வீரப்பனை பற்றி அக்குவேறு ஆணிவேராக தெரிந்து வைத்துள்ள பத்திரிகையாளர்களில் சிவசுப்பிரமணியன் முதலாமவர். வீரப்பன் என்பவனை தனி மனிதனாக பார்த்து எழுதிவிட முடியாது! காடு அதில் வாழும் உயிரினங்கள்,அங்குள்ள மரங்கள் மற்றும் இயற்கைச் சூழல்,பழங்குடிகள், காவல்துறை, இரு மாநில அரசுகள், வனத்துறை அதிகாரிகள் ஊழியர்கள்..என அனைத்தையும் சரியாக உள்ளது உள்ளபடி உள்வாங்கி எழுத வேண்டும். இது போன்ற நூல்களை கதை புத்தகம் போல் எழுதிவிட முடியாது. நாட்டிற்கே தெரிந்த ஒரு நபரை பற்றி எழுதும்பொழுது இன்னும் கவனமாக இருக்க வேண்டும். மற்றும் பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும் என்பதை,’ வீரப்பன் வீழ்ந்ததும் வாழ்ந்ததும்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் சிவசுப்ரமணியன் எழுதியுள்ளார். கோவை குறிஞ்சி அமைப்பினர் ஏற்பாடு செய்த இந்த நூல் குறித்த இணையதள நிகழ்வில் அவர் பேசியவற்றை சுருக்கமாக இங்கு செழியன்.ஜா தொகுத்தளிக்கிறார்;
முதலிலேயே ஒன்றை தெளிவுபடுத்திக் கொண்டேன். புத்தகத்தில் என்னுடைய கருத்து எதுவும் பதிவு செய்யக்கூடாது. வீரப்பன் கூட வாழ்ந்த மனிதர்கள், காவல்துறை, வனத்துறை, பழங்குடிகள், கிராம மனிதர்கள், வீரப்பன் உறவினர்கள் என்று இவர்களின் கருத்துக்கள் மட்டுமே எழுத வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.. அப்படியே பதிவு செய்து உள்ளேன்.
மக்கள் விரப்பனை ஹீரோவாகத்தான் பார்த்தார்கள். 1972 ஆம் ஆண்டு முதன் முதலாக வீரப்பனை கைது செய்தவரை சந்தித்து அந்த கைது சம்பவத்தை பற்றி கேட்டேன். வயது மூப்பின் காரணமாக அவருக்கு சரியாக நினைவில் இல்லை .ஆனால் அவர் மனைவி வீரப்பன் கைதை பற்றி சொல்கிறார். அண்ணா இறந்த மறுநாள் என் இரண்டாவது மகன் பிறக்கிறான், வீரப்பனை இவர் கைது செய்தபொழுது அவனுக்கு மூன்று வயது ஆனது என்ற தகவலை தருகிறார். அப்படி என்றால் வீரப்பனின் அன்றைய வயது 21 இருக்கலாம் என்று பதிவு செய்துள்ளேன். இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் அந்த மனிதர்களை சந்தித்து அதை மேலும் உறுதிப்படுத்தி கொண்டு எழுதியது பிரமிக்க வைக்கிறது. இன்னும் சரியாக குறிப்பிடவேண்டும் என்றால், புத்தகத்திற்காக 3000 நபர்களை சந்தித்து அவர்களிடம் பேசிப், பேசி வாங்கிய தகவல்கள் கொண்டு தான் எழுதியுள்ளேன் .இதன் பின்னணியில் 27 ஆண்டுகால கடுமையான உழைப்பை, இடைவிடாத தேடலை கைகொண்டுள்ளேன்.
வீரப்பன் என்று சொன்னால் நிச்சயம் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தியது பற்றி பேசாமல் இருக்க முடியாது. இந்த கைது இந்திய அளவில் மிக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அந்த தகவலை பேச கூடாது-எழுத கூடாது மீறினால் வழக்கு போடுவோம் என்று மிரட்டுகிறார்கள். ஆனால் ராஜ்குமார் கைதை பற்றி எழுதாமல் புத்தகத்தை நிறைவு செய்ய முடியாது. சட்டச் சிக்கல்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன்..
இன்று அனைத்து ஊடகங்களிலும் பயன்படுத்தும் வீரப்பன் படங்கள் பெரும்பாலும் நான் எடுத்த புகைப்படங்களே. 1993 வருடம் வீரப்பனை சந்தித்த பொழுதில் இருந்து எண்ணற்ற புகைப்படங்கள் எடுத்தேன். வீரப்பனை பற்றி மிக சுருக்கமாக எழுத வேண்டும் என்றாலும் 2000 பக்கம் வேண்டும். ஆனால் 400 பக்கத்திற்கு மேல் வெளியிட்டால் யாரும் படிக்கமாட்டார்கள் என்று சொன்னதால் முதல் பகுதி 380 பக்கமாக வெளியிட்டோம். இப்படி சுருக்கி சுருக்கி மொத்தம் 1500 பக்கம் ஆக மாற்றி உள்ளேன். இன்னும் இரண்டு பகுதிகள் பொங்கலுக்குள் வெளிவரும்.
வீரப்பன் இறப்பு இன்று பல கதைகள் கொண்டதாக உள்ளது. சுட்டு பிடித்தார்கள், மோரில் விஷம் வைத்து சாகடித்தார்கள் என்றெல்லாம் அப்பாவித்தனாமாக நம்பப்படுகிறது. இதில் உண்மை அறியும் குழு ஒன்றை காவல்துறையின் மறைமுக அழுத்தத்தால் உருவாக்கப்பட்டது. அதில் பல நபர்களை நியமித்து வீரப்பன் இறப்பை ஆய்வு செய்தார்கள். முக்கிய காரணம் எப்படி இறந்தார் வீரப்பன் என்பதை யாராவது வந்து ஆராய்ச்சி செய்து வெளியிடுவதற்குள் நாமே ஒரு குழுவை உருவாக்கி இப்படித்தான் இறந்தார் என்று சொல்லவிட்டால் யாரும் கிட்ட வரமாட்டாங்க என்று காவல்துறை செய்தது. இந்த சதி செயலுக்கு காவல்துறை தான் பின்னால் இருக்கிறது என்பதை துளியும் தெரியாமல் உண்மை அறியும் குழு இயங்கியது மிக துயரம்…!
மக்களோடு மக்களாக வாழ வீரப்பன் ஆசைபட்டார். பொது மன்னிப்பு வழங்க வாய்புள்ளதா என்று கேட்டு பார்த்தார். அதற்கு வழி இல்லை என்றால் சில வருடங்கள் சிறை தண்டனை ஏற்று உள்ளே சென்று வெளி வந்து வாழ்கிறேன் என்று கேட்டு பார்த்தார். கலைஞர் அரசு அதற்கு சில நடவடிக்கைகள் எடுத்து. ஆனால் அவை மேற் கொண்டு நகரவில்லை. வீரப்பன் கடைசி காலத்தில் தன் படை வலிமையை அதிகரிக்க வெளி நபர்களை சேர்த்து கொள்ள முடிவு செய்தார். வீரப்பன் படையில் பல நபர்கள் வந்து காட்டு வாழ்க்கை ஒத்து வரமால் வெளியேறியதால் பிறகு வெளி மாநில சட்டவிரோத நபர்களை அழைக்கிறார். அதன் மூலம் வீரப்பன் இறப்பு எப்படி நிகழ்கிறது என்பதை பல சம்பவங்கள்,உரையாடல்கள்…வழியே சிறிதும் மிகைப்படுத்தாமல் சொல்லியுள்ளேன்.
Also read
உண்மையில் வீரப்பன் இறந்தது, வெளி மாநில சட்டவிரோத நபர்கள், நாட்டு வெடிக்கொன்டு பயிற்சி கொடுக்கிறேன் என்று வீரப்பனுக்கு கற்றுக் கொடுக்கும்பொழுது வீரப்பன் கையில் இருக்கும் வெடிகுண்டை வெடிக்க வைத்து அந்த வெடிகுண்டு அபாய நிலையை உருவாக்காமல் அதில் மயக்க மருந்து கலந்து அதன் மூலம் வீரப்பனை மயக்கம் அடைய வைக்கிறார்கள். இது போல எப்படி அவரை கொல்கிறார்கள் என்பதை தெளிவாக விவரித்துள்ளேன்.’’ இவ்வாறு சிவசுப்பிரமணியன் குறிஞ்சி இணைய உரையாடலில் பேசியுள்ளார்.
மிக சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதே வீரப்பன் வாழ்க்கை. முதல் பகுதி வெளிவந்த நிலையில் இன்னும் இரண்டு பகுதிகள் விரைவில் வெளிவரும் என்பதை குறிப்பிட்டுள்ளார். அந்த பகுதிகளில் என்னென்ன எழுதப் போகிறாரோ. …என்று ஆவலாகவுள்ளது.
வீரப்பன் வாழ்ந்ததும்,வீழ்ந்ததும்
பக்கங்கள்- 380, விலை; ரூ 4,00
சிவா மீடியா பப்ளிகேஷன்ஸ்
489/A, கண்ணாடி மில் அருகில்,
அண்ணா நகர் ,ஆத்தூர்,
சேலம் – 636102 . போன்; 9443427327
Leave a Reply