திருப்பத்தை சந்திக்க உள்ளது சீமானின் அரசியல்!

-சாவித்திரி கண்ணன்

சீமான் – ரஜினி சந்திப்பு என்பது இரு தனி நபர் சார்ந்த சந்திப்பு அல்ல. ஒரு சித்தாந்தம் இன்னொரு சித்தாந்த பிம்மத்திற்குள் கரைய முயற்சிக்கும் சந்திப்பாகும். ரஜினியின் போயஸ் இல்லம் அரசியல் போக்கற்றவர்களின் போக்கிடமாக கடந்த பத்தண்டுகளாக எப்படி இயங்கி வருகிறது என்பது குறித்த ஒரு அலசல்;

அதென்னவோ தெரியவில்லை. பொது வாழ்வில் செல்வாக்கு குறைந்து போனவர்கள் அடைக்கலம் ஆகும் இடமாக நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ளது.

திமுகவில் கலைஞர் சாப்தம் முடிவுக்கு வந்த நிலையில், ஸ்டாலினின் அதிகாரம் ஓங்கி வளர்ந்து வந்த நிலையில் மு.க.அழகிரி ஓரம்கட்டப்பட்டார். ரஜினியை போயஸ் கார்டன் சென்று சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பின்னணியில் ஆடிட்டர் குருமூர்த்தி இருந்தார்.

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் பல்லாண்டுகளாக அதிகார மையமாக வாழ்ந்த சசிகலா, அதே போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு ஒரு போதும் செல்ல நினைத்ததில்லை. சிறை சென்று வந்த பிறகு அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் – பாஜகவின் கட்டளைக்கு ஏற்ப செயல்படக் கூடிய சூழலில் – ரஜினியை போயஸ் இல்லம் தேடிச் சென்று சந்தித்தார்.

ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர். அந்த காலகட்டங்களிலும் சரி, அதன் பிறகு அமைச்சர்,துணை முதல்வர் காலகட்டங்களிலும் சரி, போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டைக் கடந்தே பலமுறை ஜெயலலிதா வீட்டுக்கு சென்ற காலகட்டங்களில் எல்லாம் ரஜினி வீட்டிற்கு செல்வதையே அவர் நினைத்து பார்த்ததில்லை. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் எடப்படியின் கை ஓங்கி கட்சியில் இருந்து விலக்கப்பட்டு, தீவிர பாஜகவின் ஆதரவாளராக வெளிப்பட்ட நிலையில் ரஜினியை போயஸ் இல்லம் சென்று சந்தித்தார்.

 

வைகோ நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர். அவர் திமுகவில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கிய 1993-ல் ரொம்ப பீக்கில் இருந்தார். ஆனால், படிப்படியாக அவர் செல்வாக்கு இறங்கி 2014 ஆம் ஆண்டு மிக நலிந்த நிலையில் பாஜகவுடன் கைகோர்க்க திட்டமிட்ட நிலையில், அந்த ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மாலினி கடிதத்துடன் ரஜினியை சந்தித்தார்.

அதே போல திருநாவுக்கரசர் செல்வாக்கோடு இருந்த காலத்தில் எப்போதும் போதும் சரி போயஸ் இல்லம் சென்று ரஜினியை சந்தித்தவர் அல்ல, ஆனால் அவர் செல்வாக்கு முற்றிலும் சரிந்த காலகட்டத்தில் ரஜினியை போயஸ் இல்லம் சென்று சந்தித்தார். அவர் பாஜகவில் முன்பு அமைச்சர் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்பு திமுக, காங்கிரஸ் என்று பயணித்த காலங்களில் எல்லாம் திரைத்துறையில் நெருங்கி பழகிய ரஜினியைத் தேடி போயஸ் இல்லம் சென்று சந்தித்ததே இல்லை. அதே சமயம் பாஜகவில் சேர்ந்த பிறகு மிக உரிமையுடன் போயஸீல் உள்ள ரஜினி இல்லம் தேடிச் சென்று சந்தித்தார்.

