பாசாங்குத்தனமற்ற படைப்பிலக்கியவாதி கவிஞர் சுரதா!

ந.பா.சேதுராமன்

பாசாங்குத் தனமற்ற பேச்சு, ஒளிவுமறைவற்ற உள்ளம், சக கவிஞர்களை நேசிக்கும் குணம், மனதில் பட்டதை பட்டென்று மறைக்காமல் சொல்லும் எதற்கு அஞ்சாத பேச்சாற்றல் …இது தான் உவமைக் கவிஞர் சுரதாவின் அடையாளம்! அவரது நூற்றாண்டை தமிழ்நாடு அரசு கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி பேசுவதும், எழுதுவதும் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அய்யாவின் பலநூறு நேரடி மாணவர்களும், அவரை குருவாக ஏற்றுக் கொண்ட லட்ச மாணவர்களும் உலகெங்கும் இருக்கிறார்கள்…!

நவம்பர் 23, 1921-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம், சிக்கல் என்ற ஊரில் பிறந்து, ஜூன் 20, 2006 -ம் ஆண்டு 84-வது வயதில் சென்னையில் இறந்து போனார் என்று இரண்டே வரியில் அவர் பிறப்பையும், இறப்பையும் சொல்லி விடமுடியாத ஆளுமை அவர்!  அவர் வாழ்ந்த காலங்களை பேச ஆரம்பித்தால், ஒருநாள் போதாது.

மிகப்பெரிய கவிஞர், சினிமாவுலக ஆளுமையாக மூன்றாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியவரான கவி.காமு ஷெரீஃப்.  சுரதா மீது சுரதா தனிப்பாசம் கொண்டவர். சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், ஸ்டார் திரையரங்கம் அருகேதான் அவர் வாழ்ந்த வீடு இருந்தது… உடல் நலக்குறைவோடு,  கவி.காமு ஷெரீஃப், அவர்கள் இருந்த காலங்களில் அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவது,  சுரதாவின் வழக்கமாக இருந்தது. தெய்வசிகாமணி (எ) கவிஞர் தெசிணி (’கவிதை’ இதழின் ஆசிரியர்), புலமைப்பித்தன் அவர்களின் மாணவர் புலமைதாசன் உள்ளிட்ட சிலரும், இதே வழக்கம் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஒருநாள் கவி.காமு ஷெரீஃப் அவர்கள் இயற்கையெய்தினார். அவருக்கான அஞ்சலிக்கூட்டம், அடுத்த சில நாட்களில் கவியரங்கமாய் சென்னை ஒய்.எம்.சி.ஏ. எஸ்பிளேனடு அரங்கில் நடந்தது .கவியரங்கத் தலைமை கலைஞர் கருணாநிதி. மேடையில் சுரதா உள்ளிட்ட  ஜாம்பவான்கள் அமர்ந்திருந்தனர். கவி.காமு ஷெரீஃப் பின்  கடைசி காலம் உரிய வகையில் கவனிக்கப்படாமல், யாருடைய உதவியும் சொற்பமாய் கூட இல்லாமல் போன வகையில், குறிப்பாக சக கவிஞர்களே அவரை கவனிக்க தவறியதற்காக ஏகத்துக்கும் கொதிப்பில் இருந்தார்  கவிஞர் சுரதா.

இந்த கொதிநிலையை அடிக்கடி என்னிடமும் வெளிப்படுத்தி வந்ததால், என் மனதிலும் அந்த கோபம் தங்கி விட்டது. கவியரங்கில் ஆயிரத்தில் ஒருவனாய் கவியரங்கை காணப்போன என் பெயரையும், கவிதை வாசிப்போர் பட்டியலில் இணைத்து மேடையில் அறிவித்ததோடு, ‘கொன்னுடுவேன், தயங்காம கவிதை படி’ என்பது போல் மேடையில் இருந்தபடி என்னைப் பார்த்து எச்சரித்தார்.

வேறு வழி ! அதே இடத்தில் ஒரு ஓரமாய் உட்கார்ந்து,

“சீதக்காதி வரலாறு செய்துவிட்டு செத்தவனை

சீண்டவொரு ஆளில்லா தேசம் – கவிஞன்

வேதனையில் வெந்ததனை மறைத்தே –உலகம்

வீண் புகழில் அரிதாரம் பூசும்… !

பட்டி – தொட்டியெல்லாமும் பவனிவந்த

பாட்டளித்த பெருங்கவிக்கோ அன்று –

கயிற்றுக் கட்டிலிலே காலந்தள்ள வைத்ததந்த

கோலத்தை எவர் தடுத்தார் சென்று ? “

என்று சுமார் மூன்று பக்கத்துக்கு குறையாமல் நான் எழுதி, வாசிக்க, மேடையில் இருந்த கலைஞர்

, “ஒன் தயாரிப்பா?” என்று சன்னமான குரலில் கேட்க,

“உனக்கும் சேர்த்துத்தான் எழுதச் சொன்னேன், மெட்றாஸ்காரன்லே அதான் உன்னைத் தாக்காம காப்பாத்தி விட்ருக்கான்”

என்று அதே சன்னமான குரலில் பதிலளித்தார் சுரதா.

கலைஞருக்கு முன்னதாக பேசிய சுரதாவின் வார்த்தைகளில் கோபம் வெடித்துச் சிதறியது -அந்த வரிகளை இங்கே எழுத விரும்பவில்லை !எழுதக்கூடியதுமல்ல!

யாரை முதன்முதலில் பார்த்தாலும், “ஆமா, நீங்க என்ன சாதி?” என்று கேட்பது, கவிஞர் சுரதாவுக்கு பழக்கம்.

“அய்யா, இந்தப் பழக்கத்தை விட்டுடக் கூடாதா”? என்றால்,

எங்கே சாதி இல்லே, எவன் சாதி பாக்கலேன்னு சொல்லு, விட்டுடறேன்” என்பார்.

ஒருமுறை சாதியை சொல்லிவிட்டால், அதை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டார். “ஏம்ப்பா, இந்தக் கவிஞரு, உன்னோட சாதிக்காரன் தான், ரொம்ப நொடிஞ்சு போயிருக்கான்… பாத்து ஏதாவது உதவி பண்ணு” என்று பலரிடம், பலருக்கு பரிந்துரை செய்து உதவியை வாங்கிக் கொடுப்பதை கடமையாகவே செய்து வந்திருக்கிறார்…என்றபோது தான் தெரிந்தது சாதிக்குள்ள நுட்பமான உளவியலை அவர் எப்படி அறிந்து வைத்திருந்தார் என்பது!சக கவிஞர்களின் ஆற்றலைப் புகழ்ந்து பேசி,அவர்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கித் தருவதில் ஆர்வம் கொண்ட தனிப் பெரும் குணம் அவரின் சிறப்பாகும்!

கவிஞர் சுரதாவைப் பார்க்கவும் பேசவும் பலர் காத்துக்கிடந்தாலும், அவரே தேடிப்போய் நிற்கிற முகவரி, சென்னை திருவல்லிக்க்கேணியில் இருக்கும் கவிஞர் புலமைதாசன் அண்ணாவின் வீடு தான்.

“சேது, புலமை வீட்டுக்கு வந்துரு”

என்ற வார்த்தையை அடிக்கடி என் காதுகள் கேட்கும். அண்ணன் புலமைதாசன் வீட்டுக்குப் போனதும், புலமைதாசனை எழுப்பி விட்டு அவருடைய சாய்வு நாற்காலியை எடுத்துப் போட்டு உட்கார்ந்து, குழந்தையைப் போல் உலகை மறந்து பேச ஆரம்பித்து விடுவார். நாட்டின் முக்கியக் கவிஞர்கள் பலரின் பின்புலம், ஆற்றல், அவர்களின் சாதிய குணம் என்று பல சங்கதிகளை அப்படித்தான் தெரிந்து கொண்டேன்.

திமுக இலக்கிய அணியின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவர், கவியரசர் பொன்னிவளவன் (மறைவு). வட சென்னையில் புது வண்ணாரப்பேட்டை, தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக திரு. பொன்னிவளவன் இருந்ததால், அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்கு தானாகவே அமைந்தது. பொது மேடையில், “நான் பிறக்கும் போதே தி.க., நீங்கள் பிறந்து வளர்ந்த  பின்னரே தி.க., அதன் பின், மு.க.” என்று கர்ஜித்தவர். கருமையான தேகம் கொண்டவர் திரு.பொன்னிவளவன் என்பதையே சிலேடையாக, ‘ நான் பிறக்கும் போதே தி.க.,’ என்று குறிப்பிட்டார்.

பேசிக் கொண்டிருக்கும் போது ஒருமுறை திரு. பொன்னிவளவன் என்னிடம் சொன்ன தகவல்.

மயிலாடுதுறை பக்கம் ஒரு குக்கிராமம், கவியரங்கம் ஒன்றில் என்னை பாட கூப்பிட்டு இருந்தார்கள். பேருந்துக்காக நின்றிருந்தேன். என் பக்கத்தில் நான்கைந்து பேர் நின்றிருந்தனர். அதில் ஒருவர், ‘தம்பி, இந்த முகவரிக்கு எந்த பேருந்து போகும், நடந்து போகிற தூரம் என்றால் சொல்லுங்க, நான் நடந்தே போயிடறேன் என்றார். “நடந்து போகும் தூரம் இல்லை பெரியவரே, பேருந்தில்தான் போகணும், கொஞ்சம் தூரம்தான், நானும் அங்கேதான் போகிறேன், கவிதை படிக்கணும்” என்றேன். ‘அப்படியா நீங்க கவிஞரா, மகிழ்ச்சி, உங்க பேரைத் தெரிஞ்சுக்கலாமா?’ என்றார், அந்தப் பெரியவர். ‘’பெரியவரே என்னோட பேர்,  பொன்னிவளவன்” என்றதும் தாமதிக்காமல் அடுத்த நொடியே அவர் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து என் கழுத்தில் போட்டு என்னை நெருக்கியபடி,

‘உன்னையத்தான்யா, பதினைஞ்சு வருஷமா தேடிட்டு இருக்கேன். ஆமா, என்ன எழுதுனே… ‘ தண்ணீரில் மிதக்கின்ற தாமரையேவா, அதெப்படி, தக்கை மிதக்கும், கட்டை மிதக்கும்…தாமரை எப்படி மிதக்கும், தாமரையின்  இயற்கை கூறு என்னன்னு தெரியுமா’ என்று யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல் கேள்வியையும், கழுத்தில் போட்டிருந்த துண்டையும் இறுக்க ஆரம்பித்து விட்டார். ஒரு வழியாக அவரைச்  சமாளித்து, “உண்மையில், அது தவறான சிந்தனைதான், தவறான பதிவுதான்” என்ற பின்னரே இறுக்கத்தை தளர்த்தினார். “அய்யா நீங்க யாருன்னு” என்றேன்  தயக்கத்துடன். ‘சுரதா’’’  என்றார்.

சில நிமிடங்கள் கழித்து பேருந்து வந்தது, பேருந்தில் அவர் மட்டுமே ஏறினார், நான் ஏறவில்லை…”என்றார் பொன்னிவளவன்.

கட்டுரையாளர் நா.ப.சேதுராமன்

பத்திரிகையாளர்,

புகைப்படக் கலைஞர்,

கவிஞர் சுரதாவுடன்  நெருங்கி பழகியவர்.

சுரதா எழுதிய கடிதத்துடன் நா.பா.சேதுராமன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time