நீதிமன்றங்களே சட்டங்களை மீறலாமா..?

ஹரி பரந்தாமன்

இந்துக்களின் பாரம்பரிய புனித வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை எவ்வளவோ  பாதுகாக்கப்படாமல் சிதைந்து வருகின்றன! ஆனால், இஸ்லாமியர்களின் மசூதிகளுக்குள் இந்து கடவுளர்களை தேடுவோர்களுக்கு ஒன்றிய ஆட்சியாளர்களோடு, நமது நீதிமன்றங்களும் ஆதரவு தந்து வருவதை அலசுகிறார் நீதிபதி ஹரிபரந்தாமன்;

உத்தரப்பிரதேசம் சாம்பலில் உள்ள ஜமா மசூதியை பாதுகாக்க  இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் ஐந்து இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரம், தீ வைப்பு, துப்பாக்கி சூடு ..என சமூக அமைதி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்​பட்​ட​தாகவும், இங்கு விஷ்ணு​வின் கடைசி அவதா​ரமான கல்கி​யின் கோயில் இருந்தது எனவும் இந்து அமைப்பினர் சம்பல் நீதி​மன்​றத்​தில் வழக்கு  தொடர்ந்ததையடுத்து மசூதிக்குள் ஆய்வு நடத்த உத்திரவிட்ட நீதிபதியின் தீர்ப்பும், ஆய்வு குழுவினர் வருகையும் இஸ்லாமியர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால், அங்கு போலீஸ் படை இறக்கப்பட்டு உள்ளது.


உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் வழங்கிய தீர்ப்பு அன்றைய தினம் கடுமையான விமர்சனத்தை பெற்றது. அந்த தீர்ப்பை பற்றிய மிகச் சுருக்கமான விமர்சனம் இது தான் —அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது, ஆனால் நோயாளி இறந்து போனார் என்பது தான்.

உச்ச நீதிமன்ற  வரலாற்றில் அழியாத கறையே உச்ச நீதிமன்றம் வழங்கிய பாபர் மசூதி தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

பாபர் மசூதி 16-ஆம் நூற்றாண்டில் 1,528 ஆம் ஆண்டில் முகலாயர் ஆட்சியில் கட்டப்பட்டது . 1947 இல் சுதந்திரம் பெறும் வரை ஆங்கிலேயர் ஆட்சியில் அந்த மசூதி பாதுகாப்புடன் இருந்தது. பாபர் மசூதி வளாகத்துக்குள் ராமர் சிலையையும் மற்ற சிலைகளையும் வைத்த போது பிரிட்டிஷ் ஆட்சி அப்புறப்படுத்தியது.

பிரதமர் ஜவகர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில்  1949 இல் பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது . அதை அகற்ற தவறி விட்டது  பிரதமர் நேருவின் அரசு. பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைத்தது சட்டவிரோதம் என்று பதிவு செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இதே போல வழக்கு நிலுவையில் இருக்கும் போது, 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம்  நாள் பாபர் மசூதியை இடித்தது சட்ட விரோதம் என்று மிகக் கடுமையான மொழியில் உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி தீர்ப்பில் பதிவு செய்துள்ளது.

ஆனால், பல ஆண்டு விசாரணைக்கு பிறகு இந்து மக்களின் மிகப் பெரும்பான்மையினர் அந்த மசூதி இருக்கும் இடத்தில் தான் ராமர் பிறந்ததாக நம்புகிறார்கள் என்று கூறி , ராமருக்கு கோயில் கட்டிக் கொள்வதற்காக அந்த நிலத்தை இந்துக்கள் வசம் ஒப்படைத்தது உச்ச நீதிமன்றம். இப்படி ஒரு வினோதமான தீர்ப்பு வந்த போதும்,  இத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தால் நிம்மதி தான் என பலர் நினைத்தனர்.

காரணம்,  1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது வழிபாட்டுத் தலங்களாக இருந்த அனைத்தையும் மத வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது என்பதை பதிவு செய்து, அதில் பாபர் மசூதிக்கு மட்டும் விதிவிலக்கு அளித்தது. அத்துடன் இனிமேல் பாபர் மசூதிக்கு ஏற்பட்டது போன்ற பிரச்சனை மற்ற எந்த மசூதிக்கும் ஏற்படாது என்றது உச்சநீதிமன்றம். நமது நாடாளுமன்றத்தின் வழிபாட்டுத் தலங்கள் பாது​காப்புச் சட்டம் 1991- தங்களை பாதுகாக்கும் என இஸ்லாமியர்கள் நம்பினர்.