தமிழருவி மணியன் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இருந்து பொது வாழ்வை தொடங்கியவர். ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா, காங்கிரஸ் என்று பயணித்து இறுதியில் காந்திய மக்கள் இயக்கம் கண்டவர். 2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு காரணமானவர். அப்போது கூட அவர் ரஜினி என்று யாரேனும் சொன்னால், அவரெல்லாம் நடிகர் அவரிடம் நமக்கென்ன பேச்சு வேண்டியுள்ளது என அறிவார்ந்த தளத்தில் கேள்வி எழுப்புவார். ஆனால், பிறகு பாஜகவுடன் அவர் நெருக்கமான பிறகு ரஜினியை தொடர்ந்து சந்தித்து பேசும் நிலைக்கு ஆளானார்.

இதே போலத் தான் சீமான். அரசியலில் தன் சொந்த பலத்தை நம்பி பயணித்த வரையில் அவர் ரஜினியை எடுத்தெறிந்து பேசியவர் தான். ஆனால், விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு, அவரது கட்சியில் இருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள் விலகி செல்லும் நிலையில், இனி தன் எதிர்காலம் கேள்விக்கு உள்ளான நிலையில் ரஜினியை சந்தித்து உள்ளார். சீமான் என்பவர் தமிழக அரசியலில் திராவிடத்தை எதிர்க்கும் ஒற்றை நோக்கத்தை கொண்டு இயங்கி வருவதோடு கே.டிராகவன் மற்றும் நடிகை கஸ்தூரி விவகாரங்களில் அவர்களுக்கு ஆதரவாக பேசியவர் என்பது கவனத்திற்கு உரியது.

முன்பு தம்பி விஜய் என வாய்க்கு வாய் அடிக்கடி வலிந்து விஜய்யைப் பற்றி பேசி விஜய்யின் ஆதரவு ஓட்டுகளையெல்லாம் அறுவடை செய்து வந்த சீமானுக்கு அந்த வாய்ப்பு தற்போது இல்லாமல் ஆகிவிட்டது. விஜய்யும் திமுகவை உக்கிரமாக எதிர்ப்பதால் சீமானுக்கு விழுந்த திமுக எதிர்ப்பு ஓட்டுகளும் இனி விஜய் பக்கம் ஓரளவேனும் சென்றுவிடும்.

சீமானின் பாஜக எதிர்ப்பு பேச்சுக்கள் எல்லாம் வெறும் பசப்பல் தானேயன்றி உண்மையல்ல..என்பது சமூகதளத்தில் பரவலாக உணரப்பட்டு வருகிறது. ஆகவே, இனி வேஷம் களைவதைத் தவிர, வேறு வழியில்லை சீமானுக்கு. அதே சமயம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய உணர்வை வீரியமாக எடுத்துச் சென்றவர் என்ற வகையில் சீமான் அரசியல் என்பது இந்த காலகட்டத்தின் தேவையாக உணரப்பட்டது என்பதை நாம் மறுக்க முடியாது.

ரஜினியை பொறுத்த வரை பாஜகவிற்கு சாதகமாக தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்க அடையாளம் காணப்பட்டவர். ஆனால், அது அவரது உடல் நிலை, மன நிலையால் வெற்றிகரமாக நடக்கவில்லை. ஆனால், அவரது அணுகுமுறை என்பது அனைத்து தரப்பினரோடும் இணக்கமான இருப்பது போன்ற தோற்றத்தை காட்டினாலும், அடிப்படையில் இந்திய தேசியத்திற்கும், பிராமணிய இந்துத்துவாவிற்கும் மிக விஸ்வாசமானது என்பது கவனத்திற்கு உரியது.

இந்தப் பின்னணியில் ரஜினியை சீமான் சந்தித்து இருப்பதானது – அதுவும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் ரவீந்திரன் துரைசாமியின் துணையோடு இந்த சந்திப்பும், பேச்சு வார்த்தைகளும் இரண்டரை மணி நேரம் நீடித்து இருக்கும் நிலையில் –  இது வரை சமரசமற்ற தமிழ் தேசியப் போராளியாக தன்னை அடையாளம் காட்டி வந்த சீமானின் அரசியல், இனி சரிவை நோக்கி திரும்பி சென்று கொண்டிருப்பதையே உணர்த்துகிறது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time