடாது என்று கூறும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 15ம் , பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீட்டை அளிக்கும் அதே வேளையில் வேலைக்கான வாய்ப்பை அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்குவதில் எந்த பாகுபாட்டையும் அரசு காண்பிக்க கூடாது என்று கூறும் அரசமைப்புச் சட்டத்தின்  பிரிவு 16 ம்,  “மதச்சார்பின்மை “என்ற கோட்பாட்டை வலியுறுத்துவதே என்று தெளிவுபடுத்தி உள்ளது இந்த தீர்ப்பு.


18-3-1976 -இல் பாராளுமன்றத்தின் காலம் முடிவடைந்த நிலையில், அவசர கால நிலையை பயன்படுத்தி 2-11-1976 அன்று அரசமைப்புச் சட்டத்தை 42- ஆவது திருத்தத்தின் மூலம் திருத்தி ,முகப்புரையில் மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகளை பாராளுமன்றம் சேர்த்தது சட்ட விரோதம் என்ற வாதத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

அவசர நிலை காலத்திற்குப் பின் ஆட்சிக்கு வந்த ஜனதா அரசாங்கம்,  அரசமைப்புச் சட்டத்தை 44வது திருத்தத்தின் மூலம் திருத்திய பொழுது , அவசர நிலை காலத்தில்  முகப்புரையில் சேர்க்கப்பட்ட மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகளை நீக்க மறுத்ததோடு, “அவசரகால பாராளுமன்றம் இதை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், ஜனதா கட்சி அரசாங்கத்தின் பாராளுமன்றத்தால் 2/3 பெரும்பான்மையால் இது ஆதரிக்கப்பட்டது. இதில் சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய அம்சங்கள் தக்கவைக்கப்பட்டன” என்றும் சுட்டி காண்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும் கேசவானந்த பாரதி வழக்கில் 13 உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு 1973 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பிலும், எஸ் .ஆர் .பொம்மை வழக்கில் 9 உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு 1994 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பிலும் ,மதச்சார்பின்மை என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடு என்று கூறியுள்ளதை சுட்டிக் காண்பிக்கிறது இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. 1994 ஆம் ஆண்டில் வழங்கிய ஆர் .சி .பவுதியாள் என்ற மற்றொரு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம்,   எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் அனைவரையும் ஒரே மாதிரியாக அரசு நடத்த வேண்டும் என்பதுதான்  மதச்சார்பின்மை என்று கூறியதை சுட்டி காண்பிக்கிறது இந்த தீர்ப்பு.

அதே 1994 ஆம் ஆண்டில் வழங்கிய எம் . இஸ்மாயில் பருக்கி என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் , அரசுக்கு எந்த மதமும் இல்லை என்றும் அனைத்து மதத்தவரையும் சமமாக பார்க்க வேண்டும் என்று மதச்சார்பின்மைக்கு விளக்கம் கொடுத்திருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது இந்த தீர்ப்பு.

இதே போல சோசலிசம் என்பதற்கும் விளக்கம் அளித்து இருக்கிறது இந்த தீர்ப்பு. முகப்புரையில் சோசலிசம் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டதனால், தனிச் சொத்துரிமையை அரசமைப்பு சட்டம் மறுக்கவில்லை என்று கூறுகிறது . தனியார் துறை இங்கு வளர்ச்சியடைவதை அது ஒருபோதும் தடுக்கவில்லை. நாம் அனைவரும் தனியார் துறையால் பலனடைந்துள்ளோம். சோசலிசம் பற்றிய எண்ணம் அரசியலமைப்பின் பல பிரிவுகளில் இயங்குகிறது.

சோசலிசமும் மதச்சார்பின்மையும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி. அரசியலமைப்பைத் திருத்துவதற்கான அதிகாரம் பிரிவு 368 என்பது முன்னுரை வரை திருத்த அனுமதி அளிக்கிறது. ஏனெனில் முன்னுரையானது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். இது அரசியலமைப்புக்கு புறம்பானது அல்லது வேறுபட்டது அல்ல.” சோசலிசம் என்று முகப்புரையில் இருப்பதற்கு இந்த அரசு “மக்கள் நல அரசாக “இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக்  கூறவே தான் என்கிறது இந்த தீர்ப்பு. இந்த நாட்டின் பொருளாதாரம் , ” கலப்பு பொருளாதாரம்” என்று கூறுகிறது இந்த தீர்ப்பு.

சோசலிசம் என்ற வார்த்தை முகப்புரையில் இருப்பதை கணக்கில் கொண்ட உச்ச நீதிமன்றம், எக்சல்வேர் என்ற வழக்கில் அரசுடமையாக்கும் அரசின் செயலுக்கு ஆதரவாக நீதிமன்றம் இருக்கும் என்று கூறி இருப்பதை சுட்டி காண்பித்துள்ளது. சமீபத்தில் 2024-இல் 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பொருளாதார கொள்கைகள் மக்கள் நலனுக்காக இருப்பின், அதில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறிய தீர்ப்பை சுட்டிக்காட்டி உள்ளது இந்த தீர்ப்பு.

1976-ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தின்  முகப்புரையில், சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகள் அரசமைப்புச் சட்டம் 1949-இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது முதல் அமலுக்கு வரும் என்பது சட்ட விரோதம் என்ற வாதத்தையும் நிராகரித்தது உச்ச நீதிமன்றம். அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 368 , பாராளுமன்றத்திற்கு அரசமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவையும் பிந்தைய தேதி முதல் அமலுக்கு வரும் என்று திருத்தம் செய்யும் உரிமையை வழங்கி உள்ளதால், அது முகப்புரை திருத்தத்திற்கும் பொருந்தும் என்று கூறியுள்ளது இந்த தீர்ப்பு.

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்

ஓய்வு பெற்ற நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time