ஆனால், துரதிஷ்டவசமாக, அந்த தீர்ப்பை எழுதிய ஐவரில் ஒருவரான சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட்  தலைமையிலான  3 நீதிபதிகள் அமர்வு, காசி ஞானவாபி மசூதியை பாதுகாக்க தவறிவிட்டது.

காசி ஞானவாபி மசூதி வளாகத்துக்குள் இருக்கும் இந்து தெய்வங்களை வழிபடுவதற்கு  இந்துக்களுக்கு உரிமை உண்டு என்று  அறிவிக்க வேண்டும்  என ஒரு சிவில் வழக்கு 2022 ஆம் ஆண்டில் மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இந்து கோயிலை இடித்து, அதன் பேரில் கட்டப்பட்டது தான் இந்த மசூதி என்பது இந்து அமைப்புகள் தரப்பின் வழக்கு. இந்து தரப்பிற்கு ஆதரவாக அட்வகேட் கமிஷனரை நியமித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதையே அலகாபாத் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து இஸ்லாமியர் தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றது.

இந்த நிலையில், மாவட்ட நீதிமன்றம் நியமித்த அட்வகேட் கமிஷனர் மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக  கூறினார். இஸ்லாமியர்களோ, அது தண்ணீர் நீருற்று என்றனர்.

அட்வகேட் கமிஷனர் அறிக்கையின் அடிப்படையில் 16. 5. 2022 தேதிய உத்தரவின் மூலம் மாவட்ட நீதிமன்றம் மசூதிக்குள் உள்ள அந்த சம்பந்தப்பட்ட பகுதியை சீல் வைத்து உத்தரவிட்டது. இஸ்லாமியர்கள் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர். 17.5.2022 உத்தரவின் மூலம் உச்ச நீதிமன்றம் மசூதிக்குள் இஸ்லாமியர்கள் வழிபாடு செய்வதை மாவட்ட நீதிமன்ற உத்தரவு பாதிக்காது என்று கூறியது.

இந்த சூழலில் இந்து தரப்பினர் மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வு வேண்டி வேறொரு மனுவை மாவட்ட  நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஆய்வுக்கு அனுமதி கிடைத்தது. அலகாபாத் நீதிமன்றம் 3.8.2023 அந்த உத்தரவை உறுதி செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர் இஸ்லாமியர்கள். அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான மூவர் அமர்வு 4-8-2023 தேதிய உத்தரவின் மூலம் இஸ்லாமியர்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

காசி மசூதி கட்டிடத்திற்கு எந்தவித  பாதிப்பும் இன்றி,  தொல்லியல் துறை கூறியதை ஏற்று இஸ்லாமியர்களின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தார் அப்போதைய தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள்.

ஒரு விவகாரம் உணர்ச்சி கொந்தளிப்புக்கு செல்வதற்கு முன் அதற்கு முடிவுரை எழுதி இருக்க வேண்டும் தலைமை  நீதிபதி சந்திரசூட்.

நிலுவையில் இருந்த இஸ்லாமியர்களின் இந்துக்கள் வழக்கு விசாரணைக்கே தகுதியற்றது என்ற வழக்கை அவர் விசாரிக்காமல் இருப்பதற்கு அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கலாம். எப்படி இருப்பினும், அந்த வழக்கை விசாரிக்காமல் தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்களின் செயல் வரலாற்றில் மீண்டும் ஒரு அழிக்க முடியாத கறை உச்ச நீதிமன்றத்தின் மேல் படிய  காரணமாகி விட்டது. தற்போது உள்ளே இந்துக்கள் வழிபாடு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் காசி மசூதியில் இந்துக்கள் உரிமை கோரும் வழக்கு விசாரணைக்கே தகுதியற்றது என்பதை மாவட்ட நீதிமன்றத்திற்கு புரிய வைத்திருக்க வேண்டும் உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றம்  பாபர் மசூதி வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த சிவில் கோர்ட்டோ அல்லது உயர்நீதிமன்றமோ எந்த மத வழிபாட்டு தலங்களையும் – மசூதிகளையோ அல்லது தேவாலயங்களையோ-கேள்விக்கு உட்படுத்தும் எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது என்ற பொதுவான உத்தரவை அளித்து உச்சநீதிமன்றம்  மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது என்பதை உலகத்திற்கு அறிவித்திருக்க வேண்டும். இதற்கு முற்றுபுள்ளி வைத்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படி நடக்காத சூழல் தான்  19.11.2024 அன்று, உத்தரப்பிரதேசத்தில்  சாம்பல் மாவட்டத்தில் உள்ள ஜமா மசூதி இந்துக்களின் கோயிலை இடித்து கட்டப்பட்டது என்று மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க காரணமாகிவிட்டது. இந்து அமைப்பின் மனுவை அன்றைய தினமே விசாரித்த நீதிபதி ஆதித்யா சிங், மசூதியில் அன்றைய தினமே ஆய்வு நடத்த வழக்கறிஞர் ஆணையர் ரமேஷ் ராகவ் தலைமையில் ஒரு குழுவை நியமித்து பத்து நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்திரவிட்டார்.


தொல்லியல் துறை ஆய்வை எதிர்த்தனர் இஸ்லாமியர்கள். இதனால் காவல் துறையில் நடத்திய தாக்குதலில் ஐந்து இஸ்லாமியர்கள் மரணம் அடைந்தனர். நவம்பர்-24,  அன்று தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த சூழலில் இஸ்லாமியர்கள் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர். பாபர் மசூதி வழக்கில் அன்றைய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இன்றைய உச்ச நீதிமன்றம்  நியாயம் செய்யுமா?.  ஏற்கனவே உள்ள கறையை நீக்குவதற்கான முயற்சியில் அது ஈடுபடுமா..? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

உத்தர பிரதேசம் மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி நிலத்தை கிருஷ்ணர் கோயிலிடம் ஒப்படைக்கக் கோரும் மனுக்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன!

2022ல் பா ஜ க வின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி குமார் உபாத்யாயா, ‘வழிபாட்டு தலங்கள் சட்டம் அரசியல் சாசன நெறிகளுக்கு முரணானது’ என்ற வழக்கை தொடுத்துள்ளார். அதுவும் விரைவில் விசாரணைக்கு வரலாம்! அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டால், இந்தியாவில் இன்னும் ஏராளமான மசூதிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.. இதனால், இந்து- இஸ்லாமிய பகை அதிகமாகும். சமூக அமைதி கெடும்.

ஏனென்றால், ஆர்.எஸ். எஸ் சின் “அஜென்டா” காசி கியான்வாபி மசூதி, சம்பல் ஜமா மசூதி,  மதுரா ஷாகி ஈத்கா மசூதி, ராஜஸ்தானின் அஜ்மீர் தர்கா என ஏறத்தாழ 3,000 மசூதிகளை நாடு முழுவதும் குறித்து வைத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஒன்றிய அரசின் அனைத்து அமைப்புகளும் ,பாஜக ஆட்சி செய்யும் மாநில அரசின் அனைத்து அங்கங்களும் இஸ்லாமியர்களை ஒடுக்கு முறைக்கு உள்ளாக்குகிறது. குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், காஷ்மீருக்கு இது நாள்  வரை மாநில அந்தஸ்து கூட கொடுக்க மறுத்தல், காசி மசூதி -மதுரா மசூதி- சாம்பல் மசூதி என்று பல மசூதிகளை இடிப்பதற்கு செய்யும் அடிப்படை வேலைகள், இஸ்லாமியர்களை தேச விரோதிகள் மற்றும் பயங்கரவாதிகள் என்று கட்டமைத்தல்,உமர் காலித் முதல் காப்பன் வரை நூற்றுக்கணக்கானோரை பல்லாண்டுகள் சிறையில் அடைத்தல் ,இஸ்லாமியர்களின் வீடுகளை புல் டோசரால் தரைமட்டமாக்குதல்  என்று அரசின்  ஒடுக்கு முறைகள் நீண்டு கொண்டு செல்வது கவலையளிக்கிறது.

கட்டுரையளர்; ஹரி பரந்தாமன்

ஓய்வு பெற்ற நீதிபதி,

சென்னை உயர் நீதிமன்றம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time