சுயத்தை இழந்தவர்கள்,பயத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள்!
அரசியல் கார்ப்பரேட் பிசினஸாக உருமாறியுள்ளது என்பதற்கான அடையாளம் தான் பிரசாந்த் கிஷோரும்,அவரைப் போன்ற தேர்தல் வியூக நிறுவனங்களும்!
மேற்குவங்கத்தில் திரிணமுள் காங்கிரசுக்கு தேர்தல்வியூக பொறுப்பை பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திற்கு தந்தார்!
இது தற்போது திரிணமுள் காங்கிரசிற்குள் புயல்வீச காரணமாயிற்று!
மேற்குவங்க ஆளும் கட்சியாக திரிணமுள் இருப்பதால் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இணையாக தனக்கும் Z கேட்டகிரியில் பாதுகாப்பை பெற்றுக் கொண்டார் பிரசாந்த் கிஷோர். மிக பிரமாண்ட கார்ப்பரேட் அலுவகம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு பல லட்சங்கள் மற்றும் பல ஆயிரங்களில் சம்பளம், எக்கசக்க கம்யூட்டர்கள்..என்று பந்தாவாக வலம் வரும் கிஷோர் தனக்கு வேலை செய்ய சம்பளமே பெறுவதில்லை என மம்தாபானர்ஜி பேசுவது தான் உச்சபட்ச காமெடியாகப் பார்க்கப்படுகிறது.
கட்சிக்கு எந்த இடங்களில் எவ்வளவு செல்வாக்கு, எந்த எம்.எல்.ஏ அல்லது மாவட்டத் தலைவர் எப்படி செயல்படுகிறார். யாருக்கு மீண்டும் சீட்டு தரலாம்,தரக்கூடாது போன்ற விவகாரங்களை கள ஆய்வு செய்து ஐபேக் தந்து வருவது தான் கட்சிக்குள் புயல்வீச காரணமாயிற்று. இது தற்போது கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரை மம்தாவிடமிருந்து அன்னியப்படுத்திவிட்டதாக சொல்லப்படுகிறது.
ஐபேக் தாங்கள் தருவதை உண்மை நிலவரம் என்கிறது. ஆனால், அதனால் கலவரம் தான் கட்சிக்குள் வெடித்துள்ளது. ’’ஐபேக் சொல்வதே வேதம்’’ என மம்தா நினைப்பாரென்றால், கட்சியில் இருந்து சிலர் வெளியேறி பாஜக பக்கம் செல்வதையோ, கட்சி பலவாறாக சிதறுண்டு போவதையோ யாராலும் தடுக்கமுடியாது. பல முக்கிய தலைவர்கள் பாஜக பக்கம் நகர்வதாகவும் தெரிகிறது. இதனால் கட்சிக்குள் ஏற்படும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பிரசாந்த் கிஷோருக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டமே நடத்தியுள்ளனர்.
ஆனால், இவை எதுவுமே தங்களை பாதிக்காதது போல பிரசாந்த் கிஷோரின் ஆட்கள் ’’நாங்கள் எங்கள் வேலையை தொழில்ரீதியாகச் செய்கிறோம்.மற்றபடி கட்சிக்குள் நிகழுபவற்றுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே கிடையாது’’ என்று சொல்கின்றனர்.
ஆனால்,கட்சியில் சுவந்து அதிகாரி போன்ற மக்கள் செல்வாக்கான தலைவர்களையே கட்சிக்குள் செல்லாகாசாக்கிவிட்டாராம் கிஷோர். இதனால்,அவரும்,அவரை போன்றவர்களும் என்ன முடிவு எடுக்கப் போகிறர்கள் எனத் தெரியாத சூழல் நிலவுகிறது. பிரசாந்த் கிஷோர் திரிணமுள்ளுக்கு வேலை செய்கிறாரா அல்லது திரிணமுள்ளுக்கு வேலை செய்வதன் மூலம் பாஜகவிற்கு வேலை செய்கிறாரா? என்ற புலம்பல் வெளிப்பட ஆரம்பித்துள்ளது!
பீகாரில் பணம் செலவழிக்கவே திராணியற்ற கம்யூனிஸ்டுகள் 29 தொகுதிகளில் நின்று 19 தொகுதிகளில் வென்று காட்டியுள்ளனர். பணபலத்தையும், அதிகாரபலத்தையும் மீறி அவர்களால் எப்படி வெல்லமுடிந்தது? மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்க அவர்களிடம் களவேலை செய்ய வேண்டும், அவர்களின் ஆபத்தான காலங்களில் உடன் இருந்து துயர்துடைக்க வேண்டும்! நீண்ட கால உழைப்பினால் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும்.இது தான் உண்மையான அரசியல் பலம்!
Also read
தானே ஆட்சியில் இருந்தும், தனக்கே நீண்ட நெடிய அரசியல் அனுபவம் இருந்தும் தன் அரசாங்கத்தின் உளவுத் துறை மற்றும் கட்சியின் நீண்டகால சகாக்கள் ஆகியவர்களை நம்பாமல், யாரோ வெளியில் இருந்து வந்த ஒரு கார்ப்பரேட்டை நம்பி தன் கட்சியையே காவு கொடுக்க துணிந்துவிட்டார் மம்தா பானர்ஜி என்பதே கட்சிக்காரர்களின் கதறலாக உள்ளது.
தங்கள் சுயத்தை உணராமல்
தங்கள் சொந்த அனுபவத்திலிருந்து ஞானம் பெறாமல்
தங்கள் கட்சி சகாக்கள் மீது நம்பிக்கைவைக்காமல்
இன்னொருவரை நம்பி கட்சியின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மேற்குவங்க சம்பவங்களில் இருந்து பாடம் பெற வேண்டும்.
Leave a Reply