எந்த ஒரு தனி நபரைப் பற்றியும் மிகைப்படுத்தப்பட்ட ஒரு பிம்பம் கட்டமைக்கபட்டால்..,முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ’’அந்த நபர் வொர்த் இல்லாதவர் அதனால தான் அவரை தூக்கி நிறுத்த படாதபாடு படறாங்க..அப்படிங்கறத..!’’
அமித்ஷா இதுக்கு முன்னாடி எவ்வளவோ முறை தமிழகத்திற்கு வந்துட்டு போனவரு தானே இப்பம்மட்டும் என்ன இப்படி அலப்பறை வேண்டிக் கிடக்கு!
மூவாயிரம் போலீசை பாதுகாப்பு பணியில ஈடுபடுத்தி, சென்னையையே ஸ்தம்பிக்க செய்வானேன்…?
வழி நெடுக ஆட்களை நிற்கச் செய்து வரவேற்புகள்..பேனர்கள், பதாகைகள்..இப்படியாக ஒரு உள்துறை அமைச்சர் உலகத் தலைவர் ரேஞ்சிற்கு தூக்கி வைக்கப்படும் சில்லறைத்தனமான ஒரு அரசியலுக்கு ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு ஒத்து ஊதின!
சரி, விஷயத்திற்கு வருவோம்! இதெல்லாம் எதற்காகத் தெரியுமா? பாஜக தங்களை தொடர்ந்து ஆளவிட வேண்டும் என்ற பதபதைப்பு அதிமுகவிற்கு! நோட்டாவிற்கு இணையாக வாக்கு வங்கியுள்ள பாஜகவுக்கு ஏதோ செல்வாக்கு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி அதிக சீட்டுகளைத் பெற வேண்டும் என்பது பாஜகவிற்கு!
அதிகாரத்திற்கு பணிந்தே பழக்கப்பட்ட அதிமுக தலைவர்களை அடிபணிய வைப்பதில் அமித்ஷா ஒரளவு வெற்றி பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு உள்துறை அமைச்சரை விமான நிலையம் சென்று வரவேற்கவும், அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையே சென்று அடிபணிந்து வரவேற்பு கொடுத்த அழகை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்..!
அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் மட்டத்தில் 98% பேர் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. இப்படி கட்சிக்குள் மிகப் பெரிய எதிர்ப்பு இருந்தாலும்,அனைத்து மட்டத்திலும் தெரிந்திருக்கிறது பாஜகவுடன் செல்வதை நம்மால் தவிர்க்கமுடியாது என்று! காரணம் மடியில் கனம் இருக்கிறது.ஆகவே மனதில் பயம் இருக்கிறது!
மக்கள் செல்வாக்கில்லாத இந்த அடிவருடிகளை முன்றாண்டுகளுக்கும் மேலாக எப்படி விட்டுவைத்தது பாஜக!
அதற்கான காரணங்கள்;
- அதிமுகவின் மாநிலங்களை ஓட்டுகள் பாஜக அரசு கொண்டுவரும் சட்டங்களை ஆதரிப்பதற்கு தேவை!
- தமிழகத்தில் திமுகவிற்கு ’செக்’ வைக்க, அதிமுகவை ஆதரிக்க வேண்டிய தேவையுள்ளது.
- ஆளவிட்டால் ஆடுவார்கள். ஆட்டத்தை நோட்டம்விட்டு பிளாக் மெயில் செய்வதற்கு தோதாகும்!
- அதிமுக ஆட்சி அடிக்கும் கொள்ளை பணத்தில் தமிழக, கேரள மாநில பாஜகவின் செலவுகளுக்கு கணிசமான பணத்தை கறந்து கொள்வது!
- தமிழகத்தில் இரண்டில் ஒரு திராவிடக் கட்சியை காலி செய்ய வேண்டும். சித்தாந்த ரீதியாக தனக்கு ஒரு எதிரி இருந்தால் தான் பாஜக இங்கே உயிர்பித்திருக்க முடியும். திமுக அழிக்கமுடியாத அடித்தளத்தை பெற்றுள்ளது. சித்தாந்த ரீதியாக திமுகவை மட்டுமே இந்துவிரோத கட்சியாக அடையாளப்படுத்தி, ஹிந்து ஓட்டுகளை கவர முடியும். அதிமுக இந்துவிரோத கட்சி என்ற பரப்புரை எடுபடாது. ஆகவே, பாஜகவின் மதவாத அரசியலுக்கு ஒரு வலுவான எதிரி அவசியம்! அதிமுக நமது அடிமை. ஆனால், மிக சக்தி வாய்ந்த அடிமை! அதிமுகவின் பலம் திமுக எதிர்ப்பு ஓட்டுகள் தாம்! அதிமுகவை அரவணைத்தே அழித்துவிட்டால் அதன் திமுக எதிர்ப்பு ஓட்டுகளை நாம் அறுவடை செய்து கொள்ளலாம் என்பது தான் பாஜகவின் தொலை நோக்கிலான திட்டம்!
ஆகவே,பலம் வாய்ந்த நமது அடிமையை மத்திய ஆட்சி பலத்தைக் கொண்டு தான் அழிக்கமுடியும். அந்த வகையில் இந்த ஆட்சியின் ஊழல் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சிபிஐ ரெய்டுகள் மூலம் சிக்கிய ஆதாரங்கள் இவர்களை அடிமையாக வைத்திருக்க போதுமானதாகும்! அதுவும் முதல்வர்,துணைமுதல்வர்களே ஊழலின் உச்சமாக உள்ளதால் என்றென்றும் பணியதக்கவர்கள்.ஆகவே, நம் தகுதிக்கு மீறிய தொகுதிகளை பறிக்க இது நமக்கு வசதி! சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை இவை யாவும் தவறு செய்பவர்களை கண்டறிந்து தண்டிப்பதற்கு அல்ல, மண்டியிடச் செய்வதற்கே என்ற பார்முலாவில் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது பாஜக!
Also read
ஆக, இது போன்ற காரணங்களே அதிமுக ஆட்சியாளர்கள் அரசு விழா என்ற பொறுப்புணர்வு இன்றி, தங்கள் விஷ்வாசத்தை வெளிப்படுத்திவிட்டனர். அமித்ஷாவும் ,மோடியும் ஏற்கனவே பல அரசு மேடைகளை காங்கிரஸ் எதிர்ப்புக்கு பயன்படுத்தியவர்கள் தாம்!
இந்த வகையில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதன் மூலம் அதிமுக தனது திராவிட அடையாளத்தை மெல்ல,மெல்ல அழித்துக் கொள்ளும்.
பாஜகவுடன் கூட்டணி வைத்த சிவசேனை நாளுக்கு நாள் சிறுத்துப் போனது மகாராஷ்டிராவில்!
பாஜகவுடன் கூட்டணி வைத்த ஆனானப்பட்ட நிதீஸ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் நீரில் மூழ்கும் படகாகிக் கொண்டுள்ளது பீகாரில்!
தமிழகத்தில் அந்த நிலைக்கு தன்னைத் தானே ஒப்புகொடுத்துள்ளது அதிமுக!
அதிமுகவை வெளியிலிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது. அதன் அழிவை தடுக்கும் ஆற்றல் அதன் உள்ளுக்குள் இருந்துதான் வெளிப்பட வேண்டும். ஆக, அதிமுக தனக்கான அழிவுக்கு தானே ஒப்புக் கொடுக்கிறது!
‘அறம்’ சாவித்திரி கண்ணன்
I spoke the same
Tamil peoples very intelligent in political issues. So, they never allow the anti social eliments.