ரத்தத்தை உறிஞ்சத் துடிக்கும் தொழில் அதிபர்கள்!

-சாவித்திரி கண்ணன்

மத்தியில் பாஜக அரசு வந்தததில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கி கடைக் கோடி நிறுவனங்கள் வரை  பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தோன்றியுள்ளது. வேலை நேர அதிகரிப்பு, ஆட்குறைப்பு, பணி நிரந்தரமின்மை, சலுகை பறிப்பு, விடுமுறையற்ற வேலை..என்ற நிர்பந்தங்கள் அதிகரிக்கின்றன;

காரணம், இது வரையிலும் நடைமுறையில் இருந்து வந்த தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் அனைத்தையும் வாபஸ் வாங்கிவிட்டு பணியாளர்களை எப்படி வேண்டுமானாலும் கசக்கி பிழியும் வகையிலும், எப்போது வேண்டுமனாலும் வேலையில் இருந்து நிறுத்துவது தண்டிப்பது என்ற வகையிலும் தொழில் அதிபர்களுக்கு ஆதரவான சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது தொழில் அதிபர்கள் வேலை நேரத்தை 12 முதல் 15 மணி நேரம் வரை அதிகரிக்கும் வகையில் பேசி வருகின்றனர்.

இந்தியாவில் மனித வளம் கொட்டிக் கிடக்கிறது!

வேலை கேட்டு இளைஞர்கள் கூட்டம் முட்டி  மோதுகிறது!

இப்படிப்பட்ட நாட்டில் தான் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்கிறார்கள், இன்போஸிஸ் நாராயணமூர்த்தியும், லார்சன் அண்ட் டூப்ரோ சுப்பிரமணியமும்!

அதிக நேரம் உழைத்தால் தான் நாடு முன்னேறுமாம்! வளர்ச்சி ஏற்படுமாம்! உண்மை தான்,  உழைப்பு அதிகரிக்க, அதிகரிக்க உற்பத்தியும் அதிகரிக்கும். அந்த உற்பத்தியை குறைந்த மனிதர்களைக் கொண்டு தான் செய்வோம். வேலைப் பளுவிற்கு ஏற்ப ஆட்களை வைத்துக் கொள்ள மாட்டோம் என பிடிவாதம் பிடிப்பது தான் அதிர்ச்சியளிக்கிறது.

அதாவது, இவர்கள் காலச்சக்கரத்தை சுமார் 200 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளுகிறார்கள்!

இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் தொழிலாளர்கள் கால நேரமின்றி கசக்கி பிழியப்பட்டதில் உலகெங்கும் வெடித்த பல போராட்டங்கள், அதில் ஏற்பட்ட ஏராளமான உயிர் இழப்புகள், படு காயங்கள், வேலை இழப்புகள், அனுபவிக்க நேர்ந்த கொடூர துன்பங்களுக்கு பிறகு தான் இந்த நியாயமான எட்டு மணி நேர வேலை என்பது சாத்தியமானது!

சற்றே வரலாற்றை திரும்பி பார்ப்போம்;

பல கட்டப் போரட்டங்களுக்கு பிறகு முதன்முதலாக 1833 ஆம் ஆண்டில், அன்றைய தினம் ஜவுளித் தொழிலில் உழன்ற 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்வதைத் தடுக்கும் தொழிற்சாலை சட்டம் வந்தது.  அதே சமயம் 14-18 வயதுடையவர்கள் வாரத்திற்கு 69 மணிநேரம் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள்.

1866 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும், ஜெனிவாவிலும் நடந்த போராட்டங்கள் எட்டு மணி நேர வேலை நேரத்தை சட்டமாக்கக் கோரின. அதன் பிறகு சிகாகோ நகரில் ரத்தம் சிந்திய போராட்டம் 1877 ஆம் ஆண்டு நடந்து வரலாற்றை திருப்பி போட்டது.

1919 ஆம் ஆண்டில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது முதல் மாநாட்டில், வேலை நேரம் தொடர்பான மாநாட்டில் அதிகபட்ச வேலை நேரத்தை ‘ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மற்றும் வாரத்திற்கு 48 மணிநேரம்’ என்று பரிந்துரைத்தது.

அறிவியல் பூர்வ அணுகுமுறை;

ஒரு  நாளைக்கு எட்டு மணி நேரம் தான் ஒரு மனிதன் முழு ஆற்றலோடு தன் உழைப்பைத் தர முடியும்! அடுத்த எட்டு மணி நேரம் குடும்பம், நண்பர்கள், வாசிப்பு, உடற்பயிற்சி, விளையாட்டு, கேளிக்கை, ஓய்வு..போன்றவற்றுக்கு! இறுதி எட்டு மணி நேரம் உறக்கத்திற்கு! இந்த வகையில் ஒரு வாரத்திற்கு ஐந்த நாட்கள் வேலை எனில், 40 மணி நேரம் என்றும், ஆறு நாட்களெனில் 48 மணி நேரம் என்பதே ஏற்றுக் கொள்ளதக்கதாகும்!.

இது தான் உலக அளவில் மனித குலம் ஆரோக்கியமாக வாழ வகுத்துக் கொண்ட வழிமுறையாகும். இதற்கு மேல் உழைப்பை செலுத்தும் போது உடல் நலம், மன நலம் பாதிக்கப்படும், ஆயுளும் குறையும்.

உலகின் மிக வளர்ந்த பணபலம் மிக்க நாடான அமெரிக்காவிலே கூட ஒரு வாரத்திற்கான வேலை நேரம் தற்போது 50 மணி நேரம் என்று தான் உள்ளது. இங்கிலாந்திலே ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணி நேரம் என்று உள்ளது.

உலக தொழிற்சங்க கூட்டமைப்போ நாள் ஒன்றுக்கான வேலை நேரத்தை 7 மணி நேரமாகவும், வார நாட்களில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்பதையும் நடைமுறைப்படுத்த கேட்டு உள்ளது.

ஆனால், இந்தியாவிலோ இன்றைக்கு ஐ.டி நிறுவனங்கள் தொடங்கி அடித்தள நிறுவனங்கள் வரை ஊழியர்களை எப்படி கசக்கி பிழிய வேண்டும் என்று தான் பார்க்கிறார்கள்! இரண்டு ஆள் வேலையை ஒரே ஆளை வைத்து செய்து, செலவை மிச்சப்படுத்த நினைக்கிறார்கள்..! 100 ஆட்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 50 ஆட்களை வைத்து செய்யத் துடிக்கிறார்கள். அத்துடன் சி.இ.ஒ போன்ற உயர்பதவிகளில் உள்ளவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளத்தை அதிகப்படுத்தி தந்துவிட்டு, கடுமையாக உழைப்பவர்களுக்கு கஞ்சத்தனம் காட்டுகிறார்கள்.

இன்போஸிஸ் நாராயணமூர்த்தியோ, வாரம் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்கிறார்! (  நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம்)

லார்சன் அண்ட் டூப்ரோ சுப்பிரமணியமோ இரண்டு படி மேலே போய் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை வாங்கலாம் என்கிறார். ( நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம்)

எளிய மனிதர்கள் எல்லோரும் தங்களுக்கு உழைத்துக் கொட்டுவதற்கென்றே பிறப்பெடுத்துள்ளதாக இவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

இதை ஏதோ படிப்பறிவில்லா பண்ணையார்களோ, கட்டுமானத் தொழிலில் இருக்கும் கர்ண கொடூர மேஸ்திரியோ சொல்வது ஆச்சரியமல்ல. ஆனால், மிகப் பெரும் அறிவாளிகளாகவும், பல மில்லியன்களில் புரளும் கோடிஸ்வரர்களுமான – சமூகத்தின் மேல் தளத்தில் உள்ள – நவீன தொழிலதிபர்களே – சொல்வது தான் வேதனையாக உள்ளது.

இப்படி உழைப்பவர்களுக்கு தர மறுக்கும் சம்பளத்தை தங்கள் லாப கணக்கில் சேர்த்து ஆடம்பர வாழ்க்கைக்கும், அரசியல் கட்சிகளுக்கும், பக்தி பரவசங்களுக்கும், நிலம் மற்றும் நகைகளில் முதலிடு செய்யவும் பயன்படுத்துகிறார்கள். உழைப்பவர்கள் சம்பளத்தை உயர்த்தி கேட்டாலோ உக்கிரமாக கோபப்படுகிறார்கள்..!

தமிழகத்தில் 12 மணி நேர வேலைக்கான சட்டம் வந்து பின் வாங்கிக் கொள்ளப்பட்டது எனினும் 12 மணி நேர வேலை என்பது அறிவிக்கப்படாத வேலை திட்டமாக பல இடங்களில் அமலாகிறது. எந்த நேரத்திலும் வேலை பறி போகலாம் என்ற எண்ணத்திலே பணியாளர்களை வைத்திருந்தால், அவர்களை இஷ்டப்படி வேலை வாங்கலாம் என கணக்கு போடுகிறார்கள்.

 

அரசு நிறுவனங்களிலேயே பல வேலைகளுக்கு காண்டிராக்ட் முறையில் தான் வேலைக்கு எடுக்கிறார்கள். இதனால், தனியார் நிறுவனங்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கும் தார்மீகத் தகுதியை அரசு இழக்கிறது.

தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு ஆண்டும் அதீத உழைப்பின் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம், உடல் நலக்குறைபாடுகளில் பல்லாயிரக் கணக்கானோர் இளம் வயதில் மரணித்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக ஐ.டி.செக்டாரில் வேலை பார்ப்பவர்களில் 45 சதவிகிதமானோருக்கு அதிக வேலை நேரம் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. 55 சதவிகிதமனோருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆகவே மாத்திரை, மருந்துகளோடு தான் வாழ்க்கை நடக்கிறது.

இதையெல்லாம் நன்கு தெரிந்தும் இந்த தொழில் அதிபர்களும், ஆட்சியில் உள்ளோரும் அதிக வேலை நேரத்தை அடிக்கடி வலியுறுத்துவதோடு, நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர்.

ஆக, மரணித்துக் கொண்டிருப்பது மனிதர்கள் மட்டுமல்ல, மனித நேயமும் தான்!

வேலை நேரத்தை அதிகரிப்பதைத் தவிர்த்து, வேலை ஆட்களை அதிகரித்தால் வேலை இல்லா திண்டாட்டம் குறையுமே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